ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 8- அத்தியாயம் 22/23
அத்தியாயம் 22
இவ்விதம் பகவானால் வினவப்பட்ட பலி தன் வாக்கை பொய்யாக்கக் கூடாது என்றெண்ணி வாமனருடைய மூன்றாவது அடியைத் தன் தலை மேல் வைக்கும்படி கூறினான். அவன் கூறியதாவது,
பிபேமி நாஹம் நிரயாத் பதச்யுத:
ந பாசபத்தாத் வ்யஸனாத் துரத்யயாத்
நைவார்த்த க்ருச்ராத் பவதோ விநிக்ரஹாத்
அஸாதுவாதாத் ப்ருசம் உத்விஜேத் யதா
"பொய்யன் என்ற அபகீர்த்தியில் அஞ்சுவது போல் நரகம் புகுவதிலோ, பாசத்தால் பிணிக்கப்படுவதிலோ , கடத்தற்கரிய துன்பத்தை அடைவதிலோ ,பொருளை இழப்பதிலோ உங்களிடம் தண்டனை பெறுவதிலோ நான் அஞ்சவில்லை."
இங்கு முதலடியால் பூமி முழுவதும் அளந்த போது அதில் பலியும் உட்பட்டவன் அல்லவா ? அப்படி இருக்க மூன்றாவது அடி அவன் தலையில் வைப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில், உடைமையை விட உடையவன் பெரியோன் . அதனால் அது பொருத்தமே என்று கூறப்படுகிறது.
பின்னர் பலி பகவானின் பக்தனான பிரஹ்லாதன் வம்சத்தில் தோன்றிய புண்ணியத்தினால் பகவானின் திருவடி தன் சிரசில் படும் பாக்கியம் கிடைத்தது என்று கூறினான்.
பலி இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையில் அவனுடைய பாட்டனாரான பிரஹ்லாதன் அங்கு தோன்றினார். அவர் பகவானிடம் ,
" உயர்வான இந்திர பதவி கிடைத்ததும் உம் அருள். இப்போது எடுத்துக்கொள்ளப்பட்டதும் நன்மையே ஆகும். புத்தியை மயக்கும் செல்வத்தை விட்டுப் பிரிந்தது இவனுக்கு செய்த அநுக்ரஹம்." என்றார்.
அப்போது பிரம்மா பலியைக் கட்டிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார் ஏனென்றால் அவனுடைய் உடமை அனைத்தும் பறித்துக் கொண்ட பிறகு அவனை சிக்ஷித்தல் தகாது என்றார்.
அதற்கு பகவான் " எவனுக்கு அருள் புரிய எண்ணுகிறேனோ அவனுடைய பொருளை போக்கி விடுகிறேன். "என்றார். மகாபலிக்கு பகவானின் அருள் கிடைக்கத் தடையாய் இருந்தது செல்வத்தில் மமகாரமும் உடலில் அஹங்காரமும். இவைகளை பலியிடம் இருந்து கவர்ந்து பகவான் வஞ்சிப்பது போல் லீலை புரிந்தார்.
ஆயினும் பிறப்பு , தொழில், இளமை, அழகு, கல்வி, செல்வாக்கு, பொருள் இவற்றால் ஒருவருக்கு கர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லவா? அப்பேர்ப்பட்டவன் பகவானின் அருளுக்கு பாத்திரம் ஆனவனாவான்.
மகாபலி ஒரு சிறந்த பக்தன். அவன் ஸாவர்ணி மன்வந்தரத்தில் இந்திர பதவியை அடைவான் என்று கூறி அவனை தேவர்களும் விரும்பும் ஸுதல லோகம் செல்லும்படியும் அங்கு எப்போதும் அருகில் இருந்து அவனைத் தான் காப்பாற்றுவதாகவும் பகவான் வாக்களித்தார்.
ஒருமுறை ராவணன் பலியை வெல்லும் பொருட்டு ஸு தல லோகம் வந்ததாகவும் அவனை பகவான் தன் கால் கட்டைவிரலால் தூக்கி எறிந்ததாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.
பலி ப்ரஹ்லாதனைப்போல் சிரஞ்சீவியாக ஸுதல லோகத்தில் சுற்றம் சூழ ப்ரஹ்லாதனுடன் பகவானை எப்போதும் கண்டு மகிழ்வுடன் வசித்தான்.,
அத்தியாயம் 23
ப்ரஹ்லாதன் பலியின் பாக்கியத்தைப் பின்வருமாறு போற்றினார்.
நைவம் விரிஞ்சோ லபதே பிரஸாதம் ந ஸ்ரீ: ந சிவ: கிமுதாபரே தே
யன்னோ அஸுராணாம் அபி துர்கபால: விச்வாபிவந்த்யைரபி வந்திதாங்க்ரி:
"இத்தகைய அருளை பிரம்மாவும் லக்ஷ்மீ தேவியும் ருத்திரனும் கூட அடையவில்லை.மற்றவர் எவ்வாறு அடைய முடியும்?எவரகளை உலகமெல்லாம் வணங்குகிறதோ அவர்களும் வணங்கும் திருவடியுடைய தாங்கள் எங்கள் கோட்டைக்கு காவலராக அல்லவா ஆகிறீர் !"
பின்னர் சுக்ராசாரியர் பகவானின் அனுமதியுடன் பலியின் தடைப்பட்ட யாகத்தை பூர்த்தி செய்தார். பகவான் பலியுனால் அபகரிக்கப்பட்டிருந்த ஸ்வர்கலோகத்தை இந்திரனுக்களித்தார்.
