ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்1௦
அத்தியாயம் 2
பகவான் யோகமாயையிடம் கூறினார்.
"தேவகியின் கர்பத்தில் உள்ள என் அம்சமான சேஷனை எடுத்து ரோஹிணியின் கர்பத்தில் வை. நான் என்னுடைய பூரண அம்சத்துடன் தேவகியின் புத்திரனாக அவதரிக்கப்போகிறேன். நீ யசோதையின் மகளாகப் பிறக்க வேண்டும். "
பகவான் மேலும் கூறியது என்னவென்றால் அந்த யோகமாயை உலகத்தில் துர்க்கை, பத்ரகாளி, நாராயணீ , வைஷ்ணவி , மாயா, சாரதா , அம்பிகா என்ற பல பெயர்களுடன் மக்களால் தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு பூஜிக்கப் படுவாள் என்பதாகும். இதனால் துர்காதேவி ஹரிஸோதரி என்று அழைக்கப்படுகிறாள்.
நாரதர் கூறியதைக் கேட்ட கம்சன் தேவகியின் ஒவ்வொரு குழந்தையையும் விஷ்ணுவின் அம்சம் என சந்தேகித்துக் கொன்றபின் அவளுடைய ஏழாவது கர்பம் கலைந்தது என அறிந்து எட்டாவது குழந்தை பிறப்பிற்காக காத்திருந்தான். தேவகியும் உலக மங்கலமானதும், உலகனைத்திற்கும் ஆத்மாவானதும் தனக்கும் ஆத்மாவாக தன்னுள்ளே இருப்பதுமான அச்சுதனுடைய கலையை உலகை மகிழ்விக்கும் சந்திர கலையை கீழ் திசை தரிப்பது போல மனதில் தரித்தாள்.
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பகவானுக்கு கர்பவாசம் என்பது கிடையாது . தேவகி கௌசல்யை போன்றவர்கள் கர்பத்தில் அவன் வளர்வது போன்ற தோற்றம் மாயையே ஆகும். இது 'காஷ்டா யதா ஆனந்தகரம் மனஸ்த: ,' கிழக்கு திசை சந்திரனை தரிப்பது போல என்ற சொற்கள் விளக்குகின்றன. கிழக்கு திசையில் சந்திரனை கிழக்கு திசை தரிப்பதில்லை. அவன் அங்கு தானாகவே தோன்றுகிறான்.
பகவான் அவதாரத்தை வர்ணிக்கும்போது ஆவிர்பபூவ , தோன்றினான் என்றுதான் கூறப்படுகிறது. பிறந்தான் என்று இல்லை. மேலும் மனஸ்த: ததார மனதில் தரித்தாள் என்பதன் மூலம் பகவானுடைய சரீரம் மனதால் உருவானதே அன்றி பிரகிருதி சம்பந்தமானது அல்ல என்று தெரிந்துகொள்ளலாம். அவதரிக்கையில் அவன் சங்குசக்கரம் ஆபரணங்கள் இவையுடன் காணப்பட்டதே சான்றாகும்.
அப்போது தேவகி மிகுந்த பிரகாசத்துடன் காணப்பட்டாள் அவளைக் கண்ணுற்ற கம்சன் இவள் கர்பத்தில் ஹரி வந்திருப்பது நிச்சயம் என்று நினைத்தான். அவளும் உட்கார்ந்தாலும் படுத்தாலும் சஞ்சரித்தாலும் ஹ்ருஷீகேசனையே நினைப்பவளாக உலகமே அவன் மயமாகக் கண்டாள்.
தேசிகர் கூறுகிறார்.
மகான்களால் விரும்பப்படும் அமுதம் அவளிடம் வந்திருப்பதால் தேவகி அவ்வளவு தேஜஸ்ஸுடன் காணப்பட்டாள். அவள் கர்ப்பவதியாக இருக்கையில் மண் தின்றாளாம். இது மண்ணுலகம் முழுவதையும் தன்னுள்ளே கொண்டவன் அவளிடம் இருக்கிறான் என்று கூறுவதைப்போல இருந்ததாம்.
மேலும் யாதவாப்யுதயத்தில், தேவகி தான் ஆதிசேஷன் மேல் இருப்பதாகவும் கருடன் மீது செல்வதாகவும் கனவு கண்டாள் என்று தேசிகர் கூறுகிறார. இதற்கு வியாக்யானம் எழுதிய உத்தமூர் சுவாமி அது அவளுள் இருக்கும் பகவானுக்கு சேவை செய்ய சேஷனும் மற்றவரும் விரும்பியதால் என்கிறார்.
அவள் மெதுவாக நடந்தாளாம். ஏனென்றால் விச்வகுருவான பகவானை உள்ளே தாங்குவதால் பூமிக்கு பாரம் ஏற்படக்கொடாது என்பதைப்போல இருந்ததாம். குரு என்ற சொல் பெரிய என்ற அர்த்தத்தில் தேசிகர் நயம்பட உபயோகிக்கிறார். பகவான் ஜகத்குரு மட்டும் அல்ல மஹதோ மஹீயான், பெரியவற்றிலும் பெரியவன் அல்லவா.
அடுத்து கண்ணன் அவதாரம் செய்யப்போவதைக் காண்போம்
No comments:
Post a Comment