Tuesday, August 18, 2020

Nallaan Chakravarti- What is it?

நல்லான் சக்ரவர்த்தி J K SIVAN 

ராஜாஜி என்ற மூன்றெழுத்து உலகப்புகழ் பெற்ற ஒரு அறிஞன், நேர்மை,பக்தி, நாணயம், தேசப்பற்று கொண்ட ராஜதந்திரியின் பெயர். ''ராஜாஜி என் மனசாட்சி'' என்று காந்திஜி சொல்வார். நேருஜி, பாபுஜி,நேதாஜி, ராஜாஜி என்ற பெயர் தெரியாத இந்தியன் கிடையாது.
ராஜாஜி நல்லான் சக்கரவர்த்தி ஐயங்கார் வம்சம். தொரப்பள்ளி, ஓசூர், சேலம் ஜில்லாவில் பிறந்தவர் 1878 டிசம்பர் 8. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல். ராஜகோபாலாச்சாரி என்ற பெயர் தான் ராஜாஜி . வகுப்பு வித்யாசம் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவிய குடும்பம். சேலம் விஜயராகவாச்சாரியார் எனும் பிரபல வக்கீலிடம் சிறந்த தொழில் முறை அனுபவம். ராஜாஜிக்கு மூன்று பிள்ளைகள் ரெண்டு பெண்கள்.. அவர்களைப்பற்றி யாருக்காவது ஏதாவது தெரியுமா?? அது தான் ராஜாஜி.  
தனது சொந்த பிள்ளைகளுக்கும் நெருங்கிய உறவினருக்கும், நண்பர்களுக்கும் யாருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த தனது பதவியை அதிகாரத்தை, துஷ்ப்ரயோகம் செய்து சலுகை பெறவிடவில்லை. கடவுள் முன் அனைவரும் சமம், ஜாதி வித்யாசம் கிடையாது என்று வாதிட்ட கடைபிடித்த உயர்ந்த பிராமணர். தனது பெண் லக்ஷ்மியை காந்தியின் பிள்ளை தேவதாஸ் காந்திக்கு எளிய திருமணம் செய்வித்த உயர்ந்த மனிதர். பரிசுத்தமான தேச தியாகி. உண்மையான காங்கிரஸ் தொண்டனாக இருந்தவர். தமிழ்நாடு ராஜதானி முதலமைச்சர், தென்னை தமிழக அரசுக்கு முதல்வர் என்ற பதவிகளை அலங்கரித்தவர். காங்கிரஸ் நடைமுறை பிடிக்காமல் நேருவை எதிர்த்து அப்போதே ஸ்வதந்திரா கட்சியை நிறுவியர். மதுவிலக்கு அமுல்படுத்தியவர். திருச்செங்கோடு ஆஸ்ரமம் நடத்தியவர். புத்தி கூர்மையில் சாணக்கியர் என்று பாராட்டப்பட்டவர். 
கடைசி வரை தனது ஆடையை தானே துவைத்து அணிந்தவர். உண்மையாகவே ஹரிஜனங்களுக்கு பாடு பட்டவர். சமூக ஒற்றுமை,நலன் விஷயத்தில் ராஜாஜியை ராமானுஜரின் அவதாரம் என்பார்கள்.

ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, சக்ரவர்த்தி திருமகன் என்ற பாரத, ராமாயண புத்தகங்கள் ஒரு ரூபாய்க்கு நான் பாரதீய வித்யா பவன் வெளியீடாக நான் வாங்கி இருக்கிறேன். கல்கியில் தொடர்ந்து படித்திருக்கிறேன். ரேடியோ வில் ராஜாஜி குட்டிக்கதைகள் குழந்தைகளுக்கு சொல்லியிருக்கிறார். நான் கேட்டிருக்கிறேன். ஐந்து நிமிஷம் தான். 

சேனை தி.நகர் சிவ விஷ்ணு ஆலயத்தில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் ராமாயண நாராயணீய உபன்யாசத்தில் தவறாமல் வந்து உட்கார்ந்து கேட்பார் ராஜாஜி. என் தாய் வாழி பாட்டனார் பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதிகளின் கம்ப ராமாயண பிரசங்கம் பட்டாபிஷேகம் உபன்யாசம் தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் நடந்த அன்று தலைமை வகித்து பாராட்டி பேசியவர் ராஜாஜி. கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகியிருக்கும் என்பதால் தேதி கிழமை எதுவும் சொல்லும்படியாக கிடைக்கவில்லை. 

நான் ராஜாஜி பற்றி சொல்லிய காரணம் அவர் நல்லான் சக்ரவர்த்தி குடும்பம் என்று அறிவிக்க. 

இந்த பரம்பரை ஒஸ்தி, அதெல்லாம் மட்டம் என்று எந்த பாரம்பரியத்தையும் வேறுபடுத்தக் கூடாது. ஒவ்வொரு பரம்ப ரையிலும் அற்புதமான மனிதர்கள் தோன்றி அந்த பாரம்பரி யத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாதே. அப்படி ஒரு சிறந்த வைணவ பரம்பரை நல்லான்

சக்கரவர்த்தி என்ற பட்டம் கொண்ட வகையறாவினர். NC என்ற INITIAL பெருமை படும்படி வைத்தவர்கள். அது சரி, இந்த பெருமையைக் கொடுத்த நல்லான் சக்கரவர்த்தி யார் ?

