"தொலைந்துபோன தங்க உத்தரணி!"
( "ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…"----யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு,
விருட் டென்று எழுந்தார் ஸ்வாமிகள்)
கட்டுரையாளர்-ரமணி அண்ணா
நன்றி-சக்தி விகடன் 04-03-2014
சொல்கிறவர்-சந்தானம்-மறுபதிவு-வரகூரான்.
பல வருஷங்களுக்கு முன், காஞ்சி மகா ஸ்வாமிகள் தன் பரிவாரங்களுடன் திருவிடைமருதூர் மகாதான தெருவிலுள்ள 'ஆர்.எம்.எம். சத்திரம்' என்கிற பழைய சத்திரத்தில் முகாமிட்டிருந்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்க தினமும் வந்து சென்றனர்.
அடியேன் அப்போது பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தேன். என் தகப்பனார் உள்ளூர் காஞ்சி மடத்தின் பொறுப்பில் இருந்ததால், அடிக்கடி திருவிடைமருதூர் சென்று ஆச்சார்யாளை தரிசித்து வருவார். பள்ளி விடுமுறை நாட்களில், என்னையும் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் ஸ்வாமிகளை பயபக்தியோடு தரிசித்துப் பிரசாதம் பெறுவது ஒரு சுகானுபவம்!
ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி இருக்கும். தகப்பனாரோடு ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தேன். அவ்வளவாகக் கூட்டமில்லை. தகப்பனாரை அருகில் அழைத்த ஸ்வாமிகள், "சந்தானம், ஒங்க கிராமத்தச் சேர்ந்தவாள்ளாம் இங்க வந்துண்டிருக்காளோன்னோ? எல்லாரையும் வரச் சொல்லு! ஒத்தரும் வெறுமனே திரும்பிப் போகப்படாது. இங்கேயே சந்திர மௌலீஸ்வர பிரசாதமா 'வைஸ்வதேவம்' (போஜனம்) பண்ணிட்டுப் போகணும். என்ன புரிஞ்சுதா?" எனச் சிரித்துக்கொண்டே, தாயின் கருணையோடு உத்தரவிட்டார்.
என் தகப்பனார் மிகவும் பவ்யமாக, "பெரியவா உத்தரவு!" என்று சொல்லிவிட்டு நமஸ்கரித்தார். அடியேனும் நமஸ்கரித்தேன். பெரியவா விடவில்லை. என் தகப்பனாரைப் பார்த்து, "இன்னிக்கு நீ சந்திரமௌலீஸ்வர பூஜையை தரிசனம் செஞ்சுட்டு இங்கயே 'வைஸ்வதேவம்' பண்ணிட்டுப் போ!" என்று பணித்தார்.
நானும் தகப்பனாரும் மதிய போஜனத்தை முடித்துக்கொண்டு சத்திரத் திண்ணையில் சற்றுச் சிரம பரிகாரம் பண்ணினோம். மதியம் 3 மணி இருக்கும். திடீரென்று சத்திரத்தினுள் ஒரே ஆரவாரம். மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடி, எதையோ பரபரப்பாகத் தேடினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தோம்.
மடத்தைச் சேர்ந்த ஒருவர், "வேற ஒண்ணுமில்லே… பெரியவா சந்திரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக கும்மோணத்தைச் சேர்ந்த பெரிய மனுஷர் ஒருத்தர் தங்கத்துல
உத்தரணி ஒண்ணு பண்ணிக்குடுத்துருந்தார். சுமார் மூணு பவுன் இருக்கும்! நேத்தி வரைக்கும் பெரியவா பூஜைல அது இருந்துது. இன்னிக்கு அதக் காணலே. இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கோம். இன்னும் பெரியவாகிட்ட சொல்லலே. அவாளுக்குத் தெரியாது!" என்று கூறிவிட்டுத் தேடுவதில் முனைந்தார்.
ஸ்ரீமடத்து காரியஸ்தர், 'இது பெரியவா காதை எட்றதுக்குள்ள எப்டியும் கண்டுபிடிச்சு வெச்சாகணும்!' என்று கவலையோடு சொன்னார். சிப்பந்திகளை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை பண்ணினார். அனைவருமே தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.
"எல்லாரையும் விசாரணை பண்ணியாச்சு. ஒருத்தன்தான் பாக்கி!" என்று சொன்ன காரியஸ்தர், "உக்கிராண கைங்கர்யம் பண்ற ராமநாதனைக் கூப்பிடு!" என்றார்.
சமையல்கட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஒருவர், "சமையல்கார ராமநாதன் அங்கே இல்லே. அவன் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கானாம். சாயங்காலம்தான் அவனை எதிர்பார்க்கலாம்!" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
மாலை மணி 5. மகா ஸ்வாமிகள் தமது ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார். தம் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டுச் சற்று நின்றார். பிறகு, தமது அறை வாயிலில் சுவரோரம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சற்று நேரத்தில், கூடத்துப் பக்கம் பூஜா கைங்கர்யம் பண்ணும் இளைஞன் ஒருவன் வந்தான். அவனை அருகில் அழைத்த ஆச்சார்யாள், "ஏண்டாப்பா… நானும் மத்யானத்லேர்ந்து பாக்கறேன்… சத்ரம் அல்லோலகல்லோலப் பட்டுண்டிருக்கே, என்ன சமாசாரம்? ரொம்பப் பெரிய மனுஷா யாராவது இன்னிக்கு வரப்போறாளோ?" என்று ஒன்றும் தெரியாதது மாதிரி, சிரித்தபடி கேட்டார்.
அந்த இளைஞன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே, பெரியவா!" என மென்று விழுங்கினான்.
ஸ்வாமிகள் விடவில்லை. "ஒண்ணுமில்லேனு சொல்லிப்டா எப்டிடாப்பா! சத்ரமே அமக்களப்பட்டுண்டிருக்கே! வேறென்னதான் விஷயம்?" என்று சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள்.
அந்த இளைஞன் மிகவும் தயங்கியபடி, "நீங்க சந்த்ரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக வெச்சுண்டிருப் பேளோன்னோ… பவுன் உத்தரணி, அதக் காணலே பெரியவா! அதத்தான் சத்ரம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கா" என்றான் வருத்தத்துடன்.
அடுத்து பெரியவா ஒரு கொக்கி போட்டார்…
"ஏண்டாப்பா! நம்ம மனுஷ்யா யார் பேர்லயா வது சந்தேகம் இருக்கோ… அப்டி ஏதாவது பேசிக்கறாளோ?"
அந்த இளைஞன், "தெரியலியே பெரியவா! காரியஸ்தர் மாமாதான் என்னென்னமோ சொல்லிண்டிருக்கார். அவரைக் கேட்டா தெரியும்!" என்று சொன்னான்.
"சரி… நீ போய் கார்யஸ்த மாமாவை இங்க வரச் சொல்!" என்று அவனுக்கு உத்தரவிட்டார் பெரியவா.
அங்கே ஒரு மூலையில் கை கட்டியபடி நின்று, தகப்பனாரும் நானும் நடப்பதைக் கவனித்துக் கொண்டு இருந்தோம்.
கூடத்துக்கு வந்த காரியஸ்தர், பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். பெரியவா சிரித்துக் கொண்டே, "ஏண்டாப்பா! பூஜைலேர்ந்த பவுன் உத்தரணி காணலியாமே?" என்று கேட்டார்.
"ஆமாம், பெரியவா!"
"என்னிலேர்ந்து காணம்னு ஏதாவது தெரியுமோ?"
காரியஸ்தர் தயங்கியபடியே, "ரண்டு நாளா சந்திரமௌலீஸ்வர பூஜையின் உபயோகத்துக்கு உத்தரணியை எடுக்கலே, பெரியவா! இன்னிக்கு பாக்கறச்சே அதக் காணம்!" என்று மென்று விழுங்கினார்.
"சரி… நீ என்ன நெனைக்கறே?"
"எனக்கு என்ன படறதுன்னா, யாரோ அத எடுத்திருக்கணும்!"
"சரி, யார்னு ஒன்னால அனுமானிக்க முடியறதா?"
"அப்படி தீர்க்கமா சொல்ல முடியலே, பெரியவா. இருந்தாலும், ஒரு பேர்வழி மேல சந்தேகம் இருக்கு!"
"யார் அந்தப் பேர்வழி?"
காரியஸ்தர் தயங்கித் தயங்கி, "பெரியவாளுக்குத் தெரியாம ஒண்ணுமே இருக்க முடியாது. இருந்தாலும், என் மனசுல பட்டதைச் சொல்லிடறேன்!" என்று இழுத்தார்.
"சொல்லு… நானும் தெரிஞ்சுக்கறேன்."
"நம்ம சமையல் வேலை ராமநாதன்தான்கறது என் தீர்மானம்!" என்று காரியஸ்தர் பூர்த்தி செய்வதற்குள்… "அதெப்படி சொல்றே நீ?" என்று மடக்கினார் ஸ்வாமிகள்.
அதற்கு காரியஸ்தர், "கடந்த பத்துநாளா அந்த ராமநாதன், 'எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே. கும்மோணம் முனிசிபல் ஆஸ்பத்ரில சேத்து வைத்தியம் பாக்கணும். முந்நூறு ரூவா அட்வான்ஸ் வேணும்'னு நச்சரிச்சுண்டே இருந்தான். அது மட்டுமில்லே பெரியவா, சம்பளத்துல 'இன்க்ரிமென்ட்' வேற போட்டுக் கொடுங்கோனு நித்தம் தொளச்சுண்டிருந்தான். அதனால…"
இடைமறித்த ஆச்சார்யாள், "அவனுக்குப் பணமுடை இருக்கற காரணத்தால, அவன்தான் இந்த கார்யத்தப் பண்ணி இருக்கணும்னு முடிவு கட்டிட்டியாக்கும்!" என்று சொல்லிச் சிரித்தார்.
தொடர்ந்து ஸ்வாமிகள், "சரி சரி… இப்போ அந்த ராமநாதன் எங்கே இருக்கான்? நான் கூப்டேன்னு அவன இங்க அழச்சுண்டு வா!" என்றார்.
உடனே காரியஸ்தர், "அம்மாவுக்கு ரொம்ப ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கான் பெரியவா!" என்று பணிவுடன் சொன்னார்.
"போகட்டும்… அட்வான்ஸும், இன்க்ரிமென்ட்டும் கேட்டான்னியே, அதைப் போட்டுக் குடுத்துட்டியோ?"
"இல்லே பெரியவா…"
"பின்ன என்ன பண்ணினே?"
"அவன் கேட்ட அந்த ரெண்டு விஷயத்துக்குமே மடத்துல இப்போ சௌகர்யப்படாதுனு சொல்லிப்டேன், பெரியவா!"
இதைக் கேட்டு ஸ்வாமிகள் சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.
சற்றுப் பொறுத்து காரியஸ்தரைப் பார்த்து, "சரி, நீ ஒரு கார்யம் பண்ணு! அந்த ராமநாதன் தேப்பெருமா நல்லூர்லேர்ந்து வந்த ஒடனே, அவனையும் அழச்சிண்டு எங்கிட்ட வா! புரியறதா?" என்று உத்தரவளித்துவிட்டு, தனது ஏகாந்த அறைக்குப் போனார். நாங்கள் அனைவரும் மெய்ம்மறந்து அப்படியே கை கட்டி நின்றிருந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு மணி 8. தேப்பெருமாநல்லூரிலிருந்து ராமநாதன் வந்து சேர்ந்தார். அவரை அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார் காரியஸ்தர். சொல்லி வைத்தாற்போல் பெரியவாளும் கதவைத் திறந்துகொண்டு வந்து அமர்ந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் ராமநாதன்.
உடனே பெரியவா வாத்சல்யத்துடன், "ராமநாதா! உன் தாயாருக்கு ஒடம்பு சரியில்லேனு கேள்விப்பட்டேனே, இப்போ எப்டி இருக்கா?" என்று விசாரித்தார்.
ராமநாதன் கண்கலங்கியபடி, "வயத்துல ஏதோ கட்டி வந்திருக்காம், பெரியவா! கும்மோணம் பெரியாஸ்பத்ரில சேத்துதான் ஆபரேஷன் பண்ணணுமாம்…" என்று முடிப்பதற்குள் ஸ்வாமிகள், "அதுக்குத்தான் காரியஸ்தர்ட்ட அட்வான்ஸ் கேட்டயா?" என்று வினவினார்.
"ஆமாம், பெரியவா!"
"இன்க்ரிமென்ட்டும் வேணும்னியாமே..?"
இதற்கு ராமநாதன் பதில் பேசவில்லை.
"ஏன் பதில் சொல்லமாட்டேங்கறே? இப்ப மாசம் என்ன சம்பளம் வாங்கறே?"
"அறுபது ரூவா, பெரியவா…"
"என்ன இன்க்ரிமென்ட் எதிர்பார்க்கறே?"
பதிலில்லை. பெரியவாளும் விடவில்லை.
ராமநாதன் தயங்கியபடியே சன்னமான குரலில், "மாசம் ஒரு பத்து ரூவா பெரியவா…" என்று குழைந்தார்.
"மாசா மாசம் எழுபது ரூவா சம்பளம் வேணுங்கறே நீ. அப்டித்தானே?" – இது ஸ்வாமிகள்.
இதற்கும் பதிலில்லை. உடனே காரியஸ்த ரைப் பார்த்த ஸ்வாமிகள், "இவன் 10 ரூவா இன்க்ரிமென்ட் கேக்கறான். நீ என்ன பண்றே, இந்த மாசத்துலேர்ந்து இவனுக்கு 15 ரூவா இன்க்ரிமென்ட் போட்டு, எழுவத்தஞ்சு ரூவாயா சம்பளத்தக் குடு. அதுக்கு முன்னே, இப்பவே இவன் கேட்ட அட்வான்ஸ் ரூவாயக் குடுத்துடு. என்ன, புரியறதா?" என்று உத்தரவு போட்டார்.
"அப்டியே பண்றேன் பெரியவா!" என்றார் காரியஸ்தர்.
"என்ன ராமநாதா, இப்ப ஒனக்கு சந்தோஷம் தானே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.
வாய் பொத்தி, தலையாட்டினார் அவர்.
திடீரென்று பெரியவா, கூடத்திலிருந்த அனைவரையும் பார்த்து, "ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…" என்று சஸ்பென்ஸோடு நிறுத்தினார்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 'புரியலியே, பெரியவா?' என்பதுபோல் ஆவலுடன் ஸ்வாமிகளையே பார்த்தனர்.
ஸ்வாமிகள் சிரித்தபடி தொடர்ந்தார்… "ஒரு முக்கியமான எடத்ல நீங்க தேடாம விட்டுட்டேள். இப்ப சொல்றேன், கேளுங்கோ… நித்யம் சந்திரமௌலீஸ்வர பூஜைல உபயோகப்படுத்தற நிர்மால்ய புஷ்பங்களைக் கொல்லைல கால் படாத எடத்ல கொண்டு போய் கொட்றேளோன்னோ
அதுல போய்த் தேட வேண்டாமோ பவுன் உத்தரணியை! அதுக்காக இப்பவே ராத்ரில தேடப்போயிடாதீங்கோ… பூச்சி பொட்டு இருக்கும். கார்த்தால போய்ப் பாருங்கோ. சந்திரமௌலீஸ்வரர் கிருபையால அது அங்க கெடச்சுடும்."
யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட் டென்று எழுந்தார் ஸ்வாமிகள். அனைவரும் விழுந்து நமஸ்கரித்து விடைபெற்றோம்.
அடுத்த நாள் காலை. ஆவலுடன் மகாதானத் தெரு சத்திரத்துள் தகப்பனாருடன் நுழைந்தேன். தங்க உத்தரணி குறித்து மடத்து காரியஸ்தரிடம் என் தகப்பனார் விசாரித்தார்.
அவர் சிரித்தபடியே சொன்னார்… "பெரியவா சொன்னபடியே கார்த்தால கொல்லைல போய் நிர்மால்ய புஷ்பங்களைக் கிளறிப் பார்த்தோம். பளபளனு அதுல கிடந்தது தங்க உத்தரணி. ஆனா, அது எப்டி அங்க வந்ததுங்கறது, சந்திரமௌலீஸ்வரருக்கும் பெரியவாளுக்கும்? மட்டுமே தெரிஞ்ச ரகசியம்…"
அதைக் கேட்டு, இந்த அடியவன் வியந்து நின்றேன்!
No comments:
Post a Comment