ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்7- அத்தியாயம் 15
நாரதர் மேலும் க்ரஹஸ்தனின் தர்மங்களைப் பற்றிக் கூறுகிறார்.
தருமம் அறிந்தவன் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்தவனாக விதிவசமாய் கிடைத்த காய் கனி தானியம் முதலியவற்றால் நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்ய வேண்டும்
.காலில் செருப்பணிந்தவர்க்கு கல்லிலும் முள்ளிலும் கூட துன்பம் ஏற்படாததைப் போல் எப்போதும் சந்தோஷம் கொண்ட மனதிற்கு எல்லாம் இன்பமயமாகவே இருக்கிறது. போதும் என்ற மனமுடையவன் ஜலத்தைக் கொண்டு கூட ஜீவிப்பான்., விஷய சுகத்தில் ஆசை கொண்டவர்கள் நாய் போல ஜீவிக்கின்றனர்
மனிதனின் ஆறு உட்பகைகளுள் காமம், குரோதம், லோபம் இவையே பயங்கரமானவை. மீதி மூன்றான மோஹம், மதம், மாத்சர்யம் இவை பின்விளைவுகள். பசி வந்தபோது மற்ற ஆசைகள் அகல்கின்றன. கோபம் வந்த போது பயத்தினால் அது போய் விடும். ஆனால் லோபம் அல்லது பேராசை எவ்வளவு இருந்தாலும் அகல்வதில்லை.மேலும் மேலும் வேண்டும் என்று நினைக்கத் தூண்டுகிறது.
ஆசையை மனத்திடம் கொண்டு வெல்லலாம். அப்போது கோபம், பேராசை இவை அகலும். பேராசை இலையெனில் மாத்சர்யம் அல்லது பொறாமை இருக்காது. மோஹம் அல்லது மயக்கம் , இந்த உலகமே உண்மை என்ற அக்ஞாநத்தினால் வருவது. அது ஞானத்தினால் அகல்கிறது. மகான்களை சேவிப்பதால் மதம் அழிகிறது.
பிராணிகளிடம் இருந்து ஏற்படும் துக்கத்தை கருணையாலும், விதிவசமாக ஏற்படும் துக்கத்தை த்யானத்தினாலும், உடலினாலும் உள்ளத்தாலும் ஏற்படும் துக்கத்தை யோகத்தினாலும் ஜெயிக்க வேண்டும்.ஸத்வத்தினால் ரஜசையும் தமசையும் வென்று, பின்னர் வைராக்யத்தினால் சத்வத்தையும் ஜெயிக்கவேண்டும்.
அக்ஞாநத்தினால் வஸ்துபேத புத்தி, எல்லாவற்றிலும் பேதம் காண்பது, க்ரியாபேத புத்தி , செயல்களிடையே பேதம் காண்பது, பலபேத புத்தி, பலன்களுக்குள் பேதம் காண்பது, என்ற கனவை ஒத்த மனோபாவங்கள் உண்டாகின்றன. இவை பாவாத்வைதம் , க்ரியாத்வைதம், த்ரவ்யாத்வைதம் என்ற ஞானத்தினால் அகலும்.
பாவாத்வைதம் என்பது காரண காரியங்களிடையே ஒற்றுமை காண்பது, நெய்பவனுக்கு நூலும் துணியும் ஒன்று. பொற்கொல்லனுக்கு பொன்னும் ஆபரணமும் ஒன்று. குயவனுக்கு மண்ணும் பானையும் ஒன்று,இந்த மனோநிலை வருமானால் வஸ்துபேத புத்தி அகலும்.
க்ரியாத்வைதம் என்பது எல்லா செயல்களையும் பகவதர்ப்பணமாக செய்வது. இது, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப் போக்கி செயல்களில் பேதபுத்தியைப் போக்குகிறது.
த்ரவ்யாத்வைதம் என்பது பலனில் பற்றில்லாமை. இது பலபேத புத்தியைப் போக்கும்.
இவ்வாறு பற்றின்றி பக்தியுடன் செயலாற்றும் ஒரு க்ருஹஸ்தன் இல்லறத்தில் இருப்பினும் பகவானை அடைவான்.
நாரதர் மேலும் கூறியது.
" தேவரிஷியாகிய நான் இரண்டு ஜென்மங்களுக்கு முன் உபபர்ஹணன் என்ற கந்தர்வனாக இருந்தேன். ஒரு சமயம் ஸ்திரீகள் சூழ சாதுக்களின் முன் சென்று மரியாதைக் குறைவாக நடந்துகொண்டேன். அததன் பயனாக ஒரு பணிப்பெண்ணின் மகனாகப் பிறந்து சாதுக்களுக்குப் பணிவிடை செய்து அவர்கள் அனுக்ரஹத்தால் ப்ரம்மபுத்திரனாக ஆனேன்.
ஆகவே சாதுக்களை அவமதித்தால் வீழ்ச்சி, அவர்களை ஆச்ரயித்தால் ஏற்றம் என்று உணரவேண்டும்."
இவ்வாறு கூறிவிட்டு யுதிஷ்டிரரால் பூஜிக்கப் பட்ட நாரதர் அவரிடம் விடை பெற்றுப் புறப்பட்டார். யுதிஷ்டிரர் கிருஷ்ணனே பரப்ரம்மம் என்பதைக் கேட்டு ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார்,.
ஏழாவது ஸ்கந்தம் முடிவுற்றது.
No comments:
Post a Comment