சிவ வடிவம்: 48
பெயர்: கஜாந்திக மூர்த்தி.
வாகனம்: நந்தி தேவர்.
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
* விளக்கம்:
ஐராவதம் எனும் இந்திரனின் யானையானது, போரில் படுகாயமுற்று பின்வாங்கியமைக்காக வருந்தியது. எனவே திருவெண்காடு வந்து சிவபெருமானை வணங்கியது. சிவபெருமான் ஐராவத்தின் வேண்டுதலை கண்டு மகிழ்ந்து ஐராவதத்தின் உடைந்த தந்தங்களை சரிசெய்து மனவருத்ததினை நீக்கிய வடிவமே கஜாந்திக மூர்த்தியாகும்.
* உருவக் காரணம்:
சூரபத்மனுடன் இந்திரன் தலைமையில் தேவர்கள் போரிட்டனர். போரில் இந்திரன் தோழ்வி அடைந்தான். சூரபத்மன் இந்திரன் முதலான தேவர்களை சிறை பிடித்தார். சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் மனைவி இந்திராணி சாஸ்தாவின் பாதுகாப்பில் சீர்காழியில் மறைவாக வசித்து வந்தார். அங்கே சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகி சீர்காழியில் இந்திராணியே கண்டு அவ்விடம் சென்றாள். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னாள். இதற்கு இந்திராணி மறுத்தார் ஆதலால் அசுமுகி அவரை இழுத்துக்கொண்டு சென்றாள்.
இதைப்பார்த்த சாஸ்தா அசுமுகியுடன் கடுமையான போர் நடத்தினார். சாஸ்தா இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அசுமுகியின் கையையும் வெட்டி அனுப்பினார். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். பின்னர் சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான்.
பானுகோபன் இந்திராணியை தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.
அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது.
ஐராவதம் அடிவாங்கி பின்வாங்கியது பானுகோபன் ஐராவதத்தின் இரு தந்தங்களை உடைத்தான். பானுகோபனிடமிருந்து தப்பிச் சென்றது ஐராவதம். போரில் தோழ்வி அடைந்தது நினைத்து மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். ஐராவதத்தின் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த தந்தங்களை புதுப்பித்தார்.
அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, தேவர்களும் மீட்கப்பட்டனர். ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார்.
* தரிசன இடங்கள்:
இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் இறைவியின் திருநாமம் பிரம்மவித்யா நாயகி
இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இழந்த பொருள் கிடைக்கும் மனம் நிறைந்த வாழ்வு தித்திக்கும். மேலும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.
*** ஓம் நமசிவாய ***
No comments:
Post a Comment