கண்ணன் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 13
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 13
நண்பனின் விரோதி, எனக்கும் விரோதி !
கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடுகிற சந்தோஷமே தனியானது. காற்று வாங்குவதற்காகக் கடற்கரைக்குச் செல்வதும், அங்கே மணலைப் பார்த்ததும் வீடு கட்ட முனைவதும், அந்த வீட்டுக்கு வாசலும் கதவும் வைத்து அழகு பார்ப்பதும்... எத்தனை வயதானாலும் அலுக்கவே அலுக்காத விஷயங்கள்! இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து, பார்த்துப் பார்த்து, மணலை எடுத்து ரசனையுடன் வீடு கட்டுவது குதூகலம் என்றால், அதைவிடக் குதூகலமானது, சட்டென்று ஓடி வந்து அந்த வீட்டை இடிப்பதுதான்! நாம் மணல் வீடு கட்டும்போது, நம்முடைய நண்பர் அல்லது உறவினர் அதை இடிப்பதும், அவர்கள் கட்டுகிற வேளையில் நாம் இடித்துத் தள்ளுவதும் சுவாரஸ்யமான விளையாட்டுக்கள்!
அடுத்த முறை கடற்கரையிலோ, காவிரி போன்ற நதிக்கரைகளிலோ மணல் வீடு கட்டும்போது, கொஞ்சம் கவனமாக இருங்கள்... உங்கள் மணல் வீட்டை இடித்துத் தள்ளி விளையாடுவதற்குக் குறும்புக் கண்ணன் ஓடி வந்தாலும் வருவான். ஏனெனில், உங்கள் மனதில் துக்கமும் வருத்தமும் குடிகொண்டிருக்கும்போது அவனை 'கிருஷ்ணா... கிருஷ்ணா' என்று அழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், சந்தோஷமும் குதூகலமுமாக, மணலில் வீடு கட்டி விளையாடுவது போன்ற உற்சாகப் பொழுதுகளில், அவனை நீங்கள் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்வதே இல்லை!
கோபியர்கள் சிலர் இப்படித்தான் கண்ணபிரானை அழைக்காமல், யமுனை நதிக்கரையில் மணல் வீடு கட்டி விளையாடினார்கள். ஒருவர் கட்டிய வீட்டை அடுத்தவர் கேலி பேச, அவர் கட்டிய வீட்டை இன்னொருவர் கிண்டல் செய்ய... கோபியரின் சிரிப்பில், அந்த யமுனை நதியின் சலசலப்பே காணாது போயிற்று என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!
கோபியரின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு அழுகையும் கோபமும் அதிகரித்தது. 'உங்களுடைய சந்தோஷத்தில் நானும் இருந்தால், அது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்காதா? ஆட்டத்துக்கு என்னைச் சேர்த்துக் கொள்ளாதது ஏன்? என்று நினைத்து வருந்தினான். அவர்களின் சிரிப்பொலி அவன் கோபத்தை மேலும் தூண்டிவிடவே... ஓடி வந்து, அவர்கள் கட்டிய மணல் வீடுகளை உதைத்துச் சிதைத்துக் குதூகலித்து மகிழ்ந்தான்!
கோபியர்கள் விடுவார்களா?! ரகசியமாக ஒரு திட்டம் போட்டனர். கண்ணனுக்குத் தெரியாமல், அனைவரும் ஒருத்தியின் வீட்டு முற்றத்தில் கூடி, மணல் வீடு கட்டி விளையாடுவது என முடிவு செய்தனர். நதிக்கரை மணலை ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து, இடுப்புச் சேலையில் முடிந்துகொண்டு, எவருக்கும் தெரியாமல், அத்தனை பேரும் தோழியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் இருந்த எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் சார்த்தினார்கள். ஒரு புத்திசாலிப் பெண், கதவுகளைப் பூட்டி, சாவிக் கொத்தினை எடுத்துத் தன் இடுப்பில் செருகிக்கொண்டாள்.
அனைவரும் வீட்டு முற்றத்துக்கு வந்தார்கள். புடவைத் தலைப்பில் இருந்த மணலைத் தரையில் கொட்டினார்கள். பிறகு ஆளுக்கொரு கையாக அள்ளி அள்ளி, வீடு கட்டுவதில் மும்முரமானார்கள். மண்ணை எடுத்துக் குவித்து, கிட்டத் தட்ட வீட்டைக் கட்டி முடித்துவிட்டனர். 'அப்பாடா... என்றாள் ஒருத்தி; 'அடடா..! என்றாள் இன்னொருத்தி. 'நாம் கட்டிய வீடுதான் எத்தனை அழகு! என வியந்தாள் மூன்றாமவள். 'ஆமாமாம்! வீடு நன்றாகத் தான் இருக்கிறது'என்றபடி அங்கே வந்து குதித்தான் கண்ணன். அனைவரும் அதிர்ந்து போனார்கள். சாவிக்கொத்தை இடுப்பில் செருகிக்கொண்டவள், சட்டென்று அது இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டாள். 'வாசல், கதவு, ஜன்னல், பூட்டு, சாவி... என சகலத்திலும் நான் இருக்கிறேன்'என்று சொல்லிவிட்டு, அந்த மணல் வீட்டை இடித்தும், கலைத்தும் விளையாடினான் கண்ணன். 'வீட்டைக் கலைத்ததுபோல், எனக்குள் இருக்கிற மற்ற சிந்தைகளையும் கலைத்துப் போடேன்'என்கிறது பாடல் ஒன்று. 'எப்போதும் உன் நினைப்புடனே இருக்க வேண்டும்'என்று சொல்லாமல் சொல்கிறது அந்தப் பாடல். அந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரி ஸ்ரீஆண்டாளைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?!
எல்லோருக்கும் எல்லாவிதமாகவும் இருப்பவன் கண்ணன். அர்ஜுனனுக்குச் சாரதியாக, யசோதை - நந்தகோபனுக்குப் புத்திரனாக, பாண்டவர்களுக்குத் தூதுவனாக... என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருந்து, அன்பு பாராட்டியவன்! அதிலும் குறிப்பாக, பாண்டவர்களிடத்தில் அவன் காட்டிய அன்பு, அளவிடற்கரியது!
விதுரரின் ஆஸ்ரமத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சாப்பிட்டுவிட்டு, துரியோதனனைச் சந்தித்தார். இதனால் மிகுந்த வருத்தமும் கோபமும் உண்டாயிற்று துரியோதனனுக்கு. 'என்னையும் பீஷ்ம - துரோணாதியரையும் புறக்கணித்துவிட்டு, விதுரரின் வீட்டில் சாப்பிட்டது நியாயமா? என்று கேட்டான். இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். 'என்னையும் பீஷ்மரையும் துரோணரையும்... என்று சொல்லியிருக்கலாம். ஆனால், பீஷ்மரையும் துரோணரையும் சேர்த்தே சொன்னான். அதாவது, பீஷ்மரும் துரோணரும் சேர்ந்தால்தான் தனக்கு நிகராவார்கள் எனும் இறுமாப்பும் கர்வமும் கொண்டிருந்தானாம் அவன்.
சரி... விஷயத்துக்கு வருவோம். விதுரரின் வீட்டில் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, கண்ணா! என் வீட்டில் உணவருந்தியிருக்கலாமே..? என்று துரியோதனன் கேட்டதற்கு, 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கக்கூடாது, அல்லவா! உன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நாளைக்கு உனக்கு எதிராளியாகச் செயல் பட்டால், சூரிய - சந்திரர்கள் இருக்கும்வரை, எவரும் என்னை மன்னிக்க மாட்டார்கள்' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
'உனக்கும் எனக்கும் விரோதம் ஏதும் இல்லையே, கண்ணா? என்றான் துரியோதனன் குழம்பியவனாய். உடனே ஸ்ரீகிருஷ்ணர், 'உனக்கும் பாண்டவர்களுக்கும் விரோதம் இருக்கிறதே... அது போதாதா? என்றார் சிரித்தபடி. 'என்ன கண்ணா, அது என்ன புதிதா? பாண்டவர்கள் எங்களுக்குப் பங்காளிகள். எங்களுக்குள் பங்காளிச் சண்டை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. மற்றபடி, விரோதமும் சண்டையும் எனக்கு அவர்களிடம்தானே தவிர, உன்னிடம் இல்லையே..! என்றான் துரியோதனன். 'உண்மைதான்! ஆனால், பாண்டவர்கள் எனக்குப் பிராணனைப் போன்றவர்கள். அதே போல், அவர்களுக்குப் பிராணனாக நான் இருக்கிறேன். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பன்; நண்பனின் விரோதி, எனக்கும் விரோதிதான்'' என்று புன்னகைத்தார் ஸ்ரீகிருஷ்ணன். அதிர்ந்து போய் நின்றுவிட்டான் துரியோதனன்.
ஆக, தன்னையே நினைந்திருப்போரை எந்தத் தருணத்திலும், எவருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் பகவான். ஸ்ரீகண்ணனை, அவனுடைய திருவடியை, முக்கியமாக அவனுடைய திருநாமத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்
No comments:
Post a Comment