சுகர் கூறினார்.
கேட்பவரின் பாவங்களைப் போக்கக்கூடிய இந்த வாமனாவதாரத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருவன் ஒப்புயர்வற்ற பதவியை அடைவான்
ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 8 அத்தியாயம் 24.
அத்தியாயம் 24-மத்ஸ்யாவதாரம்
பரீக்ஷித் பகவானின் ஆதி அவதாரமாகிய மத்ஸ்யாவதாரத்தைப் பற்றிக் கூறும்படி சுகரிடம் கேட்டான்.
சுகர் கூறியது.
பிரம்மாவின் இரவில் ஏற்படுவது நைமித்திக ப்ரளயம் . அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் பிரம்மா துயிலுறும்போது வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டான். பகவான் மத்ஸ்ய உருவெடுத்து அவனைக் கொன்று சமுத்திரத்தில் ஒளித்துவைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணர்ந்தார் . இதுதான் மத்ஸ்யாவதாரம்.
முன்னொருகாலத்தில் சத்யவ்ரதன் என்ற அரசன் சித்தத்தை நாராயணனிடம் வைத்துத் நீரை மட்டும் உட்கொண்டு தவம் செய்து வந்தான். ஒருநாள் அவன் நதியில் அர்க்கியம் விடும்போது அந்த கையளவு நீரில் ஒரு சிறு மீன் இருக்கக் கண்டான். அதை நதியில் விட நினைக்கையில் அந்த மீன் தன்னை நதியில் விட்டால் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் என்று கூறியதால் அதைத் தன் கமண்டலுவில் ஆஸ்ரமத்திற்கு எடுத்துச்சென்றான்.
அந்த சிறிய மீன் விரைவில் கமண்டலு கொள்ளாமல் வளர்ந்து தன்னை அதைவிட பெரிய இடத்தில் விடுமாறு கூறியது. படிப்படியாக ஒன்றை விட ஒன்று பெரியதான நீர் நிலையத்தில் அதை சேர்க்க அது பெரியதாகிக் கொண்டே வந்தது. கடைசியில் அதை சமுத்திரத்திற்கு எடுத்துப் போகையில் அந்த மீன் இங்கு தன்னைவிடப் பெரிய சுறாமீன் முதலை போன்றவைகள் தன்னைத் தின்று விடும் எனக்கூற அப்போது சத்யவ்ரதன் வியப்புற்று மீன் வடிவில் தன்னை மயக்குவது யார் எனக்கேட்டான்.
சத்யவ்ரதன் கூறியது.
"ஒரே நாளில் நூறு யோஜனை பரப்புள்ள ஏரியை நிறைத்த நீங்கள் நிச்சயமாக நான் வணங்கும் நாராயணனே . இந்த அற்புத வடிவை எடுக்க க் காரணம் என்ன என்று கூறியருள வேண்டும்" என்றான்.
பகவான் அவனிடம் அன்றைய தினத்தில் இருந்து ஏழாவது நாள் பூமி பிரளய ஜலத்தில் முழுகப்போகிறது என்றும், அப்போது பெரிய ஓர் ஓடம் மத்ஸ்ய ரூபியான தன்னால் செலுத்தப்பட்டு அங்கு வரும் என்றும், அதில் சத்யவரதன் எல்லாவிதமான ஔஷதிகளையும் விதைகளையும் எல்லாப் பிராணிகளையும் நிரப்பிக்கொண்டு சப்தரிஷிகளுடன் பயமின்றி சஞ்சரிப்பான் என்றும் , அப்போது அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்து பிரம்மஞானத்தை அருளுவதாகக் கூறினார்.
பகவானால் கூறப்பட்ட அந்தக் காலத்தில் பெரும் மேகங்கள் மழை பொழிய பூமி முழுகுவதைக் கண்டான். அப்போது பகவான் வாக்குப்படி ஒரு ஓடம் வர அதில அவர் சொன்னபடி எல்லா பொருள்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஏறினான். அங்கு பகவான் மத்ஸ்ய ரூபத்தில் பொன் நிறமுடன் ஓர் லக்ஷம் யோசனை நீண்டு ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்க அவருடைய கொம்பில் அவரால் முன்னமே சொல்லப்பட்டவாறு ஓடத்தை வாசுகியை கயிறாகக் கொண்டு கட்டினான். பிறகு மகிழ்ச்சி பொங்க பகவானைத் துதித்தான்.
" தேவ்ஸ்ரேஷ்டரும் உலகுக்கெல்லாம் நண்பரும் பிரியமானவரும் ஆத்மாவும் அறிவையும் இஷ்டசித்தியையும் அளிப்பவரான உம்மை குருடர்களைப்போல் உலக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஈஸ்ச்வரராகிய உம்மை அறிவின் விளக்கத்திற்காக சரண் அடைகிறேன்
.ரஹஸ்யார்த்தங்களின் விளக்குப்போன்ற சொற்களால் இருதயத்தின் முடிச்சுகளை சேதித்து உமது உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்,"இவ்வாறு கூறிய அரசனிடம் பகவான் பிரளய ஜலத்தில் விளையாடியபடியே தத்துவத்தை உபதேசித்தார்.
அப்படிப்பட்ட மாயாமத்ச்ய ஸ்வரூபியான அவரை வணங்குவோமாக.
எட்டாவது ஸ்கந்தம் முடிவுற்றது
No comments:
Post a Comment