Thursday, August 22, 2019

Srirangam

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 09

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள் ஸ்ரீரங்கம்  09

     கி.பி.1268-1308 மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலம். இவன்
காலத்தில் இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ 
இங்கு வந்து இத்தலம்பற்றியும் இதைச் சுற்றியுள்ள செழிப்பைப் பற்றியும்
வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார். 

     கி.பி. 1311 முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.
இக்கோவிலில் கொள்ளையிட்டான். 

     கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட 
எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும்,
ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை
முன்னேறவிடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர்.
பாண்டியர்களும்., ஒய்சாளர்களும் முடக்கப்பட்டதாலும் சோழவரசு இந்திய
வரைபடத்தில் கொஞ்சம் கூட இடம்பிடிக்க முடியாது இருந்த இந்த
காலக்கட்டத்தில் வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து
இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த
அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப்
பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து
வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப்
பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து
வைத்தனர். கி.பி. 1371 வரை திருப்பதியிலேயே இருந்தன. இவ்விதம்
திருவரங்கத்திலிருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் நடந்த
நிகழ்ச்சிகளை தொகுத்து மே. ஸ்ரீ வேணுகோபாலன் என்பார் எழுதியுள்ள
"திருவரங்கன் உலா" என்னும் நூல் தெளிவாகவும் விரிவாகவும் வரலாற்று
நாவல் போன்று சிலாகித்துப் பேசுகிறது. இந்நாவலில் வரும் குலசேகரன்,     பிள்ளை லோகச்சார்யர் போன்றோரின் பணிகள் எந்நாளும் நினைவு
கூறத் தக்கதாகும். 

     கி.பி. 1371 விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய
விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து
இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும்,
பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது. கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண்ணேபோல் காத்து வந்தனர். 

     கி.பி.1538-1732 இது மதுரையிலும் தஞ்சையிலும் நாயக்க மரபினர்
அரசோச்சிய காலம். இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து வந்தனர். கி.பி. 1659-1682 சொக்க நாத நாயக்க மன்னர்
இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால்
தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார். 
கி.பி. 1016-1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு
மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார். இக்கோவிலின் பல
தூண்களில் நாயக்க மன்னர்கள் இறைவனைத் தொழுதவண்ணம் உள்ள
சிற்பங்களை இன்றும் காணலாம். 

     கி.பி.1732-1800 நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின் 
ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம்
சென்றது. ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் 
    இடையே நடந்த யுத்தத்தின் போது இத்தலத்திற்கு பாதிப்பு இல்லை.
ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்த சந்தா சாகிபு (கி.பி. 1752) பிரஞ்சுப்
படைகளுடன் திருவரங்கம் தீவிற்குள்ளும், கோவிலின் வெளிபிரகாரங்களிலும்
ஒளிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். கி.பி. 1759இல் கிரில்லன் 
என்னும் படைத்தளபதி இக்கோவிலில் மறைந்துள்ள வீரர்களைத் தாக்கினான்.
ஆயினும் கோவிலுக்கு எவ்வித சேதமும் இல்லை. 

     கி.பி.1809-1947 கி.பி. 1809 இல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் 
ஆற்காடு நவாபின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் ஒருசில பகுதிகள் கிழக்கிந்தியக்
கம்பெனியின் கீழ்வந்தது. வேல்ஸ் என்னும் மாவட்ட ஆட்சித் தலைவனின்
கீழ்வந்தது, இத்திருக்கோவிலின் நிர்வாகம். இவர் 1803இல் திருவரங்கத்தின்
பலவரலாற்று நூல்களை ஒருங்கே கொண்டு வந்து தனி முழுநூலாக வெளியிட,
எழுதப் பணித்தார். பின்னர் அந்த நூலின் பிரதி ஒன்றை கோவில்
ஆட்சியாளர்கள் (ஸதானத்தார் அல்லது ஸ்தானிகர்) ஐவரின் முத்திரையுடன்
கோயிற் முன்பகுதியில் உள்ள ஒரு கருங்கற்பாறைக்கு கீழ் உள்ள சுரங்கத்தில்
வைத்துப் பேணிக் காத்தார். 

     தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது
மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து
வந்தனர். 1875 இல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஏழாம்
எட்வர்டு இத்திருக்கோவிலுக்கு ஒரு மிகப் பெரிய பொற்குவளையை 
அளித்தார். அது இக்கோவிலின் கருவூலப் பொருட்களில் இன்றும் உள்ளது. 

     1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோவில்களும், சமய
நிறுவனங்களும் புதிய சட்ட அமைப்பின் கீழ்வந்து நம்மவர்களாலேயே
நிர்வாகிக்கப்பட்டு வந்து. தற்போது இ.ச.அ.துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

     1966 இல் அமெரிக்காவின் யுனெஸ்கோ நிறுவனம் இக்கோவிலுக்கு
தொழல் நுட்ப உதவி அளிக்க ஒரு நிபுணரை அனுப்பியது. 1968 இல் மேலும்
இருவரை அனுப்பியது. 

     இவ்வாறு இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகத் தோரனைவருக்கும்
பொதுவான செல்வமாகி விட்டார் நம் திருவரங்கச்    செல்வர். இவ்வுரிமையை உறுதிசெய்வதுபோல் 1987இல் அரங்கனுக்கு
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரத்தை ஜீயர் ஸ்வாமிகள் அமைத்துக்
கொடுத்து விட்டார். 

     ஆம் திருவரங்கத்து இன்னமுது, வைணவர்களுக்கு மட்டுமன்றி,
இந்துக்களுக்கு மட்டுமன்று, உலகத்தின் அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு
தனிச் சொத்து. அதுதான் வைணவ சம்பிரதாயமும் ஆகும். அதனால் தான்
ஆண்டாளும் "வையத்து வாழ்வீர்காள்" என்று வையத்து மாந்தரையெல்லாம்
விளித்தார்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல் உறையூர் என்னும் திருக்கோழி  திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment