Wednesday, November 13, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 10 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஶ்ரீமத்பாக்வதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 10

யசோதை அவ்விடம் விட்டுச் சென்ற பின் முன்பு குபேர குமாரர்களாய் இருந்து இப்போது நாரதரின் சாபத்தால் மருத மரங்களாய் நிற்கும் நள கூபரர்களைக் கண்டு அவர்க்ளை சாப்த்தில் இருந்து விடுவிக்க எண்ணினான் என்று சுகர் கூறியதைக் கேட்டு பரீக்ஷித், கோபம் கொள்ளாத சாந்தமான நாரத மஹரிஷி எவ்வாறு அவர்களை சபிக்கலுற்றார் என்று கேட்க நளகூபர வ்ருத்தாந்தத்தை சுகர் சொல்ல ஆரம்பித்தார்.
இருவரும் குபேரனின் குமாரர்கள். அவர்கள் ஹிமாலயத்தில் சிவபெருமானின் சேவகர்களாக இருந்தபோது கைலாயத்தின் வெளிப்பாகத்தில் கங்கைக்கரையில் இருந்த பூங்காவில் பெண்களுடன் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டும் , கங்கை நதியில் ஜலக்ரீடை செய்துகொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரத மஹரிஷியைக் கண்டு பெண்கள் நாணமுற்று பயத்துடன் ஆடை அணிந்துகொள்ள இவர்கள் மதத்தினால் அவரைக் கண்டும் வாளாவிருந்தனர்.
நாரதர், குபேரனின் குமாரர்களாகவும் சிவ சேவகர்களாகவும் இருந்த அவர்களின் போக்கைக்கண்டு வருந்தி அவர்களைத் திருத்துவதற்காக சாபம் கொடுத்தார். தன்னை மதிக்கவில்லை என்பதற்காக அல்ல.
நாரதர் கூறியது,
செல்வச்செருக்கைப் போல ஒருவனை வேறு எதுவும் கெடுப்பதில்லை . மண்ணகப் போகும் தேகத்தின் இன்பத்திற்காக எதுவும் செய்யத் துணிகிறான். செல்வமதம் பிடித்த ஒருவனுக்கு ஏழ்மை என்பது வரம். காலில் முள் குத்தி துன்பமடைபவன் அதே நிலையில் உள்ள மற்றவனைக் கண்டு இரங்குகிறான். ஆனால் அதை அனுபவிக்காதவன் இரங்குவதில்லை. சாதுக்கள் ஏழைகளிடமே சென்று அருள் புரிகிறார்கள். செல்வந்தனிடம் செலவதில்லை. செல்வச்செருக்கால் இந்த இளைஞர்கள் வழி தவறிவிட்டனர். இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு எண்ணிய நாரதர் அவர்களைப்பார்த்து தன்னிலை அறியாமல் மரம் போல் நின்ற இவர் இருவரும் மரமாகக் கடவது என்று சாபமிட்டார். ஆயினும் அவர்களுக்கு தங்கள் பூர்வஜன்ம நினைவு இருக்கும் என்றும் 100 தேவ வருடங்கள் சென்ற பின் வாசுதேவரின் அருளால் அவர்கள் சாப விமோசனம் அடைவர் என்று கூறினார். பிறகு அவர் நாராயணாச்ரமத்திற்குச் சென்றுவிட்டார்.
கண்ணன் எண்ணினான் " தேவ ரிஷி நாரதர் எனக்கு மிகவும் பிரியமானவர் . இவர்களும் குபேரனுடைய பிள்ளைகள். ஆகவே அவரால் எது சொல்லப்பட்டதோ அதை அப்படியே செய்கிறேன் ," என்று பாகவதஸ்ரேஷ்டரான நாரதரின் சொல்லை சத்தியமாக்க அந்த இரண்டு மருத மரங்கள் இருந்த இடத்திற்கு உரலை இழுத்துக் கொண்டு சென்றான்.
அந்த இரண்டு மரங்களின் குறுக்கில் செல்லுகையில் உரல் மாட்டிக் கொண்டது.இடுப்பில் கயிற்றுடன் கூடிய கண்ணன் தன் பின்னால் இருந்த உரலை வேகமாக இழுக்கவே பெரும் சப்தத்துடன் அந்த மரங்கள் சாய்ந்தன. அவைகளில் இருந்து இரு திவ்ய புருஷரகள் எழுந்து கை கூப்பி கண்ணனை வணங்கிப் போற்றினர்.
அவர்கள் கூறியது,
உலகத்தின் காரணமானவர் தாங்களே.சர்வவ்யாபியான நாராயணனாகிய தங்களிடம் இருந்து ப்ரக்ருதியின் வேறுபாடுகள் உண்டாயின. அவற்றின் செயல்களான மனம் புத்தி இந்த்ரியங்கள் இவைகள் மூலம் அவைகளுக்குக் காரணமான உன்னை அறிவது எஞ்ஞனம்?
"அளவிடற்கரிய பெருமை வாய்ந்தவரே , உங்களுடைய அடியாராகிய நரதரின் அடிமைகளாக எங்களை அறிய வேண்டுகிறோம். நாரதரின் அனுக்ரஹத்தால் பகவானான உமது தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் இந்த்ரியங்கள் மன்ம் இவை எப்போதும் உன் சேவையிலேயே ஈடுபட்டிருக்க அருள வேண்டும்."
பகவான் கூறியது,
"ஐஸ்வர்ய மதத்தால் அறிவிழந்த உங்களுக்கு கருணை மிகுந்தவரான் நாரதரின் சாபம் ஒர் அனுக்ரஹமே. இது எனக்கு முன்பே தெரியும். பூரணமாக என்னிடம் தங்களை அர்ப்பணம் செய்த சாதுக்களின் அனுக்ரஹத்தால் சூரியனைக் கண்ட இருள் போல அஞ்ஞானம் அகன்று விடும். உங்களுக்கு என்னிடம் இப்போது பிறவிப்பிணியைப் போக்கும் உன்னத பக்தி உண்டாயிருக்கிறது. என்னை த்யானித்துக் கொண்டே இருப்பிடம் செல்லுங்கள். "
இவ்விதம் அனுக்ரஹிக்கப்பட்ட அவர்கள் கண்ணனை வலம் வந்துவிடை பெற்று வடதிசை நோக்கிச் சென்றனர்.

  

No comments:

Post a Comment