Tuesday, November 26, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 16 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - தசமஸ்கந்தம்

அத்தியாயம் 16

அந்த விஷத்திற்குக் காரணம் காளியன் என்ற கொடிய பாம்பு வசித்து வந்த மடு ஒன்று யமுனையில் இருந்தது. அதன் விஷம் பரவி அங்கு பறந்த பறவைகள் கூட மடிந்து விழக் காரணமாயிற்று.

அந்தப் பாம்பின் விஷத்தால் யமுனை நீர் கெடுவதை உணர்ந்த கண்ணன் அந்தப் பாம்பை தண்டிக்க எண்ணி இடுப்பில் துணியை இறுகக் கட்டிக்கொண்டு அங்கிருந்த கதம்ப மரத்தின் மேல் ஏறி விஷ ஜலத்தில் குதித்தான்.

அப்போது அந்தப் பாம்பு வெளி வந்து அவன் உடலை சுற்றிக் கொண்டது. அதைக் கண்ட அவனுடைய சினேகிதர்கள் பயத்தால் மூர்ச்சை அடைந்தனர் . இதற்கிடையில் கோகுலத்தில் தென்பட்ட துர்சகுனங்களைக் கண்டும், கண்ணன் பலராமன் இல்லாமல் வனம் சென்றதைக் கேட்டும் யசோதையும் நந்தனும் அவனைத் தேடி எல்லோருடனும் கூட அங்கு வந்தனர்.
அவனைக் காக்க அவர்கள் நதியில் இறங்க முற்பட , கண்ணனின் மகிமையை அறிந்த பலராமன் அவர்களைப் புன்முறுவலுடன் கண்ணனுக்கு ஒன்றும் நேராது எனக் கூறித் தடுத்தான்.

அவர்கள் பயப்படுவதைக் கண்டு கண்ணன் தன் உருவத்தைப் பெருக்கி பாம்பிடம் இருந்து மீண்டவன் ஆனான். விஷம் கக்கும் காளியனிடம் கருடன் போல விளையாடி சுற்றி சுற்றி வந்தான். காளீயன் அவன் பின் தொடர்ந்து களைப்புற்றபோது அதன் பருத்த தலைகள் மீது அதன் சிரசில் இருந்த ரத்னங்களின் சேர்க்கையால் அதிகமாகச் சிவந்த பாதங்களுடன் எல்லாக் கலைகளுக்கும் ஆதி புருஷனாகிய பக்வான் நடனமாடினார்.

அந்த நடனத்தினால் ஒடிந்த படங்களுடன் வாயிலிருந்து கக்கிய ரத்தத்துடனும் உடல் முறிந்தவனான காளியன்கண்ணனே புராணபுருஷனாகிய நாராயணன் என அறிந்து சரணம் அடைந்தான்.
அவனுடைய மனைவிகள் வெளி வந்து கண்ணனை துதித்து கண்ணன் பாத ஸ்பரிசத்தால் புனிதம் அடைந்த அவனைக் காக்கும்படி வேண்டினர். பிறகு அவனை மன்னித்து அங்கிருந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள ரமணகத்தீவிற்குப் போய்விடும்படியும் தன் பாத ஸ்பரிசம் ஏற்பட்டதால் கருடனிடம் பயம் இல்லை என்றும் கூறினார்.
பிறகு அவரை வணங்கி காளியன் தன் மனைவிகளுடன் சமுத்திரம் சென்றான். பகவானுடைய அனுக்ரஹத்தால் யமுனை நீர் மறுபடியும் தூயதாக ஆயிற்று.

இதை தேசிகர் எவ்வாறு வர்ணிக்கிறார் என்று பார்ப்போமா?
ததுத்தமாங்கம் பரிகல்ப்ய ரங்கம் தரங்கநிஷ்பன்ன ம்ருத்ங்க நாதம்
ப்ரசஸ்யமான: த்ரிதசை: அகார்ஷீத் அவ்யாஹதாம் ஆரபடீம் அனந்த:

காளியனின் தலையை மேடையாகவும் யமுனையின் அலைகளை ம்ருதங்கமாகவும் கொண்டு வானவர்கள் விசேஷமாகக் கொண்டாட சிறந்த ஆட்டம் ஆடினான் அனந்தன் . அனந்தனின் ஆட்டத்திற்கு முடிவேது!
அவன் வேகமாக ஆடுகையில் எங்கும் காணப்பட்டு கடலின் அலைகளில் பிரதிபலிக்கும் சந்திரன் போல் தோன்றினான்.

தேசிகர் ,பகவானின் யோக நித்திரைஸ்தலமான கடலை அடைந்த காளியனுக்குத் தன் இருப்பிடத்திலேயே அடைக்கலம் தந்த பகவானின் கருணை எத்தகையது என்று வியக்கிறார் .

மேலும் வேதாந்தாசார்யவர்யரான வேதாந்த தேசிகர் காளியமர்தனத்தைப் பின்வருமாறு உருவகப் படுத்துகிறார்.

கண்ணன் காளியனின் ஐந்து தலைகள் மீது ஆடியது விஷய சுகங்களாகிய விஷத்தை தன் பக்தர்களின் பஞ்ச இந்த்ரியங்களில் இருந்து போக்குவதைக் குறிப்பது போல் உள்ளது. அதாவது மனம் இந்த்ரியங்களின் ஆளுகையில் இருந்து விடுபட்டு மேல் எழும்பி பகவானிடத்து பக்தியினால் ஆனந்த நடனம் ஆடுவதைக் குறிக்கிறது. இது பகவான் நம் மனதைத் தன் வசம் ஆக்குவதினாலேயே சாத்தியம்.

  

No comments:

Post a Comment