*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - மனம் போல மாங்கல்யம்!*
_புத்தகம் - காஞ்சி மகான் தரிசனம்_
_அனுபவம் பகிர்வு - ஸ்ரீமடம் பாலு மாமா_
புதுக்கோட்டையிலிருந்து பேப்பர் மெர்ச்சென்ட் (காகித வியாபாரி) வீட்டுப் பெண் ஒருத்தி மிகவும் பயபக்தியுடன் பெரியவாள் தரிசனத்துக்கு வருவாள். அவள் மிகவும் குட்டை(குள்ளமானவள்).
ஸ்ரீ பெரியவாளுக்கு கிரீடம், ஏலக்காய் மாலை, தலையணை போன்றவற்றை செய்து அர்ப்பணிப்பாள். அவளுக்குக் கல்யாணமாகவில்லை.
சீடரொருவர் ஸ்ரீ பெரியவாளிடம்,
"அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆக வேண்டும்" என்று விண்ணப்பித்தார். அவர்களும் புன்சிரிப்பு சிரித்தவாறே அனுக்ரஹம் செய்தார்கள்.
அந்தப் பெண் தனக்கு வரும் கணவன்,"ஸ்ரீ பெரியவாளிடம் பக்தி உடையவராக இருக்க வேண்டும். ஏழையாக இருந்தாலும்,குடுமி வைத்திருந்தாலும் குற்றமில்லை. அழகாக இல்லாவிட்டாலும் தப்பில்லை" என்றெல்லாம் பிரார்த்திப்பாள்.
ஒருநாள் ஸ்ரீபெரியவாள் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் ஆதிசங்கரர் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது புதுக்கோட்டைப் பெண்ணும் வந்து தரிசனம் செய்தாள்.
வழக்கம்போல் சீடர், ஸ்ரீ பெரியவாளிடம்,
"அந்தப் பெண்ணின் கல்யாணத்துக்கு அனுக்ரஹம்
செய்ய வேண்டும்" என்றார்.
ஸ்ரீ பெரியவாள் உடனே,"நீ ஏதாவது ஒரு பையனை இப்பொழுதே அழைத்து வா, நான் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்கள்.
என்ன ஆச்சர்யம்! ஸ்ரீ பெரியவாள் சொன்ன முகூர்த்தம், கும்பகோணம் ஆடிட்டர் பையன் ஒருவன் தரிசனத்துக்கு வந்து சேர்ந்தான்.
ஸ்ரீ பெரியவாளிடம்,"இதோ ஒரு பையன் வந்திருக்கிறான்" என்றார் தொண்டர்.
ஸ்ரீ பெரியவாள் அவனைக் கூப்பிட்டார்கள். "இதோ இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்" என்றார்கள்.
அந்தப் பையன், "பெரியவாள் உத்தரவுப்படி இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறேன். ஆனால் கும்பகோணம் போய் என் தாயார்,தகப்பனாரிடம் தெரிவித்து அவர்களுடைய சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்றான்.
ஸ்ரீ பெரியவாள் அவனுடைய மாத்ரு,பித்ரு பக்தியைப் பாராட்டினார்கள்.அதன் பின்னர் புதுக்கோட்டையில் அந்தக் கல்யாணம் சிறப்பாக நடந்தது.
*பெரியவா சரணம்!*
_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural
*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*
No comments:
Post a Comment