Tuesday, September 3, 2019

Please eliminate my karmas - Arunagirinathar in kandar alangaram

Courtesy:Sri.Manian
                                                           வினை தீர்த்து அருள்வாய்.

 
அருளாளர் என்று யார் யாருக்கோ பட்டம் சூட்டி விருது கொடுத்து அருளாளர்அருளார் என்று அழைக்கிறோம். உணமையான அருளாளர்களைப் பாரக்கும் போது தான் நாம் செய்கிற அறிவில்லாத செயல் புரிகிறது.

 தம் உடன் வாழும் மக்கள் படுகிற துனபத்தையும் துயரத்தையும் உணரந்து,அவரகள் கடவுளிடம் முறையிடும் எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறாரகளே என்று துயரப்பட்டு, அவரகளுடைய அறிவின்மை, துயரம், துனபம், எல்லாவற்றையும் தம் மீது ஏற்றிக் கொண்டு அவரகளுக்காக இறைவனிடம் முறையிடுகிறார் அருணகிரிநாதர்.   மக்கள் படும் துயரத்தை எல்லாம் பட்டியல் போடுகிற மாதிரி பட்டியல் இட்டு இறைவனிடம் பிரார்த்திக்கிறார். உண்மையில். அவரல்லவோ அருளாளர்.

திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர அனுபூதி போன்ற நூலகளை ஊன்றிப் படித்தவர்கள் இதை நன்கு உணரவாரகள் . அவர் உற்றதாக கூறும் நோய்களும், குற்றம் குறைகளும், ஒரு வாழ்வில் ஏற்று அனுபவிக்க முடியாதவை. பல ஜன்மங்களில் அனுபவித்தாலும், தீராத அளவுக்கு
அதிகமானவை. நமக்காக  அருளாளர்அருணகிரியார், திருத்தணி மாமலையில்  வீற்றிருக்கும் அமரசிகாமணியாகிய முருகப் பெருமானிடம், ஒரு வேண்டுகோளை வைக்கிறார்.  என்ன வேண்டுகோள்? பார்ப்போம்.
 
                  ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்தும், உன் அருட்பதங்கள்
                   சேவிக்க என்று நினைக்கின்றிலேன், வினை தீர்த்தருள்வாய்
                   வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலை வாழ்
                  சேவல் கொடி உடையானே, அமர சிகாமணியே

 அருணகிரி நாதர் இயற்றிய கந்தர் அலங்காரத்தில் ஒரு பாடல் இது..
 
எது எதற்கோ கவலைப் படுகிற நமக்கு, பெரிய விஷயம் மறந்தே போய்.விடுகிறது. கொஞ்சங் கூட நினைவுக்கே வருகிறதில்லை.
சின்னச் சின்ன விஷயங்கள், நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன.அதே நினைவாய், அதே கவலையாய் இருந்து வருகிறோம். தூங்கக்கூட முடிவதில்லை. அப்படிக் கவலைப் படுகிறோம். ஒரு விஷ்யத்தை எதிர்கொண்டு, அதை சந்தித்து, நலமோ அல்லது, கெடுதலோ என்று முடிவாகிவிட்ட பின், நமக்குக் கவலைப் படுவதற்கு வேறொரு விஷயம் முளைத்து விடுகிறது. இப்படியே காலம் கழிந்து விடுகிறது.

நம்முடைய ஆவிக்கு, அதாவது உயிருக்கு, மோசம் வரப் போகிறதே, இந்த உடலை விட்டு உயிர் போகப போகிறதே,இத்தனை ஆண்டுகளாக நாம் அனுபவித்த சொந்த பந்தங்கள், மற்றுமுள்ள செல்வங்களில், ஒரு துளிக்கூட நம்மோடு வரப் போகிறதில்லையே, என்ற பெரிய கவலை, நிரந்தரமாக இருக்க மாட்டேன் என்கிறது.  அப்போதைக்கு அப்போது, வந்து விட்டுக், காணாமல் மறைந்து விடுகிறது.

சின்னச் சின்ன விஷய்ங்களை, எப்படி எதிர் நோக்குவது, எப்படி சந்திப்பது, என்றெல்லாம், கவலைப் பட்ட நாம், இந்த "மரண பயத்தை" சந்திப்பதற்கே பயப்படுகிறோம்.

இது தவிர்க்க முடியாத, நிச்சயமாக என்றாவது ஒரு நாள், நடந்தே தீர வேண்டிய நிகழ்வு, இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம், என்பதை எப்படி மறந்திருக்க முடியும ? ஆனால் அப்படித்தான் வாழ்க்கை அமைந்து விடுகிறது.  இள வயதிலும, நடு வயதிலும் நம்மைச் சுற்றியுள்ள உலக இனபங்கள் நம்மை ஈர்ககின்றன.அது மட்டுமல்லாமல் குடும்பம்  உற்றார் உறவு  இவை எல்லாம் வேறு சேர்ந்து நம்மை ஒரு மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறது.  

ஒரு இரவும் ஒரு பகலும கழிந்து விட்டால் மரணத்தை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வைத்து விடுகிறோம். இதை நாம் எளிதில் உணர்வதில்லை.  காலம் கடந்து உணர்கிறோம்.

 வயதான கால கட்டத்தில். வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால். தெரியும். எத்தனை பருவங்களைக் கடந்திருக்கிறோம். எத்தனை முழு நிலவையும், முதல் நிலவையும் பார்த்திருக்கிறோம்.  "நாமா"கப் பிறந்த இந்த உயிருக்காக, ஆன்மாவுக்காக என்ன செய்திருக்கிறோம்? ஆம் கோவில்களுக்குப் போனோம், இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்தோம். எதற்காக? எல்லாம் இந்த உடலின் காரணமாக. ஆசைகளை அனுபவிக்கவோ, நோய் தீர்வதற்கோ, தொல்லைகள் இல்லமல் வாழ்க்கையைக் கழிப்பதற்கோ,  இது கிடைக்கவோ, அல்லது அது நீங்கவோ
பிரார்த்தனை செய்தோம். உண்பதும் உறங்குவதும் அல்லாமல், நம் வாழ்க்கை வேறு  எப்படிக் கழிந்திருக்கிறது?

 உயிர் மேன்மை உற, நல்ல கதி அடைய, என்றாவது அந்த பரம்பொருளை நோக்கி, கசிந்திருக்கிறோமா? 
தனனை அறியத் துடித்திருகிகிறோமா?  

இதோ, இன்னும், சிறிது நாட்களில், சில மாதங்களில், சில வருடங்களில், இந்த உடலானது மரணத்தைத் தழுவப் போகிறதே, எப்போது நிற்குமோ இந்த மூச்சு.! நெஞ்சில் உள்ள கபம், என்றைக்கு நஞ்சாய் மாறுமோ! அதற்குள், உயிருக்காக என்ன செய்யப் போகிறோம். ஏதாவது செய்து விடலாம் என்று நினைத்தாலும், காலம் இல்லையே, எல்லாக் காலத்தையும் விருதாவாகக் கழித்து விட்டோமே என்ற எண்ணம் ஏற்படத்தான் செய்யும். 
            
                          
 " வினை தீர்த்தருள்வாய்" என்று இரண்டு சொற்களில் அருணகிரி  நாதர்,  நமக்காக, நம் மீதுள்ள கருணையினால்,  வேண்டுகோளை வைத்திருந்தாலும்,  அது ஒரு ஆழமான பிரார்த்தனை.  அதனைப் பார்ப்போம்.  

வாழ்வின் ஒரு கட்டத்தில், " ஆவிக்கு மோசம் வரும்" என்ற அறிவு  திடீரென்று வருகிறது. இந்த உணர்வு பெரும் அச்சத்தை உண்டாக்கினாலும்,  இந்த பயத்தைப் போக்க வழி தெரியாமல் நிற்கிறோம்.  உயிர் என்பது நம்முடையது என்று நினைக்கிறோம். உடல் தான் உயிர் என்றே நினைக்கிறோம்.  ஏதோ   நம் பொருள் ஒன்றை யாரோ பறித்துக் கொண்டு போவதைப் போன்றே மரணத்தை நாம் நினைக்கிறோம். சாதாரணமாக நம்மிடமிருக்கும் ஒரு பொருளை களவு போகாமல் காப்பதற்கு,  ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க முற்படுகிறோம் அல்லவா?   எல்லாவற்றிலும் மேலானதாக நினைக்கும் "உயிர்" என்ற பொருளை, வைப்பதற்கு இடம் தேடினோமா? 

