ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் ஒரு விளக்கம் 03
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
சோழநாட்டு திவ்யதேசங்கள் ஸ்ரீரங்கம் 03
மூலவர்
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும்
உண்டு. ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம்
உற்சவர்
நம் பெருமாள்
தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்
தீர்த்தங்கள்
இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்
1. சந்திரபுஷ்கரணி 2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம் 4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம் 6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம் 8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்
இதில் இன்று இருப்பதும், பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.
ஸ்தல விருட்சம்
புன்னை
விமானம்
ப்ரணா வாக்ருதி
காட்சி கண்டவர்கள்
வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன்.
சிறப்புக்கள்
இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் ஈண்டு நோக்குவோம்.
1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒரு
காரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,
திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்
கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்
என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒரு
பொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது.
"நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி
திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்"
என்கிறார் இளங்கோவடிகள்.
3) பரமபதத்தில் இரண்டு மணத்தூண்கள் உள்ளது. பரமபதத்திற்குச்
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்
எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ள
கருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்
தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பது
ஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்
நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்
பாடல்,
"கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூனே பற்றி நின்றென்
வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே"
4) உலகு போற்றும் காவியமான கம்ப இராமாயணத்தை கம்பர்
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்
மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்
இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்
இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்
உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்
நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ள
வேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமது
ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்
மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,
கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்
பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்
5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.
ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீரங்கம் திவ்யதேசம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் ஒரு விளக்கம் 06
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
சோழநாட்டு திவ்யதேசங்கள் ஸ்ரீரங்கம் 06
14) அரையர் சேவை என்பது நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை ராக
தாளத்தோடு இன்னிசையாய் இசைப்பது. மார்கழி மாதத்து வைகுண்ட
ஏகாதசியின் போது இங்கு அரையர் சேவை நடப்பது செவிகட்கு மட்டுமன்றி
கண்களுக்கும் அருவிருந்து. ஒரு சில திவ்யதேசங்களில் மட்டுமே இந்த
அரையர் சேவை இன்று வழக்கிலிருந்தாலும் திருவரங்கத்து அரையர்
சேவையே மிகச் சிறப்பானதாகும்.
15) இத்தலத்திற்குரிய நிலங்களைக் குத்தகைக்குவிட்டு அதிலிருந்து
அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆண்டுதோறும் சித்திரைமாதத்தன்று
யானை மீது ஏற்றி வெள்ளைப் பிள்ளை என்பார் கொண்டு வந்து பெருமாள்
திருவீதி எழும்போது அவர்க்கெதிரே சமர்ப்பிப்பார். ஆண்டுதோறும்
நடைபெறும் இந்நிகழ்ச்சி கதிர் அலங்காரம் என்ற பெயரில் விசேடமாகக்
கொண்டாடப்படுகிறது.
16) திருவரங்கனின் கட்டளைப்படி ஆழ்வார் திருநகரியிலிருந்து
நம்மாழ்வாரை, மதுரகவியாழ்வார் இங்கு கொணர்ந்து சேர்த்தார். நம்மாழ்வார்
இங்கு வந்து எழுந்தருளியுள்ள இடம் இன்றும் ஒரு சந்தியா மடம் போல்
காட்சி தருகிறது. வைகுண்ட ஏகாதசியின்போது 7வது திருநாளன்று
நம்மாழ்வாருக்கு எதிரில் வந்து பெருமாள் சேவை தருவார். அர்ச்சகர்கள்
தங்கள் கரங்களாலேயே பெருமாளை எழுந்தருளச் செய்யும் இந்நிகழ்ச்சி
"திருக்கைத்தல சேவை" என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது. வைகுண்ட
ஏகாதசியன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பது மிகச் சிறப்பான விழாவாகும்.
இந்த பரமபத வாசலில் விரஜா நதி ஓடுவதாக ஐதீஹம்.
17) திருவரங்கனை நேராகக் கை கூப்பி வணங்கிய வண்ணம் உள்ள
மிகப் பெரிய கருடன் இங்கிருப்பதைப் போல் பிரம் மாண்டமான வடிவில்
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லையென்று சொல்லலாம். இந்தக்
கருடாழ்வாரின் சன்னதி வாயிலை சுக்ரீவனும், அங்கதனும் காவல் புரிவதாக
ஐதீஹம். பாண்டிய மன்னன் சுந்தரவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டதாக
இருக்கலாமென்று
வரலாற்றாய்வர் பகர்வர். இச்சன்னதிக்கு எதிரே உள்ள பரமன்
மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் பார்ப்பதற்குப் பேரழகு பொருந்தியவை.
இவை தேவராஜன் குறடு என்றும் கூறுவர்.
18) வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை,
பிள்ளை லோகாச்சார்யர், பெரியநம்பி போன்றோரின் அவதார ஸ்தலமிது.
19) இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் இங்கு நிகழ்த்திய
உபன்யாசங்களை கூட்டமாக அமர்ந்து சீடர்கள் கேட்கும் வண்ணம்
தீட்டப்பட்டுள்ள சிற்பங்கள் நம் சிந்தையை எங்கோ கொண்டு செல்கிறது.
20) பாதுஹாஸ ஹஸ்ரம் என்ற உயர்ந்த காவியம் ஸ்ரீநிகாமநந்த
தேசிகனால் இப்பெருமாள் மீது பாடப்பட்டதாகும்.
21) இக்கோவிலின் நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி
சன்னிதிக்குவடபுரகோபுரவாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி
மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று
இந்த ஐந்து குழிகளிலும் தன் கைவிரல்களை வைத்து மூன்று வாசல்கள்
வழியாகவும் பார்ப்பாராம்.
22) திருவரங்கமும் திருமதில்களும் கீழ் ஏழு உலகம், மேல் ஏழு
உலகம் என்பார்கள். எத்தனை உலகங்களோ, யாரே அறிவர் எம்பெருமானின்
லீலைகளை. ஆனால் இந்த திருவரங்கத்திற்கு மட்டும் 7 மதில்கள்.
ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஒவ்வொரு விதமான
தெய்வாம்சம் கலந்தவை. ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த
ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக
கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் இருக்குமோ என்று
எண்ணுவதைப் போல, சத்தியலோகத்திலிருந்தே இந்தப் பெருமாள் வந்ததால்
அந்த சத்திய லோகத்திற்கு வழிகாட்டுவதைப்போல் ஏழு மதில்களில்
முதலாவது மதிலுக்கு பூலோகம் என்றே பெயரிட்டு எம்பெருமான் பள்ளி
கொண்டுள்ள கருவறை மதிலுக்கு சத்தியலோகம் என்றே பெயர்
வைத்திருப்பதும் பெரிய ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகும்.
7 திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது 7 மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
இதற்கு அடைய வளைந்தான் திருச்சுற்று என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் 7 பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
இந்த 8வது திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான
தெற்கு கோபுரமே இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ராயர்
கோபுரம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். கிருஷ்ண
தேவராயர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு
கொண்ட மாமேதை. இவர் ஒரே சமயத்தில் நாடெங்கும் (அவரது ஆட்சிக்
காலத்தில்) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி
முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே
நின்று விட்டன.
இவைகள் மொட்டைக் கோபுரம் என்றும் ராயர் கோபுரம் என்றும்
அழைக்கப்பட்டன.
அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த
ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய
வழிபாடுகளும் நடைபெற்றன. இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை
வாசல் என்றும் அழைத்தனர்.
இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம்
வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.
இக்கோபுரத்தைக் கட்டி முடிப்பதற்காகவே ஆந்திராவில் உள்ள ஸ்ரீ
அஹோபில மடத்தின் (சிங்கவேள் குன்றமென்னும் திவ்யதேசம் உள்ள இடம்)
41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள், இங்கு வந்து
பன்னெடுங்காலந்தங்கி, பல எதிர்ப்புகளையும், இன்னல்களையும் தாண்டி,
பெரிய பெருமாளுக்கு பெரிய கோபுரத்தை நிர்மாணித்து அழியாத தொல்புகழ்
பெற்றார்.
ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீரங்கம் திவ்யதேசம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
No comments:
Post a Comment