Friday, March 29, 2019

Dharmavyadas teachings in Tamil

180. ஐம்பூதங்களின் குணங்கள்
=============================
தர்மவியாதரின் தர்மோபதேசங்கள் தொடர்ந்துகொண்டிருந்தது. வாசல் திண்ணையில் அவரது பேச்சைக் கேட்டு அக்கம்பக்கம் கூட்டம் திரண்டது. ஏற்கனவே அவர் மீது மதிப்பும் மரியாதையும் மிக்கவர்கள் அறம் ஒழுகும் அவரது பேச்சில் கட்டுண்டு கிடந்தார்கள். கௌசிகன் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். 

"முன் ஜென்மத்தில் செய்த வினைகளின் பயனே இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கிறோம். எந்தப் பிராணிக்கும் சரீரம் சாஸ்வதமில்லை. சரீரம் மரிக்கும் போது அந்த சரீரத்துக்கு மாத்திரம் நாசம் உண்டாகிறது. அந்த நாசமடைந்த சரீரத்தில் இருந்த ஜீவன் இன்னொரு சரீரம் எடுக்கிறது. அந்த இன்னொரு சரீரம் அவனது கர்மபந்தத்தினால் ஏற்படுகிறது"

கௌசிகனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

"தர்மத்தை அறிந்தவரே!  ஜீவன் எவ்விதம் சாஸ்வதமாகிறது? நான் அறிய விரும்புகிறேன்" கைக் கூப்பினான். 

"தேகம் அழிந்து போய்விடும். அதன் இயல்பு. ஜீவன் வேறு சரீரத்துக்குச் செல்வதே மரணம் எனப்படுகிறது. இம்மானிட உலகத்தில் ஒருவன் செய்த வினைப்பயனை இன்னொருவன் அடைவதில்லை. நல்லவர்கள் நல்வினைகள் செய்கிறார்கள். அதமர்கள் தீவினைகளில் ஈடுபடுகிறார்கள். செய்த வினைகள் ஒவ்வொருவனையும் துரத்துகிறது."

"இதில் ஜீவன் எவ்விதம் பிறப்பை அடைகிறது? நற்பிறப்பு இழிபிறப்பு எப்படி ஏற்படுகிறது?"

தர்மத்தின் வாயிலாக ஞானத்தில் திளைத்திருந்தான் கௌசிகன். அதனால் அவன் கேட்கும் கேள்விகளின் தன்மை நேரமாக நேரமாக உயரிய நிலையை அடைந்திருந்தது. தர்மவியாதர் மனசுக்குள் சந்தோஷப்பட்டார். 

"கர்ப்பத்தில் ஒரு ஜீவன் இருக்கும்போதே கர்மா சேர்ந்துவிடுகிறது. நல்வினை செய்தவன் நற்பிறப்பாகவும் தீவினை செய்தவன் தீயபிறப்பாகவும் பிறக்கிறார்கள். நல்வினைகள் மட்டுமே செய்தவன் தேவனாகிவிடுகிறான். நன்மையும் தீமையும் சேர்ந்து செய்தவர்கள் மனிதன் ஆகிறார்கள். தீவினை மட்டுமே செய்தவன் விலங்காகப் பிறக்கிறான். பாவம் செய்து பிறப்பெய்துபவன் புண்ணியம் செய்ய முயற்சி செய்யவேண்டும். பல பிறப்புகளில் செய்த புண்ணியங்களின் பலனாக தீய பிறப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு நற்பிறப்பு அடைகிறான்"

கௌசிகனின் முகம் தெளிவாயிற்று. தர்மபாடம் மிகவும் அற்புதமாக வியாதரால் உரைக்கப்பட்டது. அடுத்த கேள்விக்குள் போனான் கௌசிகன். 

"உத்தமரே! இந்திரியங்கள் என்று சொல்லப்படுபவை எவை? அதை அடக்குவது என்பது யாது?"

தர்மவியாதர் இதற்கு மிக அழகான விளக்கத்தைக் கொடுக்க எண்ணி ஒரு மிடறு நீர் அருந்திவிட்டு ஆரம்பித்தார்.

"பிராம்மணனே! நம் மனமானது முதலில் எதையும் அறிந்துகொள்வதற்காக பல விஷயங்களுக்குள் செல்கிறது. விஷயஞானத்தினால் காமம் கோபம் ஆகியவை உண்டாகின்றன. அந்த விஷயங்களின் அனுபவத்திற்காக அதனுள் செல்கிறான். ரூபங்கள் கந்தங்கள் என்று அதையெல்லாம் கற்கத் தொடங்குகிறான். அதை அப்யசித்தவுடன் அதன் மேல் விருப்பம் ஏற்படுகிறது. பின்னர் சில நாள்களில் வெறுப்பு உண்டாகிறது. அதைத் தொடர்ந்து லோபமும் மோகமும் ஏற்பட்டு விருப்பு வெறுப்புகளால் கவரப்பட்டுவிடுகிறான். அப்படி விருப்புவெறுப்புகளால் கவரப்பட்டவனின் புத்தி தர்மத்தில் செல்வதில்லை.  கபடவேடதாரியாகிவிடுகிறான். கபடத்தினால் பொருள்களை அடைகிறான். கபடத்தினால் பொருள்களை அடையும் போது அந்தப் பொருள்களிலேயே புத்தியானது மகிழ்கிறது."

கபடம் வரைக்கும் மனிதன் வந்த பாதையை தெளிவாகச் சொன்ன தர்மவியாதருக்கு நமஸ்கராம் செய்தான் கௌசிகன். அவர் மேலும் தொடர்ந்தார். 

"இப்படி கபடியாகப் போனவனை நண்பர்களும் பண்டிதர்களும் தடுக்கிறார்கள். ஆனால் அவன் பாவம் செய்யவே விரும்பு வேதத்தில் இல்லாததையெல்லாம் அதில் கூறியிருப்பதாக சமாதானம் சொல்லி அச்செயல்களில் இறங்குகிறான். நற்குணங்கள் நாசமடைந்து பாவிகளுடன் சேர்ந்துவிடுகிறான். ஆனால் எவனொருவன் சுகதுக்கங்களை சமமாகப் பாவித்து சாதுசங்கத்தை அடைந்து பூஜிப்பானோ அவன் நல்ல காரியங்களில் மனதைச் செலுத்தி தர்மவழியில் நிற்கிறான்"

கௌசிகன் கண்களில் நீர் மல்க எழுந்து நின்றான். வாசல் திண்ணையில் கூட்டம் இருந்தது. வாழ்வில் பல அடுக்குகளில் இருந்த மனிதர்களின் தலை தென்பட்டது. கைக்கூப்பியபடியே தர்மவியாதருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். 

"வியாதரே!  இவ்வளவு தர்மங்களை எடுத்துச் சொல்லும் நீர் ரிஷியென்று நினைக்கிறேன். அப்படி நீர் ரிஷியில்லை என்று சொன்னாலும் நான் உம்மை அவ்விதமே பாவிக்கிறேன்"

அவனைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினார் தர்ம்வியாதர். 

"பிராம்மணனே! இவ்வுலகமனைத்தும் ஐம்பூதங்களின் ஸ்வரூபமாக இருக்கிறது. ஆகாயம், காற்று, தீ. ஜலம், பூமி ஆகிய ஐம்பூதங்கள். சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரசம், கந்தம் ஆகியவை அவைகளின் குணங்கள். இதில் ஆறாவதான சேதனை என்பது மனம். புத்தி ஏழாவது. அதற்கு மேல் அகங்காரம். ஐந்து இந்திரியங்கள், ஜீவாத்மா, ரஜோகுணம், ஸத்வ குணம், தமோகுணம் இவ்வாறாக பதினேழு அவயங்களோடு கூடின இந்தக் கூட்டம் அவ்யக்தம் என்ற பெயருள்ளது. வேறு எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?"

"ப்ரபோ!  ஐம்பூதங்கள் பற்றியும் ஐங்குணங்கள் பற்றியும் சொன்னீர்கள். ஐந்து பூதங்களின் குணங்களைப் பற்றிச் சொல்வீர்களா?"

"பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம் ஆகிய எல்லாம் குணங்களினால் ஆனவை. பூமிக்கு ஐந்து குணங்கள். ஜலத்திற்கு நான்கு, அக்னியில் மூன்று, காற்றில் இரண்டும் ஆகாசத்தில் ஒரு குணமும் இருக்கிறது. சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய இவை ஐந்தும் பூமியின் குணங்கள். சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரஸம் ஆகிய நான்கும் ஜலத்தின் குணங்கள். சப்தம், ஸ்பர்ஸம், ரூபம் இவை அக்னியின் குணங்கள். சப்தம், ஸ்பர்சம் இவையிரண்டும் வாயுவின் குணங்கள். ஆகாசத்தில் சப்தம் மட்டுமே இருக்கிறது. இந்த பதினைந்து குணங்களும் எல்லா பூதங்களுக்கும் இருக்கின்றன. இவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருப்பதால்தான் பிரகாசிக்கின்றன."

"இவையெல்லாம் இந்திரியங்களால் அறியப்படுபவைதானே"

"அற்புதமான கேள்வி! இந்திரியங்களுக்குப் புலப்படுபவை வ்யக்தம் என்பது. இந்திரியங்களுக்குப் புலப்படாமல் அனுமானத்தால் அறியப்படுபவை அவ்யக்தம் எனப்படும். சப்தம் உள்ளிட்ட குணங்களை இந்திரியங்கள் தங்கள் சக்திக்கேற்ப கிரகித்துக்கொள்கின்றன. ஜீவன் தேகத்தை எடுத்துக்கொண்டு இத்தகைய இந்திரியங்களினால் ஜனன மரணச் சுழலில் மாட்டிக்கொள்கிறான். இவ்வுலக வாசம் பயனற்றதென்று இந்திரியங்களை நிக்ரகம் செய்த யோகிகளுக்கு கைகூடுகிறது. பிரம்மமே சிறந்ததாகக் கொள்கிறார்கள். இவையனைத்தும் தவத்தால் கைகூடுகிறது. இந்திரியங்களை அடக்கிக்கொள்கிறவனுக்கு தவம் கைகூடுகிறது. ஸ்வர்க்கம் நரகம் இரண்டும் இந்திரியங்களையே சார்ந்திருக்கிறது. அடக்கினால் ஸ்வர்க்கம். இல்லையேல் நரகம்"

"யாரால் ஸ்வர்க்கம் அடையமுடியும்?"

"ஜிதேந்திரியன் ஆறு இந்திரியங்களையும் அடக்கி ஸ்வர்க்கம் ஏகுகிறான். சரீரம் என்னும் தேரில் பூட்டப்பட்ட ஆறு இந்திரியங்களையும் அடக்கி ஆள்பவன் உத்தமனாகிறான்"

"இதை இன்னும் தெளிவாக நான் புரிந்துகொள்ளும்படி சொல்லுங்களேன்"

விஷயம் அறிந்துகொள்வதில் கெஞ்சினான் கௌசிகன். 

"ஓடம் ஜலத்தில் மிதக்கிறது. அப்போது காற்று அடித்தால் ஜலத்தில் ஓடம் அடித்துச்செல்லப்படுகிறது. இந்திரியங்களை அடக்காத மனம் அந்த ஓடத்தைப் போல இந்திரியங்களால் இழுத்துச் செல்லப்படுகிறது. விஷயங்களில் பற்றில்லாமல் இருப்பவன் இதில் கரையேறுகிறான்"

"சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் விசேஷங்களை எனக்கு உரைப்பீராக" என்றான் கௌசிகன். 

தர்மவியாதருக்கு சந்தோஷம். தர்மம் சொல்லக் கேட்கும் ஆர்வம் கௌசிகனுக்குள் ஊற்றாய் பெருக்கெடுத்துவிட்டதே என்று உற்சாகத்துடன் ஆரம்பித்தார்.

"தமஸ் குணம் என்பது விபரீதமான குணம். தமோ குணமுள்ளவர்கள் அறியாமையும் மூடத்தனமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். கோபமுள்ளவனாக இருப்பான். சோம்பேறித்தனம் உடம்பில் ஊறியிருக்கும். எப்போதும் தூக்கம். அக்ஞானிகள். ரஜோ குணவான்கள் நன்நடத்தை உள்ளவர்களாகவும் இன்சொல்லுடையவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றிலும் லாபத்தையடைய முற்படுவார்கள். இறுமாப்பும் அகங்காரமும் அவர்களிடம் குடிகொண்டிருக்கும். சத்வ குணம் கொண்டவர்கள் ஜிதேந்திரியர்களாக இருப்பார்கள். நல்ல அறிவுள்ளவர்கள். கோபம் துளிக்கூட இல்லாதவன். சிறந்த புத்தியுள்ளவர்கள். மனம் வாக்கு செய்கை இவற்றில் கபடமில்லாமல் உள்ளும் புறமும் ஒத்திருப்பவனுக்கு ப்ராம்மண்யம் உண்டாகிறது"

பின்னர் பிராம்மணன் முக்கியமான இரு கேள்விகளைக் கேட்டான்.

"சரீரத்தில் அக்னியானது எப்படி இருக்கும்? காற்று ஸ்தான விசேஷங்களை அடைவதால் எப்படி பிராணிகளை உயிரோடு இருக்கச் செய்கிறது?"

தர்மவியாதர் பதிலளிக்க தயாரானார்.

 [நாம் அடுத்தபகுதியில் வாசிக்கத் தயாராவோம். :-) ] 

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#மார்க்கண்டேயர்
#கௌசிகன்
#தர்மவியாதர்
#ஐம்பூதங்கள்
#வியாத_கீதை
#மார்க்கண்டேயஸமாஸ்யா_பர்வம்
#வன_பர்வம்
#பகுதி_180

No comments:

Post a Comment