ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 4-அத்தியாயம் 21
ப்ருது மகாராஜா ராஜ்ஜியத்திற்குத் திரும்பி மக்களால் வரவேற்கப்பட்டு மிகவும் சிறப்பாக ராஜ்யபரிபாலனம் செய்தார். மக்களுடைய தேவைகளை எல்லாம் நன்கு பூர்த்தி செய்த அவருடைய புகழ் திக்கெங்கும் பரவிற்று. அவருடைய ராஜ்யமானது உலகெங்கும் விஸ்தரிக்கப்பட்டு விளங்கியது.
புண்ய வசத்தால் கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் உள்ள க்ஷேத்திரத்தில் பற்றற்று வசித்து வந்த ஒரு சமயம் சத்ரயாகம் செய்கையில் அங்கு குழுமியுள்ள தேவர்கள் பிரம்மரிஷிகள் ராஜரிஷிகள் அனைவர் முன்னிலையில் கூறியது.
" சபையோர்களே கேளுங்கள். இங்கு எழுந்தருளியுள்ள சாதுக்களாகிய உங்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.தருமத்தை அறிய விரும்புவோர் தமது அபிப்பிராயத்தை சாதுக்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.,அதனால் பேசத் துணிகிறேன்.
நான் பிரஜைகளை சிக்ஷிப்பதற்கும் ரக்ஷிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் அரசனாக நியமிக்கப்பட்டுள்ளேன். எந்த அரசன் மக்களை தருமவழியில் அழைத்துச் செல்லாமல் அவர்களிடம் இருந்து வரியை மட்டும் வசூலிக்கிறானோ அவன் அவர்களின் பாவத்தை சுமந்து ஐஸ்வர்யத்தை இழக்கிறான்.ஆகையால் பிரஜைகளே உங்கள் ஸ்வதர்மத்தை பகவதர்ப்பண புத்தியுடன் அனுஷ்டிப்பீராக. அதுதான் எனக்கு நீங்கள் அளிக்கும் வெகுமதியாகும்.
தூய மனதுள்ள பித்ருக்களும் தேவர்களும் ரிஷிகளும் ஆகிய நீங்கள் என்னை ஆமோதிக்க வேண்டும்.அந்தணர்கள் , அடியார்களுடன் பகவான் ஜனார்தனனும் எனக்கு அருள் புரிய வேண்டும்.நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனும் நல்லொழுக்கமே செல்வமாக உடையவனும், நல்லோரைத் துணையாகக் கொண்டவனுமான மனிதனை சம்பத்துக்கள் நாடி வருகின்றன."
இவ்வாறு கூறிய அரசனிடம் சாதுக்கள் மகிழ்ச்சி அடைந்து 'நன்று நன்று' எனக் கொண்டாடினர் .
அவனுடைய பிரஜைகள்,
"சத்புத்திரனால் பிதா பாவியானாலும் நற்கதி அடைகிறான் என்பது நிரூபணம் ஆயிற்று. சாபம் பெற்று உயிரிழந்த பாவியான வேனனும் ஹிரண்ய கசிபு ப்ரஹ்லாதனைப் பெற்றது போல் உம்மைப் புத்திரனாகப் பெற்றதால் நற்கதி அடைந்தான். பிராரப்த கர்மத்தால் சம்சாரத்தில் உழலும் எங்களைப் போன்றவர்களும் உம்மால் கரையேற்றப் பட்டோம். எந்த பகவான் க்ஷத்ரியர்கள் வேதம் ஓதுவோர் இவர்களுள் புகுந்து உலகை ரக்ஷிக்கிறாரோ அந்த சத்வ குணம் மிகுந்த பரம புருஷராகிய உங்களுக்கு நமஸ்காரம் " என்று அவரை வாழ்த்தினர்
No comments:
Post a Comment