ஒரு நாள் ஶ்ரீமடத்தில் எப்போதும் போல் நல்ல கூட்டம். அதுவும் அன்று வைதீகாளின் கூட்டம் ஜாஸ்தியாகவே இருந்தது.
உள்ளே அறையில் அமர்ந்திருந்த பெரியவா, ஒரு பாரிஷதரிடம்
" டேய்! ஒரு பாட்டில்ல, நூறு நூத்தம்பது பவுன் காஸு தயார் பண்ணி எடுத்துண்டு வா. ஒடனே பண்ணு போ!" என்று உத்தரவிட்டார்.
வெளியில் தர்ஶனத்துக்கு நின்று கொண்டிருந்த பலபேருடைய காதில் பெரியவாளின் உத்தரவு விழுந்தது.
"அம்மாடியோவ் ! நூறு, நூத்தம்பது தங்க காஸா! நமக்கும் ரெண்டு மூணு கெடச்சா தேவலையே! பூஜைல வெச்சுக்கலாமே!"
சிலருக்கு நப்பாஸை.
எல்லாரும் வெளியே வந்த பாரிஷதரை சூழ்ந்து கொண்டனர்.
" எனக்கு ரெண்டு மூணு காஸு வாங்கி தரயாப்பா?" என்று ப்ரார்த்தனை வேறு.
"ஆஹா! கட்டாயம் மாமா! "
அவர் அங்கிருந்து நகர்ந்தார்.
பெரியவாளை தர்ஶனம் பண்ண, வேத பண்டிதர்கள், வித்வான்கள் வருவார்கள். பெரியவா அவர்களுக்கு முக்யத்வம் குடுத்து ஸன்மானம் அளித்து ஆஸிர்வாதம் பண்ணுவார். அன்று வைதீகர்கள் எல்லோருக்கும் அபாரமான அனுக்ரஹமே ! எல்லா வைதீகர்கள் முகத்திலும் பூரிப்பு! புன்முறுவல்!
மைலாப்பூரை சேர்ந்த ஒரு மஹா பண்டிதர், 'க்யூ'வை விட்டு தனியே பாரிஷதரிடம் வந்து
"எனக்கு…. பத்து பன்னண்டு தங்கக் காஸு வாங்கி தரணும். பெரியவாட்ட நீதாம்பா சொல்லணும்"
"அதுக்கென்ன மாமா? ஒங்களோட ப்ரார்த்தனைய பெரியவாட்ட சொல்றேன்"
போய்விட்டார்…..தங்கக்காஸு கொண்டு வர!
கொஞ்சநேரத்தில், பவுன்காஸு பாட்டிலை பெரியவா பக்கத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு, பெரியவாளிடம் ஏதோ சொன்னார்.
பெரியவா 12 காஸு கேட்ட மைலாப்பூர் பண்டிதரை காட்டி
"அவரை கூப்டு"
மைலாப்பூர் ஸந்தோஷமாக ஓடி வந்தார்.
"ரெண்டு கையையும் நீட்டு!"
பண்டிதருக்கு பனிமழை பொழிந்த மாதிரி ஒரே ஆனந்தம்!
ரெண்டு கைகளையும் பவ்யமாக நீட்டினார்.
பெரியவா பாட்டிலில் இருந்து ஒரு பிடி தங்கக்காஸை எடுத்து அவர் கைகளில் போட்டார்! கைநிறைய தங்கக்காஸை பார்க்கும் ஆசையில், கைகளைப் பார்த்தார்…..
என்னது இது?
பண்டிதருக்கு ஒண்ணும் புரியலை! பெரியவாளிடம் என்ன கேட்பது? எப்படி கேட்பது?
ஆம். அவர் கைகளில் விழுந்தது……..தங்கக்காஸு போல் மஞ்சள் நிறத்தில் புதிதாக பொரித்த நேந்த்ரங்காய் சிப்ஸ்!
பெரியவாளுடைய "ஸங்கேத" பாஷையில் 'பவுன் காஸு' என்றால், நேந்த்ரங்காய் வறுவல்!!
பாவம், பண்டிதர்!! புன்முறுவல் மறைந்து, வறுவலை வாங்கிக் கொண்டு, வெளியே வந்தார். ஶுத்தமாக ஒன்றுமே புரியவில்லை! ஒரே குழப்பம்!
வெளியே வந்த அந்த பாரிஷதரிடம்
"ஏம்ப்பா! பெரியவா எனக்கு ஏன் வறுவலைப் போய் குடுத்தார்?"
"நீங்கதானே மாமா கேட்டேள்!"
"நானா ! நான் ஏன் வறுவல் கேக்கறேன்? எப்போ கேட்டேன்?"
"ஒருமணி நேரம் முன்னாடி எங்கிட்ட, பத்து பன்னண்டு வேணுன்னு கேட்டேளே ! அதான் பெரியவாட்ட சொன்னேன்"
அவர் முழித்தார்……….
"தங்க காஸுன்னு-னா….. காதுல விழுந்துது!!"
"அதேதான் இது ! பெரியவா.. ஸ்லேடையா நேந்த்ரங்கா வறுவலைத்தான் தங்கக்காஸுன்னு சொன்னார்"
மைலாப்பூருக்கு மஹா ஏமாற்றம்.
ஆனாலும் "தங்கமா இருந்தா என்ன? நேந்த்ரங்கா சிப்ஸா இருந்தா என்ன? பெரியவா குடுத்த ப்ரஸாதம்"
ஸமாதானப் படுத்திக் கொண்டார். வேற வழி?
பெரியவாளோட குசும்பு யாருக்குமே வராது! அதிலும் அவர்தான் ஜகத்குரு!
No comments:
Post a Comment