ஶ்ரீமத்பாக்வதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 11
அத்தியாயம் 11 (தொடர்ச்சி)
ப்ருந்தாவனத்தையும் கோவர்தன மலையையும் யமுனையின் மணல் திட்டுகளையும் பார்த்த பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் அளவு கடந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன.
தேசிகர் கூறுகிறார் ,
யேனௌஷதீனாம் அதிபம் புரஸ்தாத்
ஆஹ்லாத ஹேதும் ஜகதாம் அகார்ஷீத்
தேனைவ தத்யௌ மனசா வனம் தத்
க்ருஷ்ணோ கவாம் க்ஷேமஸம்ருத்திம் இச்சன்
உலகத்துக்கு ஆனந்தம் அளிப்பவனும் , மூலிகைகளுக்கு அதிபனாகவும் உள்ள சந்திரனை எந்த மனதால் படைத்தானோ அந்த மனதினால் பசுக்களுக்கு க்ஷேமத்தை விரும்பி அந்த வனத்தை செழிப்புறச் செய்தான்
.
யாதவ வம்சத்தின் சந்திரனான கண்ணன் பொங்கும்அருள் அலைகளாலே அந்த ப்ருந்தாவனத்தை கால்நடைகள் சஞ்சரிக்கவும் உண்ணவும் மிருதுவான புற்களுடையதாகவும், கற்பத்தருவை மிஞ்சும் பலனை அளிக்கும் மரங்களைக் கொண்டதாகவும் சங்கல்பித்தான்.
பின்னர் கன்று மேய்க்கும் பருவம் அடைந்த பலராமனும் கண்ணனும் ஆய்ப்பாடிக்கு அருகிலேயே கன்றுகளை மேய்க்க த் தொடங்கினார்கள். ஒரு சமயம் அவர்கள் யமுனைக்கரையில் கன்றுகளை மேய்க்கையில் ஒரு அசுரன் கன்று உருவத்தில் அவர்களைக் கொல்ல வந்தான்
. கன்றுக்கூட்டத்தில் சேர்ந்து செல்லும் அவ்னை கண்ணன் கண்டு பலராமனிடம் காண்பித்து ஒன்றும் அறியாதவன் போல் அருகில் சென்றான். அந்த அசுரனின் பின் கால்களுடன் வாலையும் சேர்த்துப் பிடித்துச் சுழற்றி ஒரு விளா மரத்தின்மேல் எறிந்தான். உயிரற்ற அவன் உடல் வீழ்த்தப்பட்ட விளாம்பழங்களுடன் விழுந்தது.
மற்றொரு சமயம் எல்லா சிறுவர்களும் கன்றுக் கூட்டங்களுடன் தண்ணீர் பருக விரும்பி ஓர் நீர் நிலைக்குச் சென்றார்கள். அங்கே வஜ்ரத்தால் சிதைவுண்ட மலைச்சிகரம் போன்ற ஒரு பெரும் பூதத்தைக் கண்டு பயந்தனர். கொக்கு வடிவத்தில் இருந்த பகன் என்ற அசுரன் விரைவில் வந்து க்ருஷ்ணனை விழுங்க முயன்றான்.
பலராமனும் மற்றவர்களும் அந்த பூதாகாரமான கொக்கினால் விழுங்கப்பட்ட கண்ணனைக் கண்டு பயத்தினால் அசைவற்று இருந்தனர்.
ஆனால் அந்த கொக்கு தன் தொண்டையில் நெருப்பைப் போல தகிக்கும் அவனை உடனே கக்கி விட்டது.
பிறகு கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட அவனுடைய மூக்கை இரு கரங்களாலும் பிடித்துப் புல்லைக் கிழிப்பது போல் கிழித்துக் கொன்றான்.
வனத்தில் இருந்து திரும்பிய இடைப்பிள்ளகள் நடந்ததைக் கூற , அதைக் கேட்ட நந்தரும் மற்றவர்களும் இவனைக் கொல்ல வந்தவர்கள் தாமாக மாண்டுபோவதைக் கண்டு இவனைப் பற்றி கர்கர் கூறியது உண்மையே என்று எண்ணினர்.
பட்சிகளுடன் விளையாடுவது குரங்குகளுடன் தாவுவது போன்ற விளையாட்டுகளில் பலராமனும் கிருஷ்ணனும் கௌமாரப் பருவத்தைக் கழித்தார்கள் . ( 5 வயது வரை கௌமாரம் )
No comments:
Post a Comment