உப்புமா பாஸுரம்…
ஶ்ரீமடத்தில் ஒருநாள் இரவு வேளை. சில பாரிஷதர்களைத் தவிர ஒரே ஒரு பக்தர். பெரியவா… இவர்களுடன் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
"ஆஹாரம் பண்ணியாச்சா?"
"ஆச்சு. பெரியவா"
"என்ன ஸாப்ட்டே?"
"உப்புமா………
"ஒனக்கு ஒரு கதை தெரியுமோ?…. உப்புமாக் கதை !…."
ஸ்வாரஸ்யம் தட்டியது.
"தெரியாது…."
"கேளு……ஒரு பக்தர் ஸ்ரீரங்கத்துக்கு போனார். பெருமாளை ஸேவிச்சார். ஸேவிச்சாரா?… அப்றம் ராத்ரி ஒரு சத்ரத்ல தங்கி, அங்க போட்ட உப்புமாவை ஸாப்ட்டார்….
……என்னடான்னா……..! உப்புமா ஸெரியா வேகவேயில்ல! அதோட, சின்ன சின்னதா நெறைய கல்லு வேற ! பல்லுல பட்டு பட்டு வாய்ல குத்தி, வாயெல்லாம்…. ஒரே புண்ணாயி… செவந்து போச்சு.! அதோட போச்சா! ஏகப்பட்ட மொளகாயப் போட்டு தாளிச்சிருந்ததால, கொள்ளி காரம் ! தாங்கவே இல்ல ! எல்லாமா சேர்ந்து, கண்ணால ஜலம் விட வெச்சுடுத்து.! கண்ணெல்லாம் செவந்தே போச்சு! அந்த ஶ்ரமத்ல கூட, பக்தரோல்லியோ? ஒரு பாட்டு ஞாபகம் வந்து பாடினாராம்..! ஒனக்கு தெரியுமோ?"
"தெரியாது பெரியவா"
அவர் வாயால் கேட்பதில் உள்ளே ஆனந்தமே தனி !
"என்ன அப்டி சொல்ற?…. பச்சை மா மலைபோல் மேனி-னு தொண்டரடிப்பொடியாழ்வார் பாஸுரம் !"
"அது தெரியும் பெரியவா…"
"அப்போ ஸெரி. இவர் கொஞ்சம் மாத்திப் பாடினாராம்…
பச்சைமா [வேகாத ரவை];
மலைபோல் மணி [உப்புமால இருந்த குட்டி குட்டி கல்லு];
பவளவாய் [ஸாப்ட்டவன் வாய் புண்ணாயி செவந்து போனது];
கமல செங்கண் [காரம் தாங்காம கண்ணுலேர்ந்து ஜலம் கொட்டி, கண்ணெல்லாம் செவப்பா ஆய்டுத்தாம்];
அச்சுதா !………என் அப்பனே !……!"
அழகாக பாடி பாடி அர்த்தம் சொல்லிக் கொண்டே வந்த பெரியவா…. மேலே பேச முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் அந்த மலர்ந்த சிரிப்பில் மனஸை பறிகொடுத்து, சிரித்தனர்.
கள்ளமில்லாத குழந்தையின் சிரிப்பும், தெய்வக் கிழவனின் சிரிப்பும் மனஸை அப்படியே கொள்ளையடித்துவிடுமே!
No comments:
Post a Comment