ஐந்தாம் வேதம் பாகம் 2 - J.K. SIVAN
- அஸ்வமேதிக பர்வா
குரு தக்ஷிணை
அனல் பறக்கும் ஒருநாள் அந்த பாலைவன பிரதேசத்தில் சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் ஜீவராசிகள் தவித்தன. நீருக்கு அலைந்தன. உதங்க மகரிஷியும் தாகத்தில் நீர் தேடினார். அவர் எதிரே ஏறக்குறைய
நிர்வாணமாக, கோவணத்துடன் ஒரு வேடன் தென்பட்டான் . உடலெல்லாம் புழுதி, மண். களைத்து காணப்பட்ட அவனோடு ஒரு நாய் கூட்டம். பார்ப்பதற்கே கொடூரமாக காணப்பட்ட அவன் கரத்தில் கூறிய வாள் ஒன்று. தோளில் வில், முதுகில் அம்பறாத்தூணியில் அம்புகள். அவன் துர்கந்தத்தின் மொத்த உரு.
அவன் இடையிலிருந்து ஒரு தோல் பையில் அழுக்கு ஜலம். உதங்கரைப் பார்த்த அவன் ''ஏ சாமியாரே , தண்ணி வேணுமா, களைத்து இருக்கிறியே, குடிக்கிறியா, தரட்டுமா?'' என்று தனது தோல் பையை எடுத்தான். உதங்கருக்கு அவனிடமிருந்து அந்த அழுக்கு நீரை பருக மனமில்லை. அருவருப்பாக இருந்தது.
''வேண்டாம்'' என்றார். அவனோ விடுவதாக இல்லை. பரவாயில்லை சாமி குடியுங்க. தாகத்துக்கு தண்ணி தோஷமில்லை. உங்களை பார்த்தாலே தாகத்தில் வாடறது தெரியுது'' என்றான்.
அப்படியும் அவர் ''வேண்டாம்'' என்று சொன்னவுடன் அவன் நாய்களோடு மறைந்துவிட்டான். அப்படி அவன் அதிசயமாக மறைந்தவுடன் தான் உதங்கருக்கு கிருஷ்ணன் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது. ஒருவேளை கிருஷ்ணனை நினைத்ததும் அவரே அந்த வேடனாக வந்து தன்னை சோதித்தாரோ?'' என தோன்றியது. சற்று நேரத்தில் அங்கே சங்கு சக்ர கதாபாணியாக நாராயணனே தோன்றினார்.
''நாராயணா, நீ தான் அந்த அருவருப்பான வேடனாக வந்தாயென்றால், நான் ஒரு ரிஷி என் முன் நீ எதற்காக அப்படி அருவருப்பாக வரவேண்டும்? அப்படித்தான் நீரை எனக்கு அளிக்கவேண்டுமா?''
''முனிவரே, உங்களுக்கு எப்படி நீர் அளிக்க வேண்டும் என்று சங்கல்பமோ அவ்வாறே அளிக்கப் பட்டது. உங்களைப்பற்றி இந்திரன் என்ன சொன்னாரோ அவ்வாறே செய்தார். உங்கள் முன் தோன்றியது இந்திரனே.
''நாராயணா , நான் வேடனாக அருவருப்பான உருவோடு உதங்கர் முன் தோன்றி அவர் வேண்டிய நீரை மட்டுமல்ல அம்ருதத்தையே அளிப்பேன். அவர் வேண்டாமென்று நிராகரித்தால் கொடுக்காமல் திரும்பி விடுவேன்'' என்று இந்திரன் என்னிடம் சொன்னான்'' என்கிறார் நாராயணன்.
நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டீர்கள். எனினும் எப்போதாவது உங்களுக்கு தாகம் ஏற்பட்டு என்னை நினைத்தால், மேலே கருமேகம் தோன்றும். அதற்கு உதங்க மேகம் என இனி பெயர் தங்கும். பாலைவனங்கள், காய்ந்த நிலங்களில் உதங்கமேகம் இன்றும் நீர் தந்து கொண்டு இருக்கிறது. '' என்று ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் கூறினார்.
உதங்கரின் குரு கௌதமர் மற்ற எல்லா சிஷ்யர்களையம் குருகுல வாசம் முடிந்து திருப்பி அனுப்பினாலும் உதங்கரை மட்டும் இன்னும் செல்ல அனுமதிக்கவில்லை. காட்டில் குருவுக்கும் குருபத்னி அகல்யாவுக்கும் சிச்ருஷைகள் பணிவிடைகள் செய்துகொண்டு உதங்கர் வாழ்ந்தார். குரு கௌதமருக்கும் உதங்கர் மீது வாஞ்சை, பாசம். அவரை விட்டு பிரிய மனமில்லாததால் கல்விபயிற்சி முடிந்தும் கூட திருப்பி அனுப்பவில்லை. ஆயிரக் கணக்கான மற்ற சிஷ்யர்கள் சென்று விட்டனர். உதங்கருக்கு தனது வீட்டுக்கு பெற்றோரிடம் செல்ல முடியவில்லையே என்ற குறை. நூறு வருஷங்களுக்கு மேலே ஆகிவிட்டது.
ஒருநாள் காட்டில் சென்று குருவின் ஹோமத்துக்கு, யாகத்துக்கு நிறைய கட்டைகள், சிரா, சுள்ளி பொறுக்கி தலைமீது கட்டாக சுமந்து வரும்போது களைப்பு தாகம், பசி மேலிட்டு தலையிலிருந்த கட்டை கீழே இறக்கினார். அவருடைய வெண்மையான ஜடாமுடி யில் சில முடிகள் சுள்ளிகளில் சிக்கி அறுந்து கட்டையோடு கீழே விழுந்தது. வயதாகிவிட்டது வேறே. எனவே துக்கத்தினால் கண்ணீர்விட்டு வருந்தினார்.
குரு கௌதமரின் பெண் பார்த்துவிட்டாள் . ஓடிவந்து அவர் கண்ணீர் துளிகளை கீழே விழாமல் தனது கைகளில் தாங்கிக் கொண்டாள் . அதன் உஷ்ணம் தாங்காமல் கீழே விட்டுவிட்டாள் . விஷயம் குருவுக்கு தெரிந்தது.
''உதங்கா, உன் மனதில் உள்ள வருத்தம் என்ன என்று சொல். தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்கிறார் கௌதமர்.
''குருநாதா, மனப்பூர்வமாக தங்களை குருவாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு தான் இது காலம் வரை பணி புரிந்தேன். என்னை அறியாமல் என் மனத்தில் தற்போது ஏதோ ஒரு துயரம், சோகம் என்னவென்றால், நூறு வருஷங்களாக நான் தங்களிடம் மாணாக்கனாக பயிற்சி பெற்றும் மற்ற மாணவர்கள் கல்வி முடிந்து சென்று விட்டார்கள், என் கல்வி இன்னும் பூரணமாக வில்லையா. எனக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லையே என்ற குறை தான்.
''உதங்கா, என் மகனே, உன் மீதுள்ள அலாதி பிரியத்தால் நான் கடமையில் தவறி விட்டேன். உன்னை ஆசி கொடுத்து மற்ற பிள்ளைகளை போல திரும்ப அனுப்ப தவறிவிட்டேன். உனக்கு வித்யா தானம் பூரணமாக அளி த்தாயிற்று. இனி நீ உனது ஊருக்கு திரும்பலாம். ஒரு கணமும் தாமதியாமல் செல்வாயாக'' என்கிறார் கௌதமர்.
''குரு தேவா. குருவுக்கு நான் என்ன காணிக்கை தரவேண்டும். அன்புக் கட்டளையிடுங்கள்'' என்றார் உதங்கர்.
''உதங்கா, எனக்கு உன்னால் பூரண திருப்தி ஏற்பட்டதே அதுவே நீ அளிக்கும் குரு தக்ஷிணை. நீ பதினாறு வயது இளைஞனாக மாறினால் என் பெண்ணையே உனக்கு மனைவியாக அளிப்பேன்''.
உதங்கர் இளைஞனாகி கௌதமர் பெண் அவரது மனைவியாகிறாள். உதங்கர் குருபத்னியிடம் ''அம்மா உங்களுக்கு என் தக்ஷிணை என்ன தரவேண்டும் என்று ஆக்கினை இடவேண்டும்'' என்று உதங்கர் கேட்க,
அகலிகை ''என் அன்பு மகனே, உன் அன்பைத் தவிர வேறொன்றும் வேண்டாமடா'' என்று ஆசிர்வதித்தாள்.
No comments:
Post a Comment