உடையவர்
பெயருக்கு முன்னால் வரும் ஸ்ரீ.உ.வே என்பதில் வரும் 'உ' உபய வேதாந்தி சமஸ்கிருதம் , தமிழ் என்பதைக் குறிக்கும். விபூதி நாதன் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உபய 'உபய' என்றால் இரண்டு என்று புரிந்திருக்கும்.
உபன்யாசத்தில் (அல்லது ஸ்ரீ வைஷ்ணவ புத்தகங்களில் )
"சமஸ்த கல்யாண குணாத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கின்ற சர்வேசுவரன் " என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
"சர்வ நியந்தா" என்றால் எல்லாரையும் 'நியமிக்கிறவன்' என்று பொருள்.
இப்போது மேலே இருப்பதை மீண்டும் படித்தால் பொருள் ஓரளவுக்கு விளங்கும், சரி மீண்டும் 'உபய விபூதி'க்கு வரலாம். இரண்டு உலகம் என்று பொருள். இரண்டு உலகம் என்பது விண்ணுலகும். மண்ணுலகம்.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு ( குறள் )
என்ற குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய உலகு என்கிறார் வள்ளுவர். அந்த உலகு - விண்ணுலகம் ; ஸ்ரீ வைகுண்டம், பரமபதம். இது அழிவில்லாதது அதனால் அதற்குப் பெயர் நித்யவிபூதி.
லீலாவிபூதி - லீலை என்றால் விளையாட்டு. லீலாவிபூதி என்றால் பெருமாள் விளையாடும் இடம். அரசர்கள் பந்து விளையாடுவது போலப் பெருமாள் உலகத்தை உண்டாக்கி அழிப்பதையே லீலையாக செய்கிறான். நாம் இருக்கும் இடம் லீலாவிபூதி என்று சொல்லலாம். நாளைக்குச் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் நடந்தால் அதுவும் லீலாவிபூதியில் அடக்கம்.
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்தில் "அகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதி லீலே" என்று அகில உலகங்களையும் உண்டாக்கி, அழிப்பதையே லீலையாக உடையவன் பகவான் என்று அருளிச் செய்திருக்கிறார்.
இந்த பெருமாள் அங்கே அமர்ந்து இந்த லீலையைச் செய்கிறான் ? வைகுண்டம் நினைத்தால் அது தப்பு.
இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து தான் வைகுண்டத்தையே ரங்க'ராஜா'வாக அரசாட்சி செய்கிறான். இங்கே செங்கோல் என்று ஒரு வார்த்தை வருவதைக் கவனிக்கலாம். அரசன் கையில் செங்கோல் மாதிரி இங்கே நம்பெருமாளிடம் செங்கோல் இருக்கிறது. அதனால் தான் எந்த பெருமாளுக்கும் இல்லாத செங்கோல் நம்பெருமாளிடம் இருக்கிறது. எங்குச் சென்றாலும் ( நாச்சியார் திருக்கோலம் உட்பட) செங்கோல் அவருடன் கூடவே வரும்.
நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் தன் லீலையை நடத்துவதற்கு ஆதாரம் ஆண்டாள் பாசுரம் தான்.
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்*
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான்*
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்*
எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே
பொருள் : அலை கடலாலே சூழப்பட்ட இப்பூமண்டலமும், பரமபதமும் சிறிதும் குறையாதபடி நிர்வகிக்கும் எம் பெருமாள் செங்கோல் உடைய திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவரான பெரிய பெருமாள்.
ஆளவந்தார் பரமபதித்த போது ஸ்ரீ ராமானுஜர் பெரிய பெருமாளைச் சேவிக்காமல் சென்றுவிட்டார். ஸ்ரீ ராமானுஜருக்குக் கோபம் என்று கொண்டாலும், இதுவும் பெருமாளின் லீலையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நம்பெருமாள் ஏன் அப்படி செய்தார் ? ஸ்ரீ ராமானுஜருக்கு 'Red Carpet' வரவேற்பு கொடுக்க எண்ணி அவரை அனுப்பி மீண்டும் வரவழைத்தார் நம்பெருமாள்.
சில காலம் கழித்து, ஸ்ரீ ராமானுஜர் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வரும் போது விஸ்வக்சேனரை அனுப்பி அழைத்து வரச் செய்து, நம்பெருமாள் சந்தனு மண்டபம் வரை எழுந்தருளி ஸ்ரீ ராமானுஜரை வரவேற்று தன் கையிலிருந்த செங்கோலை உடையவரிடம் கொடுத்து 'உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம்' என்று ஆட்சி செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததால் ஸ்ரீ ராமானுஜர் 'உடையவர்' ஆனார்
- நன்றி. சுஜாதா தேசிகன்
6.5.2019
No comments:
Post a Comment