விஷ்ணுஸஹஸ்ர நாமம் -17
144. ப்ராஜிஷ்ணு: - ப்ராஜத இதி ப்ராஜிஷ்ணு:- ஒளி வடிவமானவர்
145. போஜனம் – போஜனம் அல்லது உணவு உடலை ரக்ஷிக்கிறது. பகவானுக்கு இந்த ப்ரபஞ்சமே உடல் அதற்கு அவன் ஆத்மாவாக இருக்கிறான். ஆதலால் அவன் போஜனம் எனப்படுகிறான்.
பக்தர்களால் உணவு போல சுகமாக அனுபவிக்கப்படுகிறவர். 'உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் ,'என்று நம்மாழ்வார் கூறியபடி.
அனுபவிக்கப்படும் பிரகிருதி வடிவானவர் என்பது சங்கர பாஷ்யம்.,
146. போக்தா-புருஷரூபேண தாம் ப்ரக்ருதிம் புங்க்தே-பிரகிருதியும் அவனே அதை அனுபவிக்கும் புருஷனும் அவனே என்பது சங்கர பாஷ்யம். 'அத்தா சராசர க்ரஹணாத்' என்பது பிரம்ம சூத்ரம் உலகத்தை சிருஷ்டித்து அதன் ரக்ஷகனாக இருந்து கடைசியில் அதை உண்கிறான்.
கீதையில் கண்ணன் சொல்கிறான் 'பர்தா போக்தா மகேஸ்வர:' ( ப. கீ 13.22)
பக்தர்கள் நிவேதனம் செய்யும் பதார்த்தங்களை அம்ருதம் போல் ஏற்று உண்பவர் என்பது பராசர பாஷ்யம்.
147. ஸஹிஷ்ணு:-ஸஹனசீல:- எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்பவர். எல்லாமே அவருடைய சிருஷ்டி ஆனதால் தன் குழந்தைகளின் தவறுகளை பொறுக்கிறார். சிசுபாலனின் நூறு குற்றங்களைப் பொறுத்தார். ஹிரன்யகசிபுவைக் கூட கடைசிவரை பொறுத்தார். ராவணனிடம் தூது அனுப்பிப் பார்த்தார். சரண் அடைந்தவர் எவராயினும் அவர் என்ன குற்றம்ம் செய்திருந்தாலும் காப்பேன் அது ராவணனாகவே இருந்தாலும் 'யதி வா ராவணஸ்ஸ்வயம் ' என்று சொல்லவில்லையா?
148.ஜகதாதிஜ:-ஜகத: ஆதௌ ஜாயத இதி . ஜகத் என்றால் உலகம் கச்சதி இதி ஜகத் அதாவது மாறிக்கொண்டே இருப்பது , உலகம். உலகம் உண்டாவதற்கு முன் அதனுடைய ஆதி காரணமாக உள்ளவர்.
'சாந்தோக்ய உபநிஷத்திலும் பிரபலமான தத் தவம் அஸி வாக்கியம் காணப்படும் பகுதியில், 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்' என்று தொடங்கி 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய,' என்று காண்கிறோம். இதற்குப் பொருள் பிரம்மம் மட்டுமே ஆதியில் இருந்தது. அது பலவாறாக ஆக சங்கல்பித்தது என்பது.
'பூர்வோ யோ தேவேப்யோ ஜாத:;, புருஷசூக்தம்
நிர்குண பிரம்மனிடம் இருந்து ஹிரண்ய கர்பன் அதாவது ஸகுணப்ரம்மன் . இது பிரம்மமே . அதுதான் இங்கு ஜகதாதிஜ என்று கூறப்படுகிறது.
149..அனக: -அகம் ந வித்யதே இதி அனக: . அகம் என்றால் தோஷம் அல்லது குறை. குறையொன்றும் இல்லாதவன் ஆதலால் அனக: எனப்படுகிறான்.
150.. விஜய: - விசேஷேண ஜயதி இதி. அனைத்தையும் ஜெயிப்பவர்.
151. ஜேதா-எல்லாவற்றையும் வெற்றி கொள்பவர். நல்லவரை அருளினாலும் மற்றவரை தண்டிப்பதாலும். மாற்றாரை மாற்றழிப்பவன்.
152. விச்வயோனி: - விச்வஸ்ய யோனி: விச்வம் அதாவது எல்லாமே அவனுடைய யோனியில் உதித்தது. அல்லது விச்வம் ச யோனி: ச – உலகமும் அதன் காரணமும் அவனே
153. புனர்வஸு: - புன: புன: சரீரேஷு வஸதி. ஸ்ருஷ்டிக்குப் பிறகு மறுபடியும் அவைகளின் உள் புகுந்து அவைகளின் ஆத்மா ஆனவர். 'அனேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி '- 'இவைகளின் உட்புகுந்து உருவம் பெயர் முதலியன செய்வேன்.' என்பது உபநிஷத் வாக்கியம்.
No comments:
Post a Comment