Wednesday, August 12, 2020

Ethugai & Monai in Kamba Ramayanam

கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எதுகை மோனை ஆகிய ஒலிநயங்களைப் பாடல்களின் பொருளையும் இலக்கிய அழகையும் வெளிப்படுத்த மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதையரோ!
ஓசை பெற்று ஒரு ஒலியைக் கேட்டு
உயர் பாற்கடல் உற்று ஒரு பொங்கி வழியும் பாற்கடலை வந்தடைந்து
ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென ஒரு பூனை அந்த பாற்கடலை முழுமையாகவே நக்கிப் பருக எவ்வாறு உள்ளே புகுகிறதோ, அதே போல
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று நானும் ஆசைப்பட்டு எழுதத் தொடங்கினேன், என்கிறான் கம்பன்.
எதை எழுதத் தொடங்கினான்?
காசு இல் கொற்றத்து இராமன் கதையை குற்றம் எதுவும் புரியாமல் போரில் வெற்றி கண்ட ராம பகவானின் கதையை எழுதத் தொடங்கினான்.
அதாவது, பக்கத்தில் பாற்கடல் பொங்கிக் கிடக்கிறது என்பதை ஒலி கேட்டு அறிந்து ஒரு பூனை அதை முழுமையாகவே நக்கிச் சாப்பிட எவ்வாறு ஆசைப்படுமோ, அதே போல கம்பனும் குற்றமே புரியாமல் போர் களத்தில் வெற்றி பெற்ற ராம பகவானின் வாழ்க்கை வரலாற்றை எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்பதை அறிந்து எழுத ஆசைப்படுகிறான்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியின் முதல் வார்த்தையைத் தனியாக எடுத்துக் கொண்டால், ஓசை - பூசை - ஆசை - காசுஇல் என்ற நான்கு வார்த்தைகள் கிடைக்கும்.
ஒரு 'ஓசை' எவ்வாறு பூசையைத் தூண்டியதோ, அதே போல ராம பகவானின் 'காசு இல்' வெற்றி கம்பனை எழுத ஆசைப்படச் செய்தது. ஆக, இந்த நான்கு வார்த்தைகள் பாடலின் பொருளைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஓசை ---> பூசை
காசு இல் ---> ஆசை
ஒரு பள்ளிக்கூட மாணவன் எவ்வாறு key-words எனப்படும் முக்கியமான வார்த்தைகளைத் தனியாக எழுதி மனப்பாடம் செய்வானோ, அதே போல கம்பனும் இந்த வார்த்தைகள் பாடலில் தனியாக நிற்பது போல் எதுகையைப் பயன்படுத்தி இவ்வார்த்தைகள் ஓங்கி நிற்கச் செய்கிறான். ஆகவே, நாம் இந்தப் பாடலைப் படிக்கும்போதும் இந்த நான்கு வார்த்தைகள் ஓங்கி நிற்பது போலவே படிப்பது சிறந்ததாகும்.
இன்னொரு விஷயமும் குறிப்பிடத் தக்கது. கம்பனும் ராம பகவானின் வாழ்க்கை வரலாற்றை நேரிடையாகக் கண்டதில்லை. கேள்விப்பட்டதுதான். ஆகவே, 'ஓசை பெற்று' என்று பூனையைப் பற்றி கூறியது கம்பனுக்கும் பொருத்தமாகிறது. இவ்வாறு, ஒலி நயம் பல மட்டங்களில் செயல்பட்டு பாடலின் பொருளுக்கு ஆழத்தை வழங்குகிறது.

No comments:

Post a Comment