Wednesday, May 1, 2019

Viswa roopa darshanam to Duryodahna by Krishna

ஐந்தாம் வேதம் J K SIVAN 
மஹாபாரதம்

வேளை வந்தது வேலை முடிந்தது

சபையில் துரியோதனனை சார்ந்தவர்கள் குருட்டுத்தனமாக அவனை ஆதரித்தும், மற்றவர்கள் அவன் செய்வது தவறு என்றும் மனதில் கொண்டவர்களாக மேலே நடப்பதை அமைதியின்றி கவனித்தனர். கிருஷ்ணனின் குரல் கணீர் என்று ஒலித்தது.

''துரியோதனா, என் சொல் கேள். நீ ஒரு பெரிய புகழுடைய குரு வம்சத்தில் வந்தவன். உனது நன்மைக்காகவே இதைச் சொல்கிறேன். உன் தந்தை, மற்றும் பெரியோர்கள் பீஷ்மர், விதுரன், துரோணர் சொல்வதைக் கேட்டு நட. சமாதானத்தால் கிடைக்கும் பலனை புரிந்து கோல். அதை சந்தோஷமாக அடைவாயாக. பின்னால் வருந்த வேண்டாம். உன்மீது எந்த கோபமும் ஆத்திரமும் இன்னும் பாண்டவர்கள் காட்டவில்லை என்பது உனது பேரதிஷ்டம். அவர்களோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உனக்கு. அவர்களை எதிர்த்தால் நீ நம்பியிருக்கும் எவராலும் உன்னைக் காப்பாற்றமுடியாது. உன்னை நம்பிய அவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது. இது உறுதி'' 
கிருஷ்ணன் மெதுவாக ம்ருதுவாக ஆணித்தரமாக துரியோதனனுக்கு எடுத்துச் சொன்னான்.

''துரியோதனா, கிருஷ்ணன் சொல்வது நியாயமானது. விதுரன், உன் தந்தை ஆகியோர் சொல்படி கேள். உன் குல நாசத்திற்கு நீயே காரணமாகாதே. உன் தாய் தந்தையை துன்பக்கடலில் மூழ்கடிக்காதே'' என்றார் பீஷ்மர்.

துரோணரும் ''துரியோதனா, பீஷ்மரும் கிருஷ்ணனும் சொன்னது முற்றிலும் உனது நன்மைக்காகவே. போர் என்று வந்தால் எஞ்சுவது ஒரு சிலரே. அர்ஜுனன் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்திருந்தால் ஜெயிப்பது முடியாத ஒன்று.'' என்றார்.

விதுரனும் ''துரியோதனா, நான் உனக்காக கவலைப்படவில்லை. வயதான உன் பெற்றோர் பற்றியே வருந்துகிறேன். எல்லோரையும் இழந்து அவர்கள் இருவரும் திண்டாட வேண்டாமே.''

திருதராஷ்டிரனும் ''துரியோதனா, கிருஷ்ணன் பேச்சைக் கேள். யுதிஷ்டிரனோடு இணைந்து வாழ். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பத்தை நழுவ விடாதே. வாழ்வா சாவா பிரச்னை இது '' என்றான்.

துரியோதனன் வெகுண்டான். கண்கள் தீப்பொறி பறக்க, 'கிருஷ்ணா, உன்னால் முடிந்த வரை என்னையே குற்றவாளியாக்குகிறாய். எல்லோரும் என் நன்மை கருதி பேசுவதாக காட்டிவிட்டீர்கள். உன் மனம் முழுதும் பாண்டவர் பக்கம் என்று தெரியும். என் மீது எந்த தவறும் இல்லை என்றும் எனக்கு தெரியும். பாண்டவர்கள் அனைவரும் இந்த நிலைமையைத் தானே வரவழைத்துக் கொண்டவர்கள். சகுனி யோடு சூதாடி தானாகவே அனைத்து மிழந்ததற்கு நானா காரணம்? மறுபடியும் ஆடி கானகம் சென்றார்கள். எங்களை எதற்கு கொல்ல வேண்டும்? யுத்தத்தில் எங்கள் உயிர் போவதானால் அது க்ஷத்ரியர்களுக்கு வீர மரணமே. ஒரு காலத்தில் என் தந்தை கொடுத்த பாதி ராஜ்யத்தை அவர்கள் இழந்ததை நான் எதற்கு திருப்பி கொடுக்க வேண்டும்?. நிச்சயம் கிடையாது. கொடுக்க முடியாது. கூரான ஊசி முனையளவு நிலமும் நான் தரப்போவதில்லை. இது உறுதி'' என்றான் துரியோதனன்.

கிருஷ்ணனின் கண் சிவந்தது. நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான்.

''துரியோதனா, உன் செயல், சகுனியுடன் சதி, பாண்டவர்களை துன்புறுத்தியது, உன் சகோதரர்கள், கர்ணனோடு திரௌபதியை சபையில் மானபங்கப் படுத்தியது அனைத்திற்கும் நீயும் உன்னைச் சார்ந்த அனைவரும் பழி வாங்கப்படுவது நிச்சயம். பாண்டவர்களுக்கு உரிய பங்கை கொடுத்து உயிர் வாழும், இந்த கடைசியாக வந்த ஒரே சந்தர்ப்பத்தை இழக்காதே.''

'' நான் சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது'' என்று துரியோதனன் சபையிலிருந்து எழுந்து சென்றான். அவனைச் சார்ந்து அனைவரும் எழுந்தனர். கிருஷ்ணன் அவர்களை நோக்கி 'ஒரு நாட்டிற்காக ஒருவனைத் தியாகம் செய்வது உத்தமம். கௌரவ குலம் தப்ப துரியோதனனை இழக்கவும் நீங்கள் தயாராக இருப்பது நலம். உங்கள் உயிர் காக்க சமாதானம் அவசியம் இந்த நேரம். மறக்க வேண்டாம்.'

'காந்தாரி, கேட்டாயா உன் மகன் செய்ததை. பெரியோர்கள் அனைவரும் சொல்வதைக் கேட்காமல் எழுந்து போய் விட்டானாம்.'' என்றான் திருதராஷ்டிரன்.

''என் செய்வது பிரபோ, ஒரு முட்டாளிடம் உங்கள் அதிகாரத்தைத் தந்து விட்டீர்கள். அனுபவிக்கிறோம்'' என்று வருந்தினாள் காந்தாரி.

விதுரன் சென்று துரியோதனனை மீண்டும் அழைத்து வந்தான். காந்தாரி அவனிடம் '' மகனே, இவ்வளவு பெரியோர்கள் சொல்லையும் தட்டுகிறாயே .தந்தை தாய் மீதும் மதிப்பில்லை. பேராசையையும் துர்புத்தியும் விடு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. உங்கள் தகப்பனார்கள் சொத்து கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சரி பாதி சொந்தம். அதை அபகரிக்கும் எண்ணம் விடு.வாழ வழி தேடு'' என்று காந்தாரி கதறினாள் ..

தாய் சொல்வதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் துரியோதனன் மீண்டும் கோபமாக எழுந்து சென்றான். ஏற்கனவே சகுனி, கர்ணன் துச்சாதனன் ஆகியோர் திட்டமிட்டபடி கிருஷ்ணனைக் கைது செய்வதன் மூலம் பாண்டவர்களை தன் வசப்படுத்த ஆயத்தமானான். இதை சாத்யகி யூகித்து க்ரிதவர்மனுடன் தன்னுடைய படைகளை வாயிலில் நிறுத்தினான்.கிருஷ்ணனிடம் சென்றான். விதுரனும் இதை திருதராஷ்டிரனிடம் சொன்னான். உன் மக்கள் அழியும் காலம் வந்து விட்டது. வினாச காலத்தில் விபரீத புத்தி அவனுக்கு தோன்றி இருக்கிறது..

கிருஷ்ணன் ''நான் அமைதி இழக்கமாட்டேன். என்ன செய்தாலும் நான் கோபம் கொள்ளமாட்டேன். தூதன் ஆத்திரமடையக்கூடாது'' என்றான். அப்போது தான் அந்த விசித்திரம் நடந்தது.

துரியோதனா '' நான் தனி ஒருவனாக வந்ததாக ஏதோ தப்பாக நினைக்கிறாய். உன் எண்ணம் ஈடேறாது.என்னுள்ளே ஆதித்யர்கள், ருத்ரர்கள், ரிஷிகள்,மருத்துக்கள், தேவர்கள், அக்னி வாயு அஸ்வினி தேவதைகள், சகல புவன சக்தியும் உள்ளது பார் என்று சிரித்தான் கிருஷ்ணன். கட்டை விரல் அளவில் சகல இந்த்ராதி தேவதைகளும் அவனுடலில் தோன்றினர். நெற்றியில் பிரம்மன் மார்பில் சிவன், மற்றும் யக்ஷர்கள், கந்தர்வர்கள் எண்ணற்றவர்கள். இரு கரங்களிலும் பலராமன், அர்ஜுனன், பீமன் சூரியன் சந்திரன் ஆகியோர் தோன்றினர். சங்கு சக்ரம் ஜொலித்தது. சாரங்கம், நந்தகம் தெரிந்தது. இவர்களை எல்லாமா நீ சிறை பிடிக்கப் போகிறாய்?'' என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் இந்த உருவத்தை கண்டு துரியோதனன் முதலானோர் பயந்து கண்ணை மூடிக் கொண்டார்கள். பீஷ்மர், விதுரன் துரோணர் சஞ்சயன் ஆகியோர் இரு கரம் கூப்பி வணங்கினர். வானம் மின்னி இடி இடித்தது. பூமி நடுங்கியது. காற்று நின்றது. கடல் கொந்தளித்தது. உயிர்கள் எங்கும் அசைவற்று நின்றது. அனைவருக்கும் கிருஷ்ணனின் இந்த பிரம்மாண்ட விஸ்வரூப தோற்றம் தெரிவதற்காக க்ஷண காலம் திவ்ய பார்வை கிடைத்தது. க்ஷண காலத்தில், கண நேரத்தில் மீண்டும் எல்லாம் மறைந்தது. கிருஷ்ணன் மீண்டும் தனது உருவத்தில் தோன்றி அனைவரிடமும் விடைபெற்று கண்ணன் சாத்யகியோடு வெளியேறினான். வந்த வேலை முடிந்தது என்று அவன் முகத்தின் புன்சிரிப்பு அறிவித்தது.

  

No comments:

Post a Comment