Wednesday, May 1, 2019

Tripura

*திரிபுர நகரம்*

"சூதரே! பூஜ்யரே தாரகாசுர வதை நடந்த பிறகு, நிகழ்ந்த சம்பவங்களையும் எங்களுக்கு விவரித்து சொல்ல வேண்டும்" என்று முனிவர்கள் கேட்க சூதமாமுனிவரும் உற்சாகத்தோடு சொல்ல தொடங்கினார். 

"தாரன் பெற்ற குமாரனாகிய தாரகாசுரனை போர் முனையில் முருகக் கடவுள்  கொன்ற  பிறகு, தாரகன் புதல்வர்கள் வித்யுன் மாலி, தாரகாக்ஷன் கமலாக்ஷன், ஆகிய மூவரும் கடுந்தவம் புரியத் தொடங்கினர். 

ஒற்றைக் காலில் நின்று 100 வருஷங்களும் பூமியிலிருந்து வெறும் காற்றையே உணவாக உட்கொண்டு பற்பல வருஷங்களும் அதிக தாபமுண்டாகப் பல வருடங்களும் தலை கீழாக நின்று ஆயிர வருடங்களும், கைகளை மேலுயர்த்தி நூறு வருடங்களும், துயர மயமான தவத்தை அநேக வருஷங்களும் இப்படிப் பல வகையான தவங்களை பிரமதேவனை குறித்து செய்தார்கள். 

தவம் செய்வோர் தாரனின் புதல்வர்கள் ஆனாலும், அவர்கள் அசுரவழி வந்த கொடியவரே ஆனாலும் அவர்கள் செய்கிற தவம் பெரும் மகிமை வாய்ந்தது. அந்த அத்தவாக்கினியின் ஜ்வாலையால் உலகம் அழியக் கூடுமாதலால் அவர்களுக்கு பிரம்மதேவன் காட்சியளித்து "நீங்கள் இம்மாதவம் புரிவது எதற்கோ? உங்களுக்கு வேண்டிய வரம் என்னவோ?" என்று கேட்டார். 

அதற்கு அவ்வசுரர்கள் "சிருஷ்டிகாத்தாவே! நாங்கள் சர்வ பிராணிகளிலும் ஒருவராலும் இறவாது வரம் அளிக்க வேண்டும்!" என்று கேட்டார்கள். 

அதற்கு பிரம்மதேவர் அவர்களுக்கு  "தவத்தர்களே! நீங்கள் கேட்கும் இந்த வரத்தை நாம் அளிப்பதற்கு இல்லை. ஏனென்றால் நீங்கள் எப்பொழுதும் இறவாமல் நித்தியமாக இருக்க யோகமில்லை. ஆதலால் உங்களுக்கு யோக பிராப்தம் கொண்ட வேறு வரங்களைக் கேட்டால், அவற்றைத் தந்தருள நாம் சித்தமாக இருக்கிறோம்" என்று கூறினார். 

உடனே அவ்வசுரர் மூவரும் "சதுர்முகரே! நாங்கள் எண்ணிய இடத்திற்குப் போகவும் சஞ்சாரம் செய்யவும் பொன் வெள்ளி- இரும்புகளால் ஆகிய மூன்று பறக்கும் பட்டணங்கள் வேண்டும், அவை 1000 வருடத்திற்கு ஒரு முறை ஒன்று சேர வேண்டும். அம் மூன்று பட்டணங்களும் ஒன்று கூடியிருக்கும் அந்தச் சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றின் முப்புரங்களையும் அழிக்கவல்ல எவனாவது இருந்தால் அவனால் மட்டுமே நாங்கள் மாண்டு மடிவோம் என்று வரம் தர வேண்டும்" என்று கேட்டார்கள். 

அதற்குப் பிரம்மதேவன் நீங்கள் கோரிய வரத்தை தந்து அருளினோம்" என்று கூறிவிட்டுத் திரிபுரக் கோட்டைகளை நிருமாணித்துக் கொடுக்க மயன் என்னும் தச்சனைக் கண்டு பொன், வெள்ளி, இரும்பகளாலாகிய மூன்று பட்டணங்களை நிருமித்து தாரகாசுர புதல்வர்களுக்குத் தந்தருளும்படி கட்டளையிட்டு மறைந்தார்.
அப்படியே அந்த மயனும் முப்புர பட்டணங்களை நிர்மாணித்து பொன் பட்டணத்தைத் தாரகாக்ஷனனுக்கும் வெள்ளி பட்டணத்தைக் கமலாக்ஷனனுக்கும், இரும்பு நகரத்தை வித்யுன் மாலிக்கும் கொடுத்தான். 

அவைகளில் பொன் பட்டணமானக் காஞ்சனபுரியைச் சுவர்க்கத்திலும் இரசிதபுரியை மத்தியத்திலும் ஆயசபுரியைப் பூமியிலும் சஞ்சரிக்கத் தக்கதான யந்திர சூத்திரம் செய்து வைத்து பட்டணம் ஒன்று ஓர் யோசனை விஸ்தீரணமுடையதாகச் செய்து கொடுத்த அந்த மயனுக்கு மூன்று அசுரரும் பற்பல விதமான பொருட்களை பரிசளித்து வெகு மரியாதை செய்து வழி அனுப்பினார்கள். 

பிறகு அவரவரும் பறக்கும் திரிபுரங்களில் தம்தம் பட்டணங்களைச் சேர்ந்தார்கள் யானை, தேர், குதிரை, முதலிய சேனைகள், கற்பக விருக்ஷம், நந்தவனம், மேடை சந்திர சாலை சித்திரத்தொழில்கள், சூரிய மண்டலம் போன்ற விமானங்கள் பதுமராக மணிகளாலாகிய விமானங்கள் கைலாச சிகரம் போன்ற விமானங்கள் அநேக சாரணர் சித்தர் முதலியோர் வசிக்கும் இடங்கள் சிவாலயங்கள், தடாகங்கள் கிணறுகள், பல்லக்குகள் கச்சேரி சாவடிகள் வேதாந்தியன் சாலைகள் முதலியனவற்றை உருவாக்கி பதிவிரதைகளான மனைவிகளோடு அசுர குடும்பங்கள் குடியிருந்து சிரவுத முதலிய நித்ய கருமங்கள் விடாமல் தொடர்ந்து நடத்தி வரும் பட்டணத்தில் குடியேறி, எப்போதும் கண்டிராத சிறப்புடன் விளங்குவதை கருதி மனமகிழ்வு பெற்று இருந்தார்கள். 

அங்கிருந்த அசுரக் கூட்டத்தில் பலவகைப்பட்டவர்கள் இருந்தார்கள். கோபிகள் சிலர் சாந்தவான்கள் சிலர் குட்டையர் நெட்டையர் சமரதர் அதிரதர் அர்த்தரதர் மாதாரதர், சிவபூஜாவான்கள் பிரம நிஷ்டாபரர்கள் பலவரங்கள் பெற்றவர் சூரியன் வாயு இந்திரன் முதலிய தேவர்களுக்குச் சமானவளமையாற்றல் கொண்டவர்களாகச் சிலரும் விளங்கினார்கள். 

அந்தத் திரிபுரங்கள் அசுரர்களேயானாலும் வேத சாஸ்திரங்களும் அவர்களது மூன்று புரங்களிலும் பூரணமாக விளங்கின. அப் பட்டணங்களின் பிரகாசத்தின்முன் தேவர்கள் கூட எதிர் தோன்றி நிற்க மாட்டார்தவர்களாக இருந்தார்கள். இதனால் தேவர்களும் முனிவர்களும் வெட்கி மனம் கூசினார்கள். 

திரிபுரமான அப்பட்டணங்கள் அவ்வசுரர்கள் கேட்ட வரத்தின்படி அவர்கள் எண்ணியோதெல்லாம் இடம் விட்டுப் பெயர்ந்து போய் இடம் சேரும் சக்தி பெற்றவைகளாதலால், அப்படி அவை இடப்பெயர்ச்சி கொள்ளும் போது பலகோடி ஜீவராசிகளும் மாண்டு மடிந்தன. அதைக்கண்டு அப்பட்டணங்களின் சிறப்பினை வியந்து ஆச்சரியமும் அவைகளைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாததால் ஆத்திரத் துயரமும் கொண்ட தேவர்களும் மகரிஷிகளும் மனம் சகியாமல் சிருஷ்டி கர்த்தாவான பிரம தேவர் அணுகிச் சென்று தங்கள் மனக் கவலையை முறையிட்டுக் கொண்டார்கள்.
*திரிபுர சம்ஹார ஆலோசனை* 

தேவர்கள் இவ்வாறு முறையிட்டதை கேட்ட பிரம்மதேவர் "தேவர்களே! என்னால் வரமளிக்கப்பட்ட அவ்வசுரர்களை நானே வதைத்து அழிப்பது முறைமையல்ல. அவர்களை நீங்களே வென்று அழிப்பது தான் சிறந்தது. அதற்கு வேண்டிய உபாயங்களையோ யுத்தியையோ வேண்டுமானால் நானே சொல்லித் தருகிறேன். அது வேறொன்றும் விசித்திரமானதில்லை சாக்ஷாத் சிவபெருமானிடம் நீங்கள் அனைவருமே சென்று முறையிட்டுக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை அந்த கருணாநிதியிடம் அபயம் கேட்டால் அவர் இல்லை என்று புறக்கணிக்க போவதும் இல்லை. உங்கள் குறை தீர்க்க அவர்தான் முயற்சியெடுப்பார் ஆகவே அவரிடமே செல்லுங்கள்" என்று கூறி அகன்றார்.

அதுவே சரியெனக் கருதிய தேவர்களும் நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று விண்ணப்பித்தார்கள், சிவபெருமான் அவர்களை நோக்கி "தேவர்களே! திரிபுரங்களை ஆட்சி செலுத்துகிற அந்த அசுரர்கள் புண்ணிய சீலர்களாதலால் அவர்களை யாம் சம்காரம் செய்தல் கூடாது. அவர்கள் புண்ணியர்களாய் விளங்கும் வரையிலும் விபத்துக்கள் அவர்களை தீண்ட முடியாது. ஆகையால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகா மாயாவியான மகாவிஷ்ணுவிடம் சென்று என் கட்டளையைக் கூறி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். 

தேவர்களும் அவரிடம் விடைபெற்றுத் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களின் துயர் கேட்டுத் திருமாலோ "வானவர்களே நீங்கள் துயரப்படுவதும் உண்மை தான். ஆனால் நீங்கள் கேட்கும் திரிபுர சம்ஹாரம் சாத்தியப் படக் கூடுமோ? அந்த திரிபுராதிகள் அசுரர்களாயினும் பாபிகள் அல்லவே! தருமம் மிகுந்த புண்ணியசீலர்கள் ஆயிற்றே! அவர்களைச் சம்கரிக்க நியாயம் ஏது? தருமம் இருக்கும் இடத்தில் அதர்மம் புகமுடியுமா? சூரிய சன்னதியில் இருள் உண்டாகக் கூடுமோ?" என்றெல்லாம் சொன்னார். 

அதைக் கேட்ட தேவர்கள் மிகவும் துயருற்று தலை வணங்கி "பரமாத்மாவே! எங்களுக்கு வேறு வழியில்லை நாங்கள் என்ன செய்வோம்? அந்த அசுரர்கள் இருப்பதால் எங்கள் தருமங்கள் விருத்தியை அடையவில்லை. ஒன்று அவர்கள் வாழ வேண்டும் என்று எங்களை அகாலப் பிரளயஞ் செய்து விடுங்கள். அல்லது அவர்களையாவது நாங்கள் வென்றிட வழி செய்யுங்கள்" என்று மிக பக்தி சிரத்தையோடு வேண்டினார்கள்.
திருமாலோ தீவிரமாக யோசித்துவிட்டு "தேவர்களே! சிவபெருமானைப் பூஜித்தால், உங்கள் இஷ்டசித்திகள் கைகூடுமாதலின் நீங்களும் யாகங்கள் செய்தால் திரிபுரங்கள் நாசமாகும்!" என்று சொன்னார்.

தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து மனத்திடமும் தெம்பும் பெற்றார்கள். அப்போது திருமால் மேலும் சொல்லலானார்.
"திரிபுர அசுரர்கள் மூவரும் மந்திர மஹிமையாலேயே இறக்க வேண்டும். ஆதலால் அதற்குச் சிவனாரின் தயவு வேண்டும். அது இல்லாமல் அந்த அசுரர்களை வதம் செய்ய நானோ, பிரம்மனோ தைத்தியர்களோ சக்தி அற்றவர்களாகி விடுவோம். சிவபெருமானே அவரவர் இஷ்ட சித்திகளை நிறைவேற்றுபவர். தேவர்கள் கூட அவரைப் பூஜித்ததால் தான் வல்லமைகளைப் பெற்றனர், அவ்வளவு ஏன்? பிரமனும் சரி, நானும் சரி, சிவபெருமானைப் பூஜித்ததால் தான் படைக்கும் ஆற்றலைப் பிரமனும் காக்கும் ஆற்றலை நானும் பெற்றோம். ஆகையால் நீங்கள் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்யுங்கள்" என்று கூறி அவர்களுக்குச் சிவ மூல மந்திரத்தை உபதேசித்து கந்த புஷ்ப தூப தீப நைவேத்தியங்களால் லக்ஷ லிங்கார்ச்சனை செய்வித்தார். 

அப் பூஜையின் முடிவில், கோரப்பல் சூலம் வேல் கதை பாணம் எறிகல் ஆகிய ஆயுதங்களை ஏந்திக் காலாக்நி ருத்ரன் போலவும் பிரளயகால சூரியன் போலவும் காந்தி மிக்க பற்பல பூதங்கள் தோன்றி தேவர்களை வணங்கி எதிர் நின்றன. 

விஷ்ணுமூர்த்தி அந்த பூதங்களை நோக்கி "நீங்கள் முப்புரங்களை கொளுத்தி இடித்துப் பொடிசூரணமாக்கிச் செல்லுங்கள்" என்று பணித்தார். 

ஆனாலும் அவர் மனம் சலனமுற்றது. அவர் சிவபெருமானைத் தனியே துதித்து நமஸ்கரித்து 'நான் இவர்களிடம் இப்படி ஏன் கட்டளையிட்டேன்; அசுரத் திரிபுராதிகளிடம் புண்ணியமும் தருமமும் பூரணமாய் விளங்கும் போது, அவர்களைச் சம்கரிக்கக் கூடுமோ? இப்பொழுதோ அந்த அசுரர்கள் ஒருவரும் சாகாவரம் பெற்றிருக்கிறார்களே! பாபிகளே ஆயினும் சிவார்ச்சனை செய்தால் தாமரை இலையில் தண்ணீர் சேராதது போல அவர்களை விட்டுப் பாவங்கள் விலகுமாதலால் என்ன செய்வது?' என்று யோசிக்கலானார்.

