ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 22, 23
அத்தியாயம் 22
ப்ருது ராஜனை மக்கள் இவ்வாறு போற்றுகையில் சூரியனைப் போல் தேஜசுடன் சனகாதியர் அங்கே பிரவேசித்தனர். ப்ருதுவும் அவர்களை முறைப்படி வணங்கி பூஜித்துக் கூறினார்.
"யோகிகளுக்கும் அரிதான் உங்கள் தரிசனம் எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். அடியார்களின் திருவடித்தீர்த்தம் கிடைக்க பெற்ற கிருஹஸ்தர்கள் ஏழையாக இருப்பினும் செல்வந்தர்களே. அது கிடைக்காதவர் செல்வம் நிறைந்து இருந்தாலும் கொடிய பாம்புகள் நிறைந்த காட்டு மரங்களைப் போன்றவர்களே.
முனிஸ்ரேஷ்டர்களே உங்கள் வரவு நல்வரவாகுக. பாலர்களாயினும் ஆத்மாராமர்களான உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தாபத்தை அடைந்தவ்ர்களுக்கு இரங்குபவர்கள் ஆகிய உங்களிடம் பரமவிச்வாசத்துடன் நான் கேட்க விரும்பியது என்னவென்றால் இந்த சம்சாரத்தில் எவ்விதம் எளிய முறையில் க்ஷேமம் உண்டாகும்?
ஞானிகளின் ஆத்மாவாகவும் பக்தர்களின் உள்ளத்தில் பகவானாகவும் உள்ள அவரே அடியார்களுக்கு அனுக்ரஹிக்க உங்களைப் போன்றவர்கள் உருவில் சஞ்சரிக்கிறார் என்பது திண்ணம்."
சனத்குமாரர் மறுமொழி கூறலானார்.
"உலக விஷயத்தில் வைராக்கியம், ஆத்மச்வரூபத்தில் பற்று இவைதான் மனிதர்களின் க்ஷேமத்திற்குக் காரணம். இது ஸ்ரத்தை, தத்துவ விசாரம், ஞான யோக நிஷ்டை, பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஹரிகுணமாகிய அம்ருதத்தில் விருப்பம், ஹரிகுணகானத்தால் வளரும் பக்தி, உலக இச்சைகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விலகல், இவை மூலம் தானாகவே எளிதில் ஏற்படும். "
இவ்வாறு கூறி, ப்ருதுவால் பூஜிக்கப் பட்டு சனகாதியர் எல்லோரும் பார்க்கையிலேயே ஆகாய மார்க்கமாகக் கிளம்பினர்.
ப்ருதுவும் அத்யாத்ம உபதேசத்தால் ஏற்பட்ட ஞானத்தால் ஸ்திதப்ரக்ஞராக க்ருஹஸ்தராகவும் சக்ரவர்த்தியாகவும் இருந்த போதிலும் நான் என்ற எண்ணம் இல்லாதவராய் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து வந்தார். அவரது பத்தினியான அர்சிஸ்ஸிடம் அவருக்கு ஒப்பான பத்து புத்திரர்கள் தோன்றினர்.
அத்தியாயம் 23
உரிய காலத்தில் ப்ருது தன் புத்திரியைப்போல் பராமரித்த பூமியை புதல்வர்களிடம் ஒப்படைத்துவிட்டு மனைவி மட்டும் தொடர வனம் சென்றபோது, பூமி பிரிவாற்றாமையாலும் பிரஜைகள் கவலையாலும் ஏங்கினர்.
அங்கு ப்ருது சனத்குமாரர் உபதேசித்த அத்யாத்ம யோகத்தை அனுஷ்டித்தவராய் பரமபுருஷனை ஆராதித்தார். பிறகு சில காலம் சென்ற பின் பகவானை தியானம் செய்தவராய் தன் சரீரத்தை விட்டார்.
பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதையான அவர் பத்தினி அவர் உடலை முறைப்படி சிதையில் ஏற்றி மூன்று தடவைகள் வலம் வந்து தேவர்களை வணங்கி பர்த்தாவி பாதங்களை தியானம் செய்து கொண்டு அக்னியில் பிரவேசித்தாள்.
தேவஸ்த்ரீகள் போற்ற ஆத்மஞானியும் பகவானின் சிறந்த பக்தரும் ஆன ப்ருது அடைந்த லோகத்தை அடைந்தாள்.
