உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*தல எண் 161*
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*☘வைத்தியநாதர் திருக்கோவில், திருபுள்ளிருக்குவேளூர். (வைத்தீஸ்வரன்கோவில்)*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில், இத்தலம் பதினாறாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* வைத்தியநாதர்.
*இறைவி:*
தையல்நாயகி.
*தல விருட்சம்:* வேம்பு.
*தல தீர்த்தம்:* சித்தாமிர்தக் குளம். (இத்திருக்குளத்தில் தவளைகள் இருப்பதில்லை. உருவாகுவது இல்லை.)
*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*பதிகம்:*
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும்.
திருஞானசம்பந்தர்-இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம். ஆக இத்தலத்திற்கு கிடைத்தது மொத்தம் மூன்று தேவாரங்கள்.
தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது.
இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக இருநூற்று எழுபது கி.மி. தொலைவில் இருக்கிறது.
சீர்காழியில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவில் உள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.
நவக்கிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்,
வைத்தீஸ்வரன்கோவில்.
வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல்,
சீர்காழி வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 117
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 5.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு *பிரார்த்தனைத்* தலமாகும்.
*பெயர்க்காரணம்:*
சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனார் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார்.
இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்பது கண்கூடு.
இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.
*☘கோவில் அமைப்பு:*
நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழப்பெற்று, கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.
பேருந்தை விட்டிறங்கி ஆலயத்தை நோக்கிச் செல்கையில் முதலில் கிழக்கு நோக்கிய இராஜகோபுயத்தைக் காணவும்.....
*சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.
கிழக்கில் உள்ள இந்த இராஜகோபுரம் ஏழு நிலைகளைத் தாங்கி கம்பீரமாக காட்சி தந்தது.
ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றோம். இங்கு வேப்ப மரம் இருந்தன. இதுவே இத்தலத்தின் தலவிருட்சம்.
இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு இருந்தார். குனியப் பணிந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இதெனெதிரில் வீரபத்திரர் சந்நிதி இருந்தது. இவரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.
இதையடுத்து இடப்புறத்தில் சித்தாமிர்தகுளம் இருக்கிறது. இங்கு வந்து தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.
மேற்கு ராஜகோபுரத்தைக் கண்டு வணங்கி, இக்கோபுர வாயில் வழியாக உள் புகவும், மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு சந்நிதி காட்சியருளிக் கொண்டிருந்தது.
சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் இருந்தன. இரண்டு கொடி மரத்தை மும் ஐஒருசேர வணங்கிக் கொண்டு, ஈசன் வைத்தியநாதர் முன் பிரசன்னமானோம்.
சிறியலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு கைதோழுது வணங்கிக் கொண்டோம்.
அவரின் பேரருளைப் பெற நாம் வாழ்வில் புண்ணியம் ஒன்று செய்திருக்க வேண்டும் என நாம் எண்ணிக் கொண்டோம்.
காரணம், இவ்வாலயத்தை தரிசிக்க வேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியிருந்தோம்.
பல தடவைகள் தள்ளிப் போயின. புறப்பட்டுப்போக வாய்ப்பு தவறிக் கொண்டே வந்தது.
இவ்வாலயம் வர நினைத்த நினைப்பு, சுமார் நான்கு வருடங்களாவது இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் எங்களுக்கு அமைந்தது.
இதைத்தான் சொல்வார்கள். *"அவன் அருள் வேண்டுமென்று"* அவனை வணங்குவதற்குக்கூட அவன் அருள் சத்தியமாக வேண்டும். இல்லையென்றால் இல்லவே இல்லை. சிவ சிவ.
வைத்தயநாதரின் தரிசனத்தைக் கண்குளிரக் கண்டு தரிசித்தோம். நோயொன்று இல்லா வாழ்வைத் தருவாய் என, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.
தீபாராதனைக்குப் பின், அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்து இறைவி இருக்கும் சந்நிதிக்கு வந்தோம்.
இறைவி தையல்நாயகியின் தெற்கு நோக்கிய வண்ணம் அருளாட்சி தந்து கொண்டிருந்தாள். தரிசித்து வணங்கி அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தர வணங்கிக் கைதொழுது தொடர்ந்தோம்..
இந்த முத்துக்குமாரசாமியே, அசுரனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்றவர்.
குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.
அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.
கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும்.
அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறுவதாக இவ்வாலயத் தரிசனத்திற்கு வந்திருந்தோர் கூறக் கேட்டோம்.
இவ்விதம் நடைபெறும் வழிபாட்டுக்கு *புழுகாப்பு* என்று பெயர்.
*இப்புழுகாப்பு தரிசனம்* மேன்மையும் சிறப்பும் கொண்டது.
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் வரும்போது, சடாயு குண்டம் என்ற இடம் இருந்தது.
சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்குமாம்.
இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி இருக்க, வணங்கி நகர்ந்தோம்.
மற்றும், வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, ஆகியோர் சந்நிதிகளுக்கும் முன் வந்து நின்று வணங்கிப் பணிந்தோம். தொடர்ந்தோம்.
அடுத்து, நடராஜர் சபையில் இவரைக் கண்டு வணங்கினோம். இவருடன் சிவகாமியம்மையும், மாணிக்கவாசகரும், காரைக்கால் அம்மையாரும் உடன் இருந்தனர்.
நடராஜனின் ஆடல் நிலைக்கோலத்தைக் கண்டு, ஆனந்தத்தில் கண்ணீர் உகுத்தோம்.
உம்மை எத்தனை தடவையல்ல.... எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், உன்னை வணங்கிய பசி தீராது.
எனவே சிறுது நேரம் இவன் முன் அமர்ந்து தியாணித்து விட்டு, பின் எழுந்து வணங்கி, விடைகேட்டுப் பிரிந்தோம்.
மனமில்லா வெறும் கூடுவுடனே ஆலத்தை வலம் செய்து, வணங்கிக் கொண்டிருந்தோம்.
நம் மனமெல்லாத்தையும் அவன் பிடுங்கிவிட்டிருந்தான் பாசமிகு நாடராஜன்.
அடுத்து, துர்க்கை சந்நிதிக்கு வந்து வணங்கி நகர்ந்தோம்.
ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்தும், சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாக இருக்க தொடர்ந்து ஒவ்வொருவரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்..
சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பாரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும்.
செவ்வாய், இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு.
செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார் என்று அருகிருந்தோர் கூறினர்.
இது முன்னமே தெரிந்திருந்தால் ஒரு நாள் கழித்தே புறப்பட்டு வந்திரப்போம். நமக்கு கொடுப்பினை இல்லாததால் புதன் கிழமை புறப்பட்டு வந்திருக்கிறோம். சிவ சிவ.
இத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தந்திருக்கின்றனர்.
இத்தலம் ஒரு கோளிலித் தலம்.
இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை.
நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர்.
இத்தலத்தில் மூலவரை வணங்கினால் மட்டும் போதும்!. நவகிரகங்களை வணங்க வேண்டியதில்லை.
நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
*☘விளக்கழகு:*
இத்திருக்கோயில் விளக்கு, அழகுக்கு பெயர் பெற்றது.
வினை தீர்த்தான் கோயில் விளக்கழகு என்பது பழமொழி.
*☘திருச்சாந்துருண்டை:*
எல்லா வகையான நோய்களையும் தீர்த்து வைக்கும் மருத்துவ பீடமான இங்கு கொடுக்கப்படும் *'திருச்சாந்து'* என்ற மருந்து, எந்த விதமான நோய்களையும் குணமாக்கித் தருகிறது.
வைத்தியநாதர் தன்னை வணங்குவோரின் பிறவிப்பிணியை மட்டுமின்றி, உடல் சம்பந்தமான நோய்களையும் தீர்த்து வைக்கிறார்.
இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
*☘தல அருமை:* நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் ஒருமுறை வெண் புள்ளி நோயால் பாதிக்கப்பட்டான்.
தன் திரேகத்திலுள்ள நோய் தீர ஈசனை சரணடைந்தான்.
சிவனும், பூலோகத்திலுள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி வழிபட்டால் உன் திரேக நோய் குணமடையும் என்றார்.
வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்த அந்த குளத்தில், அங்காரகன் நீராடினான். சிவனை வணங்கினான். சிவன் அவருக்கு திருச்சாந்து என்னும் மருந்து கொடுத்தார்.
அவரின் வெண் புள்ளியை குணமடைந்து திரேகத்தைவிட்டு ஒழிந்து நீங்கிப் போனது.
*☘முதன்மை பூஜை முருகனுக்கே":*
அர்த்த ஜாம பூஜையில் தினமும் இத்தல முத்துக்குமாரசுவாமி முருகனுக்கு புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால்சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை நடக்கும்.
முத்துக்குமார சுவாமிக்கே இங்கு அனைத்து விழாக்களும் நடத்தப்படுவதால், முதல் பூஜை முருகனுக்கே அளிக்கப்படுகிறது.
வைத்திய நாதரை வழிபாடு செய்து அருள் பெற்ற ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமர் இங்குள்ள விபூதி குண்டத்தில் சிதை அடுக்கி ஜடாயுவின் உடலை தகனம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.
*☘அரிய தகவல்:*
இந்த அற்புத திருத்தலத்திற்கு நீங்கள் ஒரு முறை சென்று வணங்கி, உங்களின் பிறவிப் பிணி மற்றும் உடல் பிணிகள் நீங்கப்பெற்று பெருவாழ்வு பேறு பெறுங்கள்.
முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர்.
தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர்.
கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது.
*☘சம்பந்தர் தேவாரம்:*
1.☘கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
2.☘தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
3.☘வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.
4.☘மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்
ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
5.☘கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.
6.☘திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.
7.☘அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.
8.☘பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
9.☘வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.
10.☘கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
🙏🏾சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
11.☘செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.
🙏🏾குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்கண்ணார்கோவில்.(குறுமானக்குடி.)*
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment