நாரத பக்தி சூத்ரம் - 3
.சூத்ரம் 3
ஸா அம்ருதஸ்வரூபா ச
இந்த பக்தி அம்ருதத்தை ஒத்தது ( அழிவில்லாதது)
பராபக்தி முக்திக்கொப்பானதாதலால் முக்தியில் ஏற்படும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அதனால் அது அம்ருதத்திற்கு ஒப்பிடப்படுகிறது. ந ம்ருதம் அம்ருதம் , அழிவற்றது.,
இவ்வுலகிலும் விண்ணுலகிலும் அனுபவிக்கும் சுகம் எல்லாம் நிலை அற்றது. மிகவும் புண்ணியம் செய்து தேவலோகம் போனாலும், 'க்ஷீணே புண்ய மர்த்யலோகம்விசந்தி' என்ற கீதையின் வாக்குப்படி புண்யம் தீர்ந்தவுடன் மன்னுலகத்திற்கு வந்துதான் ஆகவேண்டும். மறுபடி யாகயக்ஞாதிகள் தான தர்மங்கள் செய்து புண்ணியம் சம்பாதித்து மறுபடி சுவர்க்கம் போனாலும் இதே கதைதான். இதை ஒரு சமயத்தில் உணர்ந்து மனிதன் திரும்பியே வராத நிலை குறித்து விசாரம் செய்து முக்தி நிலையே அழிவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் என்று உணர்கிறான்.
முக்திக்கொப்பான பக்தி அமுதம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த ஆராவமுதனை சார்ந்திருக்கும் ஆனந்தம் பக்தருக்கு அமுதம் போன்றதல்லவா. அதன் சுவையைப் பருகியவர் 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்ற ஆழ்வார் போல் உணர்கிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் இறைவனை கரும்புச்சாறு என்று கூறுகிறார். அவர் ஒருமுறை விவேகானந்தரிடம் ," நீ ஒரு ஈ என்று நினைத்துக்கொள். உன் முன் ஒரு பாத்திரம் நிறைய கரும்புச்சாறு இருக்கிறது., அதை எப்படி எங்கே இருந்து சுவைப்பாய் ?என்று கேட்க விவேகானந்தர், "அந்தப் பாத்திரத்தின் விளிம்பில் இருந்துதான். இல்லாவிடில் முழுகி விடுவேன் ." என்று சொல்ல அதற்கு ராமகிருஷ்ணர். இறை உணர்வு சச்சிதானந்தம் என்ற கடல். அதில் புகுந்தால் மூழ்கமாட்டாய். அமரத்வம் பெறுவாய்" என்றார்.
இங்கு நாரதர் பக்தியின் மூலம் இவ்வுலகத் துன்பங்களில் இருந்து விடுபடுவதை முக்திக்கு சமமாகக் கூறுகிறார்.
கடோபநிஷத் 'அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர பிரம்ம ஸமச்னுதே ' மனித உடலிள் இருக்கும்போதே இறவா நிலை பெற்று பிரம்மத்தை அடைகிறான் என்று சொல்கிறது. இதற்கு பல மகான்கள் உதாரணம். பூத உடலை நீத்தும் இந்த உலகில் அழியா நிலை பெற்று நம்மை ரக்ஷிக்கின்றனர்.
புருஷ சூக்தம் இதையே சொல்கிறது, 'தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி' என்று.
அம்ருதம் என்ற சொல்லுக்கு அமர கோசம் வேறு சில அர்த்தங்களை சொல்கிறது. ம்ருத அம்ருத என்ற சொற்கள் முறையே கேட்பது , கேட்காதது என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப் படுகின்றன. பக்தி என்பது அம்ருதம் ஏனென்றால் பக்தன் எதையுமே கேட்பதில்லை ஆனாலும் அவனுக்கு கேட்காமலேயே முக்தி சித்திக்கிறது.
அம்ருதம் என்பதற்கு இன்னொரு பொருள் யக்ஞசேஷம், அதாவது யக்ஞத்தில் மிகுந்தது. அதாவது பக்தி என்பது ஒரு யக்ஞம் போன்றது. எப்படி ஒரு யக்ஞத்திற்கு முயற்சி முக்கியமோ அதே போல பக்தி என்பதும் ஒரு கர்மா. மனதில் பக்தி வருவதற்காக நாம் முயற்சிக்க வேண்டும். அதாவது ஸ்ரவணம் கீர்த்தனம் முதலியவை மூலம் பக்தி மனதில் தோன்றுகிறது.
பக்தி செய்தால் முக்தி பெறலாமே என்ற வாக்கின் படி முக்தி என்பது முடிவு. பக்தி என்பது அதை அடையும் பாதை. அந்தப் பாதையில் நம்மை வழிகாட்டுவது அந்தப் பரம்பொருளே . ஆனால் அந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment