Wednesday, November 29, 2017

Brahmapureeswarar temple Sirkazhi

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_________________________________________

*159*

*தேவாரம் பாடல் பெற்ற தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🌾பிரம்மபுரீசுவரர் கோவில், சீர்காழி.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இத்தலப் பதிவு நீளம் கருதி நேற்றும் இன்றும் தொடர்ந்து பதியப்பட்டது. இன்றைய பதிவில் திருமுலைப்பால் திருவிழாவை தரிசிக்கத் தவறாதீர்கள்!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களில் இத்தலம் பதினான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌾இறைவன்:* பிரம்மபுரீசுவரர், தோணியப்பர்,  சட்டைநாதர்.

*🌾இறைவி:* பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி.

*🌾தல விருட்சம்:* பாரிஜாதம், பவளமல்லி.

*🌾ஆகமம்:* பஞ்சாத்திர ஆகமம்.

*🌾ஆலயப் பழமை:*
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*🌾தீர்த்தங்கள்:*
பிரம்ம தீர்த்தம்,
காளி தீர்த்தம்,
சூல தீர்த்தம்,
ஆனந்த தீர்த்தம்,
வைணவ தீர்த்தம்,
இராகு தீர்த்தம்,
ஆழி தீர்த்தம்,
சங்க தீர்த்தம்,
சுக்கிர தீர்த்தம்,
பராசர தீர்த்தம்,
அகத்திய தீர்த்தம்,
கெளதம தீர்த்தம்,
வன்னி தீர்த்தம்,
குமார தீர்த்தம்,
சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம்,
கேது தீர்த்தம்,
அண்ட தீர்த்தம்,
பதினெண்புராண தீர்த்தம்,
புறவ நதி,
கழுமல நதி,
விநாயக நதி என, இருபத்திரண்டு தீர்த்தங்கள்.

*🌾தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் மூன்று பதிகங்கள்,
சம்பந்தர் - அறுபத்தேழு பதிகங்கள்,
சுந்தரர் -  ஒரே ஒரு பதிகம்.

*🌾மேலும் பாடல் பாடியோர்:*
மாணிக்கவாசகர்,
அருணகிரிநாதர்,
நம்பியாண்டார் நம்பிகள்,
பட்டினத்தார்,
சேக்கிழார்,
அருணாசல கவிராயர்,
மாரிமுத்துபிள்ளை,
முத்து தாண்டவ தீட்சிதர்.

*🌾இருப்பிடம்:*
சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

*🌾அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோவில்,
சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்,
சீர்காழி.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 110

*🌾ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00  மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*🌾தலச் சிறப்பு:*
சீர்காழி முற்காலத்தில் ஸ்ரீகாளிபுரம் என்ற பெயருடன் அழைக்கப் பட்டது.

பின்பு, அப்பெயர் மருவி சீர்காழி என்று ஆனது.

சீர்காழியை *'கழுமல வள நகர்'* என்றும் குறிப்பிடுவர்.

இத்தலத்தின், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும் , ஊரின் நடுவில் கழுமலையாறும், மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு என்கின்ற ஆறுகள் ஓடி நிலப்பகுதியை வளமானதாகக் கொண்டது.

*🌾தல அருமை:*
ஏழு தீவுகள் கொண்டதாகியிருந்த இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தின்போது, கடல் பொங்கி அழித்தது.

அப்போது சீகாழியான இத்திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாமல் நிலைபெற்றிருந்தது.

இதனால் இவ்வூர் *"தோணிபுரம்''*என்றும் போற்றப்பட்டு வந்தது.

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல திருக்கோவில்கள் இருக்கின்றன.

இதில், சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அடங்கும்.

இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் ஆகியோர்க்கு குழந்தையாக பிறந்து தெய்வக்குழந்தையாக ஆகி, திருஞானசம்பந்தர் எனவானார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார்.

சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தின் ஆழத்திற் சென்று மூழ்கி ஜெபித்து நீராடிக் கொண்டிருந்தார்.

அப்போது சம்பந்தர், குளத்துநீரில் தந்தையைக் காணாமல் மிரண்டு அழுதார்.

முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, *"அம்மே அப்பா''* என அழுதது குழந்தை.

அழுவதைக் கண்ட இறைவன், கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார்.

அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானார்.

*🌾விஷ்ணுவின் செருக்கு:*
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார்.

பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார்.

இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், அவரின் செருக்கை அகற்ற, தமது திருக்கரத்தால் விஷ்ணுவின் மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார்.

இதையறிந்த மகாலட்சுமி வடுக பைரவரிடம் மாங்கல்ய பிச்சை கேட்டார்.

மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன்.

பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப்போர்த்தியும் காட்சி தந்தார்.

இதனால் சீகாழி பைரவருக்கு *"சட்டை நாதர்''* என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பர் இத்தலத்தை.

ஞானசம்பந்தர் முதன் முதலாக பதிகம் பாடிய *'தோடுடைய செவியன்'*என்பது உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

*🌾வாருங்கள் திருமுலைப்பால் விழாவுக்குச் செல்வோம்:*
மாற்றுச் சமயம் வலிமை பெற்று, இந்துச் சமயம் நலிவடைந்து இருந்த காலத்தில்......(சம்பந்தபெருமான் காலத்தில்.)

இந்துச் சமயத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காக, பிரளய காலத்திலும் அழியாத பெருமை பெற்ற திருத்தலமான திருத்தோணிபுரம் என்னும் சீர்காழி திருத்தலத்தில் வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் போராடினார்.

வேதியர்குலம் விளங்க வந்த சிவபாத இருதயரின் விருப்பமே தன்னுடைய விருப்பமாகவும் கொண்டிருந்தவர் அவர்தம் மனைவி பகவதியுமாவார்.

கருத்தொருமித்த அந்தத் தம்பதியர் இதற்காகத் தோணியப்பரின் அருள் வேண்டி தவம் இயற்றினார்கள்.

வேதநெறி தழைத்தோங்கவும் மண்ணுலகம் செழித்துச் சிறக்கவும் பிள்ளை வரம் வேண்டித் தவம் செய்தார்கள்.

இவர்களின் தவப் பயனாக, சித்திரைத் திங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் அவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்த்தமைந்தது. 

அந்தக் குழந்தை, திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் பெற்று தெய்வக் குழந்தையாக வாய்க்கப் பெற்றது.

அந்தக் குழந்தை தனக்கு வேண்டியதைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதை, ஈசன் தெரிய வைத்திருந்தான் போலும்!".

இக்குழந்தை விரும்பிப் பெற்றதும் தன்னுடைய நலனுக்காக அல்ல. 

மண்ணுலக மாந்தர்தம் நலனுக்காக, அது நமக்கு கிடைத்தது என்னவோ,  நாம் செய்த தவப்பயனானது எனவும் கொள்ளலாம்.

புராதன சநாதன தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த அந்தக் குழந்தை, தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், சிவஞானம் கைவரப் பெற வேண்டும் என்பதை உணர்ந்திருந்தது.

எனவே, அதற்கான உரிய நேரத்துக்கு காத்திருந்த. அந்த நேரமும் கூடி வந்தது.

ஒருநாள் தோணியப்பர் ஆலய திருக்குளத்திற்க்கு நீராடச் சென்றார் சிவபாத இருதயர். 

சம்பந்தக் குழந்தையும் நானும் வருவேன் என்று அடம்பிடித்தது.

(இங்கேதான் சநாதன தர்மம் நிலைநாட்டப் பெறும் காலம் ஆரம்பமாகிறது.)

அடம் பிடிக்கும் மழலையை அலட்சியப்படுத்த முடியுமா என்ன?..

வேறு வழி இன்றி, வா!" என்று சிவபாதர் குழந்தை சம்பந்தரையும் அழைத்துச் சென்றார்.

கோயிலுக்குச் சென்றவர், குழந்தையைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு, குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை தோணியப்பரிடம் ஒப்படைத்து, நீரில் மூழ்கி மந்திரங்களை ஜபிக்கத் தொடங்கிவிட்டார்.

சில நொடிகள் நேரத்தில்  அந்தக் குழந்தை, தனக்கு வேண்டியதைப் பெற முடிவு செய்யும் ஞானம் உந்தப்பட்டது.

அதற்காக தன் கொவ்வை செவ்வாயினைத் திறந்து வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டது.

எதிரேயிருந்த அம்மையார், மழலையின் அழுகுரல் கேட்டு மனம் கலங்கிய அன்னை உமையவள் சிவனாரை நோக்க, அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சிவனார் தம் கண்களாலேயே சம்மதித்தார்.

உடனே அம்பிகை, தங்கக் கிண் ணத்தில் பால் சுரந்து, அத்துடன் சிவஞானம் என்னும் இன்னமுதத்தை யும் சேர்ந்து கலந்து எடுத்து வந்தாள்.

அழும் குழந்தையைத் தூக்கித் தன் மடியில் இருத்தி, பாலூட்டி விட்டு மறைந்தாள்.

நீராடி முடித்துக் கரையேறிய சிவபாதர், குழந்தையை நெருங்கினார். குழந்தையின் இதழோரம் பால் வடிந்திருந்தது.

அதைக் கண்ட சிவபாதவிருதயர்...."யார் கொடுத்த எச்சில் பாலை நீ குடித்தாய்?' என்று அடிப்பதுபோல் மிரட்டினார்.

தன் மலர் முகத்தை பயந்தது போல் வைத்துக்கொண்ட அந்தக் குழந்தை, தனது தளிர்க்கரங்களை மேலே உயர்த்தி நீட்டி, *'தோடுடைய செவியன்'* என்று பாடத் தொடங்கியது

*🌾சம்பந்தர் தேவாரம்:*
சம்பந்தர் ஞானப்பால் உண்டபின் பதிகம் பாடிய முதல் தேவாரம்.

1🌾தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

2.🌾முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

3.🌾நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

4.🌾விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

5.🌾ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

6.🌾மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

7.🌾சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

8.🌾வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

9.🌾தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

10.🌾புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

🙏🏾புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

         திருச்சிற்றம்பலம்.

குழந்தைப் பருவமாக இருந்த சம்பந்தபெருமான் திருமுலைப்பால் உண்டதும், யார் உனக்கு பால் கொடுத்தது?" என்று தந்தையார் அரற்றிக் கேட்க, சம்பந்தபெருமான் கோபுரத்திலிருந்த அன்னையை சுட்டிக்காட்டி, முதலாவதாக தேவாரத் திருப்பதிகம் பாடிய திருப்பாடல் இது.

பாலமுதுடன் சிவஞானம் என்னும் உயர் அமுதத்தையும் சேர்த்துத் தனக்குப் புகட்டியது தோடுடைய செவியனான சிவபெருமானின் தேவியாம் அன்னை உமையவளே என்று குறிப்பால் உணர்ந்தார்..

குழலினும் இனிய மழலை மொழியில் குழந்தை பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமான் உமையம்மையுடன் ஞானசம்பந்தருக்கும் அவர் தந்தை சிவபாதருக்கும் திருக்காட்சி தந்து அருளினார்கள்.

சிவபாதருடைய எண்ணமான சைவம் தழைத்துச் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு, இன்று வித்து விதைக்கப்பட்டது.

அதை எண்ணி, அவர் கண்களிலிருந்து கண்ணீர், தாருகியதுபோல உருக விம்மி சந்தோஷமானார்.

புறச் சமயம் நலிய நலிய, புராதன சநாதன சமயம் பொலியப் பொலிவதற்கு  அவதரித்த அந்த ஞானக் குழந்தைக்கு, அன்னை உமையவள் ஞானப் பால் புகட்டியதை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் *'திருமுலைப்பால் விழா'* என்ற பெயரில் சீர்காழியில் நடைபெற்று வருவது பெரும் சிறப்புடையவை.

இவ்விழாவை  நாம் இப்போதும் தரிசிக்கும் வாய்ப்புக்குண்டான, பிறப்பை நாம் அடைந்திருக்கிறோம்.

ஆக,வாழ்வில் ஒரு முறையாவது இந்த முலைப்பால் திருவிழாவைக் கண்டு இறைவனையும் உற்சவரையும் வணங்கப் பெறுவோமாயின் நமக்கு மீண்டும் பிறப்பில்லை.

அப்படியே பிறப்போமாயின், இவனை நினைந்துருகி வணங்கும் நிலை வேண்டும் என நினைத்த உங்கள் மனதுக்காகத்தானிருக்கும்.

அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெறவிருக்கும்  இந்த திருமுலைப்பால் வைபவத்தை தரிசிக்க பக்தக்கடல் அலையென புரண்டு, காலை முதலே ஆலயத்துக்கு வந்து சங்கமித்தனர்.

நாமும் சீர்காழி ஆலயத்துக்குச் சென்றிருந்தோம்.

காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கோயிலுக்குள் வந்து நிறைந்து காணப்பட்டார்கள்.

நாம் ஆலயத்திற்குள் பிரவேசித்த சமயத்தில், முதலில் மலைக்கோயிலில் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த மலைக்கோயிலில்தான் சிவபெருமான் உமையம்மையுடன் திருக்காட்சி தருகிறார்.

சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக அலங்காரங்கள் முடிவதற்குள், கோயிலின் வடபகுதியில் அமைந்திருக்கும் சம்பந்தர் கோயிலுக்குச் சென்று வர நினைத்து, அங்கே சென்றோம்.

அப்போது சம்பந்தருக்கு அபிஷேகங்கள் முடிந்து, அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிற்பகல் சுமார் பன்னிரண்டு மணியளவில், தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஆலயத்துக்கு வர இருப்பதா கவும், அதன் பிறகே திருஞான சம்பந்தருக்கு தீபாராதனைகள் நடைபெறும் என்றும், அதன்பின்பு, குளக்கரைக்கு எழுந்தருள்வார் என்றும் ஒலிபெருக்கி மூலம் கூற செவிமடுத்துக் கேட்டுக் கொண்டோம்.

சம்பந்தருக்காக வண்ண வண்ணத் துணிகளாலும், மலர்மாலைகளாலும் பல்லக்கை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

பல்லக்கு அழகுபொருந்தி தயாராகி மிளிர்ந்து கொண்டிருந்தது.

குருமா சந்நிதானம் இன்னும் ஆலயத்திற்கு வரவில்லையே என்று எண்ணிய நாங்கள்,.......

அவர்கள் வருவதற்குள் தோணியப்பர் கோயிலுக்குச் சென்று வணங்கி வரலாம்' என்று நினைக்க, திரும்பவும் மலைக்கோயிலுக்குச் சென்றோம்.

அப்போது, சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக அலங்காரங்கள் முடிந்து விட்டிருந்தன.

சுவாமி அம்பிகையுடன் வெள்ளி ரிஷபத்திலும், மற்றொரு வெள்ளிப் பல்லக்கில் அம்பிகையும் எழுந்தருளிக் கொண்டனர்.

அம்பிகையின் பல்லக்கின் முனபு தங்கக் குடம் ஒன்று வைக்கப்பட்டு அதில் பால்  நிரப்பி வைத்தார்கள்.

அம்மையப்பர் இருவரும் சில நிமிடங்கள் நேரம் காத்திருந்தார்கள். சிவாச்சாரியார்களும் எதுவும் செய்யாது அமைதியாக காத்திருந்தார்கள்.

சம்பந்தரின் அழுகைக் குரலுக்காக அம்மையப்பர் பல்லக்கில் காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், 'எப்போது திருமுலைப்பால் வைபவத்தைக் காண்போம் என்று ஏக்கமும் தவிப்புமாகக் மொத்தக் கூட்டமும் 
தவித்துக் கொண்டிருந்தது. கரகோஷங்களை எழுப்பிய வண்ணமிருந்தார்கள்.

ஓயா குரலுடன் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

குங்கிலியப் புகைகள் பொங்கி உருகி வானத்தை நோக்கி உயர்ந்து ஆனந்த தாண்டவம் காட்டியது.

நான் சளைத்தவனா? என வானவெடிகள் சீறிக் கொண்டு,  உர்ர்ரென உயரப் பாய்ந்து விழாக் கூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தது.

பெரும்பாலான பக்தர்களின் கரங்களில், பால் பாத்திரங்களைப் தாங்கி நின்றனர். தங்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்திருந்ததைக் காணமுடிந்தது.

குறித்த நேரம் கொஞ்சம் தாமதமானாலும், தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து விட்டார்கள்.

அவருடன் பெரும் பெரும் பேறு கொண்ட அருளாளர்கள் பலர் சூழ வந்தார்கள்.

உடனே, திருஞானசம்பந்தருக்கு தீபாராதனைகள் ஆராதிக்கப் பெற்றன.

மொத்தக் கூட்டத்தின் தலைகளும் மறைந்து போயின. அவர்கள் சிரமேற் கரங்களை உயர்த்தி வணங்கிக் கொண்டார்கள்.

பெரும் நெருக்கடியுடன் பக்தர்கள் கூட்டம் கொஞ்சம் விரிவடைய, இடநெருக்கடி பக்தர்களுக்கு ஏற்பட, இந்த இடைவெளியிலிருந்து
திருஞானசம்பந்தர் பல்லக்கில் எழுந்தருளினார்.

பல்லக்குப் புறப்பாடு தொடங்கியது.

இப்போது, தெற்குப் பிராகாரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்று கொண்டிருந்தார்.

நத்தையின் வேகத்திலே சம்பந்தபெருமானின் பல்லக்கு ஊர்ந்து சென்றன.

குருமகா சந்நிதானம் அவர்கள், தரிசிக்க வந்த பக்தர்களின் மத்தியிலே திருமுலைப்பால் வைபவம் குறித்து அருளுரை ஆற்றத் தொடங்கினார்கள்.

விழா நடக்கும் சீர்காழி தலத்திற்கு இன்று மிகச் சிறந்த நாளாகும்.

வெகுகாலத்துக்கு முன்னர் இந்தத் திருத்தலத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அம்பிகையே நேரில் வந்து பால் கொடுத்துப் பசியாற்றிய நாள் என்பதால்....

இதைச்  சேக்கிழார் பெருமான் பாடுகிறார்........
*'எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி* *உண்ணடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்* *கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற்கிண்ணம்* *அளித்து அண்ணலை அங்கழுகைதீர்த் தங்கணனார் அருள்புரிந்தார்.'* என்று..

நினைப்பதற்கும் பெறுவதற்கும் அரியதான சிவஞானமான இனிய அமுதத்தை பாலுடனே குழைத்து, தம்மை எதிர்நோக்கிய பிள்ளையின் கண்ணீரைத் துடைத்து அருளி, 'பாலமுதத்தை உண்பாயாக' என்று உண்ணச் செய்த அம்மையாயிற்றே!

அம்பிகையினால் ஞானப் பால் ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தர், சிவபெருமானுடைய திருவடிகளையே சிந்தித்தலான திருப்பெருகும் சிவஞானத்தையும், பிறப்பும் இறப்பும் வராமல் தடுக்கும் குணத்துடன் கூடிய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் உணர்வரப் பெற்றார்.

அப்படித் தாம் உணர்ந்தத அவர், நாம் எல்லோரும் உணரும்படிச் செய்தார்.

நாம் எல்லோரும் உணர்ந்து உய்யும்படிச் செய்த திருஞானசம்பந்த பெருமானின் திருவடிகளைப் பணிந்து நினைந்து, நனைந்து ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களுடன்,  நல்ல செயல்களையும் தொழுகைகளையும் வாழும் காலங்களில் ஒழுகி வந்தால், நம் மனம் செம்மை படும். சிவம் ஓங்கும். சைவம்  சிறக்கும். நாடு சுபிட்சிக்கும்.

பின்பு, தெற்குப் பிரகாரத்திலிருந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தர் பல்லக்கு மேற்குப் பிராகாரத்துக்குள் புகுந்து எழுந்தருளினார்.

அப்போது பக்தர்களும், அடியார்களும் தாளங்கள் இசைக்கவும், கரகோஷங்கள் எழுப்பிய வண்ணம் ஆனந்தித்தார்கள்.

ஒரு சிலர், வாத்திய இசைக்குத் தகுந்தவாறு நடனம் ஆடி, மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

ஓதிய வேத மந்திரங்கள் எல்லா வீதிகளுக்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சேக்கிழார் சுவாமிகள் கூறியது போல இதுதான்........
*தொண்டர் மனம் களிப்பபோ* என நமக்குத் தோன்றியது.

இது மட்டுமா?..எட்டுத் திசைகளிலும் தூய திருநீற்று நெறி சிறந்து விளங்கவும், ஏழு உலகங்களிலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், எட்டுத் திசைகளின் பெருமைகள் யாவற்றையும் தென் திசையின் பெருமை வெற்றி கொண்டு மேன்மை அடையவும் என்று, பதினாறு காரணங்களைக் கூறிச்சென்றிருக்கிறார் சேக்கிழார் பெருமான்.

இப்படி அவதரித்த திருஞான சம்பந்தப் பெருமான், நாமெல்லாம் உய்வு பெற அன்று அவர் அழுதார்.

அதனால்தான் நாம் இன்று சிரித்து மகிழ்வான வாழ்க்கையில் இருந்து வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

அன்று சம்பந்தருக்கு, அம்பிகை திருமுலைப் பால் ஊட்டினாள்.

*"திருமுலைப்பால் உண்டவர் மறுமுலைப் பால் உண்ணார்"*என்பது இந்தப் பகுதியில் சொல்லப்படும் ஒரு வழக்கு மொழி.

அதேமாதிரி, இந்த வைபவத்தை  தரிசித்துச் செல்வோர்களுக்கு, அவர்களுக்கு மறுபிறவி இல்லாத பேரின்ப நிலையை அடைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இப்போது, வடக்குப் பிராகாரத்துக்கு வந்து சேர்ந்தது சம்பந்தரின் பல்லக்கு.

பல்லக்கிற்கு முன்னும் பின்னும் பக்தர்கள்தம் தொண்டர்கள், சொல்லொண்ணா ஆனந்தத் திளைப்பு கொண்டு நகர்ந்து நகர்ந்து ஆடியபடி வந்தார்கள்.

ஞானக் குழந்தையாக அவதரித்த திருஞானசம்பந்தரின் தெய்வீகமான வாழ்க்கை குறித்து பக்தர்களின் மனம் நெகிழ்ச்சி அடையும் விதத்தில், அவரவர் மனதிற்குள்ளாக சம்பந்தப் பெருமானை இருத்தி வைத்துக் கொண்டார்கள்.

மூன்று வீதி வலம் முடித்துத் திரும்பிய திருஞான சம்பந்தரின் பல்லக்கு திருக்குளத்தின் தென் கரைக்கு வந்து சேர்ந்தது.

பல்லக்கை கரையினில் இறக்கி வைத்தார்கள். சிவாச்சாரியார்கள் பல்லக்கைச் சுற்றி அரணாக நின்றும், அடுத்த செயலுக்காக தயாரானார்கள்.

அக்குளக்கரையில் அவர் எழுந்தருளினார். குளத்தைச்சுற்றி மேல்படி வரை நின்றவர்களுக்கும், குளம் தெரிய இருந்த மாடமாளிகைகளில் ஏறி நின்றவர்களுக்கும், குளக்கரையில் எழுந்தருளிய சம்பந்தபெருமானின் பல்லக்கைக் காணப்பெற்றனர்.

தள்ளி நின்ற மற்றவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டதன் மூலமும், பக்தர்கள் ஆராவாரிக்கும் செயல்களைக் கண்டும், சம்பந்தருக்கும் செய்விக்கும் நிகழ்வைத் தெரிந்து கொண்டார்கள்.

முண்டிநெருக்கிய பக்தர்களின் ஆரவாரம் யாருடைய  கட்டுப்பாட்டுக்குள்ளும் வரவில்லை. ஒரே ஆனந்த அல்லலோகம்தான்.

சாதாரணமாக ஒவ்வொரு ஆலயத்திலும் முன்டியடித்துக் கொண்டும், இடித்துக் கொண்டும், அடுத்தவரின் முகத்தில் நம் கையை உரசிக் கொண்டும், திருநீற்றை வாங்கவும், அதற்கு நெருக்கடியானவர்களிடமிருந்து ஏச்சும் பேச்சும் வாங்கிப் பழகியர்கள்......

ஆனால் இந்த விழாவில், எந்த இடநெருக்கடியையும் பொறுப்பாடுத்தாது, மகிழ்வுடனே, தன் மனையில் நடந்தேறும் விழாபோல மகிழ்ச்சியுடன் தெரிந்தார்கள்.

இடையிடையே கரகோஷம் ஓங்கி  ஓங்கி ஒலிக்கும். அடுத்து சிறிது நிசப்தம். மீண்டும் கரகோஷங்கள் ஆராவாரங்கள் இருந்து கொண்டே இருந்தது.

அதற்குக் காரணம்.....

குளக்கரைக்கு எழுந்தருளியிருந்த சம்பந்தக் குழந்தைக்கு, அம்பிகை எப்போது வந்து பால் ஊட்டுவாள் என்ற எதிர்பார்ப்பை  எதிர்பார்த்துத்தான் இடையே இடையே கரகோஷங்கள் எழுப்பிய வண்ணமிருந்தனர்.

அதனாலேயே இந்த ஆர்ப்பரிப்புகள், வாயொலிப் பிரவாகங்கள் வான வீதி வரைக்கும் கேட்கச் செய்தனர்.

இந்த சமயத்தில் மலைக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக ஞானசம்பந்தரின் பல்லக்கு இருக்கும் குளக்கரைக்கு எழுந்தருளினாள் அம்பிகை.

மங்கல இசை முழங்கியது.

மேளதாளம் இறைந்த சத்தத்தில் எண்ணமோ தெரியவில்லை. மேளத்திரை கிழியவில்லை. மாறாக அதனின் சத்தம் நம் கால்களை தானாடச் செய்தன.

அம்பிகையின் வெள்ளிச் சப்பரத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கக் குடத்தில் இருந்த பாலை, ஒரு சிவாச்சார்யர் தங்கக் கிண்ணத்தில் நிரப்பினார்.

அதை இருகைகளில் தாங்கி ஏந்தி குருமகா சந்நிதானம் அவர்களிடம் கொடுத்தார்.

இதை மகா சந்நிதானம் அவர்கள், இவரும் தாங்கி ஏந்தியபடியே வாங்கினார்.

சில அடிகள் தூரத்தில் இருக்கும் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த பல்லக்கிற்கு கொண்டு வந்து சம்பந்தபெருமான் பல்லக்கில் இருந்த சிவாச்சாரியாரிடம் கொடுத்தார்.

இந்தசிவாசாரியாரும் பாலை, தாங்கியேந்தி வாங்கிக் கொண்டார்.

சம்பந்தர் பல்லக்கருகே இருந்த மற்றொரு சிவாச்சார்யார், வெள்ளிக்கரண்டியை பாலைப் பெற்றுக் கொண்ட சிவாச்சாரியாரிடம் கொடுத்தார்.

அவர் வெள்ளிக்கரண்டியைக் கொண்டு, தங்கக்கிண்ணத்திலிருந்தபாலை வார்த்து ஞானசம்பந்தருக்குப் புகட்டினார்.

*"சிவ சிவ சிவ சிவ சிவ"*
*"சிவ சிவ சிவ சிவ சிவ"* கோஷம்....

வானைப் பிளந்தது.
மங்கலகோஷம் அதிர்ந்தது.
செவிகள் நிறைந்தது.
பூத்தூவல்கள் மாரி-யாயின.

இந்தநேரத்தில், பக்தர்கள் இந்த நிகழ்வுக்காக எடுத்துக் கொண்டு வந்திருந்த பாலை, வானத்தை நோக்கி உயரே தூக்கி, ஞானசம்பந்தக் குழந்தைக்குப் புகட்டுவது போல நைவேத்தியம் செய்தார்கள்.

அப்போது அவர்களின் முகங்களில் தெரிந்த பரவசத்தைப் பார்க்க வேண்டுமே!....

*"சிவ சிவ சிவ சிவ சிவ"*

பார்க்க பார்க்க மெய் சிலிர்த்துப் போனோம். பக்திப் பாங்கால் உரோமக் கால்கள் குத்திடும் நிலையாயினோம். தொண்டை விதத்து வலித்தது. நாக்கு தழுதழத்தது. கண்கள் கண்ணீர் மழையை உருக்கியது.

அங்கிருந்த தாய்மார்களின் முகத்தில் பக்திப் பரவசத்துடன் தாய்மை அன்பு பெருகியிருந்ததைக் கண்டோம்.

அழுத குழந்தைக்குப் பால் புகட்டிய மகிழ்ச்சி அம்பிகைக்கும் உண்டானது....

பாலுடன் உயர் சிவஞான அமுதமும் சேர்த்துப் பருகிய களிப்பு குழந்தை சம்பந்தருக்கு உண்டானது......

இப்போது பக்தர்களின் மனதில் வேறு ஒரு ஏக்கம்!.

சம்பந்தக் குழந்தைக்கும் சிவபாதருக்கும், உமையம்மையுடன் சிவபெருமான், எப்போது திருக்காட்சி தருவாரோ என்பதான ஏக்கம்தான் அது!

மொத்த கூட்டத்தின்  எல்லோருடைய இமைகளும் மலைக்கோயிலின் வடக்கு வாசலை பார்த்தபடியே இருந்தார்கள்.

நாமும் அந்த ஏக்கத்தோடவே  வடக்கு வாசல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வடக்கு வாசலைப் பார்க்கக் காரணம், இந்த வழியாக அம்பிகை எழுந்தருளியதால், அம்மையப்பரும் அந்த வழியாகத்தான் எழுந்தருள்வார் என்கிற எதிர்பார்ப்பு இருக்க எல்லோரும் அந்த வாசலைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

சில நிமிடங்களில் மங்கல இசை அதிரும் சப்தம் வடக்கு வாசல் பக்கம் கேட்டது.

சிவ பெருமான் உமை அன்னையுடன் கிழக்கு வாசல் வழியாக எழுந்தருளி, சம்பந்தக் குழந்தைக்கும் சிவபாதருக்கும் திவ்விய தரிசனம் தந்தருளினார்.

அவர்கள் மட்டுமா? இக்காட்சியருளை அங்கிருந்த மொத்த கடலலையான பக்தர் கூட்டமும் கண்டு வணங்கப் பெற்றோம்.

கெட்டிமேளம் முழங்கயது.
வாணவேடிக்கை கதறின. 
கரகோஷம் வானுலகிற்குச் சென்றது. ஆர்ப்பரித்திருந்த கூட்டத்தின் தலைகள் பூராவும், கடலலை போல எழும்பி தாழ்ந்து எழும்பியது.
 
அம்மையப்பருக்கும், சைவநெறி தழைக்க வந்த சம்பந்தக் குழந்தைக்கும் தீபாராதனை ஏற்றப்பட்டது.

மொத்தக்கூட்டமும், நாமும் அத்தீபாராதணையை, சிரமேற் கைகள் உயரக் குவித்து ஆராதித்து வணங்கிக் கொண்டோம்.

மாந்தர்குலம் செழிக்க வந்த சம்பந்தக் குழந்தையையும், குழந்தைக்கு அன்புடன் திருமுலைப்பால் புகட்டிய அம்பிகையையும், குழந்தைக்கும் சிவபாதருக்கும் திவ்விய தரிசனம் அருளிய அம்மையப்பரையும் தரிசித்த
தரிசிப்பை, வார்த்தையாக உங்களுக்கு வரைந்ததில் மனம் நெகிழ்கிறேன்.

வாசித்துப் பேறு பெற்ற அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் இறைவன் நற்பேறு அருள வேண்டிக் கொள்கிறேன்.

இறைவனிடம் நமக்கு வேண்டியதைப் பெறவேண்டுமானால், (வீடு, கார், பணம் அல்ல) நீங்கள் கண்ணீர் பெருக்கி ஒழுக அழுங்கள்.

அப்படி நாம் அழும்போது நம்முடைய பாவங்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்துபோகும்.

பாவம் கரைந்தபின்,
நமக்கு வேண்டிய *நிம்மதி* மனதை இறைவன் நிச்சயமாக அளிப்பான். இது உறுதி!

(நிம்மதி என்ற மனதிற்குள் தான் பேறு இருக்கிறது.)

இப்படி ஓர் அற்புதமான அழுகையை, 'தான் அழுது' நமக்கு உணர்த்தியவர், *'சீதவள வயல்புகலி திருஞான சம்பந்தன் பாதமலர் தலைகொண்டு'* பணிந்து வணங்கிப் போற்றுவோமாக!

             திருச்சிற்றம்பலம்.
             தில்லையம்பலம்.
             திருநீலகண்டம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களில் நாளைய தலப்பதிவு *சப்தபுரீஸ்வரர், திருக்கோலக்கா.*
_________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment