இதை நேற்றே போட்டிருக்கணும். மறந்துவிட்டேன்
1.ச்ருத்வா குணான் புவனசுந்தர ச்ருண்வதாம் தே
நிர்விச்ய கர்ண விவரை: : ஹரதோ அங்க தாபம்
ரூபம் த்ருசாம் த்ருசிமதாம் அகிலார்த்த லாபம்
த்வயி அச்யுத ஆவிசதி சித்தம் அபத்ரபம் மே
புவனசுந்தரா, அச்யுதா, உன் குணங்கள் கேட்பவர்களின் காதுகள் மூலம் உட்புகுந்து அவர் தாபத்தைப் போக்குகின்றன. கண் படைத்தவருக்கு கண் படைத்த பயன் அனைத்தையும் தருகின்றது உன் உருவம். இதைப்பற்றிக் கேட்ட என் மனம் வெட்கத்தை விட்டு உன்னிடம் சென்றுவிட்டது.
ருக்மிணி கண்ணனைப் பார்த்ததில்லை அவன் அழகையும் குணங்களையும் கேட்டு காதலுற்றாள். ச்ரவணம்தான் பக்திக்கு ஆரம்பம். கேட்காத ஒன்றைப்பற்றி அன்பு வருவதில்லை. இங்கு ருக்மிணி அவன் செய்கை எல்லாம் கேள்வியுற்று அவன் மாயாவி ஆயிற்றே என்று அஞ்சுகிறாள். அதனால் அச்யுதா என்று அவனை விளிக்கிறாள். அச்யுதன் என்றால் தன் நிலை வழுவாதவன் என்று பொருள். நீ யார் என்பதையும் நான் யார் என்பதையும் மறவாதே என்று பொருள்.
2.கா த்வா முகுந்த மகாதீ குலசீலரூப
வித்யா வயோத்ரவிண தாமபி:ஆத்மதுல்யம்
தீரா பதிம் குலவதீ ந வ்ருணீத கன்யா
காலே நருசிம்ஹா நரலோகமநோபிராமம்
முகுந்தா, நரசிம்ஹா, நல்ல குலத்தில் உதித்து நற்குணமுடையவளும் அறிவில் சிறந்தவலும் ஆன எந்த கன்னிகை உரிய காலத்தில் குலம், சீலம், ரூபம், கல்வி, வயது, அந்தஸ்து, அழகு இவைகளில் தனக்கு சமமான, மானுடருள்மனத்துக்கினியவனான புருஷனை வரிக்காமல் இருப்பாள்?
ஒருவேளை கண்ணன் நீ எந்தத் தகுதி இருக்கிறது என்று என்னை மனம் செய்ய விரும்புகிறாய் என்று கேட்பானோ என்றெண்ணி நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் அல்ல என்று கூறுகிறாள். முகுந்தன் என்றால் முக்தி அளிப்பவன் அதாவது அந்தப பரம்பொருளான நாராயணன் நீ என்று நினைவு படுத்தி நரசிம்ஹா என்று அழைப்பதன் மூலம் புருஷ சிம்மம் என்ற பொருள் இருந்தாலும் அது உண்மையில் அவனுடைய நரசிமாஹ் அவதாரத்தை நினைவூட்டுவது போல உள்ளது
. அன்று இரணியனிடம் இருந்து ப்ரஹ்லாதனைக் காப்பாற்றியது போல இன்று என்னை சிசுபாலனிடம் இருந்து காப்பாற்றவேண்டும் என்று பொருள். இரணியன் ராவணனாகப் பிறந்து பிறகு சிசுபாலனாகப பிறவி எடுத்திருக்கிறான் அல்லவா? அன்றைய சீதைதானே இன்றைய ருக்மிணி?
3. தன் மே பவான் கலு வ்ருத: பதிம் அங்கஜாயாம்
ஆத்மார்பித: ச பவத: அத்ர விபோ விதேஹி
மா வீரபாகம் அபிமர்சது சைத்ய; ஆராத்
கோமாயுவத் ம்ருகபதே: பலிம் அம்புஜாக்ஷ
பிரபுவே நான் உங்களையே பதியாக வரித்துவிட்டேன் . என் ஆத்மா உங்களுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டது. ஆதலால் இங்கு வந்து என்னை மனைவியாக ஏற்றுக்கொள்வீராக. சிங்கத்தின் உணவை நரி கவர்ந்தாற்போல வீரராகிய நீங்கள் அடைய வேண்டிய என்னை சிசுபாலன் தீண்டக்கூடாது.,காதலெனும் வேள்வியில் வீரனான உனக்கு என் உயிரை ஹவிர்பாகம் செய்து விட்டேன் என்று பொருள்.
இதையே ஆண்டாள் சொல்கிறாள் ,
வானிடை வாழும் மன்னவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத்திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடையாழி சங்குத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே , என்று.
பிறகு நான்கு ஸ்லோகங்களில் ருக்மிணி கண்ணன் வருவானோ வரமாட்டானோ என்று அஞ்சினவளைப் போல் 'நான் தானதர்மம் பூஜை முதலியன செய்திருந்தால் கண்ணன் வந்து என்னை ஆட்கொள்வான் என்று கூறி கண்ணனுக்கு எப்படி வந்து தன்னை எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறி கடைசியில் அவன் வராவிட்டால் உயிரை விட்டுவிடுவதாகக் கூறி கடிதத்தை முடிக்கிறாள்.
4.பூர்தேஷ்ட தத்த நியம வ்ரததேவா விப்ர
குர்வர்சநாதிபிதி: அலம் பகவான் பரேச:
ஆராதிதோ யதி கதாக்ரஜ ஏதய பாணிம்
க்ருஹ்ணாது ந மே தமகோஷஸுதாதயோ அன்யே
குளம் வெட்டுதல்,யாகம், தானம், நியமம் வரதம் முதலியவற்றை அனுசரித்தல், தேவர் பிராம்மணர் குரு இவர்களை பூசித்தல் இவற்றால் பரம்பொருளான பகவானை நன்கு ஆராதித்திருந்தால் கிருஷ்ணன் வந்து எண்ணை பாணிகிரஹணம் செய்துகொள்ள வேண்டும்.
சிசுபாலன் முதலியவர்கள் செய்யக்கூடாது.
5.ச்வோ பாவினி அஜித உத்வஹே விதர்பான்
குப்தா: ஸமேத்ய ப்ருதனாபதிபி: பரீத:
நிர்மத்ய சேத்யமகதேந்த்ர பலம்பிரஸஹ்ய
மாம் ராக்ஷசென விதினா உத்வஹா வீர்யசுல்காம்
ஒருவராலும் வெல்ல முடியாதவரே , விதர்பநாட்டிற்கு நாளை நடக்கப்போகும் விவாகத்திற்கு ரகசியமாக வந்து, சேனையுடன் தொடரப்போகும் சிசுபாலன் ஜராசந்தன் இவர்களை வென்று வீரத்தையே கன்யாசுல்கமாக என்னை ராக்ஷச விவாக முறைப்படி கவர்ந்து சென்று மணமுடிப்பீராக.
இவ்வாறு கிருஷ்ணனுக்கு தன்னை மணம் செய்துகொள்ளும் வழியையும் உரைக்கிறாள். ஆனால் கண்ணன் நான் எப்படி உன் உறவினர்களை கொல்லாமல் அந்தப்புரத்திலிருக்கும் உன்னை கவர்ந்து செல்வது என்று கேட்பானாகில் அதற்கும் வழி கூறுகிறாள்.
6அந்த;புராந்தரசரீம் அநிஹத்ய பந்தூன்
த்வாம் உத்வஹே கதம் இதி ப்ரவதாமி உபாயம்
பூர்வேத்ய்ரச்தி மஹதீ குலதேவியாத்ரா
யஸ்யாம் பஹி: நவவதூ: கிரிஜாம் உபேயாத்
அந்தப்புரத்திருக்கும் உன்னை எப்படி உன் உறவினர்களைக் கொல்லாமல் கவருவது என்பீர்களானால் அதற்கொரு உபாயம் சொல்வேன். விவாகத்திற்கு முன்தினம் குலதேவதையை பூஜிப்பதற்கு மணப்பெண் எல்லாவித சாம்க்ரியைகளுடனும் படையுடனும் ஊருக்கு வெளியில் கெளரி ஆலயத்திற்குச்செல்ல வேண்டும். ( அதாவது அந்தப்புரத்தில் இருந்து வெளியில் வருவேன் அப்போது எடுத்துச்செல்லலாம் என்று கூறுகிறாள்.) very detailed பிளான்!)
இத்தனை சொல்லியும் ப்ளான் போட்டுக்கொடுத்து அவன் வரவில்லையானால் என்ன செய்வது ? அதற்காகக் கடைசியில் ஒரு வெடிகுண்டு!
7. யஸ்யாங்க்ரிபங்கஜ ச்னபனம் மஹாந்த:
வாஞ்சந்தி உமாபத்ரிவ ஆத்மதமோபஹத்யை
யர்ஹி அம்புஜாக்ஷ ன லபேயம் பவத்ப்ரஸாதம்
ஜஹ்யாமி அசூன் வ்ரதக்ருசான் ஸதஜன்மபி: ஸ்யாத்
தாமரைக் கண்ணா, எவருடைய திருவடித் தாமரையில் மூழ்கி தங்கள் அக்ஞானத்தைப் போக்கிக்கொள்ளும் மகான்களும் உமாபதியைப்போன்ற தேவர்களும் விரும்புகிறார்களோ அப்படிப்பட்ட உங்கள் அனுக்ரஹத்தை நான் அடையாமல் போவேனாகில் இந்த உடலை வருத்திக்கொண்டு உயிரை விட்டுவிடுவேன். நூறு ஜன்மமானாலும் அப்படி செய்து உங்கள் அருளைப் பெறுவேன்.
இவ்வாறு ருக்மிணி கண்ணனுக்கு சாய்ஸே இல்லாமல் செய்துவிட்டாள்!
No comments:
Post a Comment