ஆதிசேஷனால் பெற்ற திருநாமம் : -"புஜகோத்தமாய நமஹ"
பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மேல் சயனித்திருந்தார். அப்போது மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் திருமாலை எதிர்த்துப் போர் புரிவதற்காக வந்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருந்த திருமால் அவர்களை வருவதைக் கவனிக்கவில்லை.எனினும் திருமாலின் படுக்கையாய்த் திகழும் ஆதிசேஷன், அந்த அசுரர்கள் வருவதைக் கண்டார். திருமாலை எழுப்பி, அசுரர்களின் வரவைச் சொல்லி எச்சரிக்க நினைத்தார். ஆனாலும் திருமாலின் தூக்கத்துக்கு இடையூறு செய்ய அவருக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அதற்குள், மதுவும் கைடபனும் திருமாலை நெருங்கி விட்டார்கள். எனவே ஆதிசேஷன் தன் வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து மதுவையும் கைடபனையும் எரித்து விட்டார். இருவரும் கருகிச் சாம்பலானார்கள்.இருவரையும் எரித்தபின் ஆதிதேஷன் சிந்தித்துப் பார்த்தார். "திருமால் நமக்குத் தலைவர். நாம் அவருக்குத் தொண்டன். அவ்வாறிருக்க, தலைவரின் அனுமதியில்லாமல் தொண்டன் ஒரு செயலைச் செய்யலாமா?
திருமாலின் உத்தரவைப் பெற்றுக் கொண்டல்லவா இந்த இரு அசுரர்களையும் நாம் கொன்றிருக்க வேண்டும்?" என்று கருதினார். தனது செயலை எண்ணி வருந்திய ஆதிசேஷன் வெட்கத்தால் தலை குனிந்தார்.
சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த திருமால், தலைகுனிந்திருக்கும் ஆதிசேஷனைப் பார்த்து, "உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிகிறதே! என்ன ஆயிற்று?" என்று கேட்டார். ஆதிசேஷன் நடந்தவற்றைத் திருமாலிடம் விளக்கினார். "உங்களது தொண்டனான அடியேன், உங்களிடம் அனுமதி பெறாமலேயே இங்கு வந்த இரண்டு அசுரர்களை எரித்தது தவறல்லவா? நீங்கள் அவர்களுக்கு ஒரு தண்டனையை விதித்தால், அதை நான் நிறைவேற்றலாம். ஆனால் நானே தண்டனையைத் தீர்மானிக்கக் கூடாதல்லவா?" என்று பணிவுடன் கூறினார்.
"நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை! நான் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அனைத்து உயிர்களும் எனக்குத் தொண்டர்கள். தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதும், தலைவனுக்கு ஆபத்து வருகையில் காப்பதும் தானே ஒரு தொண்டனின் கடமை? அதைத் தான் நீ செய்திருக்கிறாய்! எனவே நீ எனக்குத் தொண்டு செய்ததை எண்ணி மகிழ வேண்டுமே தவிர வருந்தக்கூடாது!" என்று திருமால் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்து, திருமால் முன் தலையைச் சாய்த்து வணங்கினார் ஆதிசேஷன்.
இன்றும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமெய்யம் (திருமயம்) திவ்ய தேசத்தில் இக்காட்சியைக் காணலாம். ஆதிசேஷன், தன் மேல் சயனித்திருக்கும் சத்தியமூர்த்திப் பெருமாளை நோக்கித் தனது தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பணிவுடன் விளங்குவார்.வடமொழியில் சேஷன் என்றால் தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதற்காகவே வாழும் தொண்டன் என்று பொருள். அத்தகைய தொண்டராக ஆதிசேஷன் எப்போதும் விளங்குவதால் தான் அவர் ஆதி "சேஷன்" என்று
அழைக்கப்படுகிறார்.
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்அணையாம் திருமாற்கு அரவு"என்ற பாசுரத்துக்கேற்ப அனைத்து விதமான தொண்டுகளையும் ஆதிசேஷன் திருமாலுக்குச் செய்கிறார்.'புஜக:' என்றால் பாம்பு என்று பொருள். 'உத்தம:' என்றால் தலைவர் என்று பொருள். ஆதிசேஷனாகிய புஜகனுக்குத் தலைவராக விளங்கி, அவர் மேலே எப்போதும் சயனித்திருப்பதால், திருமால் 'புஜகோத்தம:' என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 195-வது திருநாமம்.ஆதிசேஷன் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் பிரதிநிதி. ஆதிசேஷனைப் போல் ஒவ்வொரு ஜீவாத்மாவும் திருமாலுக்கு சேஷபூதர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
"புஜகோத்தமாய நமஹ" என்று தினமும் நாம் சொல்லி வந்தால், திருமாலுக்கும் நமக்கும் உள்ள சேஷ-சேஷி உறவை நன்கு உணரும்படித் திருமால் அருள்புரிவார்.
By Anantharaman from FB
No comments:
Post a Comment