ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 10 அத்தியாயம் 3
அத்தியாயம் 3
பகவானுடைய அவதாரசமயம் நெருங்கியதும் காலம் எல்லா நற்குணங்களும் பொருந்தி மங்களகரமாக விளங்கிற்று. ரோகிணி நக்ஷத்திரம் உதயம் ஆயிற்று. நக்ஷத்திரங்களும் கிரகங்களும் சாந்தமாக இருந்தன. திசைகள் தெளிவாக இருந்தன. ஆகாயம் நிர்மலமாக இருந்தது. நதிகளில் நீர் தெளிந்திருந்தது. நீர் நிலைகள் தாமரைகளால் அழகு பெற்றிருந்தன.
காற்று சுகமாகவும் சுகந்தமாகவும் சுத்தமாகவும் விளங்கிற்று. அக்னிகுண்டங்களில் அக்னிகள் ஜ்வலிக்கத் தொடங்கின.(இதுவரை கம்சனுக்கு பயந்து அவை சாந்தமாக இருந்தன) சாதுக்களின் மனம் நிர்மலமாயிற்று. வானுலகில் துந்துபி முழங்கிற்று.
இனி தேசிகரின் வர்ணனையைப் பார்ப்போம்.
அந்த முன்னிரவின் சந்த்யாகாலத்தை பகவானின் தோற்றத்திற்கு ஒப்பிடுகிறார். தங்கமயமான வானத்தில் சிறிது கருத்த தோற்றம் பீதாம்பரத்துடன் கூடிய அவனுடைய உருவத்தை ஒத்திருந்தது. கடலில் மூழ்குகின்ற சூரியன் ஆகாயமாகிய தடாகத்தில் சந்த்யா என்ற பெண்ணினால் பறிக்கப்பட்ட தாமரை எனவும், சந்த்யாவின் பகவானைப் போன்ற தோற்றத்தினால் அவர் வாகனமாகிய கருடனுக்கு பயந்து நீரில் ஒளியும் நாகத்தின் முடியில் உள்ள ரத்தினம் போலவும் இருந்தது என்று கவிநயத்துடன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுவது,
சூர்யன் மறைந்த பிறகு கிருஷ்ணபக்ஷ அஷ்டமியாகிய அன்று சந்திரன் உதிக்குமுன் எங்கும் இருள் சூழ்ந்தது. தாரகைகள் காலதேவனால் பகவானுக்கு சூட்டத் தயாரகும் முத்துமாலையைப் போல் காட்சி அளித்தன.
பிறகு கிழக்கில் உதித்த சந்திரன் தேவகியின் வெளுத்த உடல் போலத் தோன்றி அவள் துக்கமாகிய இருளில் இருந்து விடுபடப் போகிறதைக் காட்டுவது போல் இருந்ததாம்.
சந்திரன் தன் வம்சத்தில் பிறக்கப் போகும் கண்ணனுக்கு மங்களாசாசனம் செய்ய கடலில் குளித்து வரும் புரோஹிதர் என எழுந்தானாம்.
தேசிகர் மேலும் கூறுவது, முதலில் வந்த இருள் கிழக்கு திக்காகிற பாற்கடலில் வந்த ஹாலாஹலம் போலவும் பிறகு வந்த சந்திரன் யதுவம்சத்திற்கு பின்னல் வரப்போகும் லக்ஷ்மியைக் குறிப்பது போலவும் இருந்ததாம்.
பின்னர் ஒரு இடத்தில் தேசிகர் பகவானின் எல்லா அவதாரத்திலும் லக்ஷ்மியுடன் கூடியே இருக்கிறான் என்கிறார்.
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷு ச அவதாரேஷு விஷ்ணோரேஷா அனபாயிநீ- புராணவசனம்
ராமவதாரத்தில் சீதையாகவும் க்ருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாகவும் மற்ற அவதாரங்களிலும் பகவானைப் பிரியாதவள் என்று புராணம் கூறுகிறது.
வாமனாவதாரத்திலும் லக்ஷ்மி அவனுடைய மார்பில் இருந்ததால் அவள் கடாக்ஷம் பலியின் மேல் விழுந்தால் அவனுடைய ஐஸ்வர்யத்தைக் கவர முடியாது என்று மேல் வஸ்திரத்தினால் மார்பை மூடிக்கொண்டானாம்
அஷ்டமி திதி பகவானால் எட்டாவது குழந்தையாகத் தோன்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது . அடுத்த நாளான நவமி யோகமாயையின் பிறந்த நாளாயிற்று.
அதனால்தேசிகர் அஷ்டமி பிரதமையாகியது என்றும் நவமி த்விதீயை ஆகியது என்றும் கூறுகிறார்.
இனி பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை எவ்வாறு வர்ணிக்கிறது என்று பார்க்கலாம்.,
தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதாத்யுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம்
தாமரையொத்த கண்கள், நான்கு புஜங்கள்,அவைகளில் ஏந்திய சங்குசக்கரம் கதை ஆகிய ஆயுதங்கள், மார்பி ஸ்ரீவத்சம் என்ற மரு, கௌஸ்துபமணி விளங்கும் கழுத்து , இவைகளுடன், பீதாம்பரம் அணிந்தவராய், நீருண்ட மேகம் போல அழகிய வர்ணத்துடன், சிரந்த ஆபரணங்கள் அணிந்து பிரகாசித்த அந்த அற்புதக் குழந்தையை வசுதேவர் கண்டார்.
ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1௦- அத்தியாயம் 3-தொடர்ச்சி
கண்ணனின் அவதார சமயம் நெருங்குகையில் மன அமைதி இல்லாமல் இருந்தவன் கம்சன் மட்டுமே. தேவகியின் ஒளி பொருந்திய தோற்றத்தைக் கண்டு அவன் பயம் கொண்டான். சகல மக்களுடைய கவலைகளும் அவன் மனதில் புகுந்தாற்போல் தோற்றம் அளித்தான் என்று தேசிகர் கூறுகிறார். '
இதற்கிடையில் கண்ணனின் தோற்றத்தைக கண்டு ஆச்சரியம் அடைந்த வசுதேவர் மகிழ்ச்சியுடன் ஆயிரம் பசுக்களை மனதாலேயே தானம் செய்தார் என பாகவதம் கூறுகிறது. பரம புருஷனே அவதாரம் செய்துள்ளான் என்று அறிந்த அவர் தன்னொளியால் பிரசவ அறையைப் பிரகாசிக்கச் செய்த அவரைத் துதிக்கலானார்.
வசுதேவர் கூறியது:
"உங்களை ஆனந்த ஸ்வரூபியாகவும் சர்வந்தர்யாமியாகவும் ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவராகவும் உள்ள பரமபுருஷனாகவும் இந்த முக்குண வடிவாகிய பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்து அதனுடன் கூடியிருப்பதால் அதனுள் புகாதவராயினும் புகுந்தவராகக் கருதப்படுபவராகவும் காண்கிறேன்.
தேவர்கோனே நீர் இங்கு அவதரிப்பதைக் கேள்வியுற்று துஷ்டனான கம்சன் உமக்கு முன் பிறந்தவர்களைக் கொன்றான். அவன் நீங்கள் அவதரித்ததைக் கேட்டு ஆயுத பாணியாக ஓடிவரப் போகிறான்."
தேவகியும் பயந்தவளாகப் பின்வருமாறு கூறினாள்.
" எந்த ரூபத்தை அவ்யகதம் என்றும் ஆதி என்றும் பிரம்மம் என்றும் நிர்குணம் நிர்விகாரம் நிர்விசேஷம் என்றும் கூறுகின்றனரோ அநத அத்யாத்ம தீபமான் விஷ்ணுவே நீர் என்று அறிந்தேன். அடியார்களின் பயத்தை போக்குபவரான நீர் கொடிய கம்சனிடம் பயந்துள்ள எங்களை காத்தருளும்.இந்த மஹாபுருஷரூபத்தை பிரத்தியக்ஷமாகக் காட்ட வேண்டாம்."
இதைக் கேட்ட பகவான் தேவகி ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் ப்ருச்நியாகவும் வசுதேவர் ஸுதபஸ் என்ற பெயரில் அவளுடைய பர்த்தாவாகவும் இருந்தனர் என்று கூறி அப்போது அவர்கள் இருவரும் தவம் செய்து பகவான் காக்ஷியளித்ததும் முக்தியை வேண்டாமல் அவரைப்போல மகன் வேண்டும் என்று மூன்று முறை கேட்டனர் என்றும் , தன்னைப்போல ஒருவர் இல்லாததால் தானே அவர்களுக்கு ப்ருச்னிகார்பன் என்ற மகனாகவும் அவர்களின் அடுத்த பிறவியான அதிதி கச்யபர் என்பவர்களுக்கு வாமனராகவும் தோன்றியதாகக் கூறினார்.
தன் சொல்லை மெய்ப்பிக்கவே இந்தப் பிறவியிலும் அவதரித்ததாகவும் அவர்களுக்கு பூர்வ ஜன்ம நினைவு வருவதற்காகவே அந்த திவ்ய ரூபத்தைக் காட்டியதாகவும் கூறினார். தன் ஸ்வரூபத்தை அறிந்து மகனாகவும் பாவித்து முக்தியை அடைவார்கள் என்று கூறி கம்சனிடத்தில் பயம் இருந்தால் தன்னை கோகுலத்திற்கு எடுத்துச்சென்று நந்த கோபனுடைய மனைவியான யசோதையின் அருகில் வைத்து அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வருமாறு கூறினார்.
அது எப்படி முடியும் என்று வசுதேவர் எண்ணுகையில் சிறைக்கதவுககுள் தாமாகத் திறக்கும் என்றும் யமுனையின் வெள்ளம் வடிந்து வழிவிடும் என்றும் கூறினார். பிறகு அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போதே ஒரு சாதாரண மனிதக் குழந்தையாக மாறினார்.
வசுதேவர் கண்ணனை கோகுலத்தில் யசோதையின் அருகே விட்டுவிட்டு அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வருவது பற்றி தேசிகர் அழகாக வர்ணிக்கிறார.
வசுதேவரின் கால் விலங்குகள் தாமாகவே அவிழ்ந்து விழுந்ததைப் பற்றிக் கூறுகையில், 'ருணாதிவ தேவகீபதி: அமுச்யாத ஸ்ருங்கலாத்,' கடன் சுமையிலிருந்து ஒருவன் விடுபட்டதைப் போல வசுதேவரின் விலங்குகள் அவிழ்ந்தனவாம். ருணமென்றால் பிராரப்த கர்மம் என்றும் பொருள். அதனால் 'நிகில பந்த நிவர்தக ஸன்னிதௌ விகலனம் நிகலஸ்ய கிமத்புதம்,' எல்லா பந்தங்களினின்றும் விடுவிக்கும் பிரான் அருகில் இருக்கையில் இந்த விலங்கினின்று விடுபட்டதில் என்ன ஆச்சரியம் என்கிறார்.
பிறகு பகவானின் சொல்படி வசுதேவர் குழந்தையாக இருந்த கண்ணனை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுகையில் சிறைக்கதவுகள் தாமாகத் திறக்க காவலாளிகள் நிச்சலனமாக இருந்தனர். அவர் வீதியில் வந்ததும் திசைகள் பகவானுடைய தேக ஒளியால் பிரகாசம் பெற்றன. மேகம் மெதுவான இடியுடன் மழை பொழிந்தது.
கருடன் துஷ்ட சக்திகளை அகற்றுவான் போல் மேலே பறந்து வர ஆதிசேஷன் தன் படங்களை விரித்துக் குடை பிடித்தான்.
வேதாத்மா விஹகேச்வர: என்றி யாமுனாச்சாரியார் கூறியதைப்போல் தேசிகர் ஸ்ருதிமயோ விஹக: என்று கருடனைக் குறிப்பிடுகிறார். ஆதிசேஷனை பூதரபன்னக: , பூமியைத்தாங்கும் நாகம் என்று குறிப்பிடுவது க்ருஷ்ணாவதாரத்தில் பூபாரம் தீர்க்க வந்த பிரானால் தன் தலையிலும் பாரம் குறையும் என்று நினைத்ததாக பொருள் படுகிறது. அந்தக் காரிருளில் தன் முடிகளில் உள்ள மாணிக்கங்களால் ஒளி ஏற்படுத்திக் கொடுத்தானாம்
வசுதேவர் யமுனையாற்றை நெருங்குகையில் அதன் வர்ணனையில் தேசிகரின் கவிநயத்தைக் காண்கிறோம்.
கருநெய்தல்கள் என்ற மலர்கள் மூடப்பட்டு தாமரைப் பூ என்ற முகமும் மலராதிருக்க பிரிவினால் சோர்ந்திருக்கும் சக்கரவாக பட்சிகளின் தீனமான கூக்குரலோடு, ( சக்ரவாக பறவைகளுக்கு இரவில் கண் தெரியாது. அதனால் தன் ஜோடியை காணமுடியாமல் கத்தும்) யமுனையானது சர்வசக்தியுள்ள பெருமான் தன் சக்தியைக் காட்ட முடியாமல் ஒளிந்து வளர வேண்டியதை எண்ணி வருந்துவது போல் இருந்ததாம்.
யமுனை தன் அலைகளை இங்குமங்கும் வீசி எறிவது கம்சனுக்கு அஞ்சி என்ன நடக்குமோ என்று கைகளை உதறிக்கொள்வது போல் இருந்ததாம். வசுதேவர் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, அவருக்கு வழி விடுவதற்கு யமுனைத் தன் வெள்ளத்தை நிறுத்திக் கொண்டது. அதனால் மேற்கு திக்கில் மிக உயர்ந்து கிழக்கில் தரையே தெரியும்படி வற்றி இருந்தது. அதை தேசிகர் கங்கைக்குப் போட்டியாக விஷ்ணு பதத்தை நோக்கிச் செல்கிறதோ அல்லது தன் பிறந்த வீடாகிய காளிந்தி மலையை நோக்கிப் போகிறதோ என வியக்கிறார் .
மேலும் அவர் வர்ணிப்பது,
சம்சாரக்கடலுக்கே திடக் கப்பலான திருமாலையும் தான் சுமந்துகொண்டு அணைக்கட்டு இல்லாமலே ஒடமொன்றும் வேண்டாமலே யமுனையைக் கடந்து நொடியில் ஆயர்பாடிக்குச்சென்றார். ஆச்சரியமாய் எல்லோருமே சம்சாரத்தில் உறக்கத்திற்குக் காரணமான மாயை என்ற நித்திரையினால் பரவசமாக உறங்கிக் கிடக்கும் ஆயர்பாடியில் புகுந்து நந்தன் மனைவியிடம் குழந்தையை வைத்து அங்கு இருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து மதுரையில் தேவகியின் பக்கத்தில வைத்தது எல்லாமே ஒரு நொடியில் ஆனதுபோல் ஆயிற்று.
No comments:
Post a Comment