Thursday, August 25, 2016

Krishna's pranks


Courtesy: https://m.facebook.com/deiveegamchennai/

ஸ்ரீ கிருஷ்ண சரிதம் - 7

அப்போது அவர்கள், தந்தையே ! நீங்கள் சொல்லும் உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தர வேண்டும். மகா விஷ்ணுவை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ?

என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியாங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா.

அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய
பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.

யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மனமெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடியபடியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள்.

அப்போது, அவளையறியாமல் அவளது மார்பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமென்ற தன் ஆசையைக் குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு, அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது.

அவரது முகம் கோவைப்பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத்தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக்கண்ணன்! பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடுத்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந்திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்!

அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத்தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான். மாயனே ! வசமாக சிக்கினாயா ? வெண்ணெயை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய்.

உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவாய் போலும் ! என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சித்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்துக் கட்டினாள். என்ன அதிசயம் ! எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப்பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ! அந்தக் குறும்புக்காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.

பரந்தாமா ! நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண்டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனைத்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல ! பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதானமாக இருக்கும்.

மது, மாது, சூது ஆகியவையே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதைக் கண்ட நாரதர், இருவரையும் அர்ஜுன மரமாகும் படி சபித்து விட்டார்.

மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர்களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ்ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெருங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளித்து விடை பெற்றனர்.

பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதரரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.

கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிடமிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுலத்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருவான். அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எனவே, நாம் யமுனை நதிக்கரையிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில், நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்றனர். அவர்கள், விருந்தாவனத்தை அடைந்தனர். குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவனம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திருந்தது. மாடு மேய்க்கச்செல்லும் சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை.

ஆனால், என்ன ஆச்சரியம்... ஒவ்வொருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடிதான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள். இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.

ஒருமுறை, கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.

அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன்.

அவனைக் கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி, தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட, பயந்த நிலையில் இருந்தனர். அகாசுரன், பூமியில் கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான். கிருஷ்ணனும், அவரது நண்பர்களும் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை.

இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக் கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம், ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ளமுடியும். அகாசுரன் தன் உருவத்தை 12 கி.மீ. நீளத்துக்கு பெரிதாக்கி, ஒரு பாம்பின் வடிவெடுத்து கிருஷ்ணரையும், அவரது நண்பர்களையும் கொல்ல வந்தான். கிருஷ்ணரும், அவரது தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான்.

கன்று மேய்க்க வந்த சிறுவர்கள், ஒரு சர்ப்பம் வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில் ஒருவன் சொன்னான். இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால் தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவனை இந்தப் பாம்பு விழுங்கிவிட்டால் அவர்களின் நிலைமை என்னாவது ?

மேலும், கஷ்ட காலத்தில் நண்பனைக் காப்பாற்றுபவனே உண்மையான தோழன். நாம், இந்த பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக் கொண்டு போய்விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான். எல்லா தோழர்களும் ஆஹா... அருமையான யோசனை என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்றுவிட்டனர். பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட்டார். அவர் நின்ற நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும் !

ஆனால், மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே .... அந்த எல்லையை அவ்வப்போது அவர் கடைபிடிக்கத்தான் செய்வார். தன் நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார்.

சதிகார பாம்பு வாயை மூடிவிட்டது வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கிவிட்டனர். கிருஷ்ணர் இல்லாவிட்டால் தங்கள் கதி என்னாவது என்று ! வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர் அவர்களை தன் கருணைப் பார்வையால் அமைதிப்படுத்தினார்...

பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன்
வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது. கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர். வயிறு கிழிந்த பாம்பு இறந்தது. கிருஷ்ணரின் பாதம்பட்ட காரணத்தால், அதன் உயிரொளி அவரிடமே கலந்தது.

நண்பர்களைக் காத்த கண்ணன், தன்னைக் கொல்ல வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.

நாளை தொடரும்...

For Previous Posts and Articles Visit :-

https://m.facebook.com/deiveegamchennai/

ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

தெய்வீகம்'s photo.
தெய்வீகம்'s photo.
தெய்வீகம்'s photo.
தெய்வீகம்'s photo.



No comments:

Post a Comment