அம்பாள் கடாக்ஷம்:
அம்பாள் கடாக்ஷம் ஒரு க்ஷணமாவது ஒருத்தர் மேல பட்டா என்ன ஆகும்!!? ஶ்ரீ முத்துஸ்வாமீ தீக்ஷிதர் ரொம்ப விஷேஷமா கமலாம்பா நவாவரண பைரவீ கீர்த்தனையோட சரணத்தின் முடிவில் சொல்றார்
"அனாதிமாயாऽவித்யா கார்ய காரண வினோத கரண படுதர கடாக்ஷவீக்ஷண்யா:"
"எப்படி தோன்றியதுன்னு சொல்ல முடியாத ஆத்யந்தம் இல்லாத மாயையையும் அவித்யையையும், அதன் காரணங்களையும் , விளைவுகளையும் வேரோட அழிக்கக்கூடிய மிகத் திறமை வாய்ந்த கடாக்ஷம் பொருந்தியவள்" அப்டீங்கறார்
கடாக்ஷ வீக்ஷண்யம் பட்ட மாத்ரத்ல அவித்யையும் மாயையும் அழிந்து அத்விதீய மோக்ஷம் ஸித்திக்கும்னா இவளை விட தெய்வம் உண்டோ??!!
மூகாசார்யாளும் இதையே சொல்றார்
"சிவ சிவ பச்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீ கடாக்ஷிதா: புருஷா:
விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம்ச யுவதி பிம்போஷ்டம்"
"ஸ்ரீகாமாக்ஷியால் கடைக்கண்ணால் பார்க்கப்பட்டவர்களுக்கு, காடும், வீடும், விரோதியும், நண்பரும், பெண்களுடைய கொவ்வைச் செவ்வாயின் உதடுகளும், மண் ஓடும், சமமாகவே தெரியுமாம். இது விந்தையிலும் விந்தை! காமாக்ஷியின் கடைக்கண் பார்வையுற்றவர்கள், அபேத பாவம் ஒழிந்து ஸமத்ருஷ்டி கொண்டவர்களாக இருக்கிறார்கள்"
அப்படி ஸமத்ருஷ்டி ஸித்திப்பதே ஶ்ரீபராசக்தி கடாக்ஷத்தின் பலன்!!
அல்லியிதழ் போல ஒளிரும் கண்களது கடாக்ஷம் கிட்டிய மாத்ரத்தில் பரதேவதையை உபாஸிக்கறவா ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ராளாய் ஆய்டறாளே
திவ்ய மங்கலா த்யானம் சொல்றது
"ஸக்ருத் ச்ரவண மாத்ரேன விரிஞ்சாதி பதப்ரதாம்"!! நினைச்ச க்ஷணத்ல ப்ரஹ்ம விஷ்ணு சிவனது பதவியையும் கொடுப்பவள் ஸாக்ஷாத் அம்பாள்.
ஹைமவதியான இவளது கடாக்ஷமே ஞானத்திற்கு காரணம்!! அஞ்ஞானத்தை அழிக்கற மஹாசக்தி இவள் கிட்டயே தானே இருக்கு!!
மூகாச்சார்யாள் செப்புவார்
"கல்லோலிதேன கருணாரஸ வேல்லிதேன
கல்மாஷிதேன கமனீய ம்ருதுஸ்மிதேன
மாமஞ்சிதேன தவ கிஞ்சன குஞ்சிதேன
காமாக்ஷி தேன ஶிஶிரீகுரு வீக்ஷிதேன"
"காமாக்ஷியே! நிரம்பிய கருணை ரசத்தின் அசைவினால் (கருணைக் கடலலைகளால்) ப்ரவஹிப்பதும், அழகான புன்சிரிப்பினால் பல நிறங்களோடு கூடியதாகத் தோன்றுவதும், வளைந்ததும், சிறிதே குறுகியதுமான உன்னுடைய அப்படிப்பட்ட பார்வையினால் என்னைக் குளிரச் செய்வாயம்மா! (கருணை சிவப்பாகவும், புன்சிரிப்பு வெண்மையாகவும் உருவகிக்கப்பட்டு, இரண்டின் கலப்பும் பலவர்ணங்களைத் தோற்றுவிப்பன)"
அக்கடாக்ஷமே ஸர்வத்தையும் அளிக்கும்!!
* மீன் தனது குஞ்சுகளை ரக்ஷிப்பது போல் குழந்தைகளான நம்மை ரக்ஷிப்பதால் இவள் "மீனாக்ஷி".
* ஸரஸ்வதியையும் லக்ஷ்மியையும் இரு கண்களாய்க் கொண்டு ஞானம் செல்வம் இரண்டொடும் க்ஷணத்தில் மோக்ஷமளிப்பதால் இவள் "காமாக்ஷி".
* விசாலமான நேத்ரங்களால் மனதின் ஆழத்தையும் அறிந்து கொண்டு கேட்பதை விட வரமதிகம் அளிப்பதால் இவள் "விசாலாக்ஷி"
* தாமரையைக் கண்ணில் வைத்தால் தனது குழந்தைகள் தர்சிக்க முடியாது கூசுமோ என அஞ்சி அல்லியை கண்ணில் வைத்ததால் இவள் "நீலாயதாக்ஷி"
* மானின் மருண்ட பார்வை போல், தன் குழந்தைகளை ரக்ஷிக்கும் கவலையோடு அசைந்து கொண்டே இருக்கும் நேத்ரங்கள் உடையதால் இவள் "வனஜாக்ஷி"
* ஞானிகள் மாத்ரமே தர்சிக்கும் பெருமை கொண்ட தாமரையிதழ் போன்ற கண்ணியாதலால் இவள் "கமலாக்ஷி".
* இந்த்ரனால் ஸேவிக்கப்பட்டு அவன் அளவு கடந்த பாபத்தையும் மன்னித்து, இந்த்ரனையும் ரக்ஷித்ததால் இவள் "இந்த்ராக்ஷி"
நேத்ரங்களைக் கொண்டே ஆதிசக்தியான லலிதாம்பிகையின் நாமங்கள் இவை!!
மறுபடி முத்துஸ்வாமி தீக்ஷிதரையே சரணமடைவோம்
சங்கராபரண ராக கமலாம்பா ஆவரண கீர்த்தனை பல்லவியில் சொல்றார்
"ஸ்ரீ கமலாம்பிகயா கடாக்ஷிதோऽஹம்
ஸச்சிதானந்தபரிபூர்ண ப்ரஹ்மாஸ்மி"
"ஆதிசக்தியான ஶ்ரீகமலாம்பாள் கடாக்ஷத்துக்கு ஒருக்ஷணம் நான் பாத்திரமாயிட்டேன். அதனால் ஸத் சித் ஆனந்தமயமான பரிபூர்ண ப்ரஹ்மமான ஶ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியான கமலாம்பிகையாகவே ஆனேன்"
தேவி கடாக்ஷ வீக்ஷண்ய மஹிமையை இதை விட வேறு யாரால் கூற முடியும்.
வேதாந்த ஞான விசாரம் மஹா ஞானிகளுக்கே ஸாத்யம். பாமரனையும் ஞானி ஆக்கும் பராசக்தி கடாக்ஷம்!!! அக்கடாக்ஷ வீக்ஷண்யத்தாலன்றோ பஞ்ச ப்ரஹ்மங்களும் தத்தம் தொழிலைச் செய்வது!!
அப்பராசக்தியின் திருவடிகளையே சரணமடைவோம்!!!
No comments:
Post a Comment