Monday, May 6, 2019

Birth of Rama

ஸ்ரீ ராம ஜனனம் J K SIVAN

சித்திரை மாதம் சுக்ல பக்ஷத்தில், புனர்பூச நக்ஷத்ரத்தில் அயோத்யாவில் ஸ்ரீ ராமன் அவதரித்தான். இந்த நாளை வருஷா வருஷம் ஸ்ரீ ராம ஜனனமாக கொண்டாடுகிறோம். அன்று ஸ்ரீ ராமனை நினைத்து பாராயணம் பண்ணலாம், பூஜை பண்ணலாம். ஸ்ரீ ராம நாம சப்தம் எங்கும் ஒலிக்கவேண்டும். சூர்ய உதயத்தலிருந்து அஸ்தமனம் வரை உபவாசம் இருப்பவர்கள் புண்யாத்மாக்கள்.

ராமாயணம் கட்டுக்கதை அல்ல, ஒரு உண்மையின் நிருபணம். ஆதாரம் தேடவேண்டாம். இலங்கையில் ஆடம் ப்ரிட்ஜ் இருக்கும்வரை, சேது பாலம் அழியாதவரை அதுபற்றிய வரலாறு உலவும் வரை ராமனை மறக்க முடியாது. கடைசி ஹிந்து இருக்கும் வரை ராமன் நம் நினைவில் உண்டு. ஹிந்து சனாதன தர்மம் அழிவற்றது.

ராமன் பிறந்த நேரம், காலம், ஜாதக பலன் அனைத்தும் அநேக பண்டிதர்கள் அலசி வைத்திருக்கிறார்கள். ராம சகாப்தம் என்று ஒரு புத்தகம். எழுதினவர் புஷ்கர் பட்நகர் . ராமன் சரித்திர பூர்வமானவன். வால்மீகி, ராமன் காலத்தில் இருந்த ரிஷி. ராமன் அவதாரமான நேரம், அப்போது காணப்பட்ட கிரகங்கள்,ராசிகள், நக்ஷத்ரங்கள், இவை எந்த இடத்தில் இருந்தன என்று ராமாயணத்தில் விலாவாரியாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் வால்மீகி. இது ஒரு அதி உன்னதமான வான சாஸ்திர உண்மை. தற்கால விண்வெளி நிபுணர்கள் astro physics specialists இது சரியே என்று தலையாட்டுகிறார்கள்.

ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமையவில்லை. இது மாதிரி யாராலும் கற்பனை கூட பண்ண முடியாத அதிசயம் என்கிறார் பட்னகர். இது இவ்வாறு நேரப்போகிறது என்று அறிந்து, முன்கூட்டியே தான் வால்மீகிக்கு அந்த பாக்யத்தை நாராயணனே கொடுத்து எழுதிவைத்து ராமாயணம் நமக்கு பரிசாக கிடைத்தது. நவமி திதியில், சுக்ல பக்ஷத்தில், சைத்ர மாதத்தில், (ஒன்பதாம் நாள், வளர்பிறையில், புனர்பூச நக்ஷத்ரத்தில் பிறந்த போது சூரியன், செவ்வாய், சனி, புதன், சுக்ரன் எந்த க்ரஹத்தில் , எந்த ராசியில், லக்னம், என்ன என்று ராமாயணத்தில் ஸ்லோகம் 1.18.8,9 ல் சொல்கிறார்.

தசரத சக்ரவர்த்திக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தும் பிள்ளை இல்லை. குலகுரு வசிஷ்டர் ''தசரதா '' நீ போய் தவ ஸ்ரேஷ்டரான ரிஷ்ய ஸ்ரிங்கரை .அழைத்து வா. அவர் தலைமையில் நாங்கள் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் உனக்கு புத்ர பலன் உண்டு'' என்று சொல்ல. அவ்வாறே ராஜா தசரதன் ஸ்ரத்தையாக செய்த புத்ர காமேஷ்டி ஹோம அக்னியிலிருந்து அக்னி தேவனே தோன்றி ஒரு தங்க பாத்ரத்தில் வெள்ளி மூடி யோடு பாயசம் நிரம்பி இருக்க ''தசரதா, ராஜன் அர்ச்சயதா, தேவான் அத்ய ப்ராப்தம் இதம் த்வயா'' -- பண்ணின யாகத்தில் தேவாதி தேவர்கள் திருப்தி அடைந்து ஆசிர்வதித்து பரமாத்மாவே உனக்கு புத்ரனாக அவதரிப்பார்'' என்றருளி மறைகிறான். தசரதன் பரம சந்தோஷத்தோடு ரிஷ்யஸ்ரிங்கரையும், வசிஷ்டரையும் மற்ற முனிவர்களையும் வணங்கிவிட்டு அந்தப்புரம் ஓடி எதிர்ப்பட்ட கௌசல்யா மற்றும் கைகேயியிடம் பாயசத்தை அளித்தான். அப்போது அங்கு மற்றொரு மனைவி சுமித்ரையும் வர, கௌசல்யாவும் கைகேயியும் தங்கள் பாயசத்தில் சரி பாதியை சுமித்ரைக்கு கொடுத்தனர். விரைவில் கருவுற்ற அந்த மூன்று மனைவிகளுக்கும் உரிய காலத்தில் குழந்தைகள் பிறந்தன.

சித்திரை, வளர்பிறை, நவமிதிதி, கடக லக்னம், புனர்வசு நக்ஷத்ரம், ஐந்து க்ரகங்கள் உச்சத்தில் சூரியன் மேஷ ராசியில், பரமாத்மா ஸ்ரீ மந் நாராயணன் கௌசல்யாவுக்கு மகனாக பிறந்தான். நீல வண்ணன், பொன் வஸ்த்ரம், நான்கு கைகள், தாமரைக் கண்கள், ஒளிவீசும் குண்டலங்கள் காதில், தலையில் ஒளி வீசும் கிரீடம், சுருள் சுருளான கேசம், சங்க சக்ரம், கதை, வனமாலை சூடிக்கொண்டு,புன்முறுவலுடன் ஸ்ரீமந் நாராயணன் பிறந்தார். பிறந்தது பரமாத்மா என உணர்ந்த கௌசல்யா அவரை வணங்கினாள் .

''பிரம்மாண்டங்களை உள்ளடக்கிக்கொண்டிருக்கும் பகவானே, இங்கு ரகு குலத்தில் தோன்றி, பக்தர்களை அனுக்ரஹிக்கும் பக்த வத்சலா, தங்கள் திருவடிகளில் பணிகிறேன். விஸ்வாத்மா, இந்த பூவுலகுக்குப் பொருந்தாத இந்த உண்மைத் தோற்றத்தை மறைத்துக்கொண்டு மென்மையான, பேரானந்தம் தரும் மானிடக் குழந்தை வடிவம் காட்டி அருளுங்கள். உங்களை அணைத்து, சீராட்டி, தாலாட்டி வளர்க்கும் கடமையைச் செய்ய அருளுங்கள்.'' என்று கௌசல்யா வேண்டுகிறாள்.

''தாயே, உன் விருப்பப்படி நடக்கும்'' என்றான் பரமன். பிரமனின் பிரார்த்தனையை ஏற்று, பூமி பாரம் குறைக்க, ராவண வதம் நிறைவேற, தசரதன் முற்பிறப்பில் தவம் செய்த பலனாக மகனாக பிறந்த தெய்வம், ''நீங்கள் பார்த்த என் தோற்றம் உங்கள் தவத்தின் பயன்'' . இனி நான் நீங்கள் விரும்பிய சிறு குழந்தையாவேன் என்றார்.

வசிஷ்டர் முதலிய ரிஷிகள் குழந்தைக்கு ஆனந்தமாக ஜாதகர்மா ஆகிய பிற சடங்குகளை நிகழ்த்தி வசிஷ்டர் குழந்தைக்கு தன் அழகினாலும் பெருங் கருணையாலும் சகல புவனமும் மகிழவைக்கும் '' ராமன்'' என்ற பெயர் இட்டார்.

கைகேயி உலகம் காக்கும் '' பரதனைப்'' பெற்றாள் இருவரிடம் பாயசம் பெற்று அருந்திய சுமித்ரைக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். சர்வ லக்ஷணம் பொருந்திய ஒருவன் ''லக்ஷ்மணன்'' என்றும் எதிரிகளை அழிக்க வல்ல பராக்ரமனான ஒருவன் ''சத்ருக்னன்'' என்ற பெயரும் பெற்றனர். குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.

பல ஆண்டுகளாக ஏங்கிய பெற்றோர் முத்துக்களால் ஆன நெற்றிச் சுட்டி, ரத்ன வைர மாலை, தங்க குண்டலங்கள், பாதங்களில் வைரச் சிலம்பு, இடையில் ரத்னக் கற்காளால் வேய்ந்த அரைஞாண் , புஜங்களில் தோள்வளை, மந்த ஹாஸ முகம், அழகிய சிறு பற்கள், நீல மேக வண்ணம், இப்படி ஒரு குழந்தை அரசனின் மாளிகைகளில் எங்கும் ஓடி ஆடி விளையாடினால் எப்படி எல்லோரும் மகிழ்வார்கள். எழுதும்போது படிக்கும்போதே நாமே மனதில் கற்பனை செய்து பார்த்து அந்த ஆனந்த ரூபத்தில் மகிழ்கிறோமே.

மண்டையைக் குடைந்துகொண்டு ராமர் பிறந்த நாளை, நக்ஷத்ரத்தை, நேரத்தை எல்லாம் பல ஜோசியர்கள் மற்றும் சரித்திர வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். அதன் படி, ஸ்ரீ ராமநவமி ஜனவரி 10, 5114 BC அதாவது இன்றைக்கு 7130 வருஷங்களுக்கு முன்னர். அந்த நாளிலிருந்து மெல்ல நகர்ந்து 25 வருஷங்களைப் பரிசோதித்ததில் ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளின் தேதிகள், நேரங்கள் சரியாக பொருந்துகிறது. மேலும் நகர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை தொடர்ந்ததில் ராமரின் வனவாசம் முடிந்து, 13வது வருஷம், 10வது மாதத்தில் அமாவாசை அன்று சூரிய க்ரஹணம் நடந்தது தெரிகிறது. அன்றைய (அதாவது 7.10. 5077 BC ) ஆகாயத்தில் தோன்றிய கிரகங்கள், நக்ஷத்ரங்களை ஆராய்ந்தபோது ராமயணத்தில் சொன்னது வாஸ்தவம் என்று அறியப்படுகிறது. அடுத்து வந்த ரெண்டு கிரகணங்களையும் சரியாகக் கணக்கிட்டு ராமாயணத்தில் சொல்லியது சரி என்கிறது விஞ்ஞானம்.

''ராமா, எந்த புஸ்தகம் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ என்றுமே கோடானுகோடி எங்கள் ''மனசு புஸ்தகங்களில்'' நிலையாக இருக்கிறாய். அன்றாடம் அவைகளைத் திறந்து படிக்கப்படுகிறாய். பாடப் படுகிறாய்.

ராமன் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஏன் மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் த்ரேதா யுகத்தில் பிறந்ததாக கூட கூறுகிறார்கள். பாகவத புராணம் ''திரேதா யுக ராஜா'' என்கிறது. ( பா.பு.. 9.10.51). இப்போது நாம் கலியுகத்தில் 5000+ வருஷங்களாக இருக்கிறோம். இதற்கு முன் கிருஷ்ணன் இருந்த த்வாபர யுகம் 864,000 வருஷங்களை கொண்டிருந்தது. அதற்கு முன்பு தான் த்ரேதா யுகம்.

படித்தால் உங்களுக்கும் எழுதும்போது எனக்கும் கூட, தலை சுத்தும். த்ரேதாயுகம் 1,200,000 வருஷங்கள், அதற்கு மேலும் கூட, கொண்டது. ஒரு விஷயம். ராமன் பல ஆயிரம் வருஷங்களுக்கு முந்தியவன். இதற்கும் முந்தைய த்ரேதா யுகத்தில் ராமன் இருந்திருப்பானேயானால் எத்தனையோ மில்லியன் வருஷங்களுக்கு முன் தான் அது. வாயு புராணம் இதை சொல்கிறது.

  

No comments:

Post a Comment