விஷ்ணுசஹஸ்ரநாமம் -26
231. ஆவர்த்தன: -ஆவர்தயிதும் சீலம் அஸ்ய இதி ஆவர்த்தன: - சம்சார சக்கரத்தை சுழற்றுபவர். ஜனனமரணம், பகல் இரவு, சுகம் துக்கம் இவை மாறி மாறி வருவது பகவானுடைய மாயையால்.
ஈஸ்வர: ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் சர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா ( ப. கீ.. 18. 61)
பகவான் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டு, மாயையினால் இயந்திரத்தில் ஏற்றி சுழலவைக்கிறான். இங்கு இயந்திரம் என்றது கர்மவினை .
232.நிவ்ருத்தாத்மா-நிவ்ருத்தி என்றால் விலகுதல் என்று பொருள். அதாவது பகவான் எல்லாவற்றையும் இயக்கினாலும் அவைகளால் பாதிக்கப்படுவதில்லை.. ஏனென்றால் அவருக்கு செயல் என்பதில்லை.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா. (ப.கீ. 4.14)
"எனக்கு கர்மங்களினால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை . நான் அவற்றால் பாதிக்கப்படுவதில்லை ."
உபநிஷத் கூறுகிறது ,
தவா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷச்வஜாதே
தயோ: ஏக: பிப்பலம் ஸ்வாது அத்தி அனச்னன் அன்ய: பரிசாகசீதி (முண்டகோபனிஷத்)
பிரியாத இரு பறவைகள் ஒரே மரத்தில் உள்ளன . அதில் ஒன்று இனிமையும் புளிப்பும் ஆன பழங்களை புசிக்கிறது. இன்னொன்று ஒன்றுமே புசிக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இது ஜீவாத்மாவையும் அதற்குள் சாக்ஷி மாத்திரமான பரமாத்மாவையும் குறிக்கிறது.அதாவது கர்ம பலன் என்பது ஜீவாத்மாவுக்கே அன்றி அந்தராத்மாவான பரமாத்மாவுக்கில்லை என்பது பொருள்.
233. ஸம்வ்ருத:- அவித்யையால் மறைக்கப்பட்டவர்.
நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருத (ப. கீ. 7.25) நான் யோகமாயையினால் மறைக்கப்பட்டு எல்லோருக்கும் தெரிவதில்லை.
234. ஸம்பரமர்தன:- ஸம்யக் மர்தயதி ஸ்வவித்யயா தம: அறியாமை என்னும் இருளை தன் ஒளியால் போக்குகின்றவர்.
ஞானேன து ததஞ்ஞானம் யேஷாம் நாசிதும் ஆத்மன:
தேஷாம் ஆதித்யவத் ஞானம் பிரகாசயதி தத் பரம் ( ப.கீ. 5. 1.6.)
ஞானத்தினால் அஞ்ஞானம் அகலும்போது கணாம என்பது சூரியனைப்போல் பிரகாசிக்கிறது.
235. அஹ: ஸம்வர்தக: - பகலை உண்டாக்குபவர். அதாவது காலச்சக்கரத்தை உடையவர்.
அஹமேவ அக்ஷய: கால:-(ப.கீ . 10.33) நானே நிரந்தரமான காலம் .
236.வஹ்னி: வஹநாத் வஹ்னி:. அந்தராத்மாவாக இருப்பதால் எல்லாவற்றையும் தாங்குபவர். வஹ்னி: என்றால் அக்னி. இது எவ்வாறு பகவானுக்கு பொருந்துகிறது என்றால் யாகத்தில் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை அக்னி ரூபத்தில் தேவர்களுக்கு கொண்டு சேர்க்கிறவர்.
237. அனில:
அனில: என்றால் வாயு. அனநாத் அனில: . பிராணனைத் தருபவர்.
ததேவ அக்னி: ததேவ வாயு: - அவனே அக்னி அவனே வாயு ( தைத்திரீய உப. )
ஏலயதி பிரேரயதி இதி இல:ந இல: அனில: பிரேரணை என்றால் தூண்டுவது, பகவான் பக்தர்களைக் காக்க ஏதும் தூண்டப்படுவதில்லை.
இலதி என்றால் தூங்குவது. அனில என்றால் தூங்காதவன் என்று பொருள்.காற்று தூங்கிவிட்டால் என்ன ஆகும்!
238.தரணீதர: - பூமியை தாங்குபவர். வராஹரூபத்திலும் ஆதிசேஷனாகவும் பூமியைத் தாங்கியவர்.
No comments:
Post a Comment