Thursday, April 11, 2019

Vishnu Sahasranama 211 to 220 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுசஹஸ்ரநாமம் - 24

211 ஸுராரிஹா-ஹிரண்யன் போன்ற தேவ சத்ருக்களை அழிப்பவர்.

212. குரு: குருதம: -இது ஒரே நாமம். பகவான் முதன்முதலில் பிரம்மாவுக்கு உபதேசித்தார். ஆகையால் முதல் குரு. குருதம என்றால் எல்லாருக்கும் மேலான குரு என்று பொருள் . கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

இந்த இரு நாமங்களும் பின்னர் வரும் சிலவும் மத்ஸ்யாவதாரத்தைக் குறிப்பன என்று பெரியோர்களின் கருத்து. . எப்படி என்றால், ஹயக்ரீவாசுரனால் வேதங்கள் சமுத்திரத்தினுள் ஒளித்து வைக்கப்பட்டபோது, ஞானம், தர்மம் இவை இன்றி உலகம் அதர்மத்தில் மூழ்கியது. பகவான் மஹாமத்ஸ்யமாய் சர்வவ்யாபியாக வேதங்களை மீட்டார். வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு அதை உபதேசம் செய்ததால் குருதம: எனப்படுகிறார்.

213.தாம- ஒளியாயிருப்பவர்.,, தாம என்றால் இருப்பிடம் என்றும் பொருள். .'ஸ வேத யத் பரமம் பிரம்ம தாம யத்ர விச்வம் நிஹிதம் பாதி சுப்ரம்.' – முண்டகோபநிஷத். இதன் பொருள்,

பிரம்மஞானத்தை அடைந்தவன் எதனிடம் இந்த பிரபஞ்சம் நிலை பெற்றிருக்கிறதோ அந்த ஒளிமயமான பரப்ரம்மத்தை அறிகிறான். பகவான் மத்ஸ்யரூபத்தில் சராசரங்களின் ஆதாரமான பூமியென்னும் கப்பலைத் தாங்கி நடத்தினவர்.

214.ஸத்ய: -ஸத்ஸு ஸாது: நல்லவர்களுக்கு நல்லவர். மத்ஸ்யாவதாரத்தில் மனு முதலிய சத்புருஷர்களுக்கு நன்மை செய்தவர். சத்யம் என்பது சத் அல்லது இருப்பது என்பதிலிருந்து வந்த சொல். இதற்கு உண்மை, அதுவே நன்மை. ஏனென்றால் எப்போதும் இருப்பது சத்யம் அதுவே உண்மை .

சத்தியமே வடிவானவர்.'ஸத்யஸ்ய ஸத்யம்,' 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரம்ம,' என்கிறது உபநிஷத். 
கீதையில் பகவானே இதை உறுதி செய்கிறார். 
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸத் இதி ஏதத் பிரயுஜ்யதே 
பிரசஸ்தே கர்மணி ததா ஸத்சப்த: பார்த்த யுஜ்யதே. (ப.கீ. 17. 26)
அதாவது ஸத் என்ற சொல், இருப்பது , நல்லது , நல்ல செய்கைகள் இவைகளைக் குறிக்கிறது.

215. ஸத்யபராக்ரம:- வீண் போகாத பராக்ரமத்தை உடையவர். அதாவது வெல்ல முடியாதவர். 
ஹயக்ரீவாசுரன் பிரம்மா கண்ணயர்ந்த சமயம் வேதங்களைக் கவர்ந்தான். மத்ஸ்ய ரூபம் கொண்ட பகவானை எதிர்த்து நிற்க முடியவில்லை.

ராமாவதாரத்தில் மானுடனாகவே செயல் புரிந்ததனால் ராவணனால் எதிர்த்து நிற்க முடிந்தது. ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் ' க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் ,' என்று பாகவதத்தில் கூறியுள்ளபடி தன் மகிமையை மறைக்காமல் இருந்ததால் அவர் ஆயுதம் எடுக்கவில்லை. இல்லையென்றால் எவ்வளவு அக்ஷௌஹிணியாய் இருந்தால் என்ன ? எதிரிகள் சேனை ஒருகணத்தில் அழிந்திருக்குமே.

216.நிமிஷ: -நியம்ய மிஷதி இதி நிமிஷ: எல்லா ஜீவராசிகளையும் அவரவர் குணம் , தர்மம், ஸ்வபாவம் இவற்றின்படி நடத்துவதோடல்லாமல் அவர்கள் அதில் சிறந்து விளங்குமாறு செய்பவர். 
நிமிஷ என்றால் கண்களை மூடிக்கொண்டு இருப்பது என்பது சாதாரணமான பொருள். தன பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை கடாக்ஷிக்க மாட்டார்.

மத்ஸ்யோ அபி நிமிஷ லோசன:- மத்ஸ்யாவதாரத்திலும் அப்படித்தான் என்பதனால் மீன்களுக்கு இமை கிடையாது என்றாலும் பகவான் துஷ்டர்களை கடாக்ஷிக்கமாட்டார் என்பதால் உபசாரமாக கண்களை மூடிக்கொண்டார் என்று கொள்ளலாம்.

யோகநித்திரையில் கண்களை மூடியிருப்பவர் என்பது ஒரு விளக்கம்.

217. அனிமிஷ: - கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பவர். யோக நித்திரையில் கண்களை மூடிக்கொண்டிருப்பவர் என்று கூறி உடனே அநிமிஷ: என்றோ சொல்வதன் அர்த்தம் அவர் கண்களை மூடிக்கொண்டிருப்பது ஒரு பாவனையே.

உண்மையில் அவர் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் என்னவாகும்! விளையாட்டாக பாரவதி சிவபெருமானின் கண்களை மூட உலகம் ஸ்தம்பித்துவிட்டது என்று கதையில் கேட்டிருக்கிறோம்.

மத்ஸ்யாவதாரத்தில் கண் இமை இல்லாததால் அனிமிஷ: என்பது பொருந்தும். அந்தராத்மாவாக இருப்பதால் எப்போதும் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

ஸத்ஸு ந நிமிஷதி- ஒரு மீன் எவ்வாறு தன் குஞ்சுகள் வேல் வரும் வரை முட்டைகளை கண்காணிகுமோ அது போல பகவான் தன் பக்தர்களை அவர்கள் சம்சாரமாகிற கூட்டிலிருந்து வெளி வரும் வரை கண் காணிக்கிறான்.

ஒரு குடியானவன் தன் பயிர்கள் முற்றி அறுவடைக்கு வரும் சமயம் அவைகளை எதுவும் அழிக்காமல் காக்க வயலிலேயே சயனிப்பானாம். தூங்குவது போல் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கேட்டாலும் விழிப்பாக இருப்பான் அல்லவா? ஒரு தாயார் தூக்கத்திலும் தன குழந்தை அழுவது கேட்டால் உடனே எழுந்துவிடுவதில்லையா? சாதாரண மனிதர்களே அப்படி இருக்க பகவானைப்பற்றி சொல்ல வேண்டுமா!

218.ஸ்ரக்வீ- மாலை அணிந்தவர் –மத்ஸ்யமாக வந்த போது கூட வைஜயந்தி மாலை அவரை அலங்கரித்ததாம். ( வைஜயந்தி மாலை என்பது பஞ்ச தன்மாத்ரைகளைக் குறிக்கும்.)

வேதாந்த தேசிகர் யாதவாப்யுதய காவியத்தின் மங்கள ஸ்லோகத்தில் பகவானை வைஜயந்தீ விபூஷணம் என்று வர்ணிக்கிறார். அதற்கு அப்பைய தீக்ஷிதரின் விளக்கம் பின் வருமாறு.

வைஜயந்தீ மாலை என்பது வனமாலையை குறிக்கும் என்றாலும், இந்த வைஜயந்தீ விபூஷணம் என்னும் சொல் பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம வடிவான தன்மாத்திரைகளின் .அதிஷ்டான தேவதையாகிய பகவானைக் குறிக்கிறது.

வைஜயந்தீ மாலை என்பது பகவானின் மாயையேயாகும். அதை மாலையாக அணிந்தவன் என்றால் மாயையை தரித்து மனித உருவில் வந்தவன் என்று பொருள். அதாவது கிருஷ்ணர் பரப்ரம்மமே என்பதை இது காட்டுகிறது.

.219. வாசஸ்பதி: -வாக்குகளின் அதிபதி. அந்தர்யாமியாக இருந்து வாக்கை வெளிப்படுத்துவதால். மத்ஸ்யாவதாரத்தில் பிரம்மாவுக்கு வேதத்தை கற்பித்ததால் வாசஸ்பதி. எல்லா சொற்களின் அர்த்தமும் பிரம்மத்திடமே சென்று முடிகின்றன என்று ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் கூறுகிறார். 
220 . உதாரதீ: -சர்வக்ஞத்வத்தைக் குறிப்பது. ஞானச்வரூபன்.,


No comments:

Post a Comment