ஸ்ரீவைஷ்ணவமும் சோதிடமும் , குலதெய்வ வழிபாடும், ஏழு கடுக்காய் வைத்தியமும்.
(சோதிடர்கள் பலருடைய வாழ்க்கையில் குழப்பத்தை இன்றும் என்றும் விளைவித்து வருகின்றனர். சோதிடத்தை நம்பும் மக்கள் பெருகியுள்ளனர். உலகில் எந்த இரு பெண்களும் ஒத்த கருத்துடையோர்களாக அமைவதில்லை. உலகில் எந்த இரண்டு கடிகாரமும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை.
அதேபோல் உலகில் எந்த இரு சோதிடனும் ஒரே கருத்தைத் தெரிவிப்பதில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீமந் நாராயணனே "எம்மனா! என்குலதெய்வமே! (பெரியாழ்வார் திருமொழி 5-4-3) என்கிறார் பெரியாழ்வார்.
தாமஸ தேவதைகளைக் குலதெய்வம் என்று பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவர்கள் கொண்டுள்ளனர். இது ஸ்ரீவைஷ்ணவத்தையே வேர் அறுக்கும் செயலாகும். ஆனால் இன்று புற்றீசல்களைப்போல் தோன்றியுள்ள சோதிட இதழ்களும், ஊடகங்களில் அவ்வப்போது ஒளிபரப்பப்படும் சோதிடம் சார்ந்த நிகழ்ச்சிகளும், கேள்வி பதில்களும், நேரலை நிகழ்ச்சிகளும் கணக்கிலடங்கா.
எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மக்களிடம் வாயில் வந்ததைப் பிதற்றி சோதிடர்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். பாமர மக்களுக்கோ எது நல்லது எது கெட்டது என்ற அடிப்படை அறிவே கிடையாது. இதன் விளைவாக பரிஹாரம் என்ற பெயரில் இதர தேவதைகள் கோயில்களுக்குச் செல்வது, தாமஸ ராஜஸ முறைகளில் பூஜைகளை நடத்துவது போன்றவை இன்று ஸ்ரீவைஷ்ணவக் குடும்பங்களில் மலிந்து காணப்படுகின்றன.
இந்தக் குலதெய்வ வழிபாடும் போற்றுதலும். விவாஹ சுபமுஹூர்த்த பத்திரிகைகள் வரை காணப்படுகிறது. திருமண்காப்பு அதன்கீழ் ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத்வரவர முநயே நம: அதற்குப்பிறகு செல்லாயி அம்மன் துணை, காத்துக்கருப்பு துணை, ரத்தக்காட்டேரி துணை என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன.
"இதுகாண்மின் அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு* நீர்
எதுவானும்செய்து அங்கோர்கள்ளும்இறைச்சியும்தூவேன்மின் *
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால்
அதுவேஇவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே."
"மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு* நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென்பயன்?*
ஒருங்காகவேஉலகேழும் விழுங்கியுமிழ்ந்திட்ட*
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே."
(திருவாய்மொழி 4-6-3,4)
நம்மாழ்வார் வெறிவிலக்குத்துறையில் அருளிச்செய்த இப்பாடல்கள் பரிஹாரங்களை இகழ்கின்றன. நெற்றியில் திருமண் காப்பு அணிந்த எவனும் இதர தேவதைகள் காலில் விழக்கூடாது. நாளும் கோளும் நாரணன் அடியார்களை ஒன்றும் செய்யாது என்ற உறுதிப்பாடு குலைந்து விட்டது. ராகு, கேது வக்ரம், சனியின் பார்வை, குருவின் பார்வை இவையெல்லாம் சாதாரண மக்களுக்கே. பிரபன்னர்களுக்கு இது கிடையாது. இதுபற்றியே திருவரங்கம் பெரிய கோயிலில் ஆரியபட்டாள் வாயில் படியில் நவக்கிரஹங்களும், பன்னிரெண்டு ராசிகளும் பொறிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியாரும் அந்தப் படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ள நவகிரஹங்கள் மற்றும் ராசிகள்மேல் கால் வைத்துத்தான் செல்கின்றனர்.
காவலில்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து *
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *
மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம்கற்ற *
ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! (திருமாலை -1)
தொண்டரடிப்பொடியாழ்வார் யமன் தலைமீது நான் கால் வைப்பேன் என்று கூறத்தொடங்கினார். உமக்கு இப்படிப்பட்ட திண்மை எவ்வாறு ஏற்பட்டதென்று திருவரங்கன் வினவ, உமது திருநாமமாகிய 'அரங்கா' என்பதை நான் பலமுறைக் கூறுவதால் அடியேனுக்கு இந்தத்திண்மை ஏற்பட்டதென்று இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார். இதை வலியுறுத்தவே அதாவது யமனோ அல்லது மற்றைய கோள்களோ அரங்கனுடைய நாமத்தை உரக்கக் கூவியவனை அல்லல்படுத்துவதற்கு அச்சங் கொள்ளும் என்பதை வலியுறுத்தவே, ஆரிய பட்டாள் வாசலில் பன்னிரெண்டு ராசிகளும், நாழிகேட்டான் வாசலில் நவக்கிரஹங்களும் வாயிற்படியில் பொறிக் கப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க ஸ்ரீவைஷ்ணவர்கள் நவக்கிரஹங்களையும் ராசிகளையும் கண்டு அச்சங்கொள்ளத் தேவையில்லை.
ஆகவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமான் திருவடிகளைத் தொழுவதைத்தவிர வேறு எந்தப் பரிஹாரத்திலும் ஈடுபடக் கூடாது. திருவிருத்தம் 42ஆம் பாட்டில் பெரியவாச்சான்பிள்ளை "எருதுகெடுத் தார்க்கும் ஏழ்கடுக்காய் ஈனாப்பெண்டிர்க்கும் ஏழ்கடுக்காய்" என்றதொரு மரபுத்தொடரை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
இதன் பொருளாவது. "ஒரு ஊரிலே ஒருவன் தன் எருமை மாட்டை காணவில்லையென்றும், அதை அவர்கள் கண்டார்களா என்று பலரிடம் வினவிக் கொண்டே சென்றான். எதிர்பட்ட ஒருவனிடம் அவன், என் எருமையைக் கண்டாயா என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். இவன் நச்சரிப்பு தாங்காமல் ஏழு கடுக்காய்களைச் சாப்பிடு. உன் எருமைமாட்டை நீ கண்டுபிடித்து விடலாம் என்றான். அவனும் இதை உண்மையென நம்பி ஏழு கடுக்காய்களை அரைத்து சாப்பிட்டான். இதன் விளைவாக அவனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் குளக்கரையை நாடிச்சென்றான். அங்கே காணாமற்போன எருமை மாட்டைக் கண்டான். ஆகவே எருமை மாடு கிடைத்ததற்கு கடுக்காய் சாப்பிட்டது தான் காரணம் என்ற எண்ணம் அவன் மனதில் நிலைத்துவிட்டது.
அந்த ஊரிலிருந்த ஒரு பெண்ணிற்கு வெகுநாட்களாகக் குழந்தைப்பேறு ஏற்படவில்லை. அவள் வந்து இவனிடம் என்ன மருந்தை உட்கொண்டால் பிள்ளைப்பேறு கிட்டும் என்று கேட்டாள். தனக்கு ஏழு கடுக்காய்கள் சாப்பிட்டதனால் எருமைமாடு கிடைத்தாற்போல், அவளுக்கு பிள்ளைப்பேறு ஏற்பட வேண்டுமானால் ஏழு கடுக்காய்களை சாப்பிட வேண்டும் என்று சொன்னான். அவளும் அதை அப்படியே நம்பி ஏழு கடுக்காய்களை அரைத்துச் சாப்பிட்டாள். அவள் கர்ப்பப்பையில் பிள்ளைப்பேறு ஏற்படாமல் தடுத்துவந்த பூச்சிகள் கடுக்காய்களை சாப்பிட்டதால் அழிவுற்றன. அதன்விளைவாக அவளுக்குப் பிள்ளைப்பேறு கிட்டியது. அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு எருமை மாட்டைத் தொலைத்தவன் எந்த இடையூறோ அல்லது உடல் நலபாதிப்போ ஏற்பட்டால் அதற்கு ஒரே மருந்து ஏழு கடுக்காய்களைச் சாப்பிடுவதுதான் என்று கூறி வந்தான்.
இதைப்போலத்தான் பரிஹாரங்களும். பரிஹாரங்களைச் சொல்பவன் கடவுளின் அவதாரம் அல்ல. அப்படியவன் கடவுளின் அவதாரமாக இருக்கக் கூடுமானால் அவன் வீட்டில் நடந்தேறிய அல்லது எதிர்காலத்தில் நிகழக் கூடிய துன்ப நிகழ்ச்சிகளைத் தவிர்த்திருக்கலாமே/தவிர்த்திடலாமே. அகால மரணத்தை முன் கூட்டியே கணித்திருக்கலாமே. காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்தான் பரிஹாரங்கள். ஒருவருக்கு அது பலித்தது என்றால் அது அவருடைய நல்ல நேரத்தின் விளைவாகும். ஆனால் பரிஹாரம் செய்வதால் எல்லோருக்கும் எல்லாமே நடந்தேறிவிடும் என்று உபதேசிப்பது முட்டாள்தனம்.)
No comments:
Post a Comment