Sunday, December 31, 2017

Ashtapadi in tamil part2

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி-2

அஷ்டபதி 2
இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.

1.ச்ரிதகமலாகுசமண்டல த்ருதகுண்டல 
கலிதலலிதவனமால
ஜய ஜயதேவ ஹரே

.ச்ரிதகமலாகுசமண்டல- ஸ்ரீதேவியின் மார்பின் அணியானவனே

த்ருதகுண்டல –குண்டலம் தரித்தவனே

கலிதலலிதவனமால- வனமாலை அணிந்தவனே

ஜய ஜயதேவ ஹரே-இது த்ருவ பதம் என்று சொல்லப்படுகிறது,.கவியின் முத்திரையாய் எல்லா ஸ்லோகங்களுக்கும் கடைசி வரியாய் இருக்கிறது.

முதல் அஷ்டபதியில் கண்ணனை நாராயணனாக வர்ணித்தாயிற்று. இதில் புருஷகாரபூதையான ஸ்ரீயை குறிப்பிடுகிறார், ஸ்ரீதேவியின் மார்பின் அணியானவன் என்று. . கடைசி ஸ்லோகத்தில் கூறியுள்ளபடி அவளை முன்னிட்டுக்கொண்டுதான் பகவானை சரணடைய வேண்டும் என்ற சம்ப்ரதாயத்தை ஒட்டி.

குண்டலம் தரித்து, வனமாலையுடன் கண்ணனின் அழகைக் காண்கிறோம். கையில் குழல் முன்னுச்சியில் மயிற்பீலியுடன் அவனை கற்பனை செய்கிறோம்.

2. தினமணிமண்டன பவகண்டன
முநிஜனமானசஹம்ஸ
ஜய ஜயதேவ ஹரே

தினமணிமண்டன -சூரியனுக்கு அலங்காரம்ஆனவனே 
பவகண்டன- சம்சார துக்கத்தை போக்குபவனே 
முநிஜனமானஸஹம்ஸ- முனிவர்களின் மனமாகிய மானஸரோவரில் நீந்தும் ஹம்ஸமானவனே . ( ஹம்சம் மானஸரோவரில் இன்புற்றிருப்பது போல முனிவர்கள் மனதில் பிரகாசிக்கிறான்.)

சூர்ய மண்டல மத்ய வர்த்தி, என்று பிரம்மத்தை சூரியமண்டலத்தின் உள்ளே இருப்பதாக வேதம் கூறுகிறது. எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவான நாராயணன் சூரியனுக்குள்ளும் இருக்கிறான் என்பது பொருள். மேலும், 'தஸ்ய பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி,' சூரியன் மற்றும் எல்லா பிரகாசத்திற்கும் ஒளியாய் இருப்பது பிரம்மமே என்ற உபநிஷத் வாக்கியத்தையும் இங்கு நினைவு கூறுகிறோம்.

3.காளியவிஷதரகஞ்சன ஜனரஞ்சன
யதுகுலநளினதிநேச 
ஜய ஜயதேவ ஹரே

காளியவிஷதரகஞ்சன – காளியனாகிய பாம்பை அடக்கி
ஜனரஞ்சன—ஜனங்களை மகிழ்வித்தவனே 
யதுகுலநளினதிநேச- யதுகுலம் என்ற தாமரைக்கு சூரியன் போன்றவனே . யதுகுலத்தின் துயரைப் போக்கி அதை விகசிக்க செய்தவன்

4.மதுமுரநரகவினாசன கருடாஸன
ஸுரகுலகேளிநிதான
ஜய ஜயதேவ ஹரே

மதுமுரநரகவினாசன- மது, முரன், நரகன் இவர்களை அழித்து
கருடாஸன-கருடனை வாகனமாகக் கொண்டு 
ஸுரகுலகேளிநிதான- தேவர்களை மகிழ்வித்தவனே

5.அமலகமலதள லோசன பவமோசன
த்ரிபுவனபுவனநிதான
ஜயஜயதேவ ஹரே

அமலகமலதள லோசன-அழகான தாமரைக்கண் உடையவனே 
பவமோசன-பிறவித்துன்பத்தில் இருந்து விடுவிப்பவனே 
த்ரிபுவனபவனநிதான- மூவுலகையும் படைத்து அதன் கண் நிற்பவனே

மூவுலகும் அவனிடம் இருந்து உண்டானதும் அன்றி அவனுடைய இருப்பிடம் ஆகவும் உள்ளது, நாராயணன் என்ற சொல்லுக்கு எல்லாம் அவனிடம் உள்ளது , எல்லாவற்றிலும் அவன் உள்ளான் என்று பொருள்.
துஷ்ட நிக்ரகம் சிஷ்ட பரிபாலனம் முன் ஸ்லோகத்தில் கூறப்பட்டது. இதில் அவன் அதோடு நிற்கவில்லை. ஜீவர்களை பிறவித்துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தியை அளிக்கிறான் என்று இதில் கூறப்பட்டுள்ளது. எப்படி? அவனுடைய தாமரைக்கண் பார்வையிலேயே நம்மைக் கடைத்தேற்றுகிறான்.

6.ஜனகஸுதாக்ருத பூஷண ஜிததூஷண
ஸமரசமித தசகண்ட
ஜயஜயதேவ ஹரே

ஜனகஸுதாக்ருத பூஷண-ஜனககுமாரியான சீதைக்கு அணிகலன் போன்றவனே 
ஜிததூஷண- தூஷணனை வென்றவனே (காம்க்ரோதம் முதலிய எல்லா தோஷங்களையும் வென்றவனே)
ஸமரசமித தசகண்ட- ராவணனைக் கொன்றவனே

இங்கு சீதையின் அணிகலன் என்று சொல்லி தூஷணனை வென்றவன் என்று அடுத்து வருவது வால்மீகி ராமாயணத்தில் கர தூஷணர்களையும் அவர் சைன்யத்தையும் ராமன் ஒருவனாக நின்று அழித்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சீதை ராமனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்து அவனை ஆரத்தழுவுகின்றாள். அப்போது அவளை காட்டுக்கு அழைத்துச்செல்ல ராமன் மறுத்தபோது "ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்,"? "என்தந்தை ஒரு ஆண் வேடமிட்ட பெண்ணையா மருமகனாகப் பெற்றார்" என்று கூறினாள் அல்லவா அதை நினைவுகூர்ந்து கண்ணீர் பெருக அவன் விழுப்புண்களைப் போக்க விரும்பினவள் போல் ஆரத்தழுவினாள்.

7. அபிநவஜலதரசுந்தர த்ருதமந்தர
ஸ்ரீமுக சந்த்ர சகோர
ஜய ஜயதேவ ஹரே

அபிநவஜலதரசுந்தர –நீருண்டமேகம்போல் அழகானவனே 
த்ருதமந்தர—மந்தர மலையைத் தாங்கினவனே 
ஸ்ரீமுக சந்த்ர சகோர—ஸ்ரீதேவியின் முகமாகிய சந்திரனுக்கு சகோரபட்சி போன்றவனே

அபிநவ ஜலத என்றால் அப்போது நீருண்ட மேகம் , அதாவது அவனுடைய கருணை எப்போதும் வற்றாத நீருண்டமேகம் என்று பொருள்.

மந்தரமலையை தாங்கினவன் என்பது அவன் வற்றாக் கருணைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

மந்தரமலையை கருடன் மேல் ஏற்றி ஆமை உருவில்அதை சுமந்து அதன் மேல் கையால் பிடித்துக் கொண்டு கடைபவர்களை ஊக்குவித்து வாசுகியை உள்ளிருந்து பலமூட்டி அமிர்தத்தை பங்கிட்டு இன்னும் என்னதான் அவன் செய்யவில்லை?

அவன் கருணையின் எல்லை தயையே உருவான மகாலக்ஷ்மியை தன் மார்பில் சுமந்து ஹ்ருதயத்தை தயையின் இருப்பிடமாகச் செய்தது. 
அதனால் லக்ஷ்மியின் சந்திர வதனத்தின் அம்ருதத்தைப பருகும் சகோரபட்சி ஆகிறான்.

கடைசி ஸ்லோகத்தில் கிருஷ்ணனை சரணம் அடைதல் சொல்லப் படுகிறது.

8.தவ சரணம் பிரணதா வயம் இதி பாவய 
குரு குசலம் ப்ரணதேஷு 
ஜய ஜயதேவ ஹரே

.தவ சரணம் – உன் சரணத்தை 
பிரணதா வயம்- நமஸ்கரிக்கிறோம்
இதி பாவய – என்று அறிவாயாக 
ப்ரணதேஷு-வணங்குபவர்க்கு
குரு குசலம்- நன்மை அளிப்பாயாக.

ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம் குருதே முதம் 
மங்களம் உஜ்வல கீதம் 
ஜயஜயதேவஹரே 
ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்-ஜெயதேவ கவி செய்த இந்த கவிதை 
குருதே முதம்-மகிழ்ச்சி அளிக்கிறது
மங்களம் உஜ்வல கீதம்-மங்களமானதும் உயர்வானதும் ஆகியது.


No comments:

Post a Comment