உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளுநாயகா போற்றி!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌿 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.85.* 🌿
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🍀 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🍀
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 *திருசிவபுரம்.*🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம்.*
*இறைவன்:* சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்.
*இறைவி:* ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி
*தல விருட்சம்:* செண்பகம் (இப்போதில்லை)
*தல தீர்த்தம்:* சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.
*பூஜை:* ஆகமம்.
*ஆலயபழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்...
*புராண பெயர்:* குபேரபுரம், திருச்சிவபுரம்
*ஊர்:*சிவபுரம்
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர், அப்பர்.
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் அறுபத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*திருவிழாக்கள்:*
சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
*இருப்பிடம்:*
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில், *"பட்டாமணி ஐயர் ஸ்டாப்"* இடத்திற்குப் பக்கத்தில் பிரியும் (சிவபுரி) கிளைப் பாதையில் (மண் பாதையில்) சென்று, வழியில் மலையப்பநல்லூர் ஆலமரத்துப் பிள்ளையாரை வணங்கியவாறே சென்றால் சிவுரபுத்தை அடையலாம். கோயில் வாயில்வரை காரில், பேருந்தில் செல்லாம்.
கும்பகோணம் - திருவாரூர், கும்பகோணம் - மன்னார்குடிச் சாலையில் சாக்கோட்டை சென்று -வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அருகில் பிரியும் சாலையில் சென்று சிவபுரம் அடையலாம்
*கோவில் அமைப்பு:*
பேருந்தை விட்டு இறங்கி ஆலயத்தை நோக்கிச் செல்கையில்,
ஐந்து நிலைகளைக் கொண்ட மிக பழமையான ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியாத் தெரியவும், *சிவ சிவ, சிவ சிவ,* என மொழிந்து சிரமமேல் கைகளை உயர்த்திக் குவித்து வணங்கிக் கொண்டோம்.
கோபுரத் தரிசனத்துக்குப் பின் உள்புகுந்தோம். அங்கு
கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே இருந்தது.
வழக்கமாக நம்மிடம் சேர்ந்திருந்த ஆணவமலத்தை பலிபீடத்தில் பலியிட்டு வணங்கி நகர்ந்தோம்.
மேலும் உள்புகவும், உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சி தந்தன. அந்தக் கோபுரத்தை மும் வணங்கித் கைதொழுதோம்.
இன்னும் மேலே தொடர்ந்து புக,... நேரே மூலவர் சந்நிதி - கிழக்கு நோக்கி இருக்கும் காட்சியினைக் கண்டோம்.
சந்நிதி முன்பு மிக விசாலமான கல்மண்டபம் இருக்க தொடர்ந்து உள் சென்றோம்.
மூலவர் சந்நிதியில் கம்பீரமானத் தோற்றத்துடனும், பாணம் சற்று உயர்வான தோற்றத்துடனே காட்சியருளிக் கொண்டிருந்தார்.
மனமுருகப் பிரார்த்தனை செய்தோம். இறைவன் நன்றாக காட்சியருள் புரிந்தார். வணங்கிய நிம்மதியுடன் பழுதில்லாது வெளி நகர்ந்தோம்.
உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரன் உருவங்கள் இருந்தன. பொதுவாகவே இது விசாலமான பிராகாரம்தான்.
கோஷ்ட மூர்த்தமாக நடன விநாயகர் இருந்தார். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் செய்தோம்.
பக்கத்திலேயே அடுத்து இலிங்கோற்பவரும், பிரமனும், துர்க்கையும் இருக்க, தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கியபடி நகர்தோம்.
தட்சிணாமூர்த்தியை வணங்கித் தொழுத பின், இதன் பக்கத்தில் சுவற்றில் இத்தல வரலாறான, *திருமால் வெண் பன்றியாக இருந்து வழிபட்ட சிற்பம் - (சிவ லிங்கம், வெண்பன்றி வாயில் மலருடன், திருமால்)* - உள்ளது.
இக்காட்சியை அப்பர் பெருமான் இத்தலத் திருத்தாண்டகத்தில் *"பாரவன்காண்"* என்று தொடங்கும் பாடலில் *"பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்"* என்று பாடிப் பரவியுள்ளார்.
வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் இருக்கக்கக் கண்டு, தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.
அங்கிருந்த தீர்த்தக் கிணற்று நீர் சுவையாக இருந்தது.
அடுத்திருந்த முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கிய வண்ணமிருந்தது.
அம்பாள் நின்ற திருக்கோலம். நன்றாக பிராத்தனை செய்து வணங்கி, குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.
நகரத்தார் இக்கோயிலை அற்புத கற்கோயிலாகக் கட்டியுள்ளனர் என்பது நமக்கு நன்கு தெரிந்தது.
கார்த்திகைச் சோமவாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது.
இங்குள்ள நடராஜர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலையைத்தான் முன்பொரு சமயம் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் தீவிர முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு, அந்தநேரப் பாதுகாப்பு கருதி, திருவாரூர்ச் சிவாலயத்திற்குக் கொண்டு சென்று பாதுகபாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு பாதுகாத்து வைத்திருந்தனர்.
அந்த சமயத்தில் வேறொரு நடராஜத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளவித்து வழிபட்டு வரப்பெற்றதென சிலர் கூறினர்.
நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் சேர்ந்து இடம் பெற்றிருப்பதைக் காணப்பெற்றோம்.
இங்குள்ள பைரவரை வணங்கச் சென்றோம். இவர் விசேஷமான மூர்த்தி என்று அருகிருந்தோர் கூறினர்.
இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடமாலை சாத்தி - தயிர்சாதமும் கடலை உருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால் - வழக்குகளில் வெற்றியும், தீராத நோயாக இருப்பின் அந்நோய் தீர்ந்து வருகிறது என்பது, இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது என அதே அருகிருந்தோர் கூறினர்.
*தல பெருமை:*
குபேரதனபதி என்ற அரசன் சிவபுரம் எனும் ஊரை ஆண்டு வந்தான்.
திடீரென்று அவனுக்கு மனநோய் பீடித்தது. எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் நோய் குணமாகவில்லை. ஆருடம் பார்த்தால் நோய்க்கான காரணம் தெரியும் என்பதால் ஆருடம் பார்த்தார்கள்.
அதில் அரசன் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் ஒரு செப்பேட்டில் ஆலயத்தில் தெற்குநோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் உள்ளது என பதில் கிடைத்தது.
அவ்வாறே அந்த செப்பேட்டை எடுத்துப் படித்த அனைவரும் அதிர்ச்சியுற்றனர். குபேரதனபதி மனநோயிலிருந்து குணம் பெற வேண்டுமானால் ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே அவன் பலியிட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
குழந்தையைத் தர யார்தான் முன்வருவார்கள்? ஒருநாள் சிவபுரத்து இறைவனைத் தொழுதிட குழந்தையுடன் வந்தனர் ஒரு தம்பதியர்.
மன்னரது பணியாட்கள் அவர்களை மன்னரின் விருந்தினராக அவரது மாளிகையில் தங்க வைத்தார்கள்.
சிலநாட்கள் குழந்தையுடன் அவர்கள் சுகபோகத்தில் திளைத்ததோடு, சிவபுரத்து ஈசனை தினமும் வணங்கியும் வந்தார்கள்.
ஒருநாள், அமைச்சர் இந்த தம்பதியை அணுகி, அரசனின் மனநோயை விளக்கி, செப்பேட்டில் வந்துள்ள பிராயச்சித்தத்தைப் பற்றி எடுத்துக் கூற, அதைக் கேட்ட தம்பதியர் திடுக்கிட்டு அங்கிருந்து தப்பியோட முடிவு செய்தனர்.
ஆனால், அரசன் விருந்தோம்பிய பண்பு அவர்களைத் தடுத்தது. நன்றிக்கடன் தீர்க்காமல் அங்கிருந்து செல்வது பெரும்பாவம் என்று உணர்ந்த அவர்கள், மன்னரின் பிராயச்சித்தத்திற்கு தம் குழந்தையைத் தர முன்வந்தார்கள்.
ஆனால் அவர்கள் முன்னாலேயே அந்த பலி நிறைவேற்றப்படவேண்டும் என்ற நிபந்தனைதான் அவர்களைப் பெரிதும் வாட்டியது.
சித்தம் கலங்கி, செய்வதொன்றும் அறியாது அவர்கள் பரிதவித்தனர். அரசனின் உபசரிப்பால் அவர் வயப்பட்டிருந்த தம்பதியர் தங்கள் குல விளக்கைத் தியாகம் செய்ய முடிவு செய்த அந்த நாளும் வந்தது.
கார்த்திகை மாதம். முழுநிலவு வானத்தில் பிரகாசிக்கும் பௌர்ணமி நாள்.
அரசனின் மனநிலை சரியாகி, நாடு நலம் பெற சிறுவனை பலியிட சிவபுரம் அழைத்து வந்தனர்.
கலங்கிய நிலையில் சிறுவனின் தாயும் தந்தையும் ஈசன் முன் கதறி அழுதனர். எந்த வினைப்பயனோ தெரியவில்லை. பால் மணம் மாறா குழந்தையை பலி கொடுக்கும் நிலைமைக்கு ஆளானோம். இதிலிருந்து மீள வழியொன்று கூறாயோ எனக் கேட்டு மன்றாடினர்.
*'அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம். அம்பிகையிடம் முறையிடுங்கள்'* என ஈசன் அசரீரியாய் உரைத்தான்.
சிங்காரவல்லி என்ற திருநாமம் கொண்டு சரணடைந்தோர்க்கு தஞ்சமளித்திடும் அம்பிகை, கேட்காமலே வரமருளும் தாயல்லவா? கேட்டு விட்டால் சும்மா இருப்பாளா? தம்பதியரின் கோரிக்கையைக் கேட்டதும் கிளி உருக் கொண்டாள் அம்பிகை.
சரியான தருணத்தில் அங்கு பறந்து சென்று நேரே வெட்டப்போகும் அரசனின் கையில் அமர்ந்தாள்.
*'மன்னா!* உன் சோதனைக் காலம் இன்றோடு முடிந்தது. இனி உனது உடலும் மனமும் சீர் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிவீராக.
குழந்தையை பலியிடவேண்டாம்' என்று கூறி பறந்து சென்றாள் அம்பிகை.
குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டது. அரசனும் பெரும்பழிக்கு ஆளாகாமல் தப்பித்தான். மனமும் உடலும் குணமான மன்னன் நாட்டை நன்கு அரசாள உறுதி பூண்டு அதன்படி நடந்தான்.
குபேரதனபதி என்ற மன்னனால் வணங்கப்பட்டதால் இத்தலம் குபேரபுரம் ஆயிற்று.
*தல அருமை:*
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது.
சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்
திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்த தலம்.
குபேரன் இராவணன் பட்டினத்தார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.
இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு கூறுகிறது.
அவ்வாறு ஞானசம்பந்தர் பாடிய இடம் இன்று *'சுவாமிகள் துறை'* என்றழைக்கப்படுகிறது.
(அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. மிகவும் பழைமையானது இக்கோயில்.
*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்.*
🌸1கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
🙏🏾மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப்பட்டுள்ள சிவபுரநகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர்கெடும்
🌸2 படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கெடு முயர்கதி பெறுவது திடன.
🙏🏾ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய்தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதிஆகிய, இடையிடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர்கெடும். உயர்கதி பெறுவது உறுதி.
🌸3 வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரு மடியவ ருயர்கதி யினரே.
🙏🏾மந்தரமலை மத்தாகச் சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர் கதிகளைப் பெறுவர்.
🌸4 துணிவுடை யவர்சுடு பொடியின ருடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி யிணைதொழு மவரே.
🙏🏾அடக்கமுடைய மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.
🌸5 மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவ னுமையவண் மகிழ்நட நவில்பவன்
இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவ னெமையுடை யவனே.
🙏🏾தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவ புரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.
🌸6 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த விணையிலி யணைபதி
சதிர்பெறு முளமுடை யவர்சிவ புரமே.
🙏🏾முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியதலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.
🌸7 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரு மடியவ ரருவினை யிலரே.
🙏🏾அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர் மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.
🌸8 கரமிரு பதுமுடி யொருபது முடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென வடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் முயர்கதி யதுவே.
🙏🏾இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவ புரத்தை அடைதல் நமக்கு உயர்கதியைத் தரும்.
🌸9 அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே.
🙏🏾தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.
🌸10 புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
🙏🏾புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடைய தலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத்தரும்.
🌸11 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
🙏🏾அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுரநகரில் உறையும் எந்தையைப் போற்றி உரைசெய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.
*ஆலயம் திறக்கும் நேரம்:*
காலை 6.00 மணி முதல்11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
*பொது தகவல்:*
இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார். பின்பு பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும்.
இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார்.
*பிரார்த்தனை:*
குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து பதினோறு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர்.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கவும், உடல் மெலிவைப் போக்கவும் இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
*நேர்த்திக்கடன்:*
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
வசதிபடைத்தோர் அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
திருச்சிற்றம்பலம்.
*தொடர்புக்கு:*
91-98653 06840
*நாளைய தலம்.....திருகலயநல்லூர்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment