Friday, September 23, 2016

2 puzzles - excellent explanation

courtesy:Sri.Mayavaram Guru

23 ம் புலிகேசியின் வடிவேல் கேட்ட கேள்விக்கு சரியான அர்த்தம் இது தானாம்.!

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை என்றால் என்ன ??

-இந்த இரண்டு கேள்விகளை மட்டும் வடிவேல் கேட்டுவிட்டு கடைசி வரை பதில் சொல்லாமலே போய்விடுவார் - இதற்க்கான பதிலை ஆராய்ந்த போது கிடைத்த பதில் இது தான்.!

●தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.

● பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான்

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..

No comments:

Post a Comment