#சுகப்பிரசவம்_அளிக்கும்_திருப்பதிகம் #திருச்சிராப்பள்ளி
-
#இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ தாயுமானவர்
-
#இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை
-
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை மீது சம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் படித்து வந்தால் வீடு கட்டும் பணி சிறப்பாக நிறைவேறி விரைவில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீர் பெறவும், பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், உறவினர், நண்பர்களால் நன்மை ஏற்பட இந்த பதிகத்தை ஓதுவது நல்லது.
-
இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப்பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை. இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
-
நன்று உடையானைத் தீயது இலானை நரைவெள் ஏறு
ஒன்று உடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிருமே. ..01
-
கைம் மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழை பாய்வான்
செம்முகமந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. ..02
-
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே. ..03
-
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே. ..04
-
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே. ..05
-
வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன்சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே. ..06
-
வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேயுயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே. ..07
-
மலை மல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழியோரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே. ..08
-
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே. ..09
-
நாணாதுடை நீத்தோர்களும் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே. ..10
-
தேனயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே. ..11
-
#குறிப்பு: இப்பதிகத்திற்கான #சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
-
Visit as : http://thillai-ilanthendral.blogspot.in/ …/…/blog-post_6.html
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment