ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 7- அத்தியாயம் 1௦
பிரஹ்லாதன் கூறினான்.
எவன் உம்மிடம் ஆசைகளை பூர்த்திசெய்ய விரும்புகிறானோ அவன் பக்தனல்லன். அது வியாபாரமே ஆகும். நான் ஆசை அற்றவன் .உமது பக்தன். எனக்கு வரம் தர நீங்கள் இச்சித்தால், ஆசைகள் என் உள்ளத்தில் தோன்றாமல் இருக்க வரம் தருவீராக.
பரப்ரம்மமும் பரமாத்மாவும் அற்புத சிங்க வடிவில தோன்றிய ஹரியும் ஆன உமக்கு நமஸ்காரம்."
இவ்வாறு கூறிய ப்ரஹ்லாதனைப் பார்த்து பகவான் கூறினார்.
போகத்தால் புண்ணியத்தை அனுபவித்து, நற்செயலால் பாவத்தைப் போக்கி , கால வசத்தால் உடலைக் களைந்து , தளைகளில் இருந்து விடுபட்டவனாய் என்னை வந்தடைவாய். குலத்தை புனிதமாக்கும் நீ இந்த வீட்டில் பிறந்ததாலேயே உனது பிதா மூவேழு தலைமுறை பித்ருக்களுடன் புனிதமாகி விட்டார். "
பிறகு பகவான் பிரம்மாவை நோக்கி அசுரர்களுக்கு இவ்வண்ணம் வரங்களைக் கொடுத்தல் கூடாது , அது பாம்புகளுக்கு அமிர்தம் அளிப்பதை ஒக்கும் என்று கூறினார்.
அவ்விதம் கூறிவிட்டு ஹரியானவர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து விட்டார்.
பின்னர் பிரம்மா சுக்ராசாரியாருடன் கூடி ப்ரஹலாதனை தைத்யர்களுக்கும் தானவருக்கும் அரசனாக்கினார்.
ப்ரஹ்லாத சரித்திரத்தை யுதிஷ்டிரருக்கு எடுத்து இயம்பிய நாரதர் மேலும் கூறியது,
"பகவானுடைய இந்த நரசிம்மவதார லீலையை எவன் பக்தி சிரத்தையுடன் படிக்கிறானோ, அசுரகுமாரனாயினும் சாதுக்களை சிறந்தவனாக விளங்கிய ப்ரஹ்லாதனின் புண்ணிய வரலாற்றையும் கேட்கின்றானோ அவன் பயமேதுமில்லாத பரமபதத்தை அடைகிறான்.
பரப்ரும்மமே கிருஷ்ண வடிவில் உங்களுக்கு நன்மை செய்து உங்களுடன் உறவாடுவது நீங்கள் செய்த பாக்கியம். உங்களுக்கு நண்பனாகவும் தேரோட்டியாகவும் தூதனாகவும் உதவி செய்தாரே ! நீங்கள் ப்ரஹ்லாதனைக் காட்டிலும் பாக்கியசாலிகள். ஏனென்றால் நரசிம்ஹாவதாரம் நிகழ்ந்தது சில மணித்துளிகளே. ஆனால் கண்ணன் வாழ்நாள் பூராவும் உங்களுடன் இருந்தான் அல்லவா!"
இவ்வாறு கூறிய நாரதர் யுதிஷ்டிரருக்கு திரிபுர சம்ஹாரத்தில் எவ்வாறு விஷ்ணுவானவர் சிவனுக்கு உதவி செய்தார் என்பதையும் கூறினார்.
தேவர்கள் அசுரர்களை வென்றபோது அசுரர்கள் மாயையில் வல்ல மயனிடம் சென்று உதவும்படி கேட்க அவன் பொன், வெள்ளி , இரும்பு இவைகளால் ஆன மூன்று கோட்டைகளை ஸ்ருஷ்டி செய்தான். அவைகளின் சஞ்சாரம், அமைப்பு , பாதுகாப்பு இவைகள் ஒருவருக்கும் புலப்படாமல் இருந்தான். அவைகள் ஆகாய மார்கமாக சஞ்சாரம் செய்ய வல்லவையாக இருந்தன. அசுரத் தலைவர்கள் அதில் சஞ்சரித்து மூவுலகங்களையும் அழிக்கத் தொடங்கினர். ஆகவே எல்லோரும் சிவபெருமானைச் சரன் அடைந்தனர்.
அவர் முப்புரத்தை அழித்த போது மயன் அதில் உள்ளவர்களை எடுத்து அமுதம் நிரம்பிய கிணற்றில் போட முயன்றபோது விஷ்ணு தன்னை ஓர் பசுவாகவும் ப்ரம்மாவைக் கன்றாகவும் செய்து அந்தக் கிணற்றில் இருந்த அமுதத்தைப் பருகி விட்டார். அசுரர்கள் அதைக்கண்டபோதும் பகவானுடைய மாயையால் செயலற்று இருந்தனர்.
சிவன் பகவானின் உதவியால் தர்மம் ஞானம் வைராக்கியம் தவம் வித்யா க்ரியா இவைகளை தேராகவும், சாரதியாகவும், வில்லாகவும், குதிரைகளாகவும், கொடியாகவும், அம்பாகவும், செய்துகொண்டு அபிஜித் முஹூர்த்தத்தில் அவர்களுடன் போரிட்டு திரிபுரத்தை எரித்தார்.,
த்ரிபுரசம்ஹாரத்தின் உள்ளர்த்தம் பின்வருமாறு.
முப்புரங்கள்- ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்கள். மூன்றும் அழிந்தால் முக்தி. கிணற்று அமிர்தம் என்பது தேகம் மனம் புத்தி இவைகளின் சக்தியாகும் .இவை துர்புத்திகளான அசுரர் வசம் ஆகாமல் பகவானுக்கு அர்ப்பணம் ஆகவேண்டும்.
தர்மமே நம்மைத் தாங்கும் ரதம். அது ஞானம் என்ற சாரதியால் நடத்தப்படவேண்டும். வைராக்கியம் என்ற வில்லை எப்போதும் நாணேற்றி வைக்க வேண்டும். தவம் என்பது மனத்தை அடக்குவது. இதுவே குதிரைகளாயின் ரதம் சரியான வழியில் செல்லும்.வித்யா அல்லது அறிவு என்பது கொடி. அதன்படி செயல் அல்லது க்ரியா என்பது சரியான இலக்கை நோக்கி விடப்படும் அம்பாகும்.
பின்னர் நாரதர் யுதிஷ்டிரருக்கு வர்ணாஸ்ராம தர்மங்களை விவரிக்கிறார் .
No comments:
Post a Comment