Courtesy:Sri.Siva Gopi
சம்பந்தர் திருமுறை பேசும் சூழலியல் சிந்தனை
மூன்று வயதிலேயே தோடுடைய செவியன்
என்னும் மெய்மை மொழி திருப்பதிகம் பாடிய சம்பந்த பெருமான்
தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து என்றால் அது மிகை இல்லை
சம்பந்தரை சந்தங்களின் தந்தை என்பார்கள்
அவரளவுக்கு புதுப்புது சந்தங்களை அறிமுகப் படுத்தியவர் யாரும் இல்லை
அதேபோல ஒரு ஊருக்கு சென்றால் அங்குள்ள இறைவனையும் அவரோடே கூட அவ்வூரின் இயற்கை எழிலை காட்சி படுத்துவதில் சம்பந்தருக்கு நிகர் சம்பந்தர்தான்
அவருடைய இரண்டாம் பதிகமே அதற்கு மிகச்சிறந்த சான்றாகும்
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கை கோலக்கா
என்கிறார்
பெண்கள் கரையில் இருந்து தண்ணீரில் குதிப்பது தண்ணீரை குடைவது போல இருக்கிறதாம்
அவர்கள் தண்ணீரில் தொம் என்று விழுவதில் அஞ்சிய வாளை மீன்
துள்ளி பாய்கிறதாம்
இத்தகைய துடிப்பான பெண்கள் வாழும் ஊரில்
சடைமுடியும் கோவணமும் கொண்ட உருவத்தோடு இருக்கிறாரே
பெண்கள் மயங்கி விழும் அழகிய கோலத்தில் இருக்க வேண்டாமோ என்று சிரிக்கிறார் சம்பந்தர்
பெருமானின்
திருவெண்காட்டு பதிகத்தில் அற்புதமான ஒரு இயற்கை காட்சி உள்ளது
வெண்காட்டின் தன்புறவின் மடல் விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறைய
என்கிறார் அதாவது
திருவெண்காட்டின் நீர்நிலைகளில் பூத்திருக்கும் மிகப்பெரிய தாழம்பூக்களின் கரிய நிழலை கண்ட
கொண்டை மீன் குருகு என்னும் பறவைதான் வேட்டையாட வந்திருக்கிறது என்று எண்ணி கொண்டு தாமரைப் பூக்களுக்கு இடையே மறைந்து கொள்ளுமாம்
எத்தனை துள்ளியமாக இயற்கை வர்ணனை பாருங்கள்
தூயவிரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண்பாய வரிவண்டு பல பண்முரலும் ஓசைபயில் மாகறல் உளான்
என்கிறார் திருமாகறல் பதிகத்தில்
மாகறலில் விரிந்திருக்கும் பலவகை மலர்களிலும் மதுவை உறிஞ்சிய வண்டுகள் முரலுவது இறைவனுக்கு இசைப்பாடுவது போல உள்ளதாம் மீன்களையும் வண்டுகளையும் பாடும் சம்பந்த பெருமான்
விலங்குகளையும் விட்டு வைக்க வில்லை
குறிப்பாக குரங்குகளின் சேட்டைகள் சம்பந்தருக்கு பெரிதும் விருப்பமாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது, குரங்குகளை பல பதிகங்களில் குறிப்பிடுகிறார் சம்பந்த பெருமான்
வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே
என்கிறார் திருவையாறு பதிகத்தில்
திருவையாற்றில் உள்ள ஆடல் பெண்கள் ஆடுவதற்கு இசைக்கப்படும் முழவங்கள் அதிர்வதை கேட்ட குரங்குகள்
இடி இடிக்கிறது போல் உள்ளதே ஆனால் வெயிலும் அடிக்கிறதே வானத்தில் கார்முகில்கள் இருக்கிறதா?? இல்லையா??
இடி ஓசை எங்கிருந்து வருகிறது என்று மரத்தில் ஏறி வானத்தை பார்க்கின்றனவாம் குரங்குகள்.
குரங்குகளின் முட்டாள் தனம் கலந்த அறிவாளி தன்மையை எத்தனை அழகாக காட்சி படுத்துகிறார் பாருங்கள்
திருக்கேதீச்சரம் பதிகத்தில்
வாழையம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்
என்கிறார்
வாழைத்தோப்புகள் விளைந்து அறுவடை செய்ய ஆள் இல்லாமல் கிடக்கிறதாம்
அதனால் வாழைப்பழங்களை விரட்டுபவர் யாரும் இல்லாமல் குரங்குகள் தின்னக்கிடைக்கின்றன
என்பதால்
அவை களிப்படைந்து திரியும் மாதோட்ட நந்நகர் என்று சிறப்பிக்கிறார் பெருமான்
திருக்காளத்தி பதிகத்தில்
*பல்பல இருங்கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்க்
கல்லதிர நின்று
கருமந்தி
விளையாடு
காளத்தி மலையே*
என்று பாடுகிறார்
காளத்தி மலையில் கிடைக்கும் பல வகைப் பழங்களை தின்று மகிழ்ந்த கருங்குரங்குகள்
மலையே அதிரும்படி குதித்து விளையாடுகின்ற காளத்தி மலை என்று
மலை வர்ணனை செய்வதிலும் குரங்குகளை கைவிடாதவர்
திருவண்ணமாலை யின் பூவார் மலர்
என்னும் பதிகம் முழுதுமே இயற்கை வர்ணையிலேயே மூழ்கி இருக்கிறார்
*பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து
அங்கு உறங்குஞ் சாரல் அண்ணா மலையாரே*.
என்கிறார்
ஆண்யானை ஒன்று மதமேறிப் போய் பெண்யானையை காணமல் மலையே அதிரும் படி பிளிறி பிளிறி
ஓய்ந்து உறங்குகின்ற சாரலை உடைய அண்ணாமலையாரே
என்பது பொருள்
மேலும் அண்ணாமலை மீது
வாழும் வேட்டுவக்குடி பெண்கள் மதுவருந்தி தம் ஆடவருடன் மகிழ்ந்து இருக்கிறார்களாம்
எருமைகளும் பசுக்களும் மேய்கின்றதாம்
பலவகைப் பட்ட பாம்புகள் ஊர்கின்றனவாம்
அந்தி பிறை வந்து அணைகின்றதாம் என்று
ஏழாம் நூற்றாண்டு அண்ணாமலையின் இயற்கை காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து விடுவார்
சாம்பந்த பெருமான், திருவையாறு பதிகத்தில்
கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல்நீங்கி செங்கால் நல்வெண் குருகு பைங்கானல் இறைததேறும் திருவையாறே
என்கிறார்
நீர்வளம் நிரம்பிய ஊர்களில் நீர்நிலை காட்சிகள
மலைவளம் நிரம்பிய ஊர்களில் மலைக்காட்சிகள்
மருத நிலத்தில் கழனிசூழ் காட்சிகள்
விலங்குகள் பறவைகள் மீன்கள் ஆமைகள் என்று இயற்கையை சிறப்பிக்கும் சம்பந்தர் நமக்கு போதிக்கும் விஷயம்
இந்த உலகம் நமக்கு மட்டுமானது இல்லை
அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது என்பதுதான்
விலங்குகளும் பறவைகளும் கொஞ்சி விளையாடித்திரியும் பல்லுயிர் பெருக்கமும் சூழ்நிலை அறிவியலும் புரிந்து நட
விலங்குகளை கொல்லாதே
காட்டை அழிக்காதே
நீர்நிலைகளை ஆக்கிரமிக்காதே
அனைத்து உயிர்களிலும் சிவம் வியாபிதனது உள்ளது
என்பதை உணர்த்தத்தான்
அப்படித்தான் நாம் இதனை படிப்பினையாக கொள்ள வேண்டும்
சம்பந்தர் காட்டும் சைவ நெறி
கண்களை மூடிக்கொண்டு சிவம் சிவம் என்று மட்டும் கூறுவது என்பதல்ல
உன்னை சுற்றி பார் எத்தனை அழகான உலகை இறைவன் உனக்கு கொடுத்துள்ளார் அதனை அப்படியே பாதுகாத்து
உன் சந்ததிக்கு கொடுத்து விட்டு இறைவனிடம் வா
உலகை பற்றியும் வருங்கால சந்ததியினரின் வளமான பல்லுயிர் வாழ்வையும் கண்டு கொள்ளாதவன் இறைவனுக்கு இனிப்பானவன் இல்லை
என்பதை சொல்வதுதான் சம்பந்த பெருமானின் இயற்கை வர்ணனை காட்சிகள்
No comments:
Post a Comment