விஷ்ணு ஸஹஸ்ரநாமம் -16
136. லோகாத்யக்ஷ: -லோகான் அத்யச்னுதே , வ்யாப்நோதி இதி லோகாத்யஷ;. எல்லா உலகங்களையும் வ்யாபித்தவர். அத்யக்ஷ என்ற பதம் அதிபதி என்பதையும் குறிக்கிறது . சர்வலோகங்களுக்கும் அதிபதி.
137.ஸுராத்யக்ஷ:- தேவர்களுக்கு அதிபதி.
138.தர்மாத்யக்ஷ: -தர்மாதர்மங்களை நேராகக் காண்பவர். 'ஆசாரப்ரபவோ தர்ம: தர்மஸ்ய பிரபுரச்யுத,'என்றபடி.
தர்மங்களை வேதத்தின் மூலம் அறியலாம் தேவர்கள் தர்மத்திற்கு அதிஷ்டான தேவதைகள். தர்மத்துக்கும் தேவர்களுக்கும் அதன்மூலம் லோகத்துக்கும் அத்யக்ஷர் என இந்த மூன்று நாமங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
139.க்ருதாக்ருத:-செய்தவை செய்யப்போகுபவை எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர். செய்தவை என்பது சஞ்சித கர்மா. செய்யப்போகுபவை ஆகாம்ய கர்மா. பிராரப்த கர்மா என்பது இந்த ஜன்மத்தில் பலன் கொடுக்கத் தொடங்கியவையாகும். பகவானிடம் சரணம் அடைந்து விட்டால் சஞ்சித கர்மா நசிக்கும். ஆகாம்ய கர்மா நல்லதாகவே இருக்கும். எல்லா செயல்களையும் பகவதர்ப்பணமாக செய்யும்போது அந்த கர்மா மீண்டும் பிறவியைக் கொடுக்காது. ஆதலால் ஆகாம்ய கர்மாவும் இல்லை என்றாகிவிடும். எல்லா கர்ம பலன்களையும் கொடுப்பவர் ஆதலால் க்ருதாக்ருத் ஆகிறார்.
க்ருதஸ்ச கார்யரூபேண அக்ருதஸ்ச காரணரூபேண , கார்யமாகவும் காரணமாகவும் இருப்பவர் என்பது சங்கரரின் வியாக்யானம்.
அநித்திய பலன்களைத் தரும் பிரவ்ருத்தி தர்மமாகவும் நித்தியா பலனான் மோக்ஷத்தைத் தரும் நிவ்ருத்தி தர்மமாகவும் இருக்கிறார் என்பது பராசரபாஷ்யம். அதாவது இரண்டு பலன்களையும் தருவதால் க்ருதாக்ருத் ஆகிறார்.
140. சதுராத்மா- பரமாத்மா, பிரம்ம விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் என்று நான்கு மூர்த்திகளை உடையவர் .
நான்கு நிலைகளான ஜாக்ரத், விழிப்பு, ஸ்வப்ன, கனவு, சுஷுப்தி, ஆழ்ந்த தூக்கம், துரீயம், தன்னை உணர்ந்த நிலை இவை எல்லாமே அவனுடைய இயக்கத்தில்தான் உள்ளன.
மேலும் நான்கு வகை ஸ்ருஷ்டிகளான உத்பிஜ்ஜ, விதையில் இருந்து தோன்றிய தாவரங்கள், ஸ்வேதஜ, -ஈரம் , வியர்வை இவற்றிலிருந்து தோன்றிய புழு பூச்சிகள்,அண்டஜ , முட்டையிலிருந்து உண்டான பறவை இனம் ,ஜராயுஜ, கர்பத்தில் இருந்து பிறந்த மனிதர்கள் பிராணிகள் இவ்வாறான நான்கு வகை உயிர்களுக்கும் ஆத்மாவானவர்.
141.சதுர்வ்யூஹ:- வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன் அநிருத்தன் என்ற நான்கு வியூஹ ரூபமானவர்.
142.சதுர்தம்ஷ்ட்ர;--நான்கு கோரைப்பற்களை உடையவர். இது நரசிம்மரைக் குறிகிறது என்பது சங்கர பாஷ்யம். ஹனுமான் ராமனை சீதையிடம் சதுர்தம்ஷ்டிர என்று வர்ணிக்கிறார் . இது எல்லோருக்கும் உள்ள கோரைப்பற்கள் எனப்படும் நான்கு, மேல் வரிசையில் இரண்டு கீழ் வரிசையில் இரண்டு பற்களாகும். இவை நன்கு அமைந்திருப்பது சாமுத்ரிகாலக்ஷணம்
அர்ஜுனன் விஸ்வரூப தரிசனத்தின் போது பகவானை வர்ணிக்கிறான் 'தம்ஷ்ட்ராகராளானி ச தே முகானி,' என்று, இது சம்ஹார மூர்த்தி ஸ்வரூபம்.
{ கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் வாயின் இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை கிழிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருள் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.}விக்கிபீடியா
143.சதுர்புஜ: - நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்ரம் கதை, தாமரை தாங்கிய கரங்கள். இது சர்வவ்யாபக ரூபத்தைக குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். நான்கு கரங்கள் என்பது திசைகள்.
பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு நம்மைக் கூப்பிடுகிறது, என்னிடம் வா என்று. அதை கவனிக்காமல் உலக இச்சைகளில் ஆழ்ந்து இருக்கும்போது சிறிய கஷ்டங்களைக் கொடுப்பதன் மூலம் கதை மெதுவாக அடித்து திருத்துகிறது. அதையும் பொருட்படுத்தாமல் பாபம் செய்வோரை சக்கரம் தண்டிக்கிறது. அவனிடம் சேர்ந்தவர்களின் நிலையைக் காட்டுவது தாமரை.
No comments:
Post a Comment