நல்லான் வாழ்ந்தது கர்நாடக ராஜ்யத்தில். அப்புறம் காஞ்சிபுரம், திருமலை என்று பல இடங்களில் வம்சம் பரவியது. மஹான் நாதமுனிகளுக்கு ஒரு வைஷ்ணவ சிஷ்யன். உருப்பத்தூர் ஆச்சான் பிள்ளை என்று பெயர் (823–924) இன்னொரு பெயர் வரதாச்சாரி. ஸ்ரீவத்ஸ கோத்ரம். நான் சொல்வது காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு சம்பவம். 

ஒருநாள் வரதாச்சாரி ஆற்றில் ஸ்னானம் செய்யப் போகும்போது ஒரு பிணம் நீரில் மிதந்து வருகிறது. யார் இது என்று பார்க்கிறார். அதன் உடலில் ஸ்ரீவைஷ்ணவ நாமங்கள் உடலில் பொறித்த சங்க சக்ரம் இன்னும் மறைய வில்லை. அடாடா, யாரோ ஒரு வைஷ்ணவர் உடலாக இருக்கி றதே. அனாதையாக இப்படி நீரில் அடித்துச் செல்ல விடலாமா? அதற்கு செய்யவேண்டிய இறுதி கார்யங்களைச் செய்ய யாரும் இல்லாத போது நாம் செய்யவேண்டியது கடமை அல்லவா? என்று மனம் உரக்க சொல்லியது. அந்த உடலை சிரமப்பட்டு கரையேற்றி, வைஷ்ணவ சம்பிரதாய வேத மந்த்ர பிரேத ஸம்ஸ்காரங்கள் செய்து அக்னியில் அந்த உடலை சேர்த்து கடனை முடித்தார். தீ அந்த உடலை மட்டும் விழுங்கவில்லை, காட்டுத்தீயாகப் பரவி ஊரிலுள்ள பிராமணர்கள் பண்டிதர்கள் எல்லோரும் சண்டைக்கு வந்துவிட்டார்கள். 

அப்போதெல்லாம் ஜாதி வித்யாசம் பார்த்த காலம் அல்லவா. எப்படி ஒரு வேறு வகுப்பு மனிதனின் உடலைத் தொட்டு வைஷ்ணவ அந்திம சடங்குகளை நீ செய்யலாம்? வரதாச்சாரியை ப்ரஷ்டம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். 

வரதாச்சாரி வீட்டில் ஸ்ரார்த்தம். ஒரு பிராமணனும் நடத்தி வைக்க எந்த பிராமண வைதிகரும் தயாரில்லை. மறுத்துவிட்டார்கள். 

''காஞ்சி வரதராஜா, ஸ்ரீரங்க ரங்கநாதா, திருப்பதி வெங்கடேசா எல்லாம் உன் செயல், என் நிலையைப் பார்த்தாயா?' ஒரு வைஷ்ணவனுக்கு அந்திம சம்ஸ்காரம் செய்வித்ததற்கு இந்த தண்டனையா?.

நேரம் ஓடுகிறது ஊருக்கு வெளியே ரெண்டு பிராமணர்களைக் கண்டு அந்த வெளியூர்க் காரர்களை ஸ்ரார்த்தம் நடத்தி வைக்க கெஞ்சுகிறார். ஒப்புக்கொண்டு வருகிறார்கள். சாஸ்த்ரோக்தமாக நடத்தி கொடுத்து வைத்த அவர்களுக்கு நன்றியோடு நமஸ்காரம் செய்த வரதாச்சாரி கண்ணீர் விட்டு வணங்குகிறார். நீங்கள் யார் என்று அடியேன் அறியலாமா? 

''நான் வரதராஜன், காஞ்சிபுரம், என்று ஒருவர் சொல்லி மற்றவரை பார்க்க அவர் '' நான் வெங்கடேசன் திருமலை'' என்று சொல்லி புன்னகைத்து மறைகிறார்கள்.

அன்று காலை காஞ்சி புறம் வரதராஜன் சந்நிதியில் பட்டாச்சார்யார் கள் (வரதாச்சாரியை ப்ரஷ்டம் செயது வைத்தவர்களில் சிலர்) பூஜை செய்து காஞ்சி வரதனை அலங் கரித்து ஹாரத்தி காட்டும்போது கணீரென்று பெருமாள் குரல் ஒலிக்கிறது.

''ஊருக்கெல்லாம் பொல்லான், எமக்கு நல்ல ஆச்சான் சக்கரவர்த்தி'' 

ஆஹா இன்று ஆச்சான் வரதாச்சாரி வீட்டில் ஸ்ரார்த்தம். நாம் ஒருவரும் உதவவில்லையே. பெருமாள் இப்படி சொல்கிறாரே என்று ஓடுகிறார்கள். விஷயம் கசிகிறது. மின்னல் போல் எங்கும் சேதி பரவுகிறது
பெருமாளே வந்து நடத்திக் கொடுத்தது தெரிந்து வரதாச்சாரியை எல்லோரும் வணங்கிக் கொண்டாடுகிறார்கள் .பெருமைப் படுத்துகிறார்கள். நல்லான் சக்ரவர்த்தி என்று அழைக்கிறார்கள்
அவர் வம்சம் தான் நல்லான் சக்கரவர்த்தி என்ற பெருமை வாய்ந்த காஞ்சி வரதராஜ பெருமாள் கொடுத்த பட்டத்தை இன்னும் விடாமல் சூட்டிக்கொண்ட எத்தனையோ வைஷ்ணவர்கள். இந்த பட்டத்தை விடலாமா?? எத்தனை பேருக்கு கிடைக்கும்?


No comments:

Post a Comment