அந்த "உயிரை" வைப்பதற்கு, , இறைவன் திருவடிகளை விட பாதுகாப்பான இடம் எங்கு கிடைக்கும்?.. 

" அருட் பதங்களை சேவித்து" அங்கு நம் உயிரை ஒப்புவிக்க வேண்டும் என்ற  நினைப்பு எனக்கு வரவில்லையே என்று வருத்ததோடு 

                                " உன் அருட் பதஙகள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன் " 
என்று நம் சார்பில், அருணகிரி  நாதர்,   சொல்லுகிறார்.
 
சரி, நினைக்காமல் இருந்து விட்டோம். இனி என்ன செய்வது என்று சிந்திக்கிறார். அச்சிந்தினையின் விளைவாக, அவருக்கு, ஞானம் உதிக்கிறது.  அபூர்வமான பொருள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், அது என்றைக்கும், பாதுகாப்பு தானே!  அந்த "உயிர்" என்ற பொருளானது, " நான்" என்ற இடத்திற்கு வரும் போது தானே, பாதுகாப்பு அற்றுப் போகிறது.  பிறவி என்று வரும் போது, அங்கு உயிர், வந்து சேர்ந்து கொள்ளுகிறது.  ஆக பிறவி என்ற ஒன்று ஏற்படாவிட்டால், உயிர் என்ற அபூர்வமான பொருள், பாதுகாப்பாகவே இருக்கும்.
 ஆக  பிறவாமை என்பது அமைய வேண்டும்.  பிறப்பதற்குக் காரணமாக்இருப்பது நம் வினைகள் என்று சொல்லுகிறார்கள்.
வினை என்பதை மூன்றாக முன்னோர்கள் பிரிக்கிறார்கள்.

1. இருப்பு வினை.-   சஞ்சிதம்
2.  நடப்பு வினை-     பிராரப்தம்.
3. தொகுப்பு வினை.-  ஆகாமியம்.

இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்.  பல பிறவிகளில், நாம் சேர்த்த வினைகளின் மொத்தம் தான், இந்தப் பிறவிக்கு முதலீடு.
இந்த முத்லீட்டிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, இந்த பிறவியை அனுபவிக்க வருகிறோம். கொண்டு வந்த முதலை, மொத்தத்தையும் செலவழிக்காமல், என்ன செய்கிறோம், மேலும் சேர்த்துக் கொள்ளுகிறோம்.  பாங்கில்,ஒரு பிக்செட் டெபாசிட் வைத்திருக்கிறோம். அதில் ஒரு பகுதியை, கரண்ட் அக்கொண்டிற்கு மாற்றி செலவழிக்கிறோம். அந்தப் பணம் முற்றிலும் செலவழிக்கப் படுவதில்லை. செலவழிக்காமல், அந்தப் பணத்தை  முதலீடாக வைத்து, மேலும் பணம் சேர்த்துக் கொள்ளுகிறோம். ஒரு கட்டத்தில், நமக்கு அதிகமாக் இருப்பதாக எண்ணும் அந்த அளவை, பிக்செட் டெபாசிட்டில் சேர்த்து விடுகிறோம். பிக்செட் டெபாசிட்டில் தொகை சேர்ந்து கொண்டே வருகிறது.. அது போலத்தான், இந்த "வினை" கணக்கும். முதலும் முடிவும் இல்லாமல், சுழன்று கொண்டே, "எழு கடல் மணலின்" எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பிறவிகளை அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன இந்த தொகுப்பு வினைகள்.

முதல் இல்லாவிட்டால், வட்டியோ, வருமானமோ வராது. வட்டியோ, வருமானமோ இல்லாவிட்டால், கையிருப்பு சேராது. அது போல, சஞ்சிதமாகிய , இருப்பு வினையை அழித்துவிட்டால், பிரார்ப்தம், ஆகாமியம் ஆகிய மற்ற இரு வினைகளுக்கு முகாந்திரமே கிடையாது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்.  முதலில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும். சேர்ப்பதை எப்படி நிறுத்துவது? அவன் அருளின்றி அணுவும் அசையாது. ஆக, வினைகள் கெட அவன் அருள் வேண்டும். மூலத்தை அழித்துவிட்டால், முளைக்க வாய்ப்பில்லை.  வேரை அழித்துவிட்டால்,விளைச்சல் இருக்காது.  இறை அருள் ஒன்றினால் தான் வினை கெட முடியும்.  
வினை என்பது, எண்ணம், சொல், செயல் இவற்றால் ஏற்படுகிறது.  எண்ணத்தை நிறுத்திவிட்டால், சொல்லும் செயலும் இருக்காது.திருத்தணிகை மலை மேலே வீற்றிருக்கும், மாமணியின் திருவடியிலே எண்ணத்தை வைத்து விட்டால், சரணாகதி அடைந்து விட்டால்,  எண்ணமின்றி, சொல்லின்றி, செயலின்றி, "சும்மா இருந்து"வினையை அழித்து விடலாம்.

வினாயகர் அகவலில், அவ்வையார்,  " கொடு வினை களைந்து உவட்டா உபதேசம்" கேட்டார்.  பின்னும் " முன்னை வினையின் முதலைக் களைய" வேண்டினார். மணிவாசகர், வினைப் பிறவி என்கிற வேதனையை, போக்கப் பிரார்த்தித்தார்.  கயல் மாண்ட கண்ணி பங்கன்,
கலந்து என்னை ஆண்டலுமே, அயல் மாண்டு, அருவினை சுற்றமும்  மாண்டுவிட்டன என்கிறார். வள்ளுவரோ, இறைவனிடம்  பிரார்த்திப்பது என்று ஒன்று உண்டாயின், அது பிறவாமை ஒன்று தான். அது கூட, " வேண்டாமை" என்கிற வரத்தை வேண்டினால், பிறவாமை தானே அமையும் என்கிறார்.
                                   வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்று அது
                                   வேண்டாமை வேண்ட வரும்
என்பது குறள்.  இவ்வளவையும் தான், அருணகிரியார், "வினை தீர்த்தருள் என்று இரண்டு சொற்களில், அமைத்துப் பாடினார்.

இது காறும் கூறியவற்றை, சுருக்கிச் சொன்னால்,

மரணம் என்பது நம் நினைவில் நிரந்தரமாக இருப்பதில்லை.
ஆவிக்கு மோசம் வரும் என்ற நினைவு வரும் போது, உயிரைக் காக்கும் வழி தெரியாது அல்லல் படுகிறோம்.
இளமையிலிருந்தே இறைவன் திருவடியை நினையாமல் இருந்து விட்டோமே என்று வருந்துகிறோம்.
பிறவாமை என்ற நிலை அமைந்து விட்டால், ஆவிக்கு மோசம் வருமே என்ற நினைப்புக்கு இடமில்லை.
பிறவாமை என்பது வேண்டுமானால், வினைகள்( சஞ்சித, பிராரப்த, ஆகாமிய) ஆகிய மூன்றும் கெட வேண்டும்.
வினைகள் கெட, இறைவன் அருள் வேண்டும். 
இறைவன் அருள் என்பது, காலம் காலமாய், வேண்டிப் பெறுவது
.
வினை தீர்த்து அருளாய், என்று வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி, அருளாளர் அருணகிரிநாதர் " ஆவிக்கு மோசம் வருமாறு"
என்ற கந்தர் அலங்காரப்பாடலிலே அமைத்திருக்கிறார். இது கந்தர் அலங்காரத்தில் 106 வ்து பாடல்.
இதை நிதமும் ஓதி   நம் என்ணத்தை, கருத்தை வைக்க வேண்டிய இடம், இறைவனுடைய திருவடித் தாமரைகள் தான்
என்பதை நினைவுபடுத்திக் கொண்டு, பிரார்த்தனை செய்வோம்..
 



.





Sent from my iPhone

No comments:

Post a Comment