நாரத பக்தி சூத்ரம்
சூத்ரம் 4
யத் லப்த்வா புமான் ஸித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி
யத்- எதை, லப்த்வா- அடைந்து , புமான் – மனிதன் , ஸித்தோ பவதி – ஸித்தி (முழுமை) அடைகின்றானோ, அம்ருதோ பவதி- அமரத்வம் அடைகின்றானோ, த்ருப்தோ பவதி- மனத்திருப்தியை அடைகின்றானோ ( அதுவே பக்தி எனப்படும்)
.பக்தன் கேட்பது பக்தி ஒன்றைத்தான் ஆனால் பகவான் அவனுக்கு முக்தியை கேட்காமலேயே கொடுத்து விடுகிறார். அமரத்வம் என்பது இதைத்தான் குறிக்கிறது. பக்தி ஒன்றே பூர்ண திருப்தியைக் கொடுக்கிறது. ஸித்தி என்பது அஷ்டமாசித்திகள் அல்ல. பக்தன் பூரணத்வத்தை அடைகிறான் என்பதுதான் இதன் பொருள். பக்தி, ஞானம் கர்மயோகம் இவைகளில் எந்த வழியிலும் முற்சிப்பவன் சாதகன் எனப்படுகிறான். அதில் முழுமை அடைந்ததும் ஸித்தனாகிறான்.
சங்கரர் சிவானந்த லஹரியில் சொல்கிறார்
நரத்வம் தேவத்வம் நக வன ம்ருகத்வம்
பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வமாதி ஜனனம்
ஸதா த்வத்பதாப்ஜஸ்மரண பரமானந்த லஹரீ
விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயம் இஹ கிம் தேன வபுஷா
. நரத்வம் – மனிதனாகவோ
தேவத்வம்- தேவனாகவோ
நக –மரமாகவோ
வன ம்ருகத்வம் – காட்டுமிருகமாகவோ
பசுத்வம்- பசு முதலிய சாது பிராணியாகவோ
கீடத்வம்- புழுவாகவோ
விஹகத்வமாதி ஜனனம்- பறவையாகவோ ஜன்மம்
பவது- இருக்கட்டும்
ஸதா – எப்போதும்
த்வத்பதாப்ஜஸ்மரண- உன் சரண கமலத்தின் நினைவு என்ற
பரமானந்த லஹரீ – எல்லையில்லாத ஆநந்தக் கடலில்
விஹார அஸக்தம் சேத் ஹ்ருதயம் – மனம் சஞ்சரிக்க முடியாவிடில்
இஹ கிம் தேன வபுஷா- இந்த தேஹத்தினால் என்ன பிரயோஜனம்?
பாகவதத்தில் உத்தவரிடம் கிருஷ்ணர் கூறுகிறார், பகவானிடத்தில் தன ஹ்ருதயத்தை சம்ர்ப்பித்த பக்தன் பிரம்ம பதத்தையோ இந்திரபதவியையோ, அரசபதவியையோ வேண்டுவதில்லை, என்று.
இதையே நிரூபிக்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்,
பச்சைமாமலை போல் மேனி பவழவாய் கமலச்செங்கண்.
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமாநகருளானே
என்ற பாசுரத்தில்.
புமான் அதாவது மனிதன் என்ற சொல் இந்த சூத்திரத்தில் மனிதப் பிறவி எடுத்தோர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.,இதில் இரு பாலரும் அடக்கம் எல்லா வர்ணத்தாரும் அடக்கம்.
No comments:
Post a Comment