பெரியவர்
ஒவ்வொரு புகழ் வாய்ந்த பெரிய கோவிலின் அருகிலேயோ எதிரிலேயோ, ஆஸ்திகர்களின் மனம் புண்படும்படியான வாசகங்களைக் கண்டிருப்பீர்கள். காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்தின் எதிரிலும் உண்டு.
ஒரு முறை மஹாபெரியவர் காமாட்சி அம்மன் கோவில் குளத்தில் ஸ்நானம் செய்யப் போனார்.
அப்போது அங்கே கடவுள் மறுப்பாளர்கள் எதிர்மறை வாசகங்களைத் தாங்கிய பதாகைகளைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். பெரியவருடன் வந்தவர்கள், அவ்வாசகங்களைக் கண்டால் பெரியவர் மனம் புண்படுமே என்று பதைபதைத்துப்போனார்கள். அவை பெரியவர் கண்களில் பட்டுவிடாத வண்ணம் மறைத்துக்கொண்டார்கள்.
ஆனால், பெரியவர் கண்ணுக்குத் தப்பாமல் ஒரு விஷயம் நடந்துவிடமுடியுமா என்ன?
ஸ்நான ஸங்கல்பம் துவங்கும் முன் ஒருவரை அழைத்து, கடவுள் மறுப்பாளர் கூட்டத்தில் பொறுப்பாளரைப் போய் பார்த்து, அவர்கள் வேறெங்காவது ப்ரசாரம் செய்யாமல், நாம் இருக்கும் இடத்தைத் தேடி வந்து எதற்காகச் செய்கிறார்கள் எனறு கேட்டுக்கொண்டு வா என்று அனுப்பினார்.
அவருக்கு விருப்பமில்லை என்றாலும் பெரியவா வார்த்தைக்காகப் போனார்.
கடவுள் மறுப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா?
பெரியவர் மேல நிறைய மரியாதை உண்டுங்க. ஆனா, இந்த பேனரையெல்லாம் மத்த இடத்தில் பிடிச்சு என்ன ப்ரயோசனம். கோவில் எதிர, பெரியவர் எதிரன்னு பிடிச்சு அதை படம் பிடிச்சு காமிச்சாதான், இவ்வளோ பேர் கூடுன இடத்துல நாம ப்ரசாரம் செய்தோம்னு எங்களுக்கு மேலிடத்திலேர்ந்து ஏதாவது பணம் வரும். மேற்கொண்டு பிழைப்பை பாக்கணுமே. இருந்தாலும் பெரியவர் மனம் வருத்தப்படும்னா நாங்க வேற இடத்துக்குப் போறோம் என்றார்.
அவர் அப்படியே போய் பெரியவரிடம் சொன்னார்.
பெரியவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,
நாம ஒன்னுமே பண்ணாம, நம்ம எதிர நின்னாலே அவாளுக்கு வயத்துப் பொழப்புக்கு ஆகும்னா அதை நாம ஏன் தடுக்கணும்? இனிமே நாம எங்க போனாலும் அவாளை வந்து பேனர் பிடிக்கச்சொல்லு. அம்பாள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமா படியளக்கறா. அவாளுக்கும் குடும்பம் இருக்கே.
என்றார்.
பெரியவர் பெரியவர்தான்.
No comments:
Post a Comment