ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 22, 23
அத்தியாயம் 22
ப்ருது ராஜனை மக்கள் இவ்வாறு போற்றுகையில் சூரியனைப் போல் தேஜசுடன் சனகாதியர் அங்கே பிரவேசித்தனர். ப்ருதுவும் அவர்களை முறைப்படி வணங்கி பூஜித்துக் கூறினார்.
"யோகிகளுக்கும் அரிதான் உங்கள் தரிசனம் எனக்குக் கிடைத்தது என் பாக்கியம். அடியார்களின் திருவடித்தீர்த்தம் கிடைக்க பெற்ற கிருஹஸ்தர்கள் ஏழையாக இருப்பினும் செல்வந்தர்களே. அது கிடைக்காதவர் செல்வம் நிறைந்து இருந்தாலும் கொடிய பாம்புகள் நிறைந்த காட்டு மரங்களைப் போன்றவர்களே.
முனிஸ்ரேஷ்டர்களே உங்கள் வரவு நல்வரவாகுக. பாலர்களாயினும் ஆத்மாராமர்களான உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தாபத்தை அடைந்தவ்ர்களுக்கு இரங்குபவர்கள் ஆகிய உங்களிடம் பரமவிச்வாசத்துடன் நான் கேட்க விரும்பியது என்னவென்றால் இந்த சம்சாரத்தில் எவ்விதம் எளிய முறையில் க்ஷேமம் உண்டாகும்?
ஞானிகளின் ஆத்மாவாகவும் பக்தர்களின் உள்ளத்தில் பகவானாகவும் உள்ள அவரே அடியார்களுக்கு அனுக்ரஹிக்க உங்களைப் போன்றவர்கள் உருவில் சஞ்சரிக்கிறார் என்பது திண்ணம்."
சனத்குமாரர் மறுமொழி கூறலானார்.
"உலக விஷயத்தில் வைராக்கியம், ஆத்மச்வரூபத்தில் பற்று இவைதான் மனிதர்களின் க்ஷேமத்திற்குக் காரணம். இது ஸ்ரத்தை, தத்துவ விசாரம், ஞான யோக நிஷ்டை, பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஹரிகுணமாகிய அம்ருதத்தில் விருப்பம், ஹரிகுணகானத்தால் வளரும் பக்தி, உலக இச்சைகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விலகல், இவை மூலம் தானாகவே எளிதில் ஏற்படும். "
இவ்வாறு கூறி, ப்ருதுவால் பூஜிக்கப் பட்டு சனகாதியர் எல்லோரும் பார்க்கையிலேயே ஆகாய மார்க்கமாகக் கிளம்பினர்.
ப்ருதுவும் அத்யாத்ம உபதேசத்தால் ஏற்பட்ட ஞானத்தால் ஸ்திதப்ரக்ஞராக க்ருஹஸ்தராகவும் சக்ரவர்த்தியாகவும் இருந்த போதிலும் நான் என்ற எண்ணம் இல்லாதவராய் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து வந்தார். அவரது பத்தினியான அர்சிஸ்ஸிடம் அவருக்கு ஒப்பான பத்து புத்திரர்கள் தோன்றினர்.
அத்தியாயம் 23
உரிய காலத்தில் ப்ருது தன் புத்திரியைப்போல் பராமரித்த பூமியை புதல்வர்களிடம் ஒப்படைத்துவிட்டு மனைவி மட்டும் தொடர வனம் சென்றபோது, பூமி பிரிவாற்றாமையாலும் பிரஜைகள் கவலையாலும் ஏங்கினர்.
அங்கு ப்ருது சனத்குமாரர் உபதேசித்த அத்யாத்ம யோகத்தை அனுஷ்டித்தவராய் பரமபுருஷனை ஆராதித்தார். பிறகு சில காலம் சென்ற பின் பகவானை தியானம் செய்தவராய் தன் சரீரத்தை விட்டார்.
பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதையான அவர் பத்தினி அவர் உடலை முறைப்படி சிதையில் ஏற்றி மூன்று தடவைகள் வலம் வந்து தேவர்களை வணங்கி பர்த்தாவி பாதங்களை தியானம் செய்து கொண்டு அக்னியில் பிரவேசித்தாள்.
தேவஸ்த்ரீகள் போற்ற ஆத்மஞானியும் பகவானின் சிறந்த பக்தரும் ஆன ப்ருது அடைந்த லோகத்தை அடைந்தாள்.
மைத்ரேயர் முடிவில் கூறினார்.
பரமபாகவதரான ப்ருதுவின் மகிமை இப்படிப்பட்டது. இதை ச்ரத்தையுடன் எவர் படித்தாலும் , கேட்டாலும் மற்றவருக்கு சொன்னாலும் அவர் ப்ருது அடைந்த உலகை அடைவர்., சம்சாரமாகிய கடலைக் கடக்கும் தோணியான பகவானின் பாதாரவிந்தத்தில் உயர்ந்த பக்தியைப் பெறுவார்
No comments:
Post a Comment