'திரிபுராதிகள் சிவ பூஜையை மறக்க நமது மாயா சக்தியால் ஏதாவது செய்ய வேண்டும். வேத தருமங்களும் சிவ பூஜையும் தூய நடத்தையும் உள்ளவரையிலும். அவ்வசுரர்கள் அழிய மாட்டார்கள். அதற்குள்ள உபாயத்தைச் சிந்திக்க வேண்டும்' என்று மாயோன் நினைத்து தேவர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு ஏகாந்தமாக ரகசிய சிந்தனையில் மூழ்கினார்.
 "நீங்கள் இப்பெயர்களை உச்சரித்து கொண்டிருங்கள்" என்று அவர் கூறியதும் மாயாரூபி நமஸ்கரித்து விடை பெற்று நால்வருடன்  திரிபுரத்திற்கு அருகில் ஒரு வனத்திலிருந்து மாயை உடையவர்களையும் மயக்கும் மாயை செய்யத் தக்கதான வினோத வித்தைகள் செய்து கொண்டிருந்தார்கள். 

அதனைக் கண்டவர்கள் அம்மதத்தில் போதனை பெற்று அம்மதத்தில் பற்றுக் கொண்டு இருந்தார்கள்.  மதி மயங்கினார்கள். இப்படி மாயை செய்து வந்த மாயாரூபியின் வித்தைகள் விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும் போது நாரத மகரிஷி விஷ்ணு மூர்த்தியை அடைய விஷ்ணு அவரையும் இந்த ஐவரோடு சேர்ந்துக் கொள்ளும் படிச் சொன்னார். 

அதனால் மாயாரூபியும் அவர் சிஷ்யர்கள் நால்வரும் அவருடன் நாரதம் ஆக அறுவராக அவர் அசுரர்களின் பட்டணத்தில் பிரவேசித்தார்கள். நாரதர் முதலில் வித்யுன்மாலியைக் கண்டு "இவர் மகா புத்திமான். தருமத்தைக் கருமமாக கருதுகிறவர். இவரிடம் அநேக தர்மங்கள் உள்ளன. இவருக்குச் சமமானவர் யாருமில்லை. நானும் இவர் சிஷ்யனாகி உபதேசம் பெற்றேன். நீயும் இவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்!" என்று கூறினார். 

வித்யுன்மாலி நாரதரை நோக்கி "மகா புண்ணியரான தாங்களே உபதேசம் பெற்றுள்ள போது நானும் பெறுவது தான் தருமம்!" என்று கூறி மாயாரூபியை வணங்கி "மகானுபாவரே! நீர் எனக்கு தீக்ஷை செய்ய வேண்டும்!" என்று வேண்டி நின்றார். 

மாயாரூபியோ வித்யுன்மாலியை நோக்கி "அரசனே! நான் சொல்வதை தடையின்றி செய்ய வேண்டும்!" என்று சொல்வதற்கு முன்னரே  "தங்கள் கட்டளைப் படி நான் நடப்பேன்!" என்றான். 

உடனே மாயாரூபி தன் வாயை மறைத்துக் கட்டிக் கொண்டிருந்த வெள்ளைத் துணியை நீக்கி, "என் உபதேச மந்திரத்தையடைக!" என்று சிவ தருமங்கள் நசிக்கத் தக்கதான சிலவகை மந்திரங்களை உபதேசித்து தீக்ஷை செய்வித்து "உன் பட்டணத்தார் அனைவரும் தீக்ஷாதாரராக" என்றான். 

அரசனும் தன் பிரஜைகளைத் தான் தீக்ஷை பெற்றது போல் அவர்களும் பெற வேண்டும் என்று கட்டளையிட்டான். இதனால் மாயா ரூபியின் சிஷ்யப் பிரஷ்யர்கள் நகர முழுதும் தீக்ஷை செய்வித்து சமண மதத்தை பரப்பினார்கள்.
 *மாயரூபி செய்த புறச்சமய உபதேசம்* 

விஷ்ணு மூர்த்தி தன்னிடம் இருந்து மாய ஸ்வரூபமான ஒரு புருஷனை தர்ம விக்நத்தை முன்னிட்டு உண்டாக்கினார். அப்புருஷன் மொட்டைத் தலையும் மலின உடையும் மரத்தால் செய்த குண்டிகையும் மயில்தோகையால் செய்யப்பட்ட குஞ்சமும் ஒரு கையில் ஆடையும் தர்மா என்ற சொல்லும் உடையவனாக விஷ்ணுவை கை குவித்து பணிந்து அவர் கட்டளைக்காகக் காத்து நின்றான். 

அவனைப்பார்த்த திருமால் "நீ என்னுடலில் இருந்து  தோன்றியதால் என் கட்டளைப்படி நடக்கக் கடவாய்! மாயாமயமான ஸ்ரவுதா சார ஸ்மார்த்த சார விருத்தமானதும் வர்ணாஸ்ரமம் இல்லாததும், இந்த உலகத்திலேயே சுவர்க்க நரகங்கள் உள்ளன என்பதும் வேதம் பொய் என்றும் சாஸ்திரங்கள் கர்ம வாதம் என்பதுமாய் உள்ள அகிரந்தங்களை நீ என்னிடமே கற்றுத் தேர்ந்து விரிவு படுத்த வேண்டிய ஆற்றலையும் என்னிடமே பெற்று பல வித மாயைகளையும் என்னிடமிருந்தே சுவாதீனமாக அடைவாய்! தோன்றுதல் மறைதல், வசியம்- அவசியம், சிநேகம்- விரோதம் முதலிய விசித்திர வித்தைகள் யாவும் உனக்குக் கைகூடும்" என்று கூறினார். 

அவற்றை அவனுக்குக் கற்பித்து "நீ திரிபுரம் சென்று அந்த அசுரர்களை உன் மாயா வித்தையால் மயக்கி அவர்களுக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்பித்து, அவர்களிடம் இருந்து சிரவுத, ஸ்மார்த்த ஆசாரங்களை உன் வலிமையால் நீக்கி திரிபுரம் நாசமாகும்படி செய்ய வேண்டும்" என்று பணித்து அம்மாயா புருஷனை அனுப்பி வைத்தார். 

"அந்த அசுரர்கள் உன்னிடம் வசப்பட்டு நீ சொல்லும் சாஸ்திரத்தை மோகித்த பிறகு நீ உவர் நிலத்தை (கடற்கரை ப்ரதேசம்) அடைந்து கலியுகம் வரும் வரையில் இருந்து, கலியுகம் வந்த பிறகு உன் சிஷ்யர்களுக்கும் பிற சிஷ்யர்களுக்கும் இந்த கிரந்த சாஸ்திரங்களை போதித்து இவைகளை விருத்தி செய்யக் கடவாய்! இதை நீ 1
இவ்வாறு செய்வதால் நீயும் என் பதவியை அடைவாய்" என்று ஆசிர்வதித்தார். 

மாயாரூபியானவன் நான்கு சிஷ்யர்களைப் படைத்து அவர்களுக்கு இந்த விதத்தையை கற்பித்து அவர்களை பண்டிதர்களாக்கி, விஷ்ணுவின் முன்  வந்து நால்வரூமாக வணங்கினார்கள். மகிழ்வுற்ற மகாவிஷ்ணு "நீங்கள் நால்வரும் உங்கள் குருவைப் போலவே வித்தை பயின்று விளங்குவீர்களாக!" என்று ஆசிர்வதித்தார்.

அந்நால்வரும் நமக்கு நடப்பதெல்லாம் தர்மமே என்று சொல்லி கொண்டு கட்டிய பிராணி நிவாரண குச்சிகளை கையிலேந்தி விஷ்ணுவை பணிய அவர்களின் கையில் ஒப்புவித்து "இவர்களை உன் போலவே நினைத்து காப்பாற்று" என்று கூறி "உங்களுக்கு பூஜ்யன் ருஷி; பதி ஆசார்யன், உபாத்தியாயன் என்னும் இப்பெயர்கள் விளங்கிப் பரவுவதுடன் (ஆரிஹந்) சத்துருவைச் செபிப்பவன் என்னும் என் பெயரும் கூட உனக்கு உண்டாகுக!" என்று ஆசிர்வதித்தார்.

No comments:

Post a Comment