மைத்ரேயர் முடிவில் கூறினார்.
பரமபாகவதரான ப்ருதுவின் மகிமை இப்படிப்பட்டது. இதை ச்ரத்தையுடன் எவர் படித்தாலும் , கேட்டாலும் மற்றவருக்கு சொன்னாலும் அவர் ப்ருது அடைந்த உலகை அடைவர்., சம்சாரமாகிய கடலைக் கடக்கும் தோணியான பகவானின் பாதாரவிந்தத்தில் உயர்ந்த பக்தியைப் பெறுவார்.
ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 4 அத்தியாயம் 24 /25
அத்தியாயம் 24
ப்ருதுவிற்குப்பின் புகழ் பெற்ற விஜிதாச்வன் என்னும் புதல்வன் அரசனானான். அவன் இந்திரனிடம் இருந்து எவரும் காணாமல் மறைந்து கொள்ளும் சக்தியைப் பெற்றதனால் அந்தர்தானன் என்னும் சிறப்புப் பெயரை அடைந்தான். அவன் மகன் ஹவிர்தானன். அவனனுடைய புத்திரனான பர்ஹிஷத் கர்ம காண்டத்திலும் யோகத்திலும் சிறந்தவன்.
ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து யாகங்களைச் செய்து தேவதைகளை ஆராதித்ததால் கிழக்கு நுனியாகப் பரப்பப்பட்ட தர்ப்பைகளால் பூமி முழுவதுமே மூடப்பட்டதுபோலாயிற்று. அதனால் அவனுக்கு பிராசீன பர்ஹிஷ் (கிழக்கு நோக்கிய தர்ப்பைப்புல்லை உடையவன்) என்ற பெயர் ஏற்பட்டது. அவனுக்கு சதத்ருதி என்ற மனைவியிடம் பத்து புத்திரர்கள் தோன்றினர். அவர்களுக்கு ப்ரசேதஸ் என்ற பொதுப்பெயர் ஏற்பட்டது.
அவர்கள் தந்தையின் கட்டளைப்படி தவம் செய்ய சமுத்திரத்தை நோக்கிச் சென்றனர். அங்கு ருத்ரரின் உபதேசம் பெற்று பதினாயிரம் வருடங்கள் தவம் செய்தனர்.
( ப்ரசேதஸர்கள் வரலாறு பின்னர் கூறப்படுகிறது. )
அத்தியாயம் 25
பிரசேதசர்கள் தவம் செய்கையில் நாரதர் ப்ராசீன பர்ஹிஷிடம் வந்து ஞானோபதேசம் செய்யலானார்.
" அரசே கர்ம மார்கத்தினால் நீர் அடைய விரும்பும் ஸ்ரேயஸ் என்பது என்ன? துக்க நிவ்ருத்தியும் சுகப்ராப்தியும் என்றால் அது இதனால் கிட்டாது. "
பிராசீன பர்ஹிஷ் மறு மொழி கூறினார் .
" நான் கருமத்திலேயே ஈடுபட்டு இருப்பதால் அதைவிட சிறந்த வழி என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. ஆதலால் கர்மத்தில் இருந்து விடுபடும் மார்க்கத்தை எனக்கு விளக்கியருள வேண்டும். "
நாரதர் கூறலானார்.
இதோ யாகங்களில் உம்மால் தயை இல்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பிராணிகளைப் பாரும். இவை உமது கொடுமையை நினைத்து இறந்தபின் உம்மை இரும்பு போன்ற கொம்புகளால் கொல்லத் தயாராக உள்ளன.
இவ்விஷயத்தில் உமக்கு அறிவுறுத்த பழமையான இதிஹாசக்கதை ஒன்று சொல்லப்போகிறேன். கவனமாகக் கேளும் ." என்ரு கூறி நாரதர் புரஞ்சனோபாக்யானத்தைக் கூற ஆரம்பித்தார்.
ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 25
புரஞ்சனோபாக்யானம்
முன்னொரு காலத்தில் புரஞ்ஜனன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு அவிஞ்ஞாதா என்று ஒரு நண்பன் இருந்தான்.
( புரம் ஜனயதி இதி புரஞ்சன: - புரம் என்றால் சரீரம் . சரீரத்தை ஜனயதி, தன் கர்ம வினையால் உண்டுபண்ணுபவன் அதாவது ஜீவன். . அவிஞ்ஞாதா என்றால் அறியமுடியாதவன் அதாவது இறைவன். அவன் ஜீவனுக்கு என்றும் நண்பனாவான்.)
