ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம் - அத்தியாயம் 12
அத்தியாயம் 12
ஒரு நாள் காலையில் கிருஷ்ணன் வனபோஜனம் செய்ய எண்ணி தன் தோழர்களுடனும் கன்றுகளுடனும் கிளம்பினார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் சித்ரான்னம் கொம்பு வாத்தியம் புல்லாங்குழல் இவைகளுடன் கன்றுக் கூட்டங்களை முன் செலுத்திப் புறப்பட்டார்கள்.
அவர்கள் க்ருஷ்னனுடன் விலையாடிக்கொண்டும், வண்டுகள் பறவைகள் இவற்றின் பின் ஓடிக்கொண்டும் குரங்குகளுடன் சேஷ்டைகள் செய்துகொண்டும் பலவிதமாக விளையாடினார்கள்.
இவ்வாறு ஞானிகளுக்கு பரமானந்தத்தைக் கொடுக்கும் பரப்ரம்மமாகவும், பக்தர்களுக்கு பர தெய்வமாகவும், மாயையில் மயங்கினோர்க்கு மானுடக் குழந்தையாகவும் இருந்த கண்ணனோடு முன்செய்த புண்ணியவசத்தால் விளையாடினர்.
அப்போது அவர்கள் விளையாட்டையும் மகிழ்ச்சியையும் கண்டு பொறாதவன் போல அங்கு அகாசுரன் என்ற அசுரன் அவர்களை அணுகினான்.
பூதனைக்கும் பகனுக்கும் தம்பியான அவன் கம்சனால் ஏவப்பட்டு கிருஷ்ணனை அழிக்க எண்ணி ஒரு யோஜனை அகலமான மலை போல் பருத்து மலைப் பாம்பின் உருவத்தில் அவர்கள் வரும் வழியில் படுத்து அவனுடைய வாயை அகலத் திறந்தான். அவனை ஒரு மலையின் குகை என்று எண்ணி அவன் வாயில் அவர்கள் புகுந்தனர்.
அவன் யாரென்று அறிந்த பகவான் அவன் வாயில் புகுந்தார். பிறகு அவன் தொண்டையில் நின்று தன் உருவைப் பெருக்கத் தொடங்கினார். அதனால் அந்த அசுரனுடைய பிராணவாயுவின் மார்க்கம் தடுக்கப்பட்டு விழி பிதுங்கி முட்டிய பிராணன் அவனுடைய தலையைப் பிளந்துகொண்டு வெளிக் கிளம்பியது. பிறகு தன் சினேகிதர்களுக்கு உயிரூட்டி வெளிக் கொணர்ந்தார். அகாசுரனுடைய உடலில் இருந்து ஒரு ஒளி வெளிக் கிளம்பி கண்ணனிடம் புகுந்தது.
அக: என்றால் பாபம் அது கண்ணனை விழுங்க எண்ணி அவனால் விழுங்கப்பட்டது. உலகை அழிக்கும் பாபம் எல்லா பாபங்களையும் போக்கும் பகவானிடம் என்ன செய்ய முடியும் ? பரத்திற்கும் அபரத்திற்கும் மேலான ஶ்ரீ க்ருஷ்ணன் தனது ஸ்பர்சத்தால் அகாசுரனுடைய பாபததைப் போக்கி முக்தியை அளித்தார்.
No comments:
Post a Comment