Thursday, February 7, 2019

Pazhani aandi

பழனியாண்டி J.K. SIVAN

இன்று தை கிருத்திகை. மார்கழி குளிர் இன்னும் விடவில்லை. எதிரே திருமால் மருகன் கோவில் மணி டாண் டாண் என்று அடிக்கவில்லை. மெஷினில் மணி, மேளம் சத்தம்... .கையால் கயிற்றை இழுத்து அடிக்கும் வெண்கலமணி நாதமே தனி சுகம்.

கார்த்திகேயன் முருகன். கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டு சரவணப்பொய்கையில் பிறந்த சரவணன். நெற்றிக்கண்ணின் தீப்பொறி ஆறு முகங்களான ஷண்முகன். நாம் பொறி உருண்டை வைத்து வணங்குவது தீபமேற்றுவது சுப்பிரமணியனை போற்றி.

திருவண்ணாமலை பற்றி, ரமணர் பற்றி, சேஷாத்திரி ஸ்வாமிகள் பற்றி எழுதுகிறேன், அங்கே தோன்றிய முருகன் என்றாலே நினைவுக்கு வரும் ஒரு மஹானைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டாமா ?

அருணகிரி நாதர் ஒரு அதிசயப் பிறவி. அசாத்திய திறமையோடு அவரிடமிருந்து பிறந்தது ஆறுமுகன் மேல் திருப்புகழ். என்ன சந்தம், என்ன தாளக் கட்டு, என்ன அர்த்தம். எத்தனை பொருட் செறிவு. அதன் ஊடே, இழையோடிருக்கும் இணையில்லா பக்தி. இன்னொருவருக்கு ஈடு இணை சொல்லமுடியாத தனி அலாதி காவிய கர்த்தா அருணகிரிநாதர். பெயரே அருணகிரி, அருணாசலம், அண்ணாமலை என்றும் அக்னிஸ்தலம் என்றும் போற்றப்படும் மஹா ஸ்தலம் கொடுத்த ஒரு புண்ய புருஷன். ஆரம்ப இளமை காலம் எப்படி இருந்தால் என்ன? திருந்திய பிறகு தவறு எங்கே இருக்கிறது? தமிழுக்குத் தொண்டு செய்ய இவன் ஒருவன் போதுமே என்று அந்த அண்ணாமலையான் சந்நிதியில் ஆறுமுகன் கண்டெடுத்த முத்து தான் '' முத்தைத் தரு பத்தி'' என்ற அருள் பாடலில் ஆரம்பித்து ஓதி அகிலம் பூரா என்றும் எதிரொலிக்கும் அருணகிரி.

அவருடைய ஒரே ஒரு திருப்புகழ் மட்டும் இங்கே தந்து உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன். இதைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது. தெரியாதவர்கள் உடனே தெரிந்துகொண்டு தமிழன் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம்.

தமிழ்க் குமரனுக்கு பழனியாண்டி ஒரு அழகிய காரணப்பெயர் எதனால் வந்தது? அப்பா பரமசிவனின் கையில் இருந்த ஒரு அழகிய அறுசுவை மாங்கனியால் . அதை விரும்பிக் கேட்பவர்களோ ரெண்டு அழகிய ஆசைப் புத்ரர்கள். யாருக்கு கொடுப்பது? ஒரு போட்டி வைக்கப்பட்டது. இருப்பது ஒரு மாங்கனி. அதை முழுசாக கேட்பதோ இரு கண்களான பிள்ளைகள். சரி போட்டி ஒன்று வைத்து அதில் ஜெயிப்பவன் முழுசாக பெறட்டும். போட்டி: ''இந்த மூவுலகையும் யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு வெற்றிப்பரிசு அந்த தீஞ்சுவைக் கனி''.

மூஞ்சூறு எனப்படும் மூஷிக வாகனன் ஒரு புறம், மயில் வாகனன் முருகன் வேறொரு புறம் கிளம்பினார்கள். வானத்திலேறி மின்னலென பறந்தான் முருகன். மூஷிகன் யோசித்தான். அவனுடைய மூஷிகம் மயிலோடு போட்டிபோட்டு வெல்வது குதிரைக் கொம்பு.? விநாயகன் ப்ரணவஸ்வரூபன். ஞானோதயம் வேறெங்கி
ருந்தோ தோன்றவேண்டுமா? .

மூன்று உலகும் தானே சுற்றிவரவேண்டும். அது என்ன? மூன்று உலகமும் தானாகிய முழு முதற் கடவுள் முக்கண்ணன் அல்லவோ? அவனைச் சுற்றினாலே மூவுலகும் சுற்றியதாகுமே .

மூஷிகம் மகாதேவனை வலம் வந்தது. மஹா கணபதிக்கு மாங்கனி பரிசானது. அண்ணன் வயிற்றில் ஜீரணமும் ஆனது. வெகுநேரம் கழித்து முருகன் வந்தான். அண்ணன் அங்கேயே இருப்பதைப் பார்த்தான். சிரித்தான். எங்கே எனக்கு பரிசு என்றான். கொடுத்தாகி விட்டதே கணபதிக்கு என்று விடை வந்ததும் அவனுக்கு சினம் வந்தது. வெகுண்டான் வேலவன். துறந்தான் ஆசையை. மாங்கனி மீது மட்டுமல்ல மஹாதேவன் உமாதேவி ஆகிய பெற்றோரின் மீதும். மலைகள் தான் எப்போதும் அவனுக்குப் பிடிக்குமே. பழனியில் நின்றான் கோவணாண்டியாக பாரினில் பக்தர் மனம் இனிக்க. பழனிக்கு ஒரு சுவையான பெயர் திரு ஆவினன்குடி. இந்த க்ஷேத்ரத்தில் அருணகிரி நாதர் முருகனை (எப்போதும் பெருமாளே!! என்று தான் நாவினிக்க தமிழ் மணக்க எல்லா புகழ் மாலையிலும் விளிப்பார்) ''திருப்" புகழாக சூட்டிய பாமாலை தான் இது:

நாதம் வேதத்தின் சாரத்தை குறிக்கிறது. பிந்து அதன் சக்தியை இணைத்து, அணைத்துக்கொள்கிறது. லிங்கமும் அதன் பீடமும் (ஆவுடையார்). இணை பிரியா சேர்க்கை அது. அதுவே சர்வ சக்தி ஆதாரம். சிவ-சக்தி. இந்த இணை பிரியா சக்தியில் விளைந்த அதுவே நீ முருகா!.

வேதத்தைக் காட்டிலும் அதன் சப்தத்துக்கு சக்தியும் ஆற்றலும் அதிகம். ஆகவே தான் வேதங்களை எப்படி ஸ்வரமாக உச்சரிக்க வேண்டுமோ அதை மந்த்ரம் என்று சொல்வோம். மாத்ரைகள், காலப்ரமாணம், ஸ்வரம் எல்லாம் அதற்கு பிரத்யேகமாக உண்டு. நாமமும் ரூபமும், மலரும் மணமும் போல என்று கொள்ளலாம். அதிலிருந்து பிழன்று மனம்போன போக்கில் இசை அமைப்பது ஏற்புடையது அல்ல.

பாபு என்பவனை ராமு என்று அழைத்தால் திரும்பியே பார்க்கமாட்டானே. பாபு பாபு என்று கத்தினால் மற்றவர்கள் தான் யாரிவன் இப்படி கூச்சலிடுபவன் என்று கோபம் கூட கொள்வார்கள். தவறான பதில் எழுதினால் மார்க் குறைப்பது போல பாபமும் வேறு வந்து சேரும்.

ஸ்வயம்புவான சிவனது குமாரன், அப்பனுக்கு சுப்பன். பிரணவத்தை உபதேசித்ததால் ஞான பண்டிதன், ஸ்வாமிநாதன், குருகுஹன். சகல சௌபாக்யங்களையும் தரும் அழகிய உமையவள் புதல்வன், தண்டத்தை ஏந்திய தண்டாயுத பாணி, பாத கமலங்கள் சதங்கை ஒலி கிணி கிணி என்று சப்தமெழுப்ப அச்சம் தீர்க்கும் அருளாளன், அமரர் குறை தீர்க்கவந்த குமரன், தேவயானை மணாளன், நெற்றிக்கண் பிழம்பில் உருவான ஒளிச்சுடர் , ஜோதி ஸ்வரூபன்,ஆசார அனுஷ்டானங்கள் குறையாத, வேதம் மறவாத, இல்லையென்று வருவார்க்கு இல்லையென்னாத, பல நூறு கோவில்களில் பல வித வடிவில் பரமனைப்பூசிக்கும் சோழ மண்டலத்தில், உயிர் நாடியாய் உணவளித்து வாழ்விக்கும் ''சோரளிக்கும் சோணாட்டில் எங்கும் வயலாக பச்சை பசேலென்று காணும் வயலூரில் குடி கொண்ட வரமளிக்கும் வரமே, அன்று கொங்கு நாடு ஆண்ட, சேரமான் பெருமாளுக்கு வெண் குதிரையில் கையலாயம் அடைந்தும் சுந்தரரை அடையமுடியாமல் ''ஆதி உலா'' பாடியதால் அனுமதிக்கப்பட்டதும், திரு ஆவினன்குடியில் தேவர்களே மனிதர்களாக உனைப் போற்றி வாழும் கந்த பெருமாளே என்று வாழ்த்தி, அழகாக செஞ்சுருட்டி ராகத்தில் அருணகிரி நமக்கு பரிசு கொடுத்த திருப்புகழ் பாடல் இது :

''நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம 
ஞான பண்டித சாமீ நமோ நம வெகு கோடி 
நாம சம்புகுமாரா நமோ நம 
போக அந்தரி பால நமோ நம 
நாக பந்தம யூரா நமோ நம பர சூரர் 
சேத தண்ட விநோதா நமோ நம 
கீத கிண்கிணி பாத நமோ நம 
தீர சம்ப்ரம வீர நமோ நம கிரி ராஜ 
தீப மங்கள ஜோதீ நமோ நம 
தூய அம்பர லீலா நமோ நம 
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய் 
ஈதலும் பல கோலால பூஜையும் 
ஓதலும் குண ஆசார நீதியும் 
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத 
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை 
சோழ மண்டல மீதே மனோகர 
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா 
ஆதரம்பயி லாரூரர் தோழமை 
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில் 
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி 
ஆதி அந்த உலாவாக பாடிய 
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.

THE OLDEST PORTRAIT OF VADAPALANI ANDAVAR which was housed in a hut, in Vadapalani, before the temple grew up big, was worshipped by me when I was about five years, ie., 75 years ago, . I remember Sundaram Gurukkal singing hymns and doing pooja to this portrait.

Image may contain: one or more people

No comments:

Post a Comment