அவன் ஒருசமயம் நண்பனைப் பிரிந்து தன் ராஜ்ஜியத்தை அமைக்கத் தகுந்த இடம் தேடி அலைகையில் இமயமலை அருகே ஒன்பது வாசலுடனும், நீல ரத்னங்களுடனும் அழகிய மாளிகையுடனும் கூடிய , விரும்பத்தக்க ஒரு நகரைக் கண்டான்.அது நாகர்களின் ராஜதானியாகிய போகவதியை ஒத்திருந்தது.
(நவத்வாரங்கள் கொண்டது சரீரம். நவத்வாரங்கள் என்பது இந்த்ரியங்கள். விரும்பத்தக்க என்றதன் பொருள் நல்ல அங்கங்களுடன் கூடிய சரீரம். ஜீவாத்மா தன் கர்மவினைக்கேற்ப சரீரத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. நீல ரத்னங்கள் நரம்புகளையும் அழகிய மாளிகை ஹ்ருதயத்தையும் குறிக்கும். போகவதி என்ற பெயர் சரீரமானது போகங்களை அனுபவிப்பதற்காக என்பதைக் குறிக்கிறது.)
அங்கு நான்கு கேளிக்கை ஸ்தலங்கள் இருந்தன . ( கண், செவி, நாக்கு, நாசி) நகருக்கு வெளியில் மரங்களும், கொடிகளும், பறவைகளும், வண்டுகளும் கொண்ட உத்தியானங்களைக் கண்டான். ( இவை பந்துக்களைக் குறிக்கின்றன. மரங்கள் அண்டியுள்ளவர்கள்,கொடிகள் பெண்கள், பறவைகள் புத்திரர்கள்,வண்டுகள் அவர்களின் இனிய மொழிகள்.)
அங்கு வனங்களில் காட்டு மிருகங்களும் இருந்தன. ( இவை மனிதனின் செல்வத்தையும் உடைமைகளையும் கவரும் பந்துக்களைக் குறிக்கும். ) இந்தக்காட்டுப்பாதையில் செல்லும்போது குயில்களின் இனிய குரல் கேட்கிறது. ( இது மனிதனை நல்ல வழியில் செல்லாமல் தடுக்கும் உலக ஆசைகள்.)
(இதற்குப் பிறகு மனிதனின் வீழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது.)
அப்போது தற்செயலாக அங்கு வந்த ஒரு உத்தம ஸ்த்ரீயைக் கண்டான். அவளுக்கு பத்து வேலையாட்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு மனைவிகள். ( அந்த ஸ்திரீயே மாயை. பத்து வேலையாட்கள் என்பது பத்து இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும் நூறு ஆசைகளைக் கொண்டவை. ) அவளை ஒரு ஐந்து தலை நாகம் பாதுகாத்து வந்தது. ( பஞ்ச பிராணன்)
புரஞ்சனன் அவளைக் கண்டு மோகித்து அவள் யார் என வினவினான். அதற்கு அவள் பதிலுரைக்கையில்,
" எமக்கோ பிறர்க்கோ யாரிடம் இருந்து வந்தோம் என்பது தெரியவில்லை. நான் இங்கு உள்ளேன் என்பதைத்தவிர கடந்த காலமும் வரும் காலமும் தெரியாது. இந்த நகரம் யாரால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் தெரியாது. இந்த நாகம் நான் தூங்குகையில் இந்த நகரத்தைக் காக்கின்றது. தெய்வ வசத்தால் இங்கு வந்த உமக்கு எல்லா இன்பங்களையும் கூட்டிவைப்பேன்.." என்று கூறினாள்.
பிறகு அவர் இருவரும் அந்தப் பட்டணத்தில் நூறு வருடம் ( மனிதனின் ஆயுள்) இன்புற்று வாழ்ந்தனர். இவ்வாறு கர்மங்களில் பற்றுக்கொண்டவனாய் ஆசைவாய்ப்பட்டு அறிவை இழந்து அவள் எதெதை விரும்பினாளோ அதையே அவனும் விரும்பியவனாக வாழ்ந்தான்.
(தொடரும்)
No comments:
Post a Comment