Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
திருவடி பெருமை
நாயகி சுவாமிகளும்
ஆழ்வார் பாடல்களும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு
ஓம் நமோ வேங்கடேசாய நம
ஓம் நமோ நாராயணாய நம
ஓம் நமோ லட்சுமி நாராயணாய நம
ஓம் நமோ சத்ய நாராயணாய நம
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம
ஓம் கிருஷ்ணாய நம
இன்றைய சத்சங்கத்தில் நாயகி சுவாமிகள் பற்றி கருத்து பரிமாறலாம் என்று சொன்னார்கள். ஆம் காரணம் இருக்கிறது. இன்று சனவரி 8. நாயகி சுவாமிகள் பிறந்த நாள் முக்தி அடைந்த நாள். அதி அற்புதமான நாள். எனவே நாயகி சுவாமிகள் பற்றியும் இவருடைய சிந்தனையும் ஆழ்வார்களின் சிந்தனையும் எப்படியெல்லாம் ஒத்துப் போகிறது என்பதைப் பற்றியும் நாம் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம்.
நாயகி சுவாமிகள் என்பவர் யார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 19ஆம் நூற்றாண்டில் மதுரையில் அவதரித்த ஒரு அருளாளர் அவர். 1843 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் நாள் பின்னிரவு ஆங்கில முறைப்படி 9 ஆம் நாள் அவர் பிறந்தார். நாம் இன்று சனவரி 8ஆம் நாள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் பிறந்தது சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் மிருக சீரிட நட்சத்தித்தில் பிறந்தார். இவர் பிறந்தது மதுரை மாநகரில் பால்மால் குறுக்குத் தெருவில். பால்மால் என்பது ஒரு ஆங்கிலச் சொல். அந்தப்புரத்துக்குச் செல்லும் பாதை என்று இதற்குப் பொருள். இன்றும் இந்த சாலை வழியாகச் சென்றால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையின் அந்தப்புரப் பகுதிக்குச் செல்ல முடியும். நாயகி சுவாமிகள் பிறந்த கிழமையோ குருவாரம். இதனால் தான் இந்த குருபீடத்தில் இந்த மதுரை ஆன்மீகக் குருவைப் பற்றி நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இவரது இயற்பெயர் இராமபத்திரன்.இவர் சிறுவயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாமல் –வேலைக்குப் போன இடத்தில் வேலையில் ஆர்வம் இல்லாமல் - குலத்தொழிலான நெசவுத் தொழிலிலும் ஆர்வம் இல்லாமல் ஏதோ பலத்த சிந்தனையில் இருந்தார். தமது 16 வயதில் பாசத்தைத் தவிர்த்து துன்பக் கடலைத் தாண்டுவதற்காகத் துறவறம் பூண்டார். தென்பரங்குன்றத்தில் ஒரு குகையில் 12 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார். இத்ன் பெயர் குகாசிரமம். இவர் அங்கு தவவாழ்க்கை மேற்கொண்டிப்பது அவருடைய தாய்க்கும் தெரியவில்லை. ஒரு பெண்மணி தென்பரங்குன்றத்தில் வாழும் 18 வயதான ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய தாயாரிடமே அந்த ஞானி பற்றித் தகவல் கூறினாள். தன் மகன் தான் அந்த ஞானி என்பதை அந்தத் தாய் அறியவில்லை. ஞானியைப் பார்த்தார். பசு தனது கன்றைக் கண்டவுடன் குரல் கொடுத்து ஓடுவது போல் ஓடி எல்லோர் முன்னாலும் அந்த ஞானி தனது மகன் என்பதை உறுதி செய்துகொண்டார். வீட்டிற்குத் திரும்பிவரும்படி வற்புறுத்தினார். திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார். அம்மா எனக்குத் திருமணமே வேண்டாம் என மறுத்தார். நான் யார் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இடையூறு தரவேண்டாம் என வேண்டி தாயிடம் திருவோடு வழங்கி துறவுக்கு ஆசிவழங்கும்படி வேண்டினார்.
பின்னர் அங்கிருந்து தனக்கு ஒரு குருவைத் தேடி - அதுவும் முருகப் பெருமானின் கட்டளைப்படி- பரமகுடி அருகே உள்ள பருத்தியூரை அடைந்து அங்கிருந்த நாகலிங்க அடிகளாரிடம் சீடனாகச் சேர்ந்தார். அவரிடம் அட்டாங்க யோகத்தைப் பயின்றார் இராமபத்திரர். பல்லாண்டுகள் பயின்று நாகலிங்க அடிகள் சித்திகளைப் பெற்றார். ஆனால் நமது இராமபத்திரரோ பதினெட்டே நாட்களில் சித்திகள் கைவரப் பெற்றார். சித்த என்றால் வங்காள மொழியில் வெந்தது – பக்குவமானது என்று பொருள். அதாவது பதினெட்டு நாட்களில் பக்குவமடைந்தார். நாகலிங்க அடிகளார் இவருக்கு'சதானந்த சித்தர்' எனத் திருநாமமிட்டார். அங்கிருந்து சென்று இராமநாதபுரம் அரசரையும் பின்னர் சிவகங்கை மன்னரையும் கண்டார். பக்தியுடன் வரவேற்று உபசரித்தனர் அந்தக் காலத்தில் சோதித்துப் பார்ப்பார்கள் மன்னர்கள். இவரது புலனடக்கத்தைச் சோதித்து அறிந்து கொண்டனர் மன்னர்கள். பின்னர் பல அதிசயங்களை நிகழ்த்தினார். விரிவுக்கு அஞ்சி சுருக்கிக் கூறுகிறேன். பின்னர் ஆழ்வார்த்திருநகரி எனவும் தென்குருகூர் எனவும் வைணவப் பெருமக்களால் போற்றப்படுகிற இடத்தில் இருந்த ராஜயோகியான வடபத்திர அரையரிடம் வந்தார். சதானந்தஅடிகளார் மாதவராஜயோகியானார். ஒருமுறை திருவரங்கத்தில் நாயகி பாவம் மிகுந்து – இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து நடனமாடி மயக்கமடைந்தார். அப்போது திருவரங்கம் திருவரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் இதைக் கண்டு பரவசமடைந்து 'நாயகி' பட்டத்தைச் சூட்டினார். அது முதற்கொண்டு இவர் ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் என அழைக்கப்படுகிறார். ஆண்டாள் நாச்சியார் போலவே வேடமிட்டு இறைவன் திருநாமத்தை கூறிக்கொண்டு நடனமிட்டு தெருக்களில் அற்புதமான கருத்தாழமிக்க பாடல்களைப் பாடி பக்திப் பரவசத்தைப் பரப்பினார். இவர் பாடிய பாடல்கள் மிக இனிமையானவை. பாடல்களில் கண்ணன் பற்றிய செய்திகள் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,
சொக்குதே சொக்குதே கிருஷ்ணன் தோள் அழகில் தோழி
திக்கு வேறில்லை இல்லை சேவடி மலர்கள் வாழி
என்பார். நாயகி பாவம் ஏற்று, நாயகியாகவே மாறி, மஞ்சள் குளித்து சேலை உடுத்தி கண்ணனிடம் கொஞ்சி விளையாடியவர் நடன கோபாலர். உண்ணும் உணவு, பருகும் நீர், காணும் காட்சி எல்லாவற்றிலும் கண்ணனைக் கண்டவர்.
தான் முக்தியடையப் போகும் நாளை முன்கூட்டியே அறிந்து கொண்ட நாயகி சுவாமிகள் காதக்கிணறு என்னுமிடத்தில் தனது பிருந்தாவனம் அமையவேண்டுமென முடிவெடுத்தார். 1914ஆம் ஆண்டு. சனவரி மாதம் 6ஆம் நாள் மார்கழி மாதம் 23ஆம் நாள். அட்டமி திதி. தன் முடிவை எதிர்நோக்கி சுவாசபந்தனம் செய்தார். நவமியும் தசமியும் நகர்ந்தன. அன்ன ஆகாரம் இல்லாமல் சமாதி நிலையில் இருந்தார். வைகுண்ட ஏகாதசி வந்தது. இவரது முடிவை அறிந்து சென்னையிலிருந்து அரிகிருஷ்ணன்என்பவர் வந்தார். அரி வந்துவிட்டார் எனச் சீடர்கள் கூறினார்கள். சமாதியில் இருந்தவரும் கலகல எனச் சிரித்தார். ஆமாம் ஆமாம் அரி வந்துவிட்டார். என்னை அழைக்கிறார். என்றார். அழைக்கின்றான் அரிஎன்றார். வானத்தைப் பார்த்தார். வணங்கினார். 8.1.1914 வியாழக்கிழமை உயிர் பிரிந்தது. 12 மணிக்கு மேல் உயிர் பிரிந்தது. ஆங்கில முறைப்படி 9.1.1914. நட்சத்திரம் மிருகசீரிடம். கிழமை வியாழன். பிறந்தது சனவரி 9. இறந்தது சனவரி 9. பிறந்தது வியாழன். இறந்தது வியாழன். பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம். இறந்த நட்சத்திரம் மிருகசீரிடம். எவ்வளவு அற்புதமான ஒற்றுமை. அருளாளர்களுக்குத் தான் இப்படிப்பட்ட விசித்திரங்கள் உண்மைகளாக மாறும். இப்படியாக இராமபத்திரன் சதானந்த அடிகளாக – சைவசித்தராக முதலில் வாழ்ந்தார். பின்னர் நடனகோபால நாயகியாக மாறினார்.
ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் பார்க்கவ முனிவருக்கும் அவரது தவத்தைக் கலைக்க வந்த கனகாங்கி என்ற தேவமங்கைக்கும் பிறந்தவர். இவர் திருமாலின் சக்கரத்தின் அம்சம் ஆவார். பிறக்கும்போது பிண்டமாக இருந்ததால் பெற்றோர் இவரை ஒரு புதரில் எறிந்துவிட்டுச் செல்கின்றனர். சிறிது நேரம் கழித்து அழகிய குழந்தையாக மாறி அழத் தொடங்குகிறது அக்குழந்தை. அப்போது ஜெகநாதப் பெருமாள் இவருக்குக் காட்சி தருகிறார். குழந்தையின் குரலைக் கேட்ட திருவாளன் என்னும் புல் அறுப்பவன் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்கிறான். அப்போது குழந்தை இல்லாத ஒரு முதிய தம்பதியினர் சிறிது பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். குழந்தை அப்பாலைச் சாப்பிடுகிறது. சிறிது நாள் கழித்து அக்குழந்தை மீதமிருக்கும் பாலை அப்பெரியவரைச் சாப்பிடச் சொல்கிறது. அவர் மட்டுமல்ல அவர் மனைவியும் சாப்பிடுகிறார்கள். உடனே அவர்கள் இளமையான தம்பதிகளாக மாறுகிறார்கள். அவ்ர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை தான் கணிகண்ணன்.
ஏழு வயதுக்கு மேல் இயற்கையாக உள்ள இறைச் சிந்தனையால் பல மதங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். அந்தந்த சமய நூல்களைப் படிக்கிறார். இறுதியில் சைவசமயமே சிறந்த சமயம் எனத் தீர்மானிக்கிறார். அப்போது அவருக்கு இடப்படுகிற திவ்விய திருநாமம் தான் சிவவாக்கியர். சிவவாக்கியர் ஒரு புரட்சிச் சித்தர். சித்திகள் பல அடைந்தவர். சிவபெருமானின் அருள் பெற்றவர். 500க்கும் மேறப்ட்ட பாடல்களை அப்போது பாடுகிறார்.
ஆன அஞ்செழுத்திலே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்திலே ஆதியான மூவருமு
ஆன அஞ்செழுத்திலே அகாரமும் மகாரமும்
என்றும்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடி மாண்டு போன மாந்தர்காள்
என்றும்
கருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
என்றும்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்ததை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லிரோ?
என்றும்
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
என்றும்
அந்திமாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவும் ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராமராமராமராம என்னும் நாமமே
என்றும்
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனவிலும் அஃதில்லையே
என்றும்
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே
என்றும்
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
என்றும்
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே
என்றும்
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாட மாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாகவே மோதவே
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டும் உண்ர்கிலீரே
என்றும் பலபல தத்துவங்களை சிவபக்தராக இருந்த நமக்கு உபதேசித்தவர் சிவவாக்கியர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இவர் இருக்கும் இடத்திற்கு வந்து இவரை வாதத்திற்கு அழைத்து வெல்கிறார். தோற்ற சிவவாக்கியர் பேயாழ்வாரைச் சரணடைந்தார். திருமால் பக்தரானார்.
சாக்கியம் கற்றோம்
சமணம் கற்றோம்
சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கட்கரியானைச் சேர்ந்தோம் யாம் என்பார் ஆழ்வார். இறுதியில் தான் புறம்தொழா மாந்தராக மாறினார் திருமழிசை ஆழ்வார்.
சரி இந்த திருமழிசை ஆழ்வார் பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோம். சென்னையில் நாம் வாழ்ந்தாலும் திருமழிசை மிக அருகில் இருந்தாலும் பலர் அங்கு செல்லும் வாய்ப்பினைப் பெறவில்லை. திருமழிசைக்குச் சென்றால் நெடுஞ்சாலை மீது சிவபெருமான் கோவில். அருள்மிகு ஒத்தாண்டவர் திருக்கோவில். மேற்கு நோக்கி ஒரு தெருவில் சென்றால் ஆழ்வார் கோவில். அற்புதமான கோவில். நேரில் சென்று பெருமாளைத் தொழுதால் உங்களை அறியாமலேயே உங்கள் கண்களில் நீர் வரும். அவ்வளவு பக்தியை ஊட்டக் கூடிய கோவில் அது. அது தான் ஜெகன்னாதர் கோவில்.
சரி திருமழிசை ஆழ்வார் கதைக்கே வருவோம். ஒருநாள் காளை வாகனத்தில் சிவபெருமான் பார்வதியுடன் திருமழிசைக்கு வருகிறார். பார்வதி அம்மையார் இப்படி கடும் தவம் செய்யும் இவர் யாரோ என இறைவனிடம் கேட்கிறார். அப்போது இவர் சிவவாக்கியர் இவர் தான். என் அருள் பெற்றவர். இப்போது திருமால் அடியவர் ஆகிவிட்டார். நாம் அவருக்கு தரிசனம் தரலாம் என்று கூறி தரிசனம் தருகிறார்கள். வரம் வேண்டுமானால் கேள் என்று சொல்ல பரமபதம் அருளும்படி கேட்கிறார் திருமழிசை ஆழ்வார். அது தம்மால் முடியாது என்கிறார் சிவபெருமான். அதைத் திருமால் தான் தரமுடியும் எனவும் கூறுகிறார். இதனால் அவமதிக்கிறார் ஆழ்வார். உடனே நெற்றிக் கண்ணைத் திறக்கிறார் சிவபெருமான். கலங்கவில்லை திருமழிசை ஆழ்வார். வலது திருவடியின் பெருவிரலிலில் உள்ள ஒரு கண்ணைத் திறக்கிறார் ஆழ்வார். கடுந்தீ வருகிறது. முக்கண் மூர்த்தி பாராட்டிவிட்டு பக்திசாரர் என்ப் பட்டம் கொடுக்கிறான . இதன் பின்னர் பலர் இவரைச் சோதிக்கிறார்கள். எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறார். பிறகு திருவெஃகாவிற்குச் சென்று தங்குகிறார். கூடவே கணிகண்ணனும் செல்கிறான். அப்போது தலைநரைத்த கிழவியை இளமையாக்குகிறார் ஆழ்வார். அது கேட்டறிந்த மன்னன் அவ்வாறு இளமை வரம் கேட்கிறான் கணிகண்ணனிடம். அவன் முடியாது என்கிறான். ஊரை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். உடன் ஆழ்வாரும் செல்கிறார். கணிகண்ணன் போகின்றான் – மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் என்று வேண்டுகிறார். இறைவனும் பாயைச் சுருட்டி இவருடன் செல்கிறார். மன்னன் பயந்துபோய் ஆழ்வாரை வேண்டி திரும்பவம காஞ்சிக்கு வரும்படி வேண்ட கணிண்ணன் போக்கொழிந்தான் – மணிவண்ணா – நீ கிடக்க வேண்டும் - நீயும் உன் பைந்நாகப் பாயில் படுத்துக் கொள் என்கிறார்.. இவர் சொன்னபடி எல்லாம் இறைவன் கேட்கிறான். அதனால் தான் காஞ்சியில் – வெஃகாவில் உள்ள அந்த இறைவனுக்குப் பெயர்சொன்னவண்ணம் செய்த பெருமாள்.
முதல் மூன்று ஆழ்வார்களும் இவரைச் சந்திக்கிறார்கள். மகிழ்கிறார்கள். இவர் நான்காவது ஆழ்வாராகச் சிறக்கிறார். இவர் படைத்த நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் போன்ற அருமையான பாடல்களை நமக்குத் தந்துள்ளார்.
ஆறு சடைக்ரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே – வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து
என்று அருமையாக திருமால் ஒருவனே பரம்பொருள் என்று கூறுவார்.
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா – என்று திருமாலைப் போற்றுவார். ஒருகாலத்தில் திருமாலுக்கும் சிவனுக்கும் யார் உயர்ந்தவன் என்ற போட்டி வந்தது. பிரமதேவன் ஆணைப்படி தேவதச்சன் விசுவகர்மா இரண்டு மிகப்பெரிய வில்களைச் செய்கிறான். அதை எடுத்துக் கொண்டு இருவரும் போர் தொடுக்கின்றனர். திருமாலின் அம்பு பட்டு சிவன் ஏந்திய வில் உடைகிறது. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜனகன் தந்தையானதேவராதன் என்பவனுக்கு அந்த உடைந்த வில்லைக் கொடுக்கிறார் சிவன். அதைத்தான் இராமர் நாண் ஏற்றி சீதையை மணக்கிறார். திருமாலோ சிவனை வென்ற தன் வில்லை ரிசீக முனிவரிடம் கொடுக்கிறார். ரிசீக முனிவரின் மகன் ஜமதக்னி. அவர் மகன் பரசுராமர். அதைத்தான் சீதையின் திருமணத்திற்குப் பிறகு நாண் ஏற்றி பரசுராமனின் கர்வத்தைக் குலைக்கிறார் இராமர். கண்ணன் அவதாரத்திலும் வாணாசுரனுக்காக ஈசன் கண்ணனுடன் போர் தொடுக்க வர முருகன், விநாயகர், ஈசன் எல்லாம் போரில் தோற்று ஓடுகிறார்கள். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கி வாணாசுரனை உயிருடன் விடுகிறார் கண்ணன்.
சைவராக இருந்து வைணவத்தில் சேர்ந்த மற்றொரு மன்னனைப் பற்றி நான் சமீபத்தில் படித்தேன். திருமங்கை ஆழ்வாரின் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். பெரியதிருமொழியில் ஆறாம் திருமொழியில்திருநறையூர் பற்றிய பாடல் தொகுப்பில் பத்துக்கு மேற்பட்ட பாடல்களில் 'கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே எனத் தொடர்ந்து எல்லாப் பாடல்களிலும் வ்ந்தது. அதற்கான விரிவுரையைப் பார்த்தபோது நான் வியந்தேன். கோச்செங்கணான் என்பவன் வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சிவபெருமான் மீது இலைச் சருகு விழுவதைத் தடுக்க சிலந்தி ஒன்று சிவலிங்கம் மேல் வலை பின்னும். தினம் ஒரு யானை வந்து நீரை அபிஷேகம் செய்யும்போது அந்த வலையைக் கலைக்கும். முடிவில் சிலந்தி மடிந்து அடுத்த பிறவியில் சுபதேவர் என்னும் சோழமன்னன் மகனாகப் பிறந்து 73 சிவாலய்ங்களை அதுவும் மாடக் கோவில்கள் என்ற அடுக்குமலைக் கோவில்களைக் கட்டிய சிவபக்தன். பின்னாளில் திருமால் தொண்டில் ஈடுபட்டு திருநறையூரில் பெருமாள் கோவில் கட்டி உள்ளான். இப்படி சைவத்திலும் வைணவத்திலும் அக்காலத்தில் மாறிமாறித் திளைத்தவர்கள் ஏராளம்.
குருபக்திக்கு மிகவும் முன்னுரிமை கொடுத்தவர் நாயகி சுவாமிகள். அன்னையின் மூலம் தான் தந்தை யார் என்று அறிய முடியும். அதுபோல குரு மூலம் தான் இறைவனை நாம் அறிய முடியும். எனவே தான் மாதா பிதா குரு தெய்வம் என நம் முன்னோர்கள் வரிசைப்படுத்தியுள்ளார்கள். நாம் முதலில் வணங்க வேண்டியது நம் அன்னையை. பின்னர் தந்தையை. அதன்பின்னர் குருவை. இறுதியில் தான் இறைவனை வணங்க வேண்டும். முதல் மூவரை புறக்கணித்துவிட்டு இறைவனை நாடினீர்கள் என்றால் எந்தவித பயனும் இல்லை. எனவே தான் தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என மிக அழகாகத் தமிழ் மொழியிலே நம் முன்னோர்கள் நமக்குக் கற்பித்து இருக்கிறார்கள். அப்படியாக தன் தாயின் கையால் திருவோடு வாங்கி துறவறம் மேற்கொண்ட நமது நாயகி சுவாமிகள் குருவை மிகவும் போற்றுகிறார்.
மனமே குருத்தியானம் செய்
சத்குரு தியானம் செய் மனமே
அரி ரூபம் வரும் மனமே
உளம் உருகி அரியை தியானித்தால்
அரி ரூபம் வரும் மனமே
அரி ரூபம் வரும் சத்குரு தியானம் செய்தால்
பிறவாத பேரின்பத்தைப் பெறலாம்
சத்குரு தியானம் மூலம்
என்று நமக்கெல்லாம் மிக அருமையாக உபதேசிக்கிறார் சொளராட்டிர மொழியில்.
குரு த்யான் காரி மொன்னு
தூ சத் குருத்யான் காரி மொன்னு
ஹரி ரூபு அவயி மொன்னு
தியானு ஹால் ஹரி ரூபு அவயி மொன்னு
சத்குரு த்யான் கரேதீஸ் சரிர் சொடி ஜீ பிரி அவ்னாத்தொக் ரீலுவாய்
என்று நச்சென்று கூறுவார். திருமூலர் கூட அப்படித்தானே வலியுறுத்துகிறார்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.
இதே கருத்தைத் தான் நமது நாயகி சுவாமிகளும் வலியுறுத்திக் கூறியுள்ளார். நாம் இப்போது குருபீடத்தில் அமர்ந்து இருக்கிறோம். குருவை எப்படி நாம் வணங்க வேண்டும் என்பதை நமக்கு மிக அழகாக நடனகோபால நாயகி சுவாமிகள் கற்றுத் தருகிறார்.
குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கு
வணங்கினால் நாம் செய்த பாபங்கள் எல்லாம் பரிதி முன் பனி போல் மறையும்
திருவடிகளில் வேர் அற்று வீழும் மரம் போல் விழவேண்டும் வணங்க வேண்டும்
நம்மைத் தொட்டுத் தொடரும் முன்வினை நுகர்வினை யாவும் அழியும்
வினைகளைத் தொலைக்க குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கு
என்று நமது குருநாதர் கட்டளையிடுகிறார்.
கடே ஜாட் சொகன் போடி
புள்ளோ கெரே கருமு ஜாய்
பாய்ம்போடி
பாய்ம்பொடேதீஸ் கெரே பாபுனு ஜாய்
என்று மிக அழகாகச் சொல்வார்.
அது மட்டுமல்ல, குருவைப் பணிந்து பக்தி செய்தால் அது வீண்போகாது. உறுதியாகப் பலன் அளிக்கும். குருவினுடைய ஆசியானது நம் முன்னேற்றத்திற்கு அடிகோலும். அடித்தளமாக அமையும்.
குரு பக்தி கெரேத் தெல்லே கோ ஜானா
குருவுஸ அரி மெனி நொம்பி மெல்லேஸ் ரா
பக்தி கெரஸ்தெங்கோ ஏ பார் ரானா
பக்திகரி உபதேஸ் கள்னாஜியேத் ஜெலும் ஜானா
ஆமாம் ஒரு குருவினிடம் அடிபணிந்து அவரிடம் உபதேசம் பெறாவிடில் பிறப்பு-இறப்புச் சுழலிருந்து தப்ப முடியாது என்று அறிவுறுத்துகிறார்.
குருபக்தியே அரிபக்தி. குருபக்தியைப் பற்றிக் கொண்டு இறைவன் மீது உண்மையான பக்தியைக் கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் முக்தி என்னும் வீடுபேறு நமக்குக் கிடைக்கும். திருமழிசை ஆழ்வாரும்,
வீடாக்கும் பெற்றி அறியாது மெய்வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் – வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேதமுதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன்
என்பார்.
அதுமட்டுமல்ல
நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் தான் – பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்
என்பார்
குருபக்தீஸ் அரி பக்தி தெரி
தெரி நிஜ பக்தி கெரோ
ஸே முக்தி.
என்கிறார் நாயகி சுவாமிகள். குருபக்தி என்று கூறினால் ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தான் நாம் சிறப்பாகக் குறிப்பிட முடி.யும். அப்படிப்பட்ட குருபக்தி. தென்குருகூர் நம்பி சடகோபர் தான் மதுரகவி ஆழ்வாரின் குருநாதர். அவர் தன் குருநாதரையே தெய்வமாகக் கருதியவர். தெய்வத்தைப் பற்றிப் பாடாமல் தன் குருவையே போற்றிப் பாடி திருமாலின் பேரன்பைப் பெற்றவர். மிக அழகாகச் சொல்வார்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
எனவும்,
தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கேஎன்றும் பெருமைபடச் சொல்வார்.
வியாசர் இந்த கலியுகத்தில் கஷ்டங்கள் அணிவகுத்து வந்தாலும் சில நல்ல விஷயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன இந்த கலியுகத்தில். இறைவனை அடைவது மிக எளிது. இறைவனின் நாமத்தைத் கூறி பஜனை செய்தாலே போதும் நமக்கு முக்தி கிடைத்து விடும். ஆனால் முந்தைய யுகங்களில் அப்படி அல்ல. இறைவனை அடைய வேண்டுமா – வேள்வி செய்ய வேண்டும் – நியமங்கள் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் –தானங்கள் தரவேண்டும். கடுமையான தவங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்த கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் செய்தால் போதும். இறைவனை எளிதில் அடைந்துவிடலாம். உளம் உருகி இறைவனின் ஆயிரம் நாமங்களை உரக்க இசையோடு சொல்ல வேண்டும். மிக எளிய வழி. நாயகி சுவாமிகள் எப்படி இறைநாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதை நமக்குச் சொல்வார். வெட்கப்படாமல் குரல் ஓங்க உரத்து உச்சரிக்க வேண்டும். முந்தைய யுகங்களில் சத்தம் போடாமல் மனதுக்குள் கூறி தவம் செய்ய வேண்டும். ஆனால் இந்த யுகத்தில உரக்க கூவவேண்டும். கூச்சம் கூடாது. அரிபஜனை செய்ய வேண்டும். தினமும் இறைவன் திருநாமத்தைக் கூறி பஜனை செய்ய வேண்டும் – இதுவே இந்த உலகில் மிகச் சிறந்த வழி. அச்சுதா, கோவிந்தா என்று வெட்கத்தை விட்டு உரத்த குரலில் உச்சரிக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுத் தருகிறார் நாயகி சுவாமிகள். வழிகாட்டியதோடு நிற்காமல் அதை அவர் நடைமுறைப்படுத்திக் காட்டினார். நாயகி கோல்த்தில் கையில் தம்புரா வைத்துக்கொண்டு தெருவில் இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஆடிப்பாடி வந்தார். உஞ்சவிருத்தி மூலம் இறைப்புகழைப் பரப்பினார்.
நிச்சு ஸ்ரீஹரி பஜெனெ கேர் மொன்னு
நீ துசுரே வாட் மோட்சிக்
நிச்சு ஸ்ரீஅரி பஜனை கேரி
அச்சுதா கோவிந்தா மெனி
ரெச்சோ செரோ லாஜு சொடி நிகிளி
ஸ்ரீஅரி பஜனை கேரி
என்று சொல்வார். இப்படி இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொலலி மனனம் செய்து பாடுவதால் பிறவித் தளையிலிருந்து விடுபடலாம் என உத்தரவாதம் அளிக்கிறார்.
நடனகோபாலன் நாமம் உச்சரிக்க உச்சரிக்க
நரக வேதனையிலிருந்து மீண்டு செல்லாம்.
நடனகோபாலு நாமம் படனகெரோ- எல்லே நரகுபாதொ சொடி ஜவாய் ஜவாய்
என்று இசைபாடுகிறார். இவ்வாறு அரிபஜனை செய்வதை விட்டுவிட்டு இந்த கலியுகத்தில் எவ்வளவு தவம் செய்தாலும் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கிறார். எத்தனை தவங்கள் செய்தாலும் ஒரு புண்ணியமும் இல்லை அரி பஜனையைவிட்டுவிட்டு எவ்வளவு தவங்கள் செய்தாலும் புண்ணியமில்லை. நாம் இந்த உயர்வான மானுடப் பிறவியை நம் தவப்பயனால் அடைந்துள்ளோம். உண்ணுதல், உறங்குதல், கும்மாளமிடுதல் போன்றவற்றுக்காக அல்ல இந்த மானுடப் பிறவி. அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும். நிரந்தர இன்பத்திற்காக அந்தப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் முறையாகச் செய்தால் வீடு என்னும் பிறவாமைப் பயன் கிடைக்கும். இதைவிட்டுவிட்டு தபம் செய்கிறேன் –யாகம் செய்கிறேன் என்று இருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. தினமும் ஹரியின் புகழைப் பாடவேண்டும். உரக்கப் பாட வேண்டும்.
ஹரி பஜனை சொட்டி கித்கே தபஸ் கெரெதி காய்
துசுரே வாட் நீரே மோட்சிக்
வால்மீகி முனிவர் ஆவதற்கு முன் செய்த பாபங்கள் ஏராளம் ஏராளம். அவை எல்லாம் எப்படி மன்னிக்கப்பட்டு அவர் முனிவர் ஆக முடிந்தது. இராமாயணக் காவியத்தைப் படைக்க முடிந்தது. ஹரி பஜனை தான் காரணம்.
லெக்கோ சேகி வால்மீகு கெரே பாபுன்
அஸ்கீ கோன் நாமம் ஹால் ஜியெஸ்தே
தெக்கி தெல்லரே திக்கு துசுரே நீரே
கெட்டோ ஹிங்கடய் ஸ்ரீகேசவுடு நாமமு
கிருஷ்ணா ராமா மேன் கெட்டோ ஹிங்கடய்
கெட்டோ ஹிங்கடய் கேசவா நாம்
மற்றபடி பாபம் செய்தாலும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும பிறவி உண்டு. எனவே பற்றற்று கடமையைச் செய்ய வேண்டும். பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது. மனத்துக்கண் மாசினல் ஆதல் வேண்டும். இதுதான் இப்பிறவியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுப்பார்? நமது குருநாதர் தான் கற்றுக் கொடுப்பார். நாயகி சுவாமிகள் என்னும் அந்த அற்புதக் குருநாதர் அருமையாக இக்கருத்தை வலியுறுத்துகிறார் பாருங்கள். சிலர் சொல்வார்கள். இப்பொழுது பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறேன். வயதான காலத்தில் இறைவனைத் தொழுவேன். முதலில் பொருள் ஈட்டிக் கொள்ள வேண்டும். என்று பொருள் ஈட்டுவதிலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்து விடுவார்கள். இறப்பு என்பது எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்? நாம் வாழும் காலத்திற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரும். நாம் மறுத்து உரைக்க முடியாது. அப்போது அச்சம் தான் வருமே தவிர ஆண்டவன் நினைப்பு வராது. எந்த வேளையில் எப்படி நாம் இறக்கப் போகிறோமோ? பின்னால் வரப்போவது என்ன பிறவியோ? யார் அறிவார்?
அழகாகச் சொல்வார் –
கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ சரீர்
ஜியேத் கோன் ஜெலும் அவய்கீ என்று நம்மை எல்லாம் எச்சரிக்கிறார். வயதான காலத்தில் பக்தி செய்வதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்றும் நமக்கு அறிவுரை கூறுவார்.
தீன் தெஸ்சு தீ தாத் லலி
தீன் பாய் ஹொயி சல்னா முல்லாம்
தீன் ஆசென் சோடி
தீன் லோக் ஹொய் ரியசி தெகஹோர் மொன்னு
தெவோ தெவோ தெவோ தெவோ
ஆம் முப்பத்திரண்டு பற்கள் விழுந்து
ஊன்று கோல் கொண்டு மூன்ற காலுடன் நடக்கும் முன்
மூன்று ஆசைகளை விட்டுவிடு
மூவுலகும் நிறைந்திருக்கும்
முகுந்தன் பால் மனது வை மனது வை மனது வை மனது வை என்று அழகாக மனதில் படும் படி ஒருதடவைக்கு மேல் அழுத்தி அழுத்திச் சொல்கிறார். முதுமை வரை காத்திராதே. மண், பெண், பொன் மீதுள்ள ஆசையை விட்டுவிடு. என்று அழகிய தமிழில் அதன் பொருள். நம்மாழ்வார் தனது திருமொழியில்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகில் சார்வது சதிரே என இளமை கெடுவதன் முன்னமே இறைவனிடம் சரணடைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துவார்.
மறம் சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவராகி நின்ற அரங்கனாருக்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே
என்பார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
அரங்கத்திலே உள்ள ரங்கநாதன் அற வடிவானவர். தர்மத்தின் வடிவானவர். அவரைச் சரணடைய வேண்டும். அவருக்கு அடிமையாக வாழவேண்டும். நமது உடலே முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக வந்துள்ளது. நமது உடலில் உள்ள உயிர் அது தான் ஆத்மா. அது இறைவனின் ஒரு அணு. அது தண்டனை எதையும் அனுபவிக்காது. அப்போது முற்பிறவியில் செய்த தவறுகளுக்கு தண்டனை பெற வேண்டுமே. அதற்குத் தான் இந்த மானுட உடல். தண்டனை பெறுவதற்கு மட்டுமல்ல. கலியுகத்தில் இறை பஜனை செய்து இந்த பிறவியில் இருந்து விடுபடவும் முடியும். – நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆண்டவன் நமக்கு அளித்து ஒரு வாய்ப்பு. பாபச் சுவரால் ஆனது இந்த உடம்பு. பாவத்தை அரணாகக் கொண்டது இந்த உடம்பு. இதிலே பல குற்றங்கள் உண்டு. கண், காது, மெய், வாய், நாசி இப்படி ஐம்பொறிகளால் பல பாபங்களைச் மீண்டும் செய்யத் தூண்டும் இந்த ஐம்பொறிகள். தவறு செய்யக்கூடியது மனித இயல்பு. இந்த பாபச்சுவரிலே ஒன்பது ஓட்டைகள். எனவே வீழ்வது நிச்சயம். எப்போது வீழும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இறைவழிபாட்டில் நாள்கடத்தக் கூடாது. சிறிது காலம் கழித்து இறைவழிபாட்டுக்குச் செல்வோம். இப்போது பொருள் ஈட்டுவோம் என்று எண்ணக் கூடாது. இந்த ஒன்பது வாசலுடைய குடிசையை எவ்வளவு அலங்கரித்தாலும் எவ்வளவு செலவழித்தாலும் நிலைத்து நிற்காது. எவ்வளவு உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்தாலும் சரி – வாசனைத் திரவியங்களை உபயோகித்தாலும் சரி –எவ்வளவு அழகுபடுத்திக் கொண்டாலும் சரி - எப்பொழுது இந்த ஒன்பது வாசல் உடைய குடிசை மண்ணில் விழும் என்பது தெரியாது. போது அறிய மாட்டீர் என்று அழகாகச் சொல்கிறார்.
மனம் ஒரு குரங்கு. ஆம் மனித மனம் ஒரு குரங்கு. சிலவேளை நல்ல சிந்தனைகள் வரும். கோவிலைத் தேடிச் செல்லும் கால்கள். நா இறைவன் புகழைப் பாடும். மறுகணம் மாறிவிடும் இந்த மனம். பணத்தைத் தேடிச் செல்லும். பாபத்தைப் பண்ணச் சொல்லும். அழகாகச் சொல்லுவார் நாயகி சுவாமிகள்
தெரன் நிகிளேத் ஹிப்பிரானா தமய் மொன்னு
எகோ தெரன் முசைகீ
என்பார்.
ஆண்டவன் எப்படிபட்டவன் என்பதை மிக அழகாகச் சொல்வார். அண்டம், பிண்டம், பிரம்மாண்டம் எல்லாம் அவனே – அவனால் தான் உருவாயிற்று. இந்த அண்டம் பிண்டம் பிரம்மாண்டம் அவனுக்குள் தான் ஒடுங்குகிற்து என்ற கருத்தை
அண்ட பிண்ட பிரம்மாண்டுன்
தெகொஹாலுஸ் ஹொயெஸ்தே
ஏ அண்ட பிண்ட பிர்மாண்டுன்
தெகோ பித்தரூஸ் சேஸ்தே என்கிறார்.
பரம் பொருளினின்று ஆகாயம் தோன்றும். ஆகாயத்தினின்று காற்று தோன்றும். காற்றினின்று தீ தோன்றும். தீயிலிருந்து நீர் தோன்றும். நீரிலிருந்து நிலம் தோன்றும். பேரூழிக் காலத்தில் நிலம் நீரில் ஒடுங்கும். நீர் தீயினுள் ஒடுங்கும். தீ காற்றினுள் ஒடுங்கும். காற்று வானில் ஒடுங்கும். வான் எம்பெருமானுக்குள் ஒடுங்கும். எதுவுமே மறைந்து போவதில்லை. ஒடுங்கத்தான் செய்யும். மீண்டும் உலகம் உதிக்கும்.அடங்கும். மனிதன் பிறந்து இறப்பது போல் இது தொடர்ச்சியான சுழற்சி தான். திருமங்கை ஆழ்வார் தனது பெரியமொழியிலே பல இடங்களில் இதைச் சுட்டிக் காட்டுவார்.
பாரேழு கடல் ஏழு மலை ஏழுமாய்
சீர் கெழும் இவ்வுலகேழும் எல்லாம்
ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்று
அங்கு ஓரெழுத்து ஓர் உருவானவனே எனவும்
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டொருகால்
கலைதரு குழவியின் உருவினையாய்
அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே என்றும்
திருமங்கை ஆழ்வார் கூறுவார். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருவிண்ணகர் என்னும் அருமையான தலம். அங்குள்ள இறைவன் ஒப்பிலியப்பன் என்னும் உப்பிலியப்பன். தாயார் பூமிதேவி நாச்சியார். இந்த மனை வாழ்க்கை வேண்டாம் வேண்டாம் என்று அந்த இறைவனிடம் முறையிடுவார் திருமங்கையாழ்வார். எப்போது வேண்டாம் என்று அவர் கூறுகிறார் தெரியுமா? இறைவனைக் காணும் வாய்ப்பினை பெருமாள் அவருக்கு அருளிவிட்டால் இந்தத் துன்பப் பிறவி எனக்கு வேண்டாம் வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப பத்து பாட்டுகளில் மீண்டும் மீண்டும் கூறுவார். இந்த பாடல்களில் ஒன்று மட்டும் நாம் இப்பொழுது பார்ப்போம்.
குழல்நிற வண்ண – நின் கூறு கொண்ட தழல்நிற வண்ணன்
நண்ணார் நகரம் வீழ
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற அம்பு அது ஆனவனே
ஆண்டாய், உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே என்பது தான் அந்தப் பாட்டு.
சைவம் வைணவம் என்று நாம் பரம்பொருளை அறியாது பிரிந்து நின்று போராடுகிறோம். இங்கே செதுக்கப்பட்டுள்ள கருத்து எப்படி இருக்கிறது.
ஒரு சிறு கதை. நரகாசுரனின் மூன்று குமாரர்கள் வித்துயுன்மாலி, தாரகாட்சன், மற்றும் கமலாட்சன். இவர்கள் மூவரும் கடும் தவம்இருந்து பிரமனிடம் பல அற்புதமான வரங்களைப் பெறுகிறார்கள். நினைத்தவுடன் வானில் பறந்து செல்லக் கூடிய மூன்று கோட்டைகளை அமைக்கிறர்கள். தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கோட்டைகள் இவை. பறந்து சென்று தேவர்களை தாக்குகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். இறுமாப்பு எல்லை மீறுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அடிகோலுகிறார்கள். தேவர்களைத் துன்புறுத்துகிறார்கள். அச்சத்துடன் அலையும் தேவர்கள் சிவனிடம் அடைக்கலம் கேட்கிறார்கள். அருமையான தேர் ஒன்று தயாரித்து கொண்டு வரும்படி ஆணையிடுகிறார் சிவனார். தேர் வந்தவுடன். மேருவை வில்லாக்கி வாசுகியை நாணாகக் கட்டுகிறார். இவ்வளவு அருமையான வில்லுக்கு நல்ல அம்பு தேவை அல்லவா. திருமாலே அம்பாக மாறுகிறார். அதன் நுனியில் அக்னி பகவான் அமருகிறார். புன்சிரிப்புடன் இந்த அம்பைத் தொடுத்து முப்புரங்களை எரிக்கிறார் சிவனார். மதுரையில் கூட யானைமலை என்று ஒரு மலை உண்டு. சமணர்கள் பாண்டியனை பயமுறுத்த ஒரு யாகம் செய்து அதிலிருந்து யானை ஒன்றை உருவாக்கி மதுரை மாநகர் மீது ஏவுகிறார்கள். பாண்டியன் பயந்து சொக்கநாதரிடம் முறையிடுகிறான். நான் மதுரையைக் காப்பாற்றுகிறேன் என்று அவர் வாக்கு கொடுக்கிறர். அதன்படியே ஒரு வேடுவனாக வந்து திருமாலை அம்பாகத் தொடுத்து அந்த யானையை மலையாக மாற்றி நிறுத்துகிறார். இன்றைக்கு நீங்கள் போனாலும் அந்த அம்பு பதிந்த இடத்தில் நரசிம்மர் இருப்பார். குகைக் கோவில். இப்படி எல்லாம் நடந்தது நடக்கும் என்பதை நிரூபிக்க இன்றும் அந்த நரசிம்மர் கோவில் யானைமலையில் உள்ளது. இது நடந்தது விக்கிரம பாண்டியன்என்னும் மன்னனது காலத்தில். அவன் புகழைக் கண்டு பொறாமைப்பட்ட சோழ மன்னன் சமணர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து பாண்டியனைக் கொல்ல முயற்சி செய்கிறான். ஏற்கனவே போரில் அவன் தோற்றுவிட்டான். அபிசார ஓமத்தைச் செய்யத் தூண்டுகிறார்கள் சமணர்கள். பாலி என்னும் ஆற்றங்கரையோரம் யாகம் செய்கிறார்கள். அதன் பயனாக கரிய யானை ஒன்று யாககுண்டத்திலிருந்து வருகிறது. தென்திசை சென்று பாண்டிய நாட்டையும் மன்னனையும் அழிக்க உத்தரவிடுகிறார்கள். மதுரை மக்கள் கலங்குகிறார்கள். மன்னனோ செய்வதறியாது சொக்கநாதரிடம் முறையிடுகிறான். அசரீரி கேட்கிறது. அட்டாலை மண்டபம் ஒன்றை எழுப்புக என்று கட்டளையிடுகிறது அந்த அசரீரி. அதன்படி பதினாறுகால் மண்டபம் ஒன்றை எழுப்புகிறான் விக்கிரம பாண்டியன். யானை மதுரையை நெருங்கியவுடன் சோமசுந்தரப் பெருமான் வில்லேந்திய வீரனாக அந்த பதினாறுகால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அவர் பூட்டியது நரசிங்கக் கணை. கணை பாய்ந்தவுடன் சாய்ந்தது யானை. இப்படிப்பட்ட இடத்தைத் தான் பிற்காலத்தில் நமது நாயகி சுவாமிகளும் தமது நந்தவனம் இருக்க வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கிறார்.
இதேபோல பேயாழ்வாரும்
சிவனாரும் திருமாலும் ஓருருவில் உள்ளதை நமக்கு மிக அழகாக விளக்குவார்.
தாழ்சடையும் நீள்முடியும்,
ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால்
சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து என்பார்.
நடனகோபாலருக்குத் தெரியும் நல்ல விஷயங்களைச சொன்னால் நாம் ஒப்புக்குத் தலையாட்டுவோம். மனதில் வாங்கிக்கொள்ள மாட்டோம் என்று. எனவே தலையாட்டாதே. மனதில் பதிந்துகொள் என்று எச்சரிக்கிறார்.
மான் ஹோர் ஐகுநாஸ்தக்
கான் தீ ஐகோ ஐகோ
த்யான் கரோ
அரி முக்தி தேந் அவயி.
சின்னச்சின்ன பாடல்களைப் பாடி சிறிய குழந்தைகளுக்கும் ஆன்மீக உணர்ச்சியை ஊட்டியவர் நாயகி சுவாமிகள்.
இறைவனிடத்தில் பக்தி செய்யுங்கள் பிள்ளைகளே
நாட்கள் வீணே கழிகின்றன
இறைவனிடத்தில் பக்தி செய்தால்
ஜீவாத்மாவுக்கு முக்தி கிட்டும் என்று
கண்ணனே விசயனுக்கு பாரதப் போரின்போது சொல்லியிருக்கிறான்
ஜீவாத்மா பரமாத்மா தான் நித்தியம்
இந்த உலகம் அநித்தியம்
நித்தியமாக உள்ள அரி நித்திய பதவியைக் கொடுப்பான்
சத்தியம் இது சத்தியம் என்று இறைவன்பால் பக்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.
இறைப்பணி தான் நன்மையைச் செய்யும் என்பதைச் சுட்டிக்காட்ட
கைங்கர்யமாவது கிங்கைர்யமாவது போய் வேலையைப் பாரப்பா என்று சொல்வோர் உண்டு இந்த உலகத்தில்
அவர்கள் கருமவினைக் காட்டில் அகப்பட்டு
கஷ்டப்பட்டுக கொண்டே இருப்பார்
கைங்கர்யமே அரிவாள்
கருமவினைக் காட்டை உடனே அறுப்பது அதுதான் என்று உறுதி கூறுவார்.
இதுபோல ஒரு பாட்டைத் தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாகப் படைத்துள்ளார்.
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூ துளப மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலாத மனிதர் எல்லாம் அரங்கன் என்று அழைப்பாராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் ஒழியும் புல் எழுந்து அன்றே
வேலை என்றால் க்டல். கடல் அலை நீரை வாறி எறிகிறது. இப்படிப்பட்ட கடலால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். எறியும் கடலால் சூழப்பட்ட நாம் மணமிக்க துளசிமாலை அணிந்த அரங்கனைத் துதிக்க வேண்டும். துதித்தால் என்ன நடக்கும். ஐம்புலன்களால் நாம் செய்த . செய்துகொண்டிருக்கிற எல்லா பாபங்களும் மறைந்துவிடும். புல் இருந்த சுவடு கூட காணமுடியாதபடி மறைந்துவிடும். எனவே இறைவன் திருநாமமான ரங்கா ரங்கா என்று அனுதினமும் நாம் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
பல பிறவிகளை நாம் எடுத்து பிறப்பு இறப்பு எனத் தொடர்ந்து கொண்டு இருந்தோம். இவன் உய்யட்டுமே இந்தப் பிறவிச் சுழலிலிருந்து மீளட்டுமே என்று நமக்கு ஒரு வாய்ப்பினை ஆண்டவன் கொடுத்து உள்ளார். எனவே இந்த பிறவியிலாவது ஆண்டவன் திருநாமத்தைச் சொல்லுங்கள். ஆண்டவனுக்குத் திருப்பணி செய்யுங்கள். இறைத்தொண்டினை தள்ளிப்போடாதீர். ஆறு அறிவு நமக்கு ஆண்டவன் இந்த மனிதப் பிறவியில் கொடுத்து இருப்பது அவன் இருப்பதை மனத்தால் சிந்தித்து அறிந்து போற்றுவதற்காகவே. நம் வாழ்வு சதமல்ல. அழகாகச் சொல்வால் கண்ணதாசன்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று
நமக்கு ஆண்டவன் ஆறு அறிவு கொடுத்தது அவனை நினைக்க. ஐம்புலன்களை அடக்கி ஆள. ஆனால் நாம் அதை மறந்து விடுகிறோம். உல்லாசமாக இருக்கிறோம். ஆண்டவனை மறக்கிறோம்.
திருமழிசை கூறுவார்
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் – அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்.
என்பார்.
சரி ஆறு அறிவு என்றால் என்ன?
தொல்காப்பியம் மிக அழகாகச் சொல்லும்
புல்லும் மரமும் ஓர் அறிவினவே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே.
ஓரறிவு உயிர் என்பது என்ன? இவை தத்தம் உடலால் தொடுவதை மட்டும் அறியும். அதுதான் புல், மரம்.- மெய்யுணர்வு
தொடு உணர்வோடு நாவினால் சுவையையும் அறிபவை ஈரறிவு உடையவை. அவையே முரள் மற்றும் நந்து. முரள் என்றால் அட்டை. நந்து என்றால் நத்தை.
கரையான் எறும்பு போன்றவை மூன்றறிவு உடையவை. இவை தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் பண்பினையும் கொண்டவை. மோப்பம் பிடிக்கும். அதனால் தான் கரையான் புத்தகம் எங்கே இருந்தாலும் வந்து அரிக்கிறது. நான்கு அறிவு உடையவை என்பவை பார்வையும் சேர்ந்து உடையவை. நண்டு தும்பி ஆகியவை இதற்கு உதாரணம். ஐந்து அறிவு உடையவை விலங்கினங்கள். ஐந்தாவது அறிவு என்பது ஒலி அறிதல். ஆறாம் அறிவு என்பது தான் மனத்தால் அறியும் அறிவு. அதனால் தான் கண்ணதாசன் இரண்டு மனம் வேணடும் என்று ஆண்டவனிடம் கேட்கிறார்
தொடு உணர்வு மட்டும் இருந்தால் ஓர் அறிவு
தொடு உணர்வும் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு.
தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் அறிவு இருந்தால் மூன்று அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு மற்றும் பார்வை இருந்தால் நான்கு அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு, பார்வை மற்றும் கேட்கும் திறன் இருந்தால் ஐந்து அறிவு
இவற்றுடன் சிந்திக்கும் திறன் இருந்தால் ஆறறிவு
இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் மிக அழகாகச் சொல்வார்.
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்பமாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லோ என் செய்வான் தோன்றினேனே
என்பார். பொழுதெல்லாம் பூக்களைக் கொண்டு உன்னுடைய பொற்பாதங்களுக்கு அணிவிக்கவில்லையே. இதோ உங்கள் வசதிக்காக இங்கே பாத உருவங்கள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. பூக்களைக் கொண்டு வந்து பூசியுங்கள். குற்றமற்ற சொற்களால் உன் புகழைப் பாடவில்லையே. உண்மையான அன்பை மதிலே வைக்கவில்லையே. நான் எப்படி அரங்கத்து அம்மான் ரங்கனுக்கு ஏற்புடையவனாவேன். ஐயோ நான் ஏன் பிறந்தேன? என்று நெஞ்சுருகி துதிக்கிறார் ஆழ்வார்.
நாயகி சுவாமிகளும் இதேபோன்ற கருத்தை
இசோஸ் ஏ மெனிக ஜெலும் அவ்லேத் ராய்கி
ஏ ஹரிக் பஜன நீஜியேத் பாப் திரைகி
பிசோ தெரி ஹிண்டுனோகோன் நமமூஸ் வாடு
சொக்கட் பிசோதெரி கவ்னாத்ஜியேத் நீ கதி ஏடு
ஹரியின் பஜனையில்லாமல் மோட்சமில்லை. பிறவிக்கடலைக் கடக்க முடியாது. பைத்தியம் போல் ஹரி நாமத்தை எப்போதும் சொல்லிக்கொண்டே இரு. என்று அறிவுறுத்துகிறார்.
இறைவனின் அடியார்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் நாயகி சுவாமிகள் மிக அழகாக நமக்குச் சொல்வார்.
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே
மாடா மானிடஜென்மமா நீ ஏடா மூடா
மாடா மானிடஜென்மமா நீ
பாவம் தேடாது தேடாது போடா நீ
வீடுடை விமலனைக் கூடி மகிழ்கிற
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே
என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். நம்மைப் பார்த்து இந்த நாயகி சுவாமிகள் மூடா என்கிறாரே இது சரி தானா என்றார். சரிதான். ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் என்ற பாடலில் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே என்பார். முட்டாளே கோவிந்தனை என்ற பெயரை பஜனை செய்வாய் என்று அதன் பொருள். அதன்பிறகு வரும் 23 பாடல்களிலும் வாழ்க்கை எவ்வளவு மட்டமானது – அதை எப்படி நாம் கடக்க வேண்டும் என விளக்குவார். நாம் இந்தப் பாடலைத் தினம்தினம் வானொலியில் கேட்கிறோம். ஆனால் பொருள் புரிவதில்லை. இதேபோல அவர் பாடிய சிவ அபராத மன்னிப்பு வேண்டும் பாடலிலும் பல இடங்களில் அறிவுறுத்துவார்.
ஆயுர் நச்யதி – உயிர் வடிந்து கொண்டிருக்கிறது
பக்ஷயதாம் – அறிந்து கொள்ளவேண்டும்
பிரதிதினம் – தினம்தினம்
யாதி க்ஷயம் யவ்வனம் – இளமை கரைந்து போய்விடுகிறது
ப்ரதி ஆயாந்தி கதா புனர் ந திவசா – கடந்து போன நாட்கள் திரும்பவரமாட்டா
காலோ ஜகத் பட்சக – காலம் உலகத்தை விழுங்கிவிடுகிறது
லட்சுமி தோய தரங்க பங்க சபலா – நீரில் எழும் அலைகளைப் போல் செல்வத்தின் நாயகியான லட்சுமியின் வாசம் நிலையற்றது
வித்யுத்சலம் ஜீவிதம் – வாழ்க்கை மின்னலைப்போல் நிலையற்றது
தஸ்மாத் – ஆதலால்
சரணாகதம் மாம் – சரணடைந்திருக்கும் என்னை
சரணத – அடைக்கலம் தருபவனே
அதுனா – இப்போது
த்வம் – நீங்கள்
ரட்ச ரட்ச – என்னைக் காப்பீராக
மொத்தம் 12 பாடல்கள். மிக அற்புதமானவை. தமிழில் பொருள் தெரிந்து பாடல்களைப் படித்தால் மிக அற்புதமாக இருக்கும். வாழ்க்கையில் தவறுகளைச் செய்யவே மாட்டோம்.
கண்ணனை மட்டுமல்ல ஆண்டாளையும் அற்புதமாகப் பாடியிருக்கிறர் நாயகி சுவாமிகள். மார்கழி மாதத்தில் நாம் இருக்கிறோம் இன்றைக்கு மார்கழி 23– சனவரி 8 . – நிறைமதி நாள். அதாவது பௌர்ணமி. ஆருத்ரா தரிசன நாள். சடைய நாயனார் குருபூசை நாள். வீரமாமுனிவர் பிறந்த நாள். இப்படி ஏகப்பட்ட சிறப்புகள் கொண்ட நாள். எனவே ஆண்டாள் எனும் கோதையைப் பற்றி நாயகி சுவாமிகள் பாடிய பாடலையும் நாம் அறிந்து இன்புற வேண்டும்.
செல்வக் கோதை ஆண்டாள்
சேவடியை வணங்கு என் நெஞ்சே
வல்வினை தீர்ப்பாள் உயர் மேல்வீடு சேர்ப்பாள்
நல்வாக்கும் தந்து காப்பாள்
அகிலங்கள் ஓய அவதாரம் செய்தாளே
பகவந் நாமங்களையே சுகஜீவனமாகக் கொண்டு
ககவாகன அரங்கனுக்கே கண்ணி அளித்த
செல்வக் கோதை ஆண்டாள்
சேவடியை வணங்கு என் நெஞ்சே
அதுமட்டுமல்ல
சவமாய் உடலம் தரை சாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூர்தனில் சென்றடையுங்கள்
அடையுங்கள் அடையுங்கள்
ஆண்டாள் திருவடி அடையுங்கள்-நம்
ஆண்டாள் திருவடி அடையுங்கள்
செத்துப்போம் யாக்கை நித்யம் என்று இருக்காமல்
சித்திதரும் புத்தூர்தனில் சென்றடையுங்கள்
எண்ணம் பலவழி நண்ணி கெட்டு அலையாமல்
புத்தூர் தன்னை சென்றடையுங்கள்
ஆண்டவனின் பல அவதாரங்களை நமக்கு எடுத்துச் சொல்லி திருமாலைப் பார் பார் எனத் ததூண்டுவார்.
உபய காவேரி நடுவார் அபயஹஸ்தனைப் பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
நரசிங்கமான ஸ்ரீமன் நாராயணனைப் பாராய்
பரமபதநாதன் பக்தவச்சலனைப் பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
காளிங்கன் மேல் ஆடிய நம் கருமுகிலைப் பாராய்
நாளிங்கே பாழாகுதே நம் நாயகனைப் பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
உலகளந்த திருவடி உடையவனைப் பாராய்
அலர்மேல் மங்கைநாதனுக்கு ஆளாகலாம் நீ பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
பாற்கடலின் மேல் பரவும் பரமனை நீ பாராய்
பார்க்க அனந்தம் கண் வேண்டும் பக்தியுடன் ப்ராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
துக்கவினை நீங்கிட நம் தோழி நீ போய் பாராய்
அக்கப்பாடு செய்திடாது எம் ஆசை தீரப் பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
புண்டரீகக் கண்ணனைப் போது போமுன்னம் பாராய்
தொண்டருளமே கோயிலாகக் கொண்டவனடி பாராய்
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
சொக்குதே சொக்குதே கிருஷ்ணன் தோள் அழகில் தோழி
திக்கு வேறில்லை இல்லை சேவடி மலர்கள் வாழி
கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்
என்று அறிவுறுத்துவார்.
தேகம் என்பது அநித்யம் கேளாய் மோகத்தை விட்டுவிடு
தேகம் என்பது அநித்யம் கேளாய் – கடல் காகம் போல்
கலங்காது பால்சாகர சயனனைத் தாகமுடன் தொழும்
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே
அரங்கன் எப்படிப்பட்டவன் என்பதை மிக அழகாகச் சொல்வார் தனது பாடலில்.
உபய காவேரிவாசா உலகுண்டு உமிழ்ந்த நேசா
அபய ஹஸ்தம் தாராய் எங்கள் அன்பனே
உருகும் அன்பால் உன் அருகில் வந்து பாட
திருவுளம் வைப்பாய் தென்னரங்கனே
வலைமான் போல மாயை தன்னில் மய்ங்கும் எம்மை
அலைய விடாது ஆள்வாய் அச்சோவே
நாயகிபாவனையில் பாடும் பாவத்தைக் கேளுங்கள்
காரிருள் மேனியனே என்று கதரும் நம்மை
பாரிலே கைவிடா பர்த்தாவே
உரக சயனா இங்கே ஓடிவா என்று ஓதும் நம்
இருவினை தீர்த்து ஆளாய் என் கோவே
என்ற இருவினையைக் களைய வேண்டும் என்று வேண்டுகிறார் நாயகி சுவாமிகள்.
பார்த்துப் பழவினையைத் தீர்த்து அருளாய் என்று
ஏத்தித் தொழுவோம் நாங்கள் எப்போதும்
அண்டபிண்டங்களை உண்டாக்கும் அரியே – இம்
மண்டலத்தார் கண்டிட வா மகிழ்வோடு
அவர் மேலும் முறையிடுவார்
கபடமில்லாதவனாய்க் காத்தருள்வாய் எம்மை
கபட சூத்திரதாரியே
திருமழிசையும் இறைவனை மிக அழகாகத் துதிப்பார்.
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ ஆவாய் – பொன்பாவை கேள்வா
கிளரொளி கேசவனே – கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் ஆள்
என்பார்.
தமிழ் மொழியின் சிறப்பை திருமழிசை ஆழ்வார் மூலம் நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்த்தேன் – விதையாக
நற்றமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைததாய்
கற்ற மொழியாகிக் கலந்து
என்பார்.
நல்ல தமிழாகிய உன்னை நான் கற்றேன். நல்ல தமிழ் சொற்களோடு ஒன்றாக உன்னுடன் கலந்தேன். அப்படி தமிழால் பாட எனக்கு வரமளித்தாய். என் மனம் உன்னை அடையும் நுழைவாயிலாக மாறியது. அந்த நுழைவாயிலை பார்க்கும் கண்ணை எனக்குக் கொடுத்தாய். தடுமாறும் மனத்தை நான் கட்டுப்படுத்தினேன். என்று அழகாகக் கூறுவார்.
தான் திருமாலைத் தொழுவதால் சிவபெருமானுக்கு நேரானவன் என்றும் பெருமையுடன் கூறுவார் ஆழ்வார்.
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்க நேரான்
என்பார். மாறுபடம் மனம் எனக்கு இல்லை. நான் திருமாலைத் தொழுகிறேன். அறிவாற்றலில் சிவபெருமானுக்கு நிகராவேன். ஆனால் சிவபெருமான் எனக்கு நிகராகான் என்று பெருமையுடன் பேசுகிறார் ஆழ்வார்.
உணவுப் பழக்கவழக்கங்களைக் கூட பல பாடல்களை வலியுறுத்தியிருக்கிறார்.
வெங்காயம் பூண்டு முள்ளங்கியைச் சமைக்கவே கூடாது
பச்சரிசி உணவைச் சமையுங்கள் அது கோவிந்தனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்
எருமைப்பாலை விட்டுவிடுங்கள்
நந்தகோபனுக்கு உகந்தது பசும்பால் தான்
புகையிலை சுருட்டு பொடி ஆகியவை கூடாது
பச்சையிலை புகைப்போதை ஏற்கக் கூடாது
உணவு குறைந்தால் உடலில் பலம் குறையும்
அரி பக்தி இல்லையென்றால் ஞானம் குறையும்.
அமர்ந்து தான் தண்ணீர் அருந்தவேண்டும்
நின்று கொண்டு குடிக்கக் கூடாது
மேற்கில் அமர்ந்து ஜெப்ம் செய்யக்கூடாது
வடக்கில் அமர்ந்து மூன்று வேளை ஜபம் செய்யாமல் இருக்கக் கூடாது
தலைமுடி மற்றும் நகத்தில் இருந்து சிதறும் நீர் மற்றவர் மேல் படக்கூடாது
சூரியனைப் பார்த்து எச்சில் துப்பக் கூடாது
குரு மற்றும் சான்றோர்கள் எதிரில் எச்சில் துப்பக்கூடாது
குயுக்தியுடன் பேசாதே. குயுக்தியுடன் காரியங்களைச் செய்யாதே
நான் தான் பெரியவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது
எண்பதாண்டு நிறைவடைந்தால் பெரியவர்கள் அல்ல
ஆன்மஞானம் உணர்ந்தவர்களே பெரியவர்கள்
இப்படி வாழ்க்கை நெறியை பலவிதங்களில் நமக்கு எடுத்துச் சொன்னவர். நான் சிறிதளவு தான் கூறியுள்ளேன்.
குருபத்தியில் திளைத்த மாதிரியே இறைவனது அடியார்களிடமும் மிக்க ஈடுபாடு கொண்டவர் இவர். பகவத் பக்தியைக் காட்டிலும் பாகவத பக்தி மேம்பட்டது என்பது வைணவர்கள் அனைவருக்கும் தெரியும்.
இதை வலியுறுத்தும் விதத்தில்
அய்யன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
அடியார்களை நிந்தித்து அபசாரப் படலில் வீழ்ந்து அழியாதே
அல்லல் ஒழியாதே பொல்லாப் பழி இது
மாதவன் அடியாரை மனம் நோகச் செய்தால்
மாடு ஆடு ஜென்மம் தான் கிடைக்கும்
பாதகம் வேறு இல்லை
யாதவன் அடியாரைப் பழிப்பது பாவம்
என்று கூறுவார்.
நாமசங்கீர்த்தனம் செய்யாதவனை பேயன் என்றும் அதைக் கேட்காமல் இருப்பது பேய்த்தனம் என்றும் அறிவுறுத்துவார்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
நவிலாதிருப்பது பேய்த்தனம்
நடனகோபால நாம சங்கீர்த்தனம்
கேட்காமல் இருப்பது பேய்த்தனம் என்று கூறுவார்.
நான் யார் நான் யார் எனச் சிந்தித்து இறப்புக்கு அப்பால் என்ன நடக்கும் என்பதை உணராமல் ஆன்மபோதம் பெறாமல் இருப்பவர்களைப் பார்த்து அருமையாகக் கேட்பார்.
நீங்கள் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறீர்களே
ஜீவாத்மா பராமாத்மா பேதத்தை அறியாமல் இருக்கிறீர்களே
எருமையின் மீது எமன் உயிரை எடுக்க வந்தால்
என்ன செய்வீர் என்ன சொல்வீர்
என்று நமக்குப் புரியும்படி கேட்பார்
வளர வளர வேப்பமரத்தின் கசப்பு அதிகம் ஆவதைப் போல
மனிதன் வளரவளர ஆசைகள் வளருகின்றன
மூவாசையை விட்டுவிட்டு திருவடியால் மூவலைகை அளந்தவனிடம் மனதை வை என்று அறிவுறுத்துவார்.
எனவே விடியற்காலையில் எழ வேண்டும். எழுந்ததும் கண்ணை மூடுங்கள் . தியானம் செய்யுங்கள். நன்றாக மூச்சை இழுங்கள். சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். பிறகு வெளியே விடுங்கள். இதே வேளையில் இறைவனையும் நினையுங்கள். வாழ்க்கையில் துயரம் வரவே வராது. இறைவனை மனக் கண்ணில் நிறுத்தும் பழக்கம் சிறிதுசிறிதாக முயற்சி செய்தால் வரும். முயற்சி திருவினையாக்கும்.
திருமாலின் படத்தை நேரில் வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடுங்கள் சங்கு சக்கரம் மட்டும் மனக்கண்ணில் கற்பனை செய்யுங்கள். வரும். பிறகு சங்கு சக்கரம், கதை-வாள் ஆகியவற்றுடன் நிற்பது போல் கற்பனை செய்யுங்கள். சங்கு தெரியும். சக்கரம் தெரியும். கதை தெரியும். வாள் தெரியும். இவையெல்லாம நாம் கண்டவை. ஆனால் உருவம் தெரியாது. பிறகு வைஜயந்தி மாலை – சிந்தாமணிமாலை – துளசிமாலை ஆகியவற்றைக் கற்பனை செய்யுங்கள். உறுதியாகத் தெரியும். இறுதியில் மேகவண்ணனை – கருமை நிறக் கண்ணனை – கார்முகில் வண்ணனைக் கற்பனை செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் நம் கண் முன்னால் வருவான். முயற்சி திருவினையாக்கும்.
இக்கருத்தையே நடன கோபால நாயகி சுவாமிகள் மிக அருமையாகக் கூறுகிறார்.
கோவிந்தா கோபாலா என்று இன்றே பஜனை செய்யுங்கள்
நாளை இருப்பது என்ன நிச்சயம்?
நாம் நாளை இருப்பது என்ன நிச்சயம்?
நோயினால் இந்த உடல் அழியலாம்
அச்சத்தினால் அழியலாம் இந்த உடம்பு
ஏதோ ஒரு காரணத்தால் அழியலாம் இவ்வுடம்பு
எனவே கூர்ந்து கேளுங்கள். அரியைத் தியானம் செய்யுங்கள். அரியை நேரில் காணலாம். மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும் ஆகிய இந்தப் பிறவிப் பிணியில் இருந்து மீளலாம். இறைவன் திருவடியைச் சேரலாம் என்பார்.
கோவிந்தா கோபாலா மெனி
ஹிந்தோஸ் பஜன கேரி
சொந்தோ ரனி காய் நிஜமு
ரோக் ஹால் சரீர் ஜேடை
தாக் ஹால் சரீர் ஜேடை
காய்தி ஒண்டே சாக் ஹால் மெளி சரீர் ஜேடைரே
வாக் ஐகி – தூ அத்தோ தேவுக்
தெக்கத்தொக் தியானும் சா
பவரோகு மொரனு ஜிவனு ஜேடைரே
ஆலிலைப் பாலகன் பற்றி முன்னர் நாம் திருமங்கை ஆழ்வார் கூறியதைப் படித்தோம். அதே கருத்தை திருப்பாணாழ்வார் எளிமையாகக் கூறுவதைக் கேளுங்கள்.
ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீலமேனி ஐயோ – நிறை கொண்டது என் நெஞ்சினையே.
திரு வாழத்
திரு ஆழி வாழ சங்கம் வாழத்
திரு அனந்தன் கருடன் சேனையர்கோன் வாழ
அருண் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ
அளவில் குணத்து எதிராசன் மற்றும் அடியார்கள் வாழ
இருநான்கு திருவெழுத்தின் ஏற்றம் வாழ
ஏழுலகும் நான்மறையும் இனிது வாழப்
பெருவாழ்வு தந்தருளும் அரங்கநாதனே
அரங்கத்து அம்மானே அருள வேண்டும்
சரணம் சரணம்
நீராழி நிறத்து அரங்கன் அடிகள் வாழ
நெடுமகுடப் பணி வாழக்
கருடன் வாழப்
பேராழி செலுத்திய சேனையர்கோன் வாழ
பேய் பூதன் பொய்கை முதல் பதின்மர் வாழ
ஓராழிக் கதிர் வாழத்
திங்கள் வாழ
உம் அடியார் மிக வாழ
உலகம் உய்யச்
சீராழி சங்கு கதை சிலை வாள் வாழச்
சீரங்க நாயகியே அருள வேண்டும்
சரணம் சரணம்
குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக் குருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே
-தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை 19
தொடர்ந்து இரு வாரங்களுக்கு இப்படி நமது குருநாதர் நடனகோபால நாயகி சுவாமிகள் அவர்களைப் பற்றியும் ஆழ்வார்கள் கருத்துகளையும் நாம் கேட்டோம். பொறுமையாக நீங்கள் அனைவரும் அமைதி காத்து இறை உணர்வுடன் கருத்துகளைக் கேட்டதற்கும் நடுநடுவே உங்களது கருத்துகளைத் தெரிவித்ததற்கும் மிக்க நன்றி. மீண்டும் தொடர்வோம்.
2012 சனவரி மாதம் 8ம் நாளன்று நமது குருநாதர் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிய பாடல்கள் குறித்தும் ஆழ்வார்கள் பாடல்கள் குறித்தும் நடைபெற்ற சத்சங்கத்தின் போது ஆற்றப்பட்ட உரை,.
இறைவனின் திருவுருவங்கள் பல திருக்கோவில்களில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உளிகொண்டு சிற்பிகள் உருவாக்கியவை. ஆனால் ஈசனே தானே மனம் உவந்து பக்தர்களை உய்விக்க சில இடங்களில் எழுந்தருளிகிறான். இப்படித் திருமால் தானே தான்தோன்றியாக அருளும் இடங்கள் பாரதத் திருநாட்டில் எட்டு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அவை
1. திருவரங்கம்
2. திருமுட்டம் என்னும் திருமுஷ்ணம்
3. திருப்பதி
4. சாளக்கிராமம்
5. நைமிசாரண்யம்
6. வானமாமலை என்னும் தோதாத்ரி
7. புஷ்கரம்
8. நரநாராயணாச்ரமம் என்னும் பதரிகாச்ரமம்
இவைகளிலே வைணவத்திலே முதலில் வைத்து எண்ணப்படுவது திருவரங்கமே. அரங்கநாதரே அர்ச்சாவதார மூர்த்திகளிலே முதலாமவர்.
பிரமன் தனது திருஆராதன மூர்த்தியான திருவரங்க நாதனை இச்வாகு அரசனுடைய தவத்துக்கு இரங்கி அளித்தான். சூரியகுல அரசர்களாகிய இச்வாக குல மன்னர்கள் இத்தெய்வத்தைப் பரம்பரைபரம்பரையாகத் தொழுதார்கள். இராமபிரானின் விபீடணினின் அன்பை மெச்சி அவனுக்கு அளித்தார். ஆனால் விபீடணன் அதை இலங்கைக்குக் கொண்டுபோக பிரயாணம் செய்தபோது திருவரங்கம் வந்தவுடன் அரங்கநாதர் இங்கேயே தங்கிவிட்டார். திருமாலே திருமனம் உவந்து தங்கி உள்ள இடமே திருவரங்கம். எனவே தான் ஆழ்வார்கள் மனம் உவந்து ஏறத்தாழ 247 பாடல்கள் வரை அரங்கநாதன் மேல் பாடி உள்ளார்கள். சேர, சோழ, பாண்டிய, விசயநகரப் பேரரசர்கள், கர்நாடக அரசர்கள் போன்ற மன்னர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இத்தலத்திற்குப் பல கைங்கைரியங்களைச் செய்திருக்கிறார்கள். பூலோக புவர்லோகம் போன்ற லோகங்களின் பெயர்களில் ஏழு பிரகாரங்கள் இக்கோயிலிலே உண்டு. இங்கே தான் பல புகழ்பெற்ற மடங்கள் அமைந்து திருமாலுக்குத் தொண்டு செய்து வருகின்றன. இதேபோல பல்லாயிரக்கணக்கான ஆயிரந்திரு நாமாக்களைக் கூறி அற்புதமான பாடல்கள் மற்றும் தோத்திரங்களை அரங்கநாதன் மீது பலர் இயற்றி உள்ளார்கள். இவைகளிலே எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடப்பட்ட தொகுப்பு ஒன்று உள்ளது. அதுவே திருவரங்கநாத திவ்யமணி பாதுகைகள் என்ற பாடல் தொகுப்பு. மிக அற்புதமானது. பல ஆயிரம் பாடல்கள் உள்ளது. இவற்றில் நாம் சிலவற்றை மற்றும் பார்ப்போம்.
எம்பெருமானின் திருவடிகளைப் போற்றாத ஆழ்வார்களே இல்லை என்று சொல்லலாம்.
"குல தொல்லடியேன் உன்பாதம் கூடுமாறு கூறாயே"
"ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே"
"அண்ணலே உன் அடிசேர அடியேற்கு ஆவா என்னாயே"
"பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே"
"உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே"
"நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே"
"அந்தோ அடியேன் உன் பாதம் அகலகில்லேன் இறையுமே"
"புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே".
ஆழ்வார்கள் மட்டுமா? நாயன்மார்கள் கூட அவ்வாறு தான் பாடி உள்ளார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக, உத்திரமேரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமாகறல். இங்குள்ள சிவபெருமானை பாடிய நாயன்மார்களும் "திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினை தீரும் உடனே", "புன்சடையினுள் அலைகொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே", "நீறு புனைவான் அடியை ஏத்த வினை மறையும் உடனே", "மேலது உரி தோலுடைய மேனி அழகர் ஐயனடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள்" எனத் தொடர்ந்து ஒரு பதிகத்தில் ஐந்து பாடல்களில் திருவடிப் பெருமை பேசப்படுகிறது. இன்னும் பல பதிகங்கள் இப்படி உள்ளன. நம்மாழ்வார் நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்பதற்காக யஜுர் வேத சாரமாக திருவாசிரியம் என்ற நூலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதிலே திருவடித் தாமரைக்கு மங்களாசாசனம் செய்கிறார். நான்காவது பாடலிலே
ஊழி தோறு ஊழி ஓவாது
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும் பாழ்க்காலத்து
இரும்பொருட்கு எல்லாம் அரும் பெறல் தனிவித்து
ஒருதான் ஆகித் தெய் நான்முகக் கொழுமுளை ஈன்று
முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி
பூவுலகம் விளைத்த உந்தி
மாயக்கடவுள் மாமுதல் அடியே
நாராயணனின் திருவடிகளையே பற்றி எல்லாக் காலங்களிலும் இடைவிடாமல் பல்லாண்டு பாடி வணங்குவோம். நாம் உய்வு அடைவதற்க அத்திருவடிகளே மூலகாரணம் ஆகும் என கூறி அவைகளைத் தொழுது வாழிய என்று பாடி வணங்குகிறார் நம்மாழ்வார். நாராயணனே தனி வித்தாக இருப்பவன். உலகுகள் உண்டாக மூவகைக் காரணமாக இருப்பவன் அவனே. அதென்ன மூவகைக் காரணம்? நிமித்த காரணம் – உண்டாக்குகிறவன். சஹகாரி காரணம் – உண்டாக்குவதற்க உபயோகப்படும் துணைக் காரணம் , உபாதான காரணம் – மூலப்பொருள் உபாதான காரணம். எம்பெருமான் திருமாலே – அவர் ஒருவரே இந்த மூவகைக் காரணங்களாகவும் உள்ளார். அதென்ன நான்முகக் கொழுமுளை – மிகச் சுவையான தொடர் இது. ஒரு மரம் வளர்ந்து வேர், தண்டு, இலை, பூ, காய், கனி போன்றவை வேண்டுமென்றால் முளை வேண்டும். மூலகாரணம் முளையே ஆகும். அதுபோல தேவர்கள், தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோர் படர்ந்துள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் மூலகாரணம் – முளை பிரமன். எனவே தான் நான்முகனை நான்முகக் கொழுமுளை என்று சொல்லுகிறார். அவர் இல்லையேல் மறைகள் இல்லை – தேவர்கள் இல்லை – சிறு தெய்வங்கள் இல்லை – மனிதர்களும் இல்லை. இதைப் போல சிருஷ்டியிலே இருவகை உண்டு. அத்வாரக சிருஷ்டி மற்றும் சத்வாரக சிருஷ்டி. பகவான் தானே நேரடியாகப் படைப்பது அத்வாரக சிருஷ்டி. இறைவன் தனக்குத் துணையாக ஒருவரை நியமித்து படைக்கச் செய்வது சத்வாரக சிருஷ்டி ஆகும். அண்டங்களைப் படைத்து பின் பிரமனைப் படைக்கும் வரை உள்ளது அத்வாரக சிருஷ்டி. பிரமன் மூலமாகப் படைக்கப்பட்டவை சத்வாரக சிருஷ்டி. இதேபோல நம்மாழ்வார் அதர்வண வேதத்தை எண்பத்தியேழு பாடல்களிலே பெரிய திருவந்தாதி என்ற தொகுப்பிலே தந்துள்ளார். மிக இனிமையான பாடல்கள் இவை. அதிலே 45வது பாட்டிலே மிக அழகாகத் திருவடிப் பெருமையைப் பேசுவார். தினை அளவாக உள்ள சிறிய நேரத்தைக் கூட நான் வீணாகக் கழிக்க விரும்பவில்லை. தீவினைகள் என்னை சுட்டுப் பொசுக்கின்றன. அந்த துன்பங்களை எண்ணி எண்ணி அஞ்சுகிறேன். அடியேன் இறைவனைத் துதிக்கிறேன். தனித்தலைமை பொருந்திய எம்பெருமானது திருவடியின் பெருமையை என்னால் கூற இயலாது. இருந்தாலும் எனக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு துதிக்கிறேன் என்பார்.
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது
வாசகத்தால் ஏத்தினேன்
வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
பொன்னடிக்கண் நான்.
51வது பாட்டிலே திருவடிகளைத் தொழுவது நமது கடமை என்பதை வலியுறுத்துவார்.
ஒப்பற்ற கொடியவர்களான ஐம்புலன்கள் நம் மனத்தைக் கெடுத்த கெட்டபாதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். திசை திருப்பும். இறைவன் பால் நம் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றால் இந்த ஐம்புலன்களையும் நாம் அடக்க வேண்டும். அதை எப்படி நாம் செய்வது? எம்பெருமான் திருவடிகளைக் கண்டு வணங்குவதையே மனத்தின் தொழிலாகக் கொள்ள வேண்டும். அப்போது சிறிதுசிறிதாக ஐம்புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்கு வரும். இல்லாவிட்டால் மதயானை போல் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி அழிவுகளை உண்டாக்கும் நம் மனம். எனவே அடியவர்கள் என்றால் திருவடிகளை வணங்க வேண்டும். அதன்மூலம் ஐம்புலன்களை வெல்ல வேண்டும். குறும்பர் என்றால் கொடியவர்.
67வது பாட்டிலே இன்னும் அழகாகச் சொல்லுவார். நெஞ்சே நீ இந்த உலகத்தை விட்டுச் சென்று பரமபதம் அடைய வேண்டும் என்று விரும்புகிறாயா? விரும்பினால் எளிதில் பெறலாம். அது இயலாத காரியமே அல்ல. வேண்டாம் வேண்டாம் இந்த உலக அரசாட்சி தான் வேண்டும். முதலமைச்சர் ஆக வேண்டும். பிரதம மந்திரி ஆகவேண்டும். ஏதாவது அதிகாரம் உள்ள பதவியில் அமரவேண்டும் என்று விரும்புகிறாயா? அதுவும் எளிது. எப்படி? எம்பெருமான் நீ கேட்டதைத் தந்தருளும் வல்லமை உடையவன். கருணாகரன். கண்ணன் இவற்றைத் தருவான். எப்போது நீ கண்ணன் திருவடியை வாழ்த்தக் கற்றுக்கொள்ளும் போது.
அதுவோ நன்று என்று அங்க அமரர் உலகோ வேண்டில்
அதுவோ பொருளில்லை அன்றே? – அது ஒழிந்து
மண் இன்று ஆள்வேன் எனினும் கூடும் மடநெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.
கல் என்றால் கற்றுக் கொள் என்று பொருள்.
இதேபோன்று 80வது பாடலில் அருமையாகச் சொல்வார். பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதிகள் ஆகியவற்றைக் கடந்தபின் நாம் இன்பமாகிய கைவல்யம் என்ற நிலையை அடைய ஆசைப்படுவோம். அது கூட அப்படி பிரமாதமான – சிறப்பான இடமல்ல என்று தான் நான் கூறுவேன். உலகளந்த அந்த பெருமாளின் தாள்களை துதிக்காமல் கழியும் நாட்கள் –துதிக்க மறந்த பொழுதுகள் – இவையெல்லாம் துன்பம் தரும் நாட்கள் ஆகும். எங்கே போனாலும் இறைவனது தாள்களில் விழுந்து துதிக்க வேண்டும்.
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து – பின்னும்
இறக்கவும் இன்புடைத்தாம் ஏலும் – மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே – மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்.
இவ்வளவு தெரிந்தும் இறைவனது திருவடிகளை வணங்கவில்லை. நம்மாழ்வாருக்குக் கோபம் வருகிறது. பாழாய்ப் போன விதியால் அலைக்கழிக்கப்படுகிறது என் மனம். மனதிற்குக் கட்டளை இட்டு திருவடிகளை துதி செய் – தலையாலே வணங்கு – கைகளால் கூப்பித் தொழு என்று சொல்லிப் பார்க்கிறது மனம். ஆனால் ஐம்புலன்கள் மதம் பிடித்த யானை போல் கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை. எனவே மனதைப் பார்த்து எப்படியப்பா உன்னால் இறைத் திருவடியைத் துதிக்காமல் இருக்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார். மனம், மெய், செயல் ஆகிய மூன்றாலும் இறைவனைத் துதிக்க வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும்.
வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து
நின் தலையைத் தாழ்த்து
இருகை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்று அவனை
ஏத்தா நல்நெஞ்சமே
தங்கத் தானா மேலும் தங்கு.
இறுதிப்பாட்டு 87வது பாடல். அதர்வண வேதத்தை முடித்து வைக்கும் போது கூட திருவடியை வணங்குவது பற்றி கூறியே முடிக்கிறார்.
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் நன்நெஞ்சே – எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்.
கையை விட்டு எப்போதும் அகலாத சக்கரப் படையை உடையவர் திருமால். அவன் நம் மேல் உள்ள முன்வினை – நுகர்வினை ஆகியவற்றை அகற்றுவான். சக்கரப்படை உடையவன் அல்லவா? எனவே நம் பாவங்களை – கொடிய வினைகளைக் களைய அவனையே துதிக்க வேண்டும். அதிலும் சிறப்பாக அவன் கழலையே –திருவடிகளையே துதிக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியும் என முத்தாய்ப்பாக முடிக்கிறார்.
என்று திருவாய்மொழியிலே வேதம் தமிழ் செய்த மாறன் நம்மாழ்வார் இறைவனிடம் வேண்டுவார். திருவடிகளே சரணம் என்ற தாரக மந்திரத்தை உலகத்துக்கு எடுத்து உரைத்தவர் அவரே. திருவடியை விட்டால் வேறு தஞ்சம் நமக்கு எங்குமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியவர் வேதத்தை அழகிய தமிழிலே நமக்குத் தந்த நம்மாழ்வாரே ஆவார். இந்த திருவடிகளைக் காண – கண்டு தொழ பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இங்கே நமக்கோ மிக எளிதாக அந்தப் பேறு கிடைத்து உள்ளது. திருவடிகளின் பெருமையை உணர வேண்டும் என்பதற்காகவே பெருமை மிக்க சடாரியின் வடிவமாக நம்மாழ்வாரே உருப்பெற்று உள்ளார். சடாரியை நம் தலையின் மீது வைப்பதினால், அதை தலைவணங்கி அடியவர்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் திருவடி தொடர்புக்கு நம்மை எல்லாம் ஏற்றவர்களாக ஆக்குகிறார் நம்மாழ்வார். இதைத்தான் மகாதேசிகன் அவர்கள் தமது பிரபந்தத்தில் அருமையாகக் கூறுகிறார்.
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தை என நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே
என்று கூறுகிறது தேசிகப் பிரபந்தம். வேதத்திலே தேர்ச்சி பெறாத –வேதத்தைப் படிக்க முடியாத – படிக்க நேரமில்லாத – படிக்க வாய்ப்பில்லாத பாமரர்களும் நாராயணின் திருவருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே நம்மாழ்வார் தாமே திவ்யமணி பாதுகையாக அவதரித்து உள்ளார். பரம பக்தரான நம்மாழ்வாரின் அம்சமே பாதுகை வடிவான சடாரி ஆகும்.
இறைவனின் திருவடிகளை விட திருவடி நிலைகளுக்கு உள்ள ஏற்றம் அளப்பரியது. சுவாமி தேசிகன் இதனால் தான் பாதுகை மீது ஆயிரக்கணக்கில் பாடல்களைப் பாடியுள்ளார். திருவடி சம்பந்தம் பெற திருவடிநிலைகளான திருப்பாதுகைகளைத் தஞ்சமடைவது பக்தர்களுக்கு உகந்தது. இராமரே இல்லை என்றாலும் பரதம் திருவடிகளைக் கொண்டுபோய் இராமருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அந்த திருவடிகளுக்குக் கொடுத்து அரசாளவில்லையா? இதைத்தான் இந்த சடாரி நமக்கு உபதேசிக்கிறது. சரணாகதி மார்க்கத்திற்கு அணிகலனாக அமைவது இந்த பாதுகைகள் – திருவடிகளே ஆகும். பக்தியை விட சரணாகதி தான் சிறந்தது. இறைவனைச் சரணடைய வேண்டும். அதற்கு எளிய வழி சரணாகதி தான். பரதன் இராமபிரானின் திருவடிநிலைகளைத் தஞ்சமென்று கருதியதைப் போல நாம் இங்கே உள்ள இந்த திருவடிகளைத் தஞ்சமென்று கருதவேண்டும். பிராட்டியும் இறைவனும் அடியவர்களை மறந்தாலும் மறக்கலாம். ஆனால் இந்த திருவடி உங்களை மறக்காது. எம்பெருமான் உங்களைக் கைவிட்டாலும் திருவடிகள் சரணடைந்தவர்களைக் கைவிடாது. "திண்கழல்கள்" இவை.
பகவத் கைங்கர்யத்தை விட பக்தனுக்கு கைங்கர்யம் செய்வதிலே ஈடுஇணையற்றது இந்த பாதுகைகள் – திருவடிகள். திருவடிகளின் திருவருளுக்கு ஒப்பில்லாத உறுதுணை இந்த திருவடி நிலைகளே ஆகும்.
பசு தான் பால் கொடுக்கிறது. ஆனால் காலில் இருந்து பால் கிடைக்குமா? வாலிலிருந்து பால் கிடைக்குமா? காம்பிலிருந்து தான் கிடைக்கும். அதுபோல இறைவன் திருவுருவம் பல கோவில்களில் இருந்தாலும் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமெனில் அந்த அர்ச்சாவதார மூர்த்திகளை வழிபடும் யதிகள் – மடாதிபதிகள் மூலமாகத் தான் விரைவில் பெறமுடியும். அதுமாதிரி திருவரங்கனின் அனுக்கிரகம் வேண்டுமா? திருவரங்கத்திற்குச் சென்று பெரியபெருமாளைத் தரிசித்து அங்குள்ள சடாரியைத் தலையிலே சூடிக்கொள்ள வேண்டும். பலர் கோவிலுக்குப் போவார்கள். ஆனால் அர்ச்சகர் சடாரியைக் கொண்டு வரும்வரை காத்திருப்பதில்லை. வேலை இருக்கிறது. மிக அவசரமாகப் போகவேண்டும் எனக் கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். சடாரியின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. சரி திருவரங்கத்திற்குச் செல்ல முடியவில்லை. இறைவனின் அருள் பெற வழியே இல்லையா? திருவடிகளை வழிபடுங்கள். திருவருள் கிடைக்கும். உள்ளம் உருகப் பிரார்த்திக்க வேண்டும். மனம் விட்டு கசிந்து கண்ணீர் விட்டு நம் கஷ்டங்களை ஆண்டவனிடம் – திருவடிகளிடம் கூற வேண்டும். இப்படி சில சுலோகங்களை நாம் சில காரியங்களுக்காக மனமுருகி வேண்டினால் இந்தத் திருவடிகள் நீங்கள் வேண்டிய பலனை உங்களுக்குத் தரும். உங்களுக்காக ஆண்டவனிடம் உங்கள் குறையை இந்த திருவடிகள் எடுத்துச் சொல்லி வாதாடும். இறைவன் அருளை உங்களுக்குப் பெற்றுத் தரும். அது தான் திருவடி வழிபாட்டின் மகிமை.
கோதை ஆண்டாளும் தினம்தினம் மார்கழியில் ஆண்டவனைத் துதித்து நோன்பு முடிவடையும் நேரம் 29ஆம் நாள் கூறுவதைப் பாருங்கள்
"சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்"
இறைவனைச் சேவித்ததை முதல் அடியிலே கூறுகிறார்கள். என்ன பலன் வேண்டும் என்று தாமரை அடியைப் பார்த்துத் தான் கேட்கிறார்கள்.
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் –உனக்கே நாம் ஆட்செய்வோம் – மற்றை நம் காமங்கள் மாற்றேலேராய் எம்பாவாய்"
சமீபத்திலே திருமலைக்குச் சென்றிருந்தேன். அப்போது சாலையோரக் கடை ஒன்றில் அரி கவசம் என்று ஒரு சிறு நூலை வாங்கினேன். சென்னை சி.பி.கோவில் தெருவில் உள்ள மதி நிலையத்தால் வெளியிடப்பட்டது அந்த நூல். யார் அதைத் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால் ஏழுமலையானை மிக அழகாகத் துதிக்கும் பாடல்கள் அதிலே இருந்தன. இலக்குமியைப் போற்றித் துதிக்கும் தோத்திரத்தில்,
உலகம் யாவயும் காத்து அளித்து அழிக்கின்ற ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து மெய்யன்புடன் நிற்கும்
அலகில் பல்லுயிர்க் கணங்களுக்கு அருட்கொடை கொடுக்கும்
திலக வாணுதல் தெந்திருவடியிணைத் தொழுவாம்
என்று இருந்தது.
அதிலேயே திருவேங்கடமாலை என்று ஒரு பாடல் தொகுப்பு இருந்தது. மிக அருமையானது. அதிலே,
"எமக்கருள் புரிய என வலக்கரம் அபயமாய் எடுத்த பேரழகு போற்றி
சென்னிமிசை வைத்து யாம் தினம் தினம் தொழுகின்ற சேவடி மலர்கள் போற்றி"
"பள்ளத்தில் வீழ்கையில் ஆதாரமாய் எதைப் பற்றுவாய் சொல்லு மனமே
பதறி விழி நீர் பெருகப் பச்சைமால் திருவடி போற்றியே போற்றி மனமே"
"போரால் இலங்கை பொடி செய்த பாதம் போற்றி போற்றி"
"மதுர பிருந்தாவனப் புழுதியில் தோய்ந்திடும் மலரடிகள் போற்றி போற்றி"
ஆதியான் போசியான் வேங்கடத்து எம்பிரான் அடிகளே போற்றி போற்றி"
"இகபரம் நல்கிடும் நிகரற்ற வேங்கடன் இருபாதம் போற்றி போற்றி"
"வேண்டுவோர்க்கு அனைத்தும் ஈயும் வித்தகன் மலர்ப்பூம்பாதம் போற்றி போற்றி
வேங்கட ரமணனான வேணுகோபால்ன் பாதம் போற்றி போற்றி"
"இச்சைக்கு நல்ல என் பச்சைமால் அண்ணலின் இருபாத தாமரை போற்றி போற்றி"
"உயர் துளசி மாலைகள் சாத்திடும் கோயிலில் துயர் மாலையோடு வந்தேன்
சரணமே நீயென்று அரணாக நானும் உன் தாமரைத் தாளில் வீழ்ந்தேன
சங்கு சக்கரமோடு சாரங்கம் ஏந்திய தேவனே போற்றி போற்றி"
"கோணல்கள் படமெடுத்தாடும் என் உள்ளத்தைக் கொண்டு நின் பாதம் உற்றேன்
குளிராடும் திருவடி கொண்டாடு நெஞ்சத்தில் கோபாலா போற்றி போற்றி"
முத்தாய்ப்பான இறுதிப் பாடலில்,
நதிகள் எல்லாம் அந்த நாதக் கடலினை நாடியே வருவதுண்டு
நாலுவகை முகில்களும் கோலமாமலைத் தேடி இளைப்பாற வருவதுண்டு
அதிரவரு தேர்களும் ஆலயம் வலம் வந்த பின் நிலை சேர்வதுண்டு
புதிதுபுதிதாக வளர் வேர்களும் நீருள்ள பூமியைத் தொடர்வதுண்டு
போர்வீரன் அம்புகள் புயலாக இலக்கினைப் போய்த் தாக்க விரைவதுண்டு
இதயங்கள் வேங்கடத் திருமலை நாடுவதும் இயற்கையின் லீலை அன்றோ
இக்கணம் பொற்பதம் சிக்கெனப் பற்றுவோம் ஏழுமலை போற்றி போற்றி"
திருமலை செல்லும் யாரும் அன்னமாச்சாரியாவை அறியாமல் இருக்க முடியாது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ராஜம்பேட் தாலுக்காவில் தலப்பாகா என்ற சிறு கிராமத்தில் கி.பி.1408இல் பிறந்த அவர் ஏறத்தாழ 32000 பாடல்களை திருமலையான் மீது எளிய தெலுங்கில் பாடி உள்ளார். இவற்றைப் படித்து பொருளைப் புரிந்து கொண்டால் வேதம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. கீர்த்தனைகள் தான் அவர் பாடியவை.
எனக்கு தெலுங்கு தெரியாது. எனவே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.
ஆழ்வார்கள் மட்டுமா? நாயன்மார்களும் அப்படித்தான் திருவடிகளைப் போற்றுகிறார்கள். திருஞானசம்பந்தர் திருப்பிரமபுரத்தில் பாடிய திருவெழுகூற்றிருக்கையில் மிக அழகாகச் சொல்வார். "ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதும் ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை" என்பார். திருவடிகள் இரண்டினையும் முப்பொழுதும் ஏத்தியவர்களுக்காக கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து தென்திசைக் கடவுள் சனகர் முதலான நால்வருக்கும் அற்புதமான நெறியினைக் காட்டி அருளினார். இதேபோல திருஞானசம்பந்தர் திருவாழ்கொளிபுத்தூர் தலத்தில் உள்ள இறைவனைப் பாடிய பாடல்கள் அனைத்திலுமே திருவடிப் பெருமையைப் பேசுவார்.
"கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிற்றான் அடி காண்போம்"
"விரைகமழ் மாமலர் தூவி வரி சடையான் அடி சேர்வோம்"
"மாமல்ர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்"
"இனமல்ர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம்"
"தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன் தாளிணை சார்வோம்"
"தடமலர் ஆயின தூவித் தலைவன் தாள் நிழல் சார்வோம்"
"மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்"
"விரிமலர் ஆயின தூவி விகிர்தன் சேவடி சேர்வோம்"
தாண்டகம் பாடுவதில் சிறப்பானவர் திருநாவுக்கரசர். அவர் திருவதிகை வீரட்டானத்தில் அமர்ந்திருக்கும் இறைவனைப் போற்றும் போது திருவடிகளைப் பற்றி திருத்தாண்டகம் பாடி உள்ளார்கள். தித்திக்கும் தீந்தமிழில் உள்ள அந்த பாடல்களைக் கேட்டாலே உடல் புல்லரிக்கும்.
அரவு அணையான் சிந்தித்து அரற்றும் அடி
அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்க்கு எல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரை விரவு தென்கெடிலநாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி
கொடுவினையார் என்றும் குறுகா அடி
குறைந்து அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி
படு முழவம் பாணி பயிற்றும் அடி
பதைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி
கடல் வையம் காப்பான் கருதும் அடி
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி
நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி
வைது எழுவார் காமம் பொய் போகா அடி
வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி
கைதொபது நாம் ஏத்திக் காணும் அடி
கணக்கு வழக்கைக் கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி
தெய்வப் புனல் கெடில நாடன் அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி
சோமனையும் காலனையும் காய்ந்த அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி
மந்திரமும் தந்திரமும் ஆய அடி
அடியவருக்கு ஆர் அமுதமாய அடி
பணிபவருக்கு பாங்கு ஆகவல்ல அடி
பற்று அற்றார் பற்றும் பவள அடி
மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி
அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி
வீரட்டம் காதல் விமலன் அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி
இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
உரையால் உணரப்படாத அடி
வரைமாதை வாடாமை வைக்கும் அடி
வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருபுன்கூரில் திருவடிகள் பற்றிப் பாடும் போது மிக அழகாக,
எந்தை நீ எனை நமன்தமர் நலியில்
இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன்
தாதை தாள் அற எறிந்த சண்டிக்கு உன்
சடைமிசை மலர் அருள் செயக் கண்டு
பூத ஆளி நின் பொன்அடி அடைந்தேன்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்
நீலமார் கடல்விடந்தனை உண்டு
கண்டத்தே வைத்த பித்த நீ செய்
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை
அர்ச்சித்தார் பெரும் ஆரருள் கண்டு
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்
பார்த்தனுக்கு அன்று பாசுபதங் கொடுத்து
அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்து இழியும் புனற்கங்கை
நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன்
மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை
ஒருவன் நீ கரிகாடு அரங்காக
மணிமுழா முழுக்க அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன்
இலங்கையர்கோனைத்
துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்இசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த (சந்திரகாசம்)
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்.
பெரியபுராணத்திலே சேக்கிழார் பெருமான்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிறம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல்கள் போற்றி போற்றி
என்று அழகாகக் கூறுவார்
சமீபத்திலே சரபோஜி மன்னர் காலத்திலே வாழ்ந்தவர் அபிராமி பட்டர். இவர் அபிராமி மீது நூறு பாடல்களை அந்தாதியாகப் பாடி உள்ளார். ஒரு பாட்டின் இறுதியில் வரும் எழுத்து, அசை, சீர், அடி, சொல் இவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்து வரும் பாடலில் முதலாக வைத்துத் தொடுக்கப்படுவது தான் அந்தாதி. எப்படிப்பட்ட நேரத்தில் அந்தாதி பாடி உள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு அமாவாசை நாளன்று சரபோஜி மன்னர் கோவிலுக்கு வருகிறார். பைத்தியக்காரன் போல் இவர் அமர்ந்து இருக்கிறார். இன்று என்ன திதி என்று கேட்கிறார் மன்னர். இன்று பௌர்ணமி என்கிறார் பட்டர். நிலவைக் காட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறார் மன்னர். கீழே நெருப்பு. நெருப்பின் மேல் ஒரு ஊஞ்சல். அதிலே நிற்கிறார் அபிராமிபட்டர். நிலவைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாட்டுகள் பாடுகிறார். 79வது பாடலான விரீக்கே அருளுண்டு என்ற பாடல் பாடும் போது அபிராமி அம்மை தன் கம்மலைக் கழற்றி வீசுகிறாள். அது பூரண நிலவொளியாக வானில் சுடர்விட்டு பிரகாசித்தது. மன்னன் ஓடோடி வந்து பட்டரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அவன் வேண்டுகோளை ஏற்று நூறு பாடல்களைப் பாடுகிறார் அபிராமி பட்டர். அது தான் அபிராமி அந்தாதி. இப்படிப்பட்ட சூழலில் தான் அந்தாதி அமைப்பில் பாடல்களைப் பாடி இருக்கிறார். இந்த அந்தாதிப் பாடல்களிலும் பல பாடல்களில் திருவடிகளைப் போற்றிப் பாடி உள்ளார். இதோ அந்த பாடல்கள்.
வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே.
சிவபெருமான் அருந்திய ஆலகால விடத்தைத் தன் தளிர்க் கரத்தால் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கியவள் அன்னை. எனவே தான் கரைமிடற்றான் என சிவபெருமான் அழைக்கப்படுகிறான். நீலகண்டன் என போற்றப்படுகிறான். எல்லாம் அன்னையின் மகிமை. அப்படிப்பட்ட அபிராமி அன்னையின் திருவடி எளியேனது தலையின் மேல் உள்ளது என்கிறார் பட்டர்.
கண்ணியது உன் புகழ்,
கற்பது உன் நாமம்
கநிந்து பத்தி பண்ணியது
உன் இரு பதாம்புயத்தில்
தியானிப்பது உன் பெரும் புகழை. உணர்வுடன் ஓதுவது உன் திருப்பெயரை. நெஞ்சம் நெகிழ்ந்து உருகி பக்தியுடன் வழிபட்டது உன் இணைத் திருவடித் தாமரைகளே என்கிறார் பட்டர்.
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே
என் உள்ளத்திலே இருந்த யான் எனது என்னும் அகந்தையைப் போக்கி என்னை ஆட்கொண்டு அருளிய பொன்னார் திருவடிகளும் ஆகி, கொடிய இயம தர்மன் என்னை நோக்கி என் இறுதிநாளில் வரும்போது, நீங்கள் இருவரும் வெளிப்பட்டு நின்று அவனால் வரும் துன்பத்தைப் போக்கிக் காத்தருள்வாரீர்
இருபத்திநான்காம் பாடல் திரைப்படப்பாடல் மூலம் நாம் அனைவரும் அறிந்த வரிகள்.
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கும் அழகே,
அணுகாதவருக்குப் பிணியே,
பிணிக்கு மருந்தே,
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்மபாதம் பணிந்த பின்னே
எளிதாகப் பொருள் விளங்கும் வரிகள். என்ன சொல்கிறார் அபிராமி பட்டர்? நின்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கிய பிறகு வேறு ஒருவரையும் நான் வணங்க மாட்டேன் என்று கூறுகிறார்.
உடைத்தனை வஞ்சப் பிறவியை
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை
சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே
அருமையாகச் சொல்லுகிறார். நின் திருவடிகள் இரண்டினையும் வணங்கும் திருத்தொண்டினை எனக்கே தனி உரிமையாக ஒப்படைத்துள்ளாய். என் உள்ளத்து அழுக்கை எல்லாம் நின் அருள் வெள்ளத்தால் கழுவி நீக்கினாய் என்கிறார்.
நின் புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே
அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சிந்திக்குமே
நின்னுடைய புதிய மலர் போன்ற திருவடிகளை இரவிலும் பகலிலும் மறவாமல் இடைவிடாது வழிபடுகின்றவர்களுக்கு, இம்மையில் அழிவு இல்லாத அரச போகமும் மறுமையில் சிவலோகமும் எளிதாகவும் முழுதாகவும் கிடைக்கும் என்கிறார்.
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே
பலதரப்பட்ட ஆசை என்னும் கடலில் விழுந்து அகப்பட்டு இரக்கம் சிறிதும் இல்லாத இயமதர்மனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு பெரிதும் துன்பப்பட இந்த எளியவனை தங்கள் திருவடி என்னும் மணமிக்க தாமரை மலரை என் தலை மீது தாங்களே முன்வந்து சூட்டி ஆட்கொண்ட அருட்பெருக்கை என்னவென்றுப் போற்றிப் புகழ்வேன்? என்று ஆச்சரியப்படுகிறார்.
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா – எண் இறந்த விண்ணோர் தமக்கும் இந்தத் தவம் எய்துமோ?
பதினாறு கலைகளில் ஒன்றான பிறைச் சந்திரனின் நறுமணம் கமழ்கின்ற நினது சிறிய திருவடிகளை எந்தத் தகுதியும் இல்லாத எங்கள் தலையிலே சூட்டி வணங்குவதற்கு மானிடர்களாகிய எங்களுக்கும் ஒப்பற்ற ஒரு பெருந்தவப் பயன் உள்ளதே – அளவற்ற தேவர்களுக்குக் கூட இப்படிப்பட்ட பயன் கிடைக்கவில்லையே
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு – அந்தகன் பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு
என்னை அடிமை கொள்வதற்கு உந்தன் திருவடித் தாமரைகள் உள்ளன. இறக்கும்போது இயமதர்மனிடம் இருந்து மீண்டு உய்வதற்கு உன்னுடைய கடைக்கண்ணின் திருநோக்கம் உள்ளது.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதிந்திடவே
அபிராமி அம்மையும் சிவபெருமானும் ஒன்று சேர்ந்து உமையொருபாகனாக வடிவுகொண்டு இஙகே எழுந்தருளி, நம்மை ஆட்கொள்ளும் காரணத்திற்காக, நம்மைத் தம் அடியார்கள் நடுவே இருக்கச் செய்து, நம்முடைய தலையின் மீது தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பதியும்படி செய்வதற்கு நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்கிறோம் போலும்.
வையம், துரகம், மதகரி, மா, மகுடம், சிவிகை
பெய்யும் கனகம்,பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
இந்த பிறவியிலே சிலர் ராஜபோகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தேர், குதிரை, யானை, மணிமுடி, பல்லக்கு, பொற்குவியல், நவமணிமாலைகள் என எல்லா நலன்களும் அவர்களிடம் பொருந்தியிருக்கும். அதற்குக் காரணம் என்னவெனில் சென்ற பிறவியில் அவர்கள் சிறந்த பக்தர்களாக இருந்த மெய்யடியவர்களாக இருந்திருப்பார்கள். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். இது தான் உண்மை.
நஇல்லாமை சொல்லி, ஒருவர் தம் பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
செல்வரிடத்திலே சென்று நமது வறுமையை எடுத்துச் சொல்லி அவர்களால் இழிவுபடுத்தப்படாமல் இருக்கவேண்டுமா? நாள்தோறும் அபிராமி அம்மையின் திருப்பாதங்களை சரணடைய வேண்டும்? கீழ்மக்களிடம் சென்று இறைஞ்சாமல் இருக்க வேண்டும் எனவும் நல்ல நிலைமையில் என்னைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அன்னையை இறைஞ்ச வேண்டும். அப்படி இறைஞ்சுபவர்கள் அடையும் பயன் என்ன?
விரவும் புதுமலர் இட்டு, நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமு, பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே
அபிராமி அன்னையின் மணமிக்க திருவடித் தாமரைகளை மணம் கொண்ட புத்தம்புதிய மலர்களைக் கொய்து தூவி அருச்சனை செய்தோமேயானால் – அல்லும் பகலும் துதித்தால் – மறுமையிலே தேவர்களும் தொழத்தக்க உயரிய விண்ணுலக இந்திர பதவியையும், அயிராவதம் என்னும் வெள்ளை யானையையும், கங்கையையும், இணையற்ற வல்லமையையும், வச்சிராயுதம் எனும் படைக்கலத்தையும் கற்பகச் சோலையையும் அடைந்து தேவேந்திரனாகவே உயர்வர்.
சிறக்கும் கமலத் திருவே – நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று, அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும், வருந்தியுமே
என்கிறார். உடலை விட்டு உயிர் பிரியப் போகும் தருணம் – அறிவு மறைந்து விடும் நேரம் – மோட்சத்தைத் தரும் துணைவரும் நீங்களும் என் முன்னே வந்து திருக்காட்சி வழங்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
அருளாளர் மாணிக்கலவாசகர் தான் பாடிய சிவபுராணத்திலே எடுத்த எடுப்பிலேயே
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தர்ள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
என திருவடிகளையே மிகவும் சிறப்பிக்கிறார்.
திருவாவடுதுறையிலே திருஞானசம்பந்தர் எப்படிப்பட்ட நிலையிலும் இறைவனின் திருவடியை வணங்குவது குறித்து மிக அருமையாக எடுத்துரைப்பார்.
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன் கழல் விடுவேன் அல்லன்
தும்மலோடு அருந்துயர் தோன்றிடுனும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
வெந்துயர் தோன்றி ஓர் வெருவுறினும் எந்தாய் உன்னடி அலால் ஏத்தாது என் நா
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா
பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாது என் நா
பித்தொடு மயங்கி ஓர் பிணிவரினும் அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நா
கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் காஞ்சியின் குமரகோட்டத்து அருச்சகராகிய காளத்தியப்ப சிவாச்சாரியாரின் புதல்வர். வடமொழியும் தென்மொழியும் கற்றவர். இவர் இயற்றிய கந்தபுராணத்திலே செவ்வேள் மலரடி போற்றி எனவும், 'தய்யதோர் மறைகளாலும் துதிட்டற்கு அரிய செவ்வேள் செய்ய பேரடிகள் வாழ்க எனவும், பன்னிரு தடந்தோள் வள்ளல் பாத பங்கயங்கள் போற்றி எனவும் திருவடிகளைச் சிறப்பிக்கிறார்.
கச்சியப்ப முனிவர் தனது தணிகைப் புராணத்திலேயும் இருள் வினை துகைத்துச் சேந்த இணை மலர்ப் பாதம் போற்றி எனப் போற்றுகிறார். மயக்கத்தால் வரும் இருவினையையும் மிதித்தலான சிவந்த மலர் போன்ற திருவடிகள் போற்றி என்று பொருள்.
எல்லப்ப நாவல்ர் தனது திருவிரிஞ்சைப் புராணத்திலே தாளையும் தோளையும் சேர்த்துப் போற்றுகிறார்.
மலர் சொரிவோம் புகழ்ந்திடுவோம் அவன் கமலத் தாளும் தோளும் சிந்திப்போம்
என்பார்.
உமாபதி சிவாச்சாரியார் அருளிய சேக்கிழார் புராணத்திலே முருகனைப் பற்றிப் பாடும் போது,"வடிவேல் எடுத்த ஆறுமுகம் திருவடித் தாமரை இணைகள் அவை போற்றி" என்பார். திருஏரகப் புராணத்தில் "குமர நாயகன் திருத்தாள் போற்றி போற்றி" என்பார். திருவிளையாடல் புராணத்தில் குமரனைப் பற்றிப் பாடும்போது பரஞ்சோதி முனிவர் "வேல் எடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்" என்பார். அதிவீரராம பாண்டியர் அருளிய இலிங்க புராணத்தில் "வேல்கடவுள் பொற்கழலிணை பணிவாம்" என்பார். திருவாரூர் சாமிநாத தேசிகர் அருளிய திருவாடானைப் புராணத்தில் "குமரகுரு முருகன் இருதாள் மலரை அகத்துள் வைப்பாம்" என்பார். அதேபோல அவர் பாடிய செந்தில் கலம்பகத்தில் "மறை இறைஞ்சும் சேவடியும், செந்தூரன் கரம் கொண்ட வேலும் எந்தன் கண்ணை விட்டு நீங்காவே" என்பார். சிதம்பர சுவாமிகள் தனது போரூர்ச் சந்நிதி முறையிலே பாடும் போது போற்றும் போது
"நோயுற்று இடராமல் நொந்து மனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியேன் – காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா நின்
சீரடிக் கீழ்வைப்பாய் தெரிந்து"
என தான் எப்படி சாகவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லுவார்.
இராமலிங்க அடிகளோ தனது திருஅருட்பாவிலே,"சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திருவடிக்கு ஆளாக்குவாய்" என்று கந்த கோட்டத்து முருகனைத் துதிப்பார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலே
என்பார் திருவருட்பாவிலே.
யாருக்கு இந்த நாதர் பாதமோ அம்மை பாதமோ உண்மையில் நன்றாகப் புலப்படும்.
சிவவாக்கிய சித்தர் அழகாகக் கூறுவார்
உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே
திருமூலர்
மந்திரமாவதும் மாமருந்தாவதும்
தந்திரமாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் துய்நெறி ஆவதும்
எந்தைபிரான் தன் இணையடி தானே
திருநாவுக்கரசர் இறைவனின் திருவடி கீழ் வாழ்தலையே தம் வாழ்வின் பெரும்பேறு என்று எண்ணி இறைவனிடம் அன்புடன் பக்தியுடன் வேண்டுகின்றார். பாருங்களேன் அந்த வரிகளை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
பெரியபுராணத்திலே காரைக்கால் அம்மையார் எப்படி இறைவனை வேண்டுகிறார் என்பதை மிக அழகாக சேக்கிழார் எடுத்துக் கூறி உள்ளார்.
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது அடியினி கீழ் இருக்க"என்று கேட்கிறார்.
நான் திருவிளையாடற் புராணத்தைப் படித்தபோது பரஞ்சோதி முனிவர் எப்படி எல்லாம் இறைவாழ்த்திலே திருவடிகளைப் போற்றுகிறார் என்பதைக் கண்டு வியப்புற்றேன்.
சத்தியாய்ச் சிவம் ஆகித் தனிப்பர
முத்தியான முதலைத் துதிசெயச்
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன் செய்ய பொற்பாதமே
எனத் தொடங்குகின்றார். மதுரையிலே தல விநாயகர் பெயர் சித்தி விநாயகர்.
திருவிளையாடற் புராணத்தைப் படிப்பதாலோ கேட்பதாலோ என்ன நன்மை என்பதைக் கூறவரும்போது,
திங்கள் அணி திருவாலவாய் எம் அண்ணல்
திருவிளையாட்டு இவை, அன்பு செய்து கேட்போர்
சங்கநிதி பதுமநிதி செல்வம் ஓங்கித்
தகைமைதரு மகப் பெறுவர், பகையை வெல்வர்,
மங்கல நன்மணம் பெறுவர், பிணி வந்து எய்தார்,
வாழ்நாளும் நனி பெறுவர், வானாடு எய்திப்
புங்கவராய், அங்குள்ள போகம் மூழ்கிப்,
புண்ணியராய்ச் சிவனடிக் கீழ் நண்ணி வாழ்வார்.
புங்கவர் என்றால் தேவர். போகம் என்றால் இன்பம்
கடவுள் வாழ்த்திலே சிவனைப் போற்றும்போது
வென்று உளே புலன் களைந்தார்
மெய் உணர் உள்ளந்தோறும்
சென்று அமுதம் ஊற்றும்
திருவருள் போற்றி, ஏற்றுக்
குன்றுளே இருந்து காட்சி
கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி ஆடும்
மறைச் சிலம்பு அடிகள் போற்றி
என்று மதுரையின் சிறப்பான கால்மாறி ஆடியதைச் சிறப்பித்து அப்படிப்பட்ட திருவடிகளைப் போற்றுகிறார்.
சத்தியைப் போற்றும் போது,
இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்து ஆண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி
ஆரணநூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி
வேதமாகிய சிலம்பை ஆரண நூபுரம் எனக் குறிப்பிடுகிறார்.
சொக்கநாதரை வாழ்த்தும் போது
பூவின் நாயகன் பூமகள் நாயகன்
காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு
ஆவி நாயகன் அங்கயற்கண்ணி, மாதேவி
நாயகன் அடி ஏத்துவாம்.
பூவின் நாயகன் பிரமன். பூமகள் நாயகன் திருமால். கா என்று கூறப்படுகிற கற்பகச் சோலையின் நாயகன் இந்திரன்
அங்கயற்கண்ணியை வாழ்த்தும் போது
பாண்டியன் மகள் போல் கோலம் கொண்ட அங்கயற்கண் அம்மை இரு பாதப்போது எப்போதும் அகத்துள் வைப்பாம்
எனவும்,
தடாதகைப் பிராட்டியாரை வாழ்த்தும் போது,
செழியர் பிரான் திருமகளாய்க், கலை பயின்று
முடிபுனைந்து, செங்கோல் ஓச்சி
முழுதுலகும் சயம் கொண்டு, திறை கொண்டு,
நந்தி கணம் முனைப்போர் சாய்த்துத்
தொழு கணவற்கு அணி மணமாலிகை சூட்டித்,
தன் மகுடம் சூட்டிச், செல்வம்
தழைவு உறு தன் அரசு அளித்த பெண்ணரசி
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்.
கணம் என்றால் படை, மாலிகை என்றால் மாலை
முருகக் கடவுளை வாழ்த்தும் போது,
மறை உணர்ந்தோர் ஆற்றும் அறம் குலவும் மகத்து அழலும்
அவுணமடவார் வயிற்றின் அழலும் மூழ
மறம் குலவு வேல் எடுத்த குமரவேள்
சேவடிகள் வணக்கம் செய்வாம்.
மகம் என்றால் யாகம், மறம் என்றால் வீரம்
நாமகளை வாழ்த்தும் போது
வெண்தோட்டு முண்டகத்தாள் அடிமுடிமேல் கொண்டு வாழ்வாம்.
தோடு என்றால் இதழ், முண்டகம் என்றால் தாமரை
நந்தி எம்பெருமானை வாழ்த்தும் போது,
நந்தி எம்பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்
என்றும்,
அடியார்களை – நாயன்மார்களை வாழ்த்தும் போது கூட,
வஞ்சகர் இட்ட நீல நிறப் பெருங்கடலும், யார்க்கும் அரிய ஏழு பிறப்பு எனும் கடலும் நீத்த பிரான் அடி வணக்கம் செய்வாம்
(நீத்த-கடந்த)-திருநாவுக்கரசர்
அளவு இல் வேதம் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பால்நாள்
இரவினில் தூது கொண்டோன்
இணையடி முடிமேல் வைப்பாம்
(சுந்தரர் - கண்படுத்தல் – உறங்குதல், பால்நாள் – நடுஇரவு)
சிந்தை தான் அரன் அடிக்கே செலுத்தினராய்ச்
சிவானுபவச் செல்வர் ஆகிப்
பந்தமாம் தொடக்கு அறுத்த திருத்தொண்டர்
தாள் பரவி பணிதல் செய்வாம்
திருமூலர் தனது திருமந்திரத்திலே மனிதனோ தேவனோ அசுரனோ அவன் புனிதன் அடியைப் போற்றுகிறான். என்பதை
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்பின் பொலிய வைத்தேனே (பாட்டு 44)
மனித உடலில் உள்ள ஆறு உறுப்புக்கள் மனித வாழ்க்கையின் ஆறு ஆதாரங்களாக விளங்குகின்றன. மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்னும் இந்த ஆறு உறுப்புகளிலும் மிக முக்கியமான நாளமில்லாச் சுரப்பிகள் அமைந்திருக்கின்றன. இவை சரிவரச் சுரந்தால் தான் உடல் சமநிலையில் இருக்கும். இந்த ஆறு உறுப்புகளிலும் ஆசனம், மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் மூலமாக அகவோசையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் உடல் நலத்துடன் இறைவனைக் காணமுடியும்.
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீக்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல் சேரலாமே (பாட்டு 590)
அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு
செறிந்த மனத்தராய் செவ்வே ஆர்வம் – அறிந்து அவன்தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார்ஓத வண்ணன் கழல் (பூதத்தாழ்வார் 6)
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சட்டிப் பாட்லின் இறுதியில் மயில் நடமிடுவோய் மலரடி சரண்ம் எனப் போற்றுவார். குமரகுருபர சுவாமிகளும் தனது கந்தர் கலிவெண்பாவிலே "தாகமுடன் வந்து அடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்து அருளும்" என முருகனின் கருணையைப் புகழ்வார். கந்தர் கலிவெண்பா முடிவிலே
"இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி
மும்மைப் பெருமலங்கண் மோசித்துத் – தம்மை விடுத்து
ஆயும் பழைய அடியாருடன் கூடித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய
கடி ஏற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்"
என்று முடிப்பார்.
பாம்பன் சுவாமிகள் பாடிய தணிகைத் துதிகள் என்னும் பாடலிலே "மள்ளல் வேலன் மாசில் பாதமலரை வணங்குதுமே" என்று பாடுவார்.
திருப்புகழைப்பாடிய அருணகிரிநாதர் அதன் சிறப்பை முதலில் கூறுவார். அதிலே
"வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் – கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப் புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்"
என் தாளின் புகழ் எப்படிப்பட்டது என்பதை விளக்குவார்.
"நாள் என் செயும்? வினை தான் என் செயும்? நாடிவந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே" எனப் திருவடிகளையும் அதைச் சுற்றியுள்ள அணிகளையும் சிறப்பிப்பார். அதைப் போலவே "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே" என்பார். முருகன் திருவடியே கதி என்பதை எடுத்துக் கூறுமுகத்தான்,
தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளைமுதுகு ஓட்டிக் கைந் நாற்றி நரம்
பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி தொளைத்தோன் இருதாள் அன்றி வேறு இல்லையே" என்பார். இதைப்போலவே "பாலே அனைய மொழியார் தம் இன்பத்தைப் பற்றி என்றும் மாலே கொண்டு உய்யும் வகையறியேன் மலர்த்தாள் தருவாய்" என வேண்டுவார். "இராப்பகல் அற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அருளாய்"
அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் தொடக்கத்திலே விநாயகர் வணக்கத்திலே,
"நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்"
எனத் திருவடிகளைப் பணிந்து கந்தர் அனுபூதியை இயற்றுவார்.
அதிலே மேலும் கூறும் போது கதி பெறுவதற்கான வழியைப் பற்றிக் கூறும் போது
கெடுவாய் மனனே- கதிகேள் – கரவாது
இடுவாய் – வடிவேல் இறை தாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே"
என்பார்.
விதி வந்தனை செய் விமலன் கழலே
கதி என்று அடைவார் கடன் ஆவதுவே
பதி கண் பிணியோடு அழி நல்குரவும்
மதி சஞ்சலமும் மண்ணாய் விடுமே
பிரமன் வணங்குகின்ற வீரக்கழல் அணிந்த முருகனின் திருவடிகளை அடைக்கலம் என்று அடைந்தால், பிணியால் ஒடுங்கிய கண்ணும், அழிக்கும் தரித்திரமும் மனக்கலக்கமும் நாசமாகி விடும் என்று அழகாக உபதேசிக்கிறார்.
அருளைத் தரும் நின் அடியில் பணியார்
மருளைச் சிதையார் மதிகெட்டவர்
என்பார்
ஆளாய் அயில்வேல் அடியில் பணிவார்
கோளால் பிறரைக் குறிசெய்து அழியார்
மாளார் சமனால் – மறுகார் பகையால்
மீளார் வினையால் – வெறுவார் அவமே
கூர்வேலையுடைய முருகனின் திருவடிகளில் அடிமையாய் வணங்குகின்றவர் வறுமைத் துன்பத்தால் அந்நியரை அணுகி வருந்தமாட்டார். எமனால் மடியமாட்டார். பகைவரால் கலங்கமாட்டார். கருமங்களால் மீண்டும் பிறக்க மாட்டார். வீணே எதற்கும் அஞ்சமாட்டார் என்பது இதன் பொருள்.
திருவள்ளுவரும் திருவடியின் பெருமையை மிக அருமையாக நமக்கு எடுத்துக் கூறி உள்ளார்.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
கல்வி என்றால் பொருள் ஈட்டுவதற்கான கல்வி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நமக்குப் பயன் ஏதும் இல்லை. நாம் ஈட்டிய பொருள் நம்மோடு வரப்போவது இல்லை. பின்னர் எது உண்மையான கல்வி? கடவுளை உணர்ந்து அவர் திருவடியை வணங்கும் எண்ணத்தைத் தோற்றுவிப்பதே உண்மையான கல்வி ஆகும். சரி இந்த உலகத்திலே நீண்ட நாள் நன்றாக் நோய்நொடியின்றி வாழ வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும். இறைவன் திருத்தாளை அடைவதே அதற்குத் தகுந்த வழியாகும்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.
வாழ்க்கையிலே துன்பமே வரக்கூடாது என்று கருதுகிறோமோ? அதற்கு வழி என்ன? இறைவன் திருவடியைச் சேர்வது தான் ஒரே வழி.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாருக்கு
யாண்டும் இடும்பை இல
மனதில் ஒரே கவலை. அதைத் தீர்க்க என்ன வழி? இதோ அதற்கும் திருக்குறள்.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
பிறவி என்னும் பெருங்கடலை நீந்த வேண்டுமா? அவன் இணையடி சேர வேண்டுமா? வழி என்ன?
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
எண்குணங்களை கொண்ட இறைவனை அடைவது எப்படி?
கோள் இல் பொறி இல் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
இறைவனின் திருவடியை போற்றவில்லையா? துதிக்கவில்லையா? நீ பிறவிக்கடலைக் கடக்க முடியாதப்பா. உத்தரவாதம் தருகிறார் திருவள்ளுவர்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
பாதுகா சகஸ்ர ஜபம் நாம் கோரிய பலனைத் தரும். முதலில் நாம் நமக்கு வேண்டிய சுலோகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் குளித்துவிட்டு, திருமண் பூசி, நெற்றியில் விபூதியோ குங்குமமோ திருமண்ணோ இல்லாமல் சுலோகத்தைச் சொல்லக் கூடாது. பாதுகா சகஸ்ரத்தை அருளிய மகாதேசிகரை மனதில் நிறுத்தி வணங்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் இந்த திருவடிகளை மட்டுமே நோக்க வேண்டும். திருவடிகளைப் பார்த்துக் கொண்டே 108 முறை அந்த சுலோகத்தை ஜபிக்க வேண்டும். சொன்னவுடனேயே பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. தொடர்ந்து தினசரி ஜபியுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவடியிடம் வந்து மனதை ஒருமைப்படுத்தி ஜபிக்க வேண்டும். இதிலே சந்தேகம் இருக்கக் கூடாது. அதைரியம் கூடாது. ஜபம் முடிந்தபிறகு சுலோகத்தை இயற்றிய மகாதேசிகரை நினைத்து நன்றி சொல்ல வேண்டும். இப்படிக் கூறினால் நல்வாழ்வு கிடைக்கும் என்பதைக் கீழ்கண்ட பாடல் நமக்கு உணர்த்துகிறது.
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்க
வானேறப் போமளவும் வாழ்வு.
இம்மை-மறுமை ஆகியவற்றுக்கு இன்றியமையாதவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை ஆகும். உலகத்தில் உள்ள ஆசைகள் எல்லாமே இந்த நான்கில் அடங்கிவிடும்.
அரங்கனின் திருவடியை
அடியார்கள் தலையில் தாங்குகிறார்கள்
அடியாரின் பாததூளிகள் உலகத்தைக் காக்கும்
திருவடிகள் நம்மைக் காக்க வேண்டும்
நம் கோரிக்கைகளில் நாம் வெற்றியடைய அருள வேண்டும்
திருவடிகளின் பெருமையை மானுடம்
உணர வழிவகுத்தவர் பரதாழ்வார்
திருவடி பக்தர்களின் முதல்வரான பரதருக்கு வணக்கம்.
இராமர் வைத்து பூசித்தவர் அன்றோ இவர். விபீடணனால் கொண்டுவரப்பட்டு திருவரங்கத்தில் தங்கிவிட்டவரல்லவா அவர். இவருக்கு ஒப்பானவர் என்று நாம் யாரையும் சொல்லிவிட முடியாது. எனவே தான் இதைத் திருஅவதாரத் தலம், பெரியகோவில், பூலோக வைகுண்டம், போகமண்டலம் என்றெல்லாம் புகழ்கிறார்கள். ஆழ்வார்கள் பதின்மராலும் பாடப்பட்ட திருத்தலம் இதுவாகும். மிகுதியான பாசுரங்களும் அரங்கநாதர் மீதே பாடப்பட்டுள்ளன.
காயொடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர்
நாளும் முறையால் வளர்த்த தீ ஓங்க ஓங்கப்
புகழோங்க தில்லைத் திருசித்ர கூடம் சென்று சேர்மினே
(பெரிய திருமொழி 3-2-2
வைணவம் கூறும் ஐந்துவிதமான பக்திகள்
தாஸ்ய பக்தி (அடிமை பக்தி)
சக்யாசக்தி பக்தி (தோழமை பக்தி)
வாத்சல்யாசக்தி பக்தி (தாய்மை பக்தி)
சாந்த பக்தி (தந்தை பக்தி)
மதுர பக்தி (நாயகி பக்தி)
நாரதர் கூறும் பதினோரு விதமான பக்தி வகைகள்
குணமகாத்மியாசக்தி பக்தி
ரூபாசக்தி பக்தி
ஸ்மரணாசக்தி பக்தி
பூஜாசக்தி பக்தி
தாஸ்யாசக்தி பக்தி
வாத்சல்யாசக்தி பக்தி
சக்யாசக்தி பக்தி
காந்தசக்தி பக்தி
ஆத்மநிவேதனாசக்தி பக்தி
தன்மயதாசக்தி பக்தி
பரமவிரஹாசக்தி பக்தி
பகவத் கீதை குறிப்பிடும் நான்குவித பக்திகள்
ஆர்த்தித்துவம்
ஜிஞ்ஞாசத்துவம்
அர்த்தாத்தித்துவம்
ஞானத்துவம்
No comments:
